அண்ணாமலை மனுதர்மத்தைப் படித்திருக்கிறாரா?
படித்திருந்தால் பா.ஜ.க.வில் இருக்கமாட்டார்!
கம்பம், ஜன.2 அண்ணாமலை மனுதர்மத்தைப் படித் திருக்கிறாரா? படித்திருந்தால் பா.ஜ.க.வில் இருக்க மாட்டார்! ஆசிரியரின் பணி தொடரட்டும் - நாங்களும் உங்களைத் தொடருவோம் என்றார் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள்.
கம்பம் முப்பெரும் விழா
கடந்த 24.12.2022 மாலை கம்பத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
பேராசான் தந்தை பெரியார் அவர்களுடைய நினைவு நாள் - சமூகநீதி மற்றும் மதச்சார்பின்மை ஜன நாயக முற்போக்குக் கொள்கை விளக்கத் திறந்தவெளி மாநாட்டிற்குத் தலைமையேற்று சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கக் கூடிய மரியாதைக்குரிய டி.பி.எஸ்.ஆர்.ஜனார்த்தனன் அவர்களே,
வரவேற்புரையாற்றியிருக்கின்ற வே.தமிழ்ச் செல்வன் அவர்களே,
சிறப்புவாய்ந்த மாநாட்டில், நிறைவாக உரையாற்றி, சிறப்பிக்க இருக்கின்ற திராவிடர் கழகத் தலைவர் பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களே,
இம்மாநாட்டினைத் தொடங்கி வைத்து உரையாற்றி இருக்கின்ற சட்டப்பேரவை உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன் அவர்களே,
எனக்குப் பின்னர் இங்கே உரையாற்றவிருக்கின்ற காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டு தலைவர்களில் ஒரு வரான, தந்தை பெரியாரின் பேரப் பிள்ளையான பெரு மதிப்பிற்குரிய ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களே,
எனக்கு முன் இங்கே உரையாற்றிய திராவிட முன்னேற்றக் கழக உயர்மட்ட செயல்திட்டக் குழு உறுப்பினரும், மேனாள் அமைச்சருமான அன்பிற்குரிய அண்ணன் பொன்.முத்துராமலிங்கம் அவர்களே,
மாநில தேர்தல் பணிக் குழு செயலாளர் அன்பிற் குரிய அண்ணன் செல்வேந்திரன் அவர்களே,
‘தீக்கதிர்’ நாளேட்டின் பொறுப்பாசிரியரும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர்களில் ஒருவருமான என் பேரன்பிற்குரிய தோழர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்களே,
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பிற்குரிய அப்துல்சமது அவர்களே,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் அன்பிற்குரிய அண்ணன் தங்க.தமிழ்ச்செல்வன் அவர்களே,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் அன்பிற்குரிய தோழர் கனியமுதன் அவர்களே,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் அன்பிற் குரிய அண்ணன் வந்தியத்தேவன் அவர்களே,
முன்னால் அமர்ந்திருக்கின்ற பேரன்பிற்குரிய தாய் மார்களே, சகோதரிகளே, பெரியோர்களே, நண்பர்களே, தோழர்களே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பெருமாள் உள்ளிட்ட தோழர்களே, உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிரியர் உரையைத் தொடங்குகிற நேரம் 9 மணி என்றால், பிரச்சினையில்லை. முடிக்கவேண்டிய நேரம் 9 மணி.
9 மணிக்கு ஆசிரியர் உரையாற்றி முடித்தால்தான், இங்கே இருந்து திண்டுக்கல் இரயில்வே நிலையத்திற்குச் சென்று, முத்துநகர் ரயிலை பிடித்து சென்னைக்கு செல்ல முடியும்.
ஆசிரியர் அவர்கள் அப்படி போகக்கூடாது என்றால், நான் ஒரு 45 நிமிடம் பேசினால், அவரைப் போகவிடாமல் செய்துவிடலாம்.
