இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை மீட்க யாழ்ப்பாணம் சென்ற மீனவர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 27, 2023

இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை மீட்க யாழ்ப்பாணம் சென்ற மீனவர்கள்

சென்னை,ஜன.27- தமிழ்நாடு மீனவர்கள், கடற்பகுதியில் படகுகளில் சென்று மீன் பிடித்துக் கொண்டு இருக்கும்போது, அவ்வப்போது, இலங்கை கடற்படையினர், அவர்களை, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி கைது செய்கின்றனர். அப்போது அவர்களின் படகு, மீன்கள், வலைகளை பறிமுதல் செய்கின்றனர். எனினும் மாநில அரசின் தலையீட்டின் பேரில் இலங்கை அரசு ராஜாங்க ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களை அழைத்து வருகின்றனர். ஆனால், அவர்களின் படகு, வலைகள் வழக்கை காரணம் காட்டி இலங்கை அரசு நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்க பொறுப்பாளர் ஜேசுராஜா தலைமையில், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 8 பேரும், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 2 பேரும், என பத்து மீனவர்கள்,  சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, அலையன்ஸ் ஏர்லைன்ஸ்  பயணிகள் விமானத்தில், இலங்கையின்  யாழ்ப்பாணம் நகருக்கு புறப்பட்டு சென்றனர்.

இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில்,  மீனவர்களின் படகுகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு வர இருப்பதாகவும், அந்த விசாரணையில் தமிழ்நாடு மீனவர்கள் ஆஜராகி, தங்களுடைய 17 படகுகளையும், விடுவித்து, தங்களிடம் ஒப்படைத்து, தமிழ்நாட்டிற்கு படகுகளை கொண்டு வருவதற்கு இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு மீனவர்கள் சார்பில் கோரிக்கை வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment