தாயார் தலைமை வகித்து நடத்திக் கொடுத்த சண்முகம் - மாலினி மணவிழா: தமிழர் தலைவர் பாராட்டு
‘ஒரு பெண்ணைப் படிக்க வைத்தால், அது நான்கு ஆண்களுக்குச் சமம்' என்றார் தந்தை பெரியார்
நாங்கள் கடைசிவரையில் இருக்கக் கூடியவர்கள்- உங்களுக்கு உறுதுணையாக இருக்கக் கூடியவர்கள்!
துறையூர், ஜன.26 மணமகனின் தாயார் தலைமை வகித்து நடத்திக் கொடுத்த சண்முகம் - மாலினி மணவிழாவில் தமிழர் தலைவர் பாராட்டுத் தெரிவித்து, "ஒரு பெண்ணைப் படிக்க வைத்தால், அது நான்கு ஆண்களுக்குச் சமம்" என்றார் தந்தை பெரியார்; நாங்கள் கடைசிவரையில் இருக்கக் கூடியவர்கள்- உங்களுக்கு உறுதுணையாக இருக்கக் கூடியவர்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அ.சண்முகம் - க.மாலினி மணவிழா
திருச்சி - துறையூரில் 22.1.2023 அன்று தனலட்சுமி - அன்பழகன் இணையரின் செல்வன் அ.சண்முகத் திற்கும், மா.கதிரேசன் - ராஜேஸ்வரி இணையரின் செல்வி க.மாலினிக்கும் வாழ்க்கை இணையேற்பு விழா வினைத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நடத்தி வைத்து வாழ்த் துரையாற்றினார். அவரது வாழ்த்துரை வருமாறு:
மணவிழாவிற்கு மணமகனின் தாயார் தனலட்சுமி அம்மையார் தலைமை
இந்த மணவிழா புதுமையான, புரட்சிகரமான இந்தப் பகுதியில் நடைபெறக்கூடிய ஓர் அருமையான மண விழா - வாழ்க்கை இணையேற்பு விழாவாக - அருமைத் தோழர்கள் நம்முடைய அருமை நண்பர்கள் ஆசிரியர் அ.சண்முகம் எம்.எஸ்சி., பி.எட்., அவர்களுக்கும், அதேபோல, மானமிகு தோழர் மணமகள் பொறியாளர் க.மாலினி பி.டெக் அவர்களுக்கும் நடைபெறக்கூடிய இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு - வாழ்க்கை இணையேற்பு நிகழ்ச்சிக்கு அன்பிற்குரிய மணமகனது அன்புத் தாயார் அவர்கள் தலைமை தாங்குகிறார்கள். இதுதான் நான் வருவதைவிட, நான் இந்த மணவிழாவினை நடத்தி வைப்பதைவிட சிறப்பான ஓர் அம்சம் என்று சொன்னால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கியத்துவம் என்று சொன்னால், தனலட்சுமி அம்மா அவர்கள் இந்த மண விழாவிற்குத் தலைமை தாங்குகிறார்கள் என்பதுதான்.
மாநாடுபோல நடைபெறுகின்ற மணவிழா!
மணமகன் சண்முகம் அவர்கள் ஒரு சிறந்த கொள்கை வீரர். கொள்கை வீரருக்கு, ஒரு சிறந்த கொள்கை அமைப்பை உருவாக்கவேண்டும் என்பதற் காகத்தான், மிகப்பெரிய அளவில், ஒரு மாநாடுபோல் நடக்கக் கூடிய இந்த மணவிழாவிற்கு வந்திருக்கின்ற தோழர்களே!
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள நம்முடைய பெருமதிப்பிற்குரிய அருமைச் சகோதரர் துறையூர் சட்டப்பேரவை உறுப்பினர் செ.ஸ்டாலின்குமார் அவர் களே மற்றும் கழகப் பொறுப்பாளர்களே, தோழர்களே, அனைத்து இயக்கங்களைச் சார்ந்த பெருமக்களே உங்கள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கமும், நன்றியும்!
இந்த மணவிழாவைப் பொறுத்தவரையில், அருமைத் தோழர் சண்முகம் அவர்கள், சிறப்பாக வாழ்க்கை இணையை ஏற்கிறார்.