ஆசிரியரை, நான் தந்தை என்று
பெருமையோடு அழைக்கக் கூடியவன்
நான் அதுபோன்று செய்ய மாட்டேன். ஏனென்றால், அவர் ஆசிரியர். ஆசிரியர் மட்டுமல்ல, நான் தந்தை என்று பெருமையோடு அழைக்கக் கூடியவன். அவர் தந்தை - நான் மகன்.
‘‘தாயிற்சிறந்த கோவிலுமில்லை-
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’’
அந்த மந்திரத்திற்கு நான் எப்பொழுதுமே கட்டுப் பட்டவன் என்கிற முறையில், சுருக்கமாகப் பேசி, அதற்குப் பிறகு அண்ணன் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் உரையாற்றி, அதற்குப் பிறகு ஆசிரியர் அவர்கள் உரையாற்றவிருக்கிறார்கள்.
நம் கூட்டம் நீண்டுகொண்டே போகும்;
இன்னொரு கூட்டம் சுருங்கிக்கொண்டே போகும்!
இந்த மாநாட்டிற்கு வந்தபொழுது, கூட்டம் குறை வாகத்தான் இருந்தது. அதற்குப் பிறகு பார்த்தால், கூட்டம் அதிகரித்தது. இருக்கைகள் போதவில்லை என்று, வண்டியில் நாற்காலிகளைக் கொண்டு வந்து இறக்கினார்கள்; கொண்டு வந்து இறக்கிய நாற்காலி களும் போதாமல், அந்த நாற்காலிகளும் நிறைந்து, கூட்டம் நீண்டுகொண்டே போகிறது.
இதுதான் இயல்பானது; இது நீண்டு கொண்டேதான் போகும். இன்னொரு கூட்டம் சுருங்கிக்கொண்டே வரும்.
இங்கே முப்பெரும் விழா என்று சொன்னாலும், அதோடு ஆசிரியர் அவர்களுக்குப் பாராட்டு விழாவும் சேர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.
இங்கே மேடையில் இருக்கின்ற எல்லா தலைவர் களும், ஆசிரியரின் சிறப்பு குறித்து, மிகச் சிறப்பான முறையில் எடுத்துக் கூறினார்கள்.
ஏற்கெனவே, சென்னையில் நடைபெற்ற ஆசிரி யரின் பிறந்த நாள் விழாவில், மாண்புமிகு முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டு, ஆசிரியரின் பிறந்த நாள் விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடினோம் என்றாலும்கூட, இன்றைக்கும் அந்தப் பிறந்த நாள் விழா தொடருகிறது.
இதுவும் ஒரு எதார்த்தம்தான்.
இங்கே மாநாட்டில் உரையாற்றிய எல்லோருமே, ஓர் அமைப்பு குறித்துப் பேசினார்கள். அது எத்தகைய தவறான கொள்கையைக் கொண்டிருக்கின்றது என்ப தைப்பற்றி சொன்னார்கள்.
மூன்று கூட்டமல்ல; இன்னும் 30 கூட்டங்களுக்கு ஆசிரியர் அவர்கள் வருவார்
தங்க.தமிழ்ச்செல்வன் அவர்கள் குறிப்பிடுகின்ற பொழுது, ஆசிரியர் அவர்கள் பங்கேற்கின்ற - தேனி மாவட்டத்தில் இது மூன்றாவது கூட்டம் என்று குறிப்பிட்டார். மூன்று கூட்டமல்ல; இன்னும் 30 கூட்டங்களுக்கு அவர் வருவார். இங்கே மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து அவர் செல்வார். அவர் போவது மட்டுமல்ல, இரயிலில் இன்ஜின் முன்னால் செல்லும்; பின்னால் பெட்டிகள் எல்லாம் வரும். அதுபோல, எங்களையெல்லாம் சேர்த்து அழைத்துக் கொண்டுதான் செல்வார்.
அவர் மட்டும் போனால், நாங்கள் எங்களுடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருப்போம்; எங்களை விடுவது கிடையாது.
இந்த மாநாடு ஒத்தி வைக்கப்பட்ட மாநாடு. எல்லோ ரையும் அரவணைத்து, எல்லோரையும் சேர்த்து அழைத்துச் சென்று, இதுபோன்ற கூட்டங்கள் நடைபெறுகின்றன.
