மூக்கு வழியே செலுத்தப்படும் கரோனா மருந்து அறிமுகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 27, 2023

மூக்கு வழியே செலுத்தப்படும் கரோனா மருந்து அறிமுகம்

புதுடில்லி,ஜன.27-  பன்னாட்டளவில் மூக்கு வழியே கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்தும் முதல் நிறுவனம் என்ற நிலையை பாரத் பயோடெக் பெற்றது. இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் இன்கோவேக் என்ற மூக்கு வழி கரோனா தடுப்பு மருந்தின் விலை நிர்ணயத்திற்கு கடந்த டிசம்பர் இறுதியில் ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது.

இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக உள்நாட்டில் தயாரான உலகின் முதல் மூக்கு வழி கரோனா தடுப்பு மருந்து, இந்தியாவில் நேற்று (26.1.2023) அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை அமைச்சர் (தனி பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திரா சிங், பாரத் பயோடெக் நிறுவனத்தின் செயல் தலைவர் டாக்டர் கிருஷ்ணா எல்லா மற்றும் இணை மேலாண் இயக்குநர் சுசித்ரா எல்லா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதனை ஒன்றிய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். இதன்படி, கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்களும், பூஸ்டர் டோசாக மூக்கு வழியே செலுத்தும் இன்கோவேக்கை எடுத்து கொள்ளலாம் என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதுதவிர, கரோனாவுக்கு எதிராக முதல் மற்றும் 2-ஆவது டோசாகவும் மற்றும் பூஸ்டர் டோசாகவும் இன்கோவேக்கை பயன்படுத்தி கொள்ளவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது, பன்னாட்டளவில் முதன்முறையாகும்.

இதுபற்றி பாரத் பயோடெக் நிறுவனத்தின் செயல் தலைவர் டாக்டர் கிருஷ்ண எல்லா கூறும்போது, இந்த கரோனா தடுப்பு மருந்து இன்கோவேக்,எடுத்து கொள்வதன்மூலம் 3 வகையான நோயெதிர்ப்பு ஆற்றல் கிடைக்கும். இதன்படி, அய்.ஜி.ஜி., அய்.ஜி.ஏ. மற்றும் டி செல் ஆகிய எதிர்ப்பு சக்தி கிடைக்க பெறும். இதுவரை உலகில் வேறு எந்த தடுப்பூசிகளும் இதுபோன்ற 3 எதிர்ப்பாற்றலை உற்பத்தி செய்ததில்லை என்று கூறியுள்ளார்.


No comments:

Post a Comment