வெளிமாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்பு துவக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 13, 2023

வெளிமாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்பு துவக்கம்

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

சென்னை, ஜன 13 சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ தி.வேல்முருகன் (தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி) பேசியதாவது: நெய் வேலி நிலக்கரி நிறுவனத் துக்கு நிலம் வழங்கிய வர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். அந்த நிறுவனத்துக்கு மாவட்ட நிர்வாகமோ, தமிழ்நாடு அரசோ துணை போகக்கூடாது. பீகாரைப் போன்று தமிழ் நாட்டிலும்ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் ஒன்றரைக் கோடி வெளி மாநில தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் பற்றிய தகவல் சேமிப்பது அவசியம். தமிழ்நாடு அரசிடம் தகவல் இல்லை. தமிழ்நாடு அரசில் உள்ள 100 சதவீதம் இடங்கள் தமிழர்களுக்கே என்று சட்டம் இயற்ற வேண்டும். மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதில் அளித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், ‘தொழிலாளர் நலத்துறை மூலம் மாவட்ட வாரியாக வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.


தேசிய கங்கை தூய்மை திட்டம்: 

காவிரி, வைகை, தாமிரபரணியை தூய்மைப்படுத்தக் கோரி வழக்கு

ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு 

மதுரை,ஜன.13- தேசிய கங்கை தூய்மை திட்டத்தின் கீழ் காவிரி, வைகை, தாமிரபரணி நதிகளை தூய்மைப்படுத்தக்கோரிய வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை பொதும்பு அதலையைச் சேர்ந்த கே.புஷ்ப வனம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  ஒன்றிய அரசு நாட்டிலுள்ள முக்கிய நதியை தூய்மைப்படுத்தவும், பாதுகாக்கவும் ரூ.30 ஆயிரம் கோடியில் கங்கை தூய்மை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 408 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் 228 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளது. 132 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் உள்ளது. கங்கை தூய்மை திட்டத்தில் 9 மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு 2017 முதல் 2022 வரை ரூ.9895.16 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

இந்தியாவின் ஜிஎஸ்டி வரி பங்களிப்பில் தமிழ்நாடு 3-ஆவது இடத்தில் உள்ளது. உள்நாட்டு மொத்த உற்பத் தியில் 14 சதவீத பங்கு தமிழ்நாட்டிற்கு சொந்தமானது. இந்தியாவின் ஜிஎஸ்டி, ஜிடிபியில் தமிழ்நாட்டை விட குறைந்தளவு பங்களிப்பை வழங்கும் பல்வேறு மாநிலங்களில் உள்ள நதிகளை தூய்மைப்படுத்த கங்கை தூய்மைத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுரை உட்பட 5 மாவட்டங்களில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் வைகை, கங்கை நதிக்கு இணை யான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நதியாகும். இதேபோல் காவிரியும், தாமிரபரணியும் தமிழ்நாட்டின் முக்கிய நதிகளாகும். இந்த 3 நதிகளை பாதுகாக்க உயர் நீதிமன்றங்கள் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கின்றன. ஆனால் போதுமான நிதி இல்லாமல் 3 நதிகளும் உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை.

இதனால் வைகை, காவிரி, தாமிரபரணி நதிகள் சீமை கருவேல மரங்கள் வளர்ந்தும், ஆக்கிரமிப்புகள் மற்றும் கழிவுகளால், மணல் அள்ளுவதால் பாழ்பட்டு வருகிறது. எனவே தேசிய கங்கை தூய்மை திட்டத்தின் கீழ் வைகை, காவிரி, தாமிரபரணி நதிகளை தூய்மைப்படுத்த நிதி ஒதுக்கவும் அல்லது வைகை உள்பட 3 நதிகளை தூய்மைப்படுத்த சிறப்பு திட்டம் அமல்படுத்தவும் உத்தர விட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் மனு தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.




No comments:

Post a Comment