நாங்கள் யாரையும், அநாகரிகமான முறையில், பேசியதும் இல்லை; பேசப் போவதுமில்லை!
இப்படி நடைபெறுகின்ற கூட்டங்களில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் சேர்ந்து நடத்திய கூட்டமாக இருந்தாலும் சரி, அல்லது இந்த மேடையில் இருக்கின்ற தலைவர்கள், அவரவர் கட்சிக் கூட்டங்களை நடத்தி னாலும் சரி, தனிப்பட்ட முறையில் நாங்கள் யாரையும், அநாகரிகமான முறையில், பேசியதும் இல்லை; பேசப் போவதுமில்லை.
அதற்கு மாறாக, தத்துவத்தைப்பற்றித்தான் நாங்கள் பேசிக் கொண்டிருக்கின்றோம்; கொள்கையைப்பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கின்றோம்.
அழகாக இங்கே மேனாள் அமைச்சர் பொன்முத்து ராமலிங்கம் அவர்கள் குறிப்பிட்டார்கள்; மதுக்கூர் இராமலிங்கம் அவர்களும் குறிப்பிட்டார். எல்லோருமே குறிப்பிட்டார்கள்.
தத்துவப் போராட்டத்தை நாடு முழுவதும் நடத்திக் கொண்டிருக்கின்றோம்!
ஒரு தத்துவப் போராட்டத்தை தமிழ்நாட்டில் மட்டு மல்ல, நாடு முழுவதும் நடத்திக் கொண்டிருக்கின்றோம்.
நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்ற தத்துவம், பெரி யாரின் தத்துவத்தைப் பேசுகின்றோம்; அம்பேத்கரின் தத்துவத்தைப் பேசுகின்றோம்; மார்க்சின் தத்துவத்தைப் பேசுகின்றோம்.
விஞ்ஞானம் வளர்ந்துகொண்டேதான் இருக்கும்; விஞ்ஞானம் குறையாது
எங்களுடைய தத்துவம் என்பது, விஞ்ஞானப் பூர்வமான தத்துவம். விஞ்ஞானம் வளர்ந்துகொண்டே தான் இருக்கும். விஞ்ஞானம் குறையாது; மேலும் மேலும் அது வளர்ந்துகொண்டேதான் இருக்கும்.
ஏற்கெனவே, வீட்டில் தொலைப்பேசி இருந்தால், கால் புக் செய்து, ஒரு மணிநேரமாகும் - ஓரிடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்குப் பேசுவது. ஆனால், இன்றைக்கு எல்லோருடைய கைகளிலும் செல் இருக்கிறது. இது விஞ்ஞான வளர்ச்சிதானே!
ஆசிரியர் அவர்கள் தன்னுடைய 10, 11 வயதில் பொது வாழ்க்கைக்கு வரும்பொழுது, இப்படி மிகச் சிறப்பான ஒலிபெருக்கி, மேடை, மின் விளக்கு என்ப தெல்லாம் இருந்திருக்காது. இருப்பதற்கும் வாய்ப் பில்லை.
500 பேர், ஆயிரம் பேர் கூடுகின்ற கூட்டத்தில்கூட ஒலிபெருக்கி இல்லாமல் உரையாற்றிய காலம் உண்டு. ஆனால், இன்றைக்கு அந்த நிலை இல்லை. விஞ்ஞான வளர்ச்சி.
அதேபோல நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்ற தத்துவம் என்பது விஞ்ஞானம்; அது வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.
தங்களுடைய கொள்கையை சொல்லாத இயக்கம் எது தெரியுமா?
இங்கே குறிப்பிட்டார்களே, ஆர்.எஸ்.எஸ். என்கிற இயக்கத்தைப்பற்றி, ஆசிரியர் அவர்கள் மிக அழகாக சொல்லுவார் - உலகத்திலேயே ஓர் அமைப்பு அல்லது ஒரு கட்சி - ஆர்.எஸ்.எஸினுடைய கரமாக இருக்கிற, ஆர்.எஸ்.எசால் அமைக்கப்பட்டு இருக்கின்ற அரசியல் பிரிவான பா.ஜ.க. - எந்த மேடையிலாவது, எங்களுடைய சொந்தக் கொள்கை இதுதான் - எங்களுடைய மனுதர்மம் இதைச் சொல்கிறது; பொதுமக்களே ஆதரவு தாருங்கள் என்று என்றைக்காவது கேட்டிருக்கிறார்களா?