எல்லையற்ற துன்பத்தைத் தாங்கியவர்
இங்கே நண்பர்கள் சுட்டிக்காட்டியதைப்போல, திராவிடர் கழக இளைஞரணியிலிருந்து அவர் தயாரிக் கப்பட்டவர். கொள்கையில் உறுதி மிக்கவர். அந்தக் கொள்கையைக் கடைப்பிடித்தமைக்காக தன்னுடைய பணியில் இருக்கும்பொழுது எல்லையற்ற துன்பத்தைத் தாங்கியவர்.
எங்களைப் போன்றவர்களால்கூட நல்ல வண்ணம் உதவ முடியவில்லை. ஆனால், அதையும் பொருட் படுத்தாமல், அதையும் தாண்டி, கொஞ்சம்கூட இயக்கத் தின் தலைமையின்மீது வைத்திருக்கின்ற, கொள்கையின் மீது வைத்திருக்கின்ற பற்றை அவர் குறைத்துக் கொள்ள வில்லை என்று சொன்னால், அவர் எடுத்துக்காட்டானவர்.
அவருக்கு ஓர் அருமையான வாழ்விணையராக அருமை மாலினி அவர்கள் அமைந்திருக்கிறார். மணமகன் ஆசிரியர்; மணமகள் பொறியாளர்.
மணமகனுடைய தந்தையார் அன்பழகன் அவர்கள், நம்மோடு இல்லை இப்பொழுது. அவர் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது மட்டுமல்ல; நம் நெஞ்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்ற உணர்வைப் பெற்றவர்.
அந்த நிலையில், அம்மா அவர்கள் இவரை ஆளாக் கியிருக்கிறார். இவருடைய கொள்கை வழிக்கெல்லாம், அம்மையார் எந்தவிதமான தடையும் சொல்லாமல் இருந்திருக்கிறார்.
அதுபோலவே, நம்முடைய மணமகள் மாலினி அவர்களுடைய பெற்றோரை வெகுவாகப் பாராட்ட வேண்டும்; ஏனென்று சொன்னால், அவர்கள் இந்தக் கொள்கைக்கு ஏற்கெனவே உடன்பட்டவர்கள் அல்ல என்று நான் கேள்விப்பட்டேன்.
மணமகன் ஒழுக்கமானவர், நேர்மையானவர், திறமைசாலி!
அவர்களுக்கு முதலில் சங்கடமாக இருக்கலாம், இதுபோன்ற கொள்கையில் திருமணம் நடக்கிறதே என்று. ஆனால், இதுதான் சிறப்பான திருமணம் என்ப தைப் புரிந்துகொள்வார்கள். நல்ல மணமகன் - ஒழுக்கமானவர், நேர்மையானவர், திறமைசாலி.
முதலில் பெண்களைப் படிக்க வைக்கக்கூடாது என்று ஒருகாலத்தில் சொல்வார்கள். மாலினி அவர் களுடைய பெற்றோரை பாராட்டுவதற்கு இன்னொரு அம்சம் என்னவென்று சொன்னால், மகளைப் படிக்க வைத்து, மிகப்பெரிய அளவிற்குப் பொறியாளராக ஆக்கியிருக்கிறார்கள். அவருக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கலாம்; அது அவருடைய நம்பிக்கை. அதனால் பாதிப்பு நமக்கொன்றும் கிடையாது. இதுபோன்ற நான்குக் கூட்டங்களைக் கேட்டார் என்றால், மிகத் தெளிவாகிவிடுவார்.
நீண்ட காலமாக இதுபோன்ற முறையில் அவர்கள் பழகவில்லை. அதனால், அவருக்குக் கொஞ்சம் தயக்கம் இருந்திருக்கலாம்; இப்பொழுது அவருக்குத் தெளிவாகி யிருக்கும்.
எங்களைவிட உறவுக்காரர்கள்
வேறு யாரும் கிடையாது
ஏனென்றால், இந்த மணவிழாவினை புரோகிதர் வந்து நடத்தியிருந்தால், இது அவருக்கு ஒரு சடங்கு. ஆனால், நாங்கள் இந்த மணவிழாவை நடத்துகின்றோம் என்று சொன்னால், எங்களைவிட உறவுக்காரர்கள் வேறு யாரும் கிடையாது.