மனுதர்மத்தை யார் வெளியிடவேண்டும்?
ஆர்.எஸ்.எஸ். வெளியிடவேண்டும்.
இதுவரைக்கும் ஒரு புத்தகத்தைக்கூட வெளியிட்டது கிடையாது. வெளியிடுவது ஆசிரியர்தான், பெரியார் திடல்தான் வெளியிடுகிறது.
இதுதான் உலகத்தில் மிகவும் வியப்பான விஷயம். ஆனால், அவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள்.
தங்களுடைய தத்துவத்தையோ, கொள்கை களையோ பகிரங்கமாக மக்களிடத்தில் சொல்லாமல், ஆட்சி அதிகாரத்தில் ஒரு கட்சி இருக்கிறது என்றால், அங்கேதான் சூழ்ச்சி இருக்கிறது.
இதைப் பொதுமக்களுக்குப் புரிய வைத்து, அவர்களை உணரச் செய்து, ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதன்மூலமாக இந்த அபாயத்தைத் தடுத்து நிறுத்த முடியும். இல்லையென்றால், தனிப்பட்ட முறையில் இந்த மேடையில் இருப்பவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவது கிடையாது.
வன்முறையின்மீது நம்பிக்கை வைத்தால்,
அவன் முட்டாள் என்றுதான் அர்த்தம்!
வெட்டுவது, குத்துவது என்பதெல்லாம் வேறு விஷயம்; அவர்கள் அதுகுறித்து பேசிக் கொண்டிருக் கின்றார்கள்; அந்தப் பிரச்சினைக்கு நான் போகவில்லை. நீ வெட்டினால், நானும் திருப்பி வெட்டுவேன், அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. வன்முறையின்மீது நம்பிக்கை வைத்தால், அவன் முட்டாள் என்றுதான் அர்த்தம்.
அரசியல் பேச வா! தத்துவத்தைப் பேச வா! உன்னுடைய தத்துவத்தில் இருக்கின்ற நியாயத்தை நாட்டு மக்களிடையே எடுத்துச் சொல்!
மனுதர்மத்தை வரி விடாமல், பொது மேடையில் நின்று சொல். அப்படி சொன்னீர்கள் என்றால், என்ன நடக்கும்?
கற்கள்தான் மேடைக்கு வரும் - பூ மாலை மேடைக்கு வராது.
மனுதர்மம் என்ன சொல்லுகிறது?
இதோ பாருங்கள், காவல் துறையில் சேர்ந்து, ஒரு பெண் அதிகாரியாக இங்கே அமர்ந்திருக்கிறார்.
பார்ப்பனப் பெண்கள் உள்பட எந்தப் பெண்களும் படிக்கக்கூடாது என்று சொல்வது மனுதர்மம்
ஆனால், மனுதர்மம் என்ன சொல்லுகிறது, பெண் கள் படிக்கக்கூடாது என்று சொல்கிறது. இந்தப் பெண், அந்தப் பெண் என்றில்லை - பார்ப்பனப் பெண்கள் உள்பட எந்தப் பெண்களும் படிக்கக்கூடாது என்று மனுதர்மம் சொல்கிறதா, இல்லையா?
அண்ணாமலை மனுதர்மத்தைப் படித்திருக்கிறாரா?
அண்ணாமலைக்கு இதுபற்றி ஏதாவது தெரியுமா? அண்ணாமலை மனுதர்மத்தைப் படித்திருக்கிறாரா? அப்படி அவர் மனுதர்மத்தைப் படித்திருந்தால், பாரதீய ஜனதா கட்சியில் இருக்கமாட்டார்.
தன்னுடைய சொந்தக் கட்சியினுடைய கொள்கை என்னவென்று தெரியாமல், அந்தக் கட்சியில் பல பேர் இருக்கிறார்கள். கொள்கை தெரிந்தால், அந்தக் கட்சியில் இருக்கமாட்டார்கள்; இதுதான் எதார்த்தமான உண்மை.
திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடாத கட்சி. நாங்கள் தேர்தலில் போட்டி போடுகிற கட்சி. எங்கள் கட்சியில் இருக்கும் ஒருவர், எப்படியாவது எம்.எல்.ஏ., ஆகலாம்; எம்.பி., ஆகலாம் என்கிற கனவு இருக்கலாம்; அல்லது அமைச்சராகலாமா என்கிற கனவு இருக்கலாம். அதற்காகக்கூட நாங்கள் கட்சியில் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கலாம்.
கருப்புச் சட்டைத் தோழர்கள் கொள்கையைத் ஏற்றுக்கொண்ட காரணத்தினால்
திராவிடர் கழகத்தில் இருக்கிறார்கள்!
ஆனால், கருப்புச் சட்டை அணிந்த தோழர்களுக்கு அதற்கான வாய்ப்பே கிடையாது. எம்.எல்.ஏ., எம்.பி., என்பது பிறகு; சாதாரண பஞ்சாயத்து போர்டு மெம் பராகக்கூட ஆக முடியாது.
பிறகு ஏன் அந்த இயக்கத்தில் இருக்கிறார்கள்?
கொள்கை பலத்தால் இருக்கிறார்கள்; அந்தக் கொள் கையைத் தாங்கள் ஏற்றுக்கொண்ட காரணத்தினால், அந்த இயக்கத்தில் இருக்கிறார்கள்.
வயதானவர்கள் மட்டுமல்ல, ஏராளமான இளை ஞர்கள் அந்த இயக்கத்தில் இருக்கிறார்கள்; கொள்கைப் பிடிப்பின் காரணமாக இருக்கிறார்கள்.
பாரதீய ஜனதா கட்சியிலோ, ஆர்.எஸ்.எஸ். இயக் கத்திலோ கொள்கை விவரம் தெரிந்தவர்களும் இருக்கிறார்கள்; நான் இல்லை என்று சொல்லமாட்டேன்.
ஊருக்கு ஊர் காவிக் கொடி ஏற்றிக்கொண்டவர் களுக்கு ஏதாவது தெரியுமா? பெரியார் சிலைக்கு காவிச் சாயம் பூசுகிறவர்களுக்கு அந்தக் கொள்கைகளைப்பற்றி தெரியுமா? அம்பேத்கர் சிலைக்குக் காவித் துண்டை போடுகிறவனுக்குத் தெரியுமா? என்றால், தெரியாது.
அவன் தெரிந்து செய்கிறானா?
தெரியாமல் செய்கிறானா?
அம்பேத்கர் சிலைக்குக் காவி துண்டு போட்டு, நெற்றியில் விபூதி, குங்கும பொட்டு வைத்து படம் வெளியிடுகிறான். குண்டர் சட்டத்தில் அவனைக் கைது செய்திருக்கிறார்கள். அவன் தெரிந்து செய்கிறானா? தெரியாமல் செய்கிறானா? ஆர்.எஸ்.எஸ். கொள்கை யான மனுதர்மக் கொள்கை தெரிந்திருந்தால், நிச்சயமாக செய்யமாட்டான். அந்தக் கொள்கை தெரியாத தினால்தான், இதுபோன்று செய்கிறான்.
இதை நாட்டு மக்களுக்குச் சொல்வதுதானே எங்களுடைய பணி!
மனுதர்மம் என்றால் என்ன? அது என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது?
நான்கு வர்ணங்கள் என்றால் என்ன?
நான்கு வர்ணங்களைப்பற்றி அவர்கள் பொது மேடையில் பேசுவதற்குத் தயாரா? அண்ணாமலை பேசுவாரா?