எங்களைவிட உங்களுக்குப் பாதுகாவலர்கள் வேறு யாரும் கிடையாது. இது நம்முடைய குடும்பம்.
இங்கே நம்முடைய எம்.எல்.ஏ., இருக்கிறார். அங்கே தலைவர்கள் இருக்கிறார்கள்; அதனால், ஓடோடி வரக்கூடிய அளவிற்கு உறவுகள் இருக்கிறது.
ஆனால், வைதீக முறையில் மணவிழாவை மந்திரம் சொல்லி நடத்தி வைக்கின்ற பார்ப்பனர், சடங்கை செய்துவிட்டு, அன்றே சென்றுவிடுவார்.
நாங்கள் கடைசிவரையில் இருக்கக் கூடியவர்கள்- உறுதுணையாக இருக்கக் கூடியவர்கள்
ஆனால், நாங்கள் கடைசிவரையில் இருக்கக் கூடியவர்கள்; எல்லாவற்றிலும் உறுதுணையாக இருக்கக் கூடியவர்கள்.
இதுபோன்ற மணமக்களை பாராட்டுவதுதான் திராவிடர் கழகத்தினுடைய பணி.
மனுதர்மத்தில் என்ன சொல்லியிருக்கிறது - பெண்கள் படிக்கக் கூடாது என்று.
நம்முடைய அருமை நண்பர்கள் குறிப்பாக பெரம் பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் இருந்து அய்யா கதிரேசன் - ராஜேசுவரி ஆகியோர் தன்னுடைய மகளை சிறப்பாக படிக்க வைத்திருக்கிறார்கள்.
இந்த இயக்கம் இல்லை என்றால், பெண்களுக்குக் கல்வி இல்லை.
இன்றைக்கு நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சி நடக்கிறது.
‘‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’’
நாளிதழில்!
அந்தத் ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய சிறப்பு என்ன என்று சொல்லும்பொழுது, இன்றைக்குக் காலையில் வெளிவந்த ஆங்கிலப் பத்திரிகையான ‘‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’’வில் வந்திருக்கிறது.
என்ன அந்த செய்தி என்றால்,
ஒன்றிய அரசில், மோடி அரசில் இருக்கக்கூடிய கல்வி அமைச்சர் பிரதான், கோயம்புத்தூரில் உள்ள அவினாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் உரையாற்றும்பொழுது சொன்னார், ‘‘இந்தியாவிலேயே பெண்கள் கல்வியில், அதிக வளர்ச்சியடைந்திருக்கின்ற மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது’’ என்று பேசியிருக்கிறார்.
‘திராவிட மாடல்’ என்றால் என்னவென்று புரியவில்லை என்று சொல்கிறார்கள்.
ஒன்றிய அமைச்சருக்கு இருக்கக் கூடிய தெளிவு, நம்முடைய அண்ணாமலைகளுக்கு இல்லையே!
ஒன்றிய கல்வி அமைச்சருக்குக் இருக்கக் கூடிய தெளிவு, நம்முடைய அண்ணாமலைகளுக்கு இல் லையே என்பதுதான் மிகவும் வருத்தமான விஷயமாகும்.
கதிரேசன் அவர்கள், திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர் அல்ல. ஆனால், தன்னுடைய பெண்ணை நன்றாகப் படிக்க வைத்திருக்கிறார்.
ஒரு பெண்ணை படிக்க வைத்தால்...
அய்யா பெரியார் தான் மிகத் தெளிவாக சொன்னார்; ஒரு பெண்ணை படிக்க வைத்தால், அது நான்கு ஆண்களுக்குச் சமம் என்று சொன்னார்.
ஏனென்று கேட்டால், அந்தப் பெண்ணுடைய தாய் - தந்தை அந்தப் பெண்ணைப் படிக்க வைத்தவுடன், அவர்கள் வீட்டில் உள்ள அத்துணை பேருக்கும் சொல்லிக் கொடுப்பார்கள்.
ஒரு ஆண் படித்தால், அவனோடு சரி; ஒரு பெண் படித்தால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பு ஏற்படும்.
(தொடரும்)
No comments:
Post a Comment