கடிகாரத்தைப்பற்றி பிறகு பேசுவோம்; மதுக்கூர் ராமலிங்கம் கோபித்துக்கொள்ள வேண்டாம்; ஏப்ரல் மாதம் பில் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
இது கடையில் வாங்கிய கடிகாரம், இந்த விலைக்கு வாங்கினேன் என்று சொல். அல்லது எஸ்.பி.,யாக நான் கருநாடக மாநிலத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, நான் ஒருவருக்குச் செய்த சேவைக்காக, அவர் எனக்குக் கொடுத்த அன்பளிப்பு என்று சொல். அதில் ஒன்றும் தவறில்லை.
அப்படி எதுவும் சொல்லாமல், ‘‘ஏப்ரல் மாதம் ரசீதைக் காட்டுகிறேன். அப்பொழுது தமிழ்நாட்டு அமைச்சர்கள் என்னனென்ன வாங்கினார்கள் என்று நான் சேர்த்துச் சொல்லப் போகிறேன்; நான் பாத யாத்திரை செல்லப் போகிறேன், அப்பொழுது அதைச் சொல்கிறேன்’’ என்கிறார்.
நேரிடையாகப் பிரச்சினைக்கு அவர் வரவில்லை.
அந்தக் கடிகாரம் வரிகள் உள்பட 10 லட்சம் ரூபாய் என்று சொல்கிறார்கள். ஆமாம், நான் வாங்கினேன் என்று சொல்; அல்லது யாராவது கொடுத்தார்கள் என்று சொல்.
ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல்!
ஏற்கெனவே ரபேல் விமானம் வாங்கியதில் பெரிய ஊழல் நடைபெற்று இருக்கிறது என்று ஆசிரியர் அவர்கள் சொல்லவில்லை; நான் சொல்லவில்லை.
‘இந்து’ ராம் பத்திரிகையில், பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியிருக்கிறார், எவ்வளவு பெரிய ஊழல் நடந்தது என்று.
அந்த ஊழலில், இந்தக் கடிகாரம் சேர்ந்ததா?
ஆக, உண்மைகளை மறைத்துவிட்டு, வெவ்வேறு மாதிரி பேசுகிறார்.
பத்திரிகையாளர்கள் அண்ணாமலையிடம் கேட் கிறார்கள், ‘‘தமிழ்நாட்டில் மிகச் சிறந்த நடிகர் யார்?’’ என்று.
பத்திரிகையாளர்கள் கேட்டார்களோ அல்லது அப்படி கேட்க வைத்தார்களோ என்று தெரியவில்லை.
அந்தக் கேள்விக்கு அண்ணாமலை என்ன பதில் சொல்கிறார், ‘‘மு.க.ஸ்டாலின்தான் சிறந்த நடிகர்’’ என்கிறார்.
மோடியைக் காட்டிலும் உலகத்தில் வேறு யாராவது நடிகர் உண்டா?
மாநிலத்திற்கு மாநிலம் உடைகளை மாற்றுகிறார். ஒரு பக்கத்தில் முண்டாசு கட்டுகிறார்; இன்னொரு பக் கத்தில் பைஜாமா போடுகிறார்; இன்னொரு பக்கத்தில் வேட்டி கட்டுகிறார். விலையுயர்ந்த ஆடைகளை அணிகிறார்.
தமிழ்நாட்டு மக்களைக் காப்பதற்காக
நித்தமும் உழைத்துக் கொண்டிருக்கின்ற நிஜமான கதாநாயகர்
ஆமாம், மு.க.ஸ்டாலின் நடிகர்தான், அதி லொன்றும் சந்தேகமில்லை. நிஜமான நடிகர். தமிழ்நாட்டு மக்களைக் காப்பதற்காக நித்தமும் உழைத்துக் கொண்டிருக்கின்ற நிஜமான கதாநாயகர்.
அவர் மாவட்டத்திற்கு மாவட்டம் வேடம் கட்டிக்கொண்டு போகவில்லை. தேனி மாவட்டத் திற்குச் சென்றால், ஒரு வேடம்; மதுரைக்குச் சென்றால், அங்கு ஒரு வேடம்; அல்லது கோயம் புத்தூருக்குச் சென்றால், ஒரு வேடம்; ஈரோட் டுக்குச் சென்றால், அங்கு ஒரு வேடம் என்று அவர் போடவில்லை.
சாதாரணமாகத்தான் இருக்கிறார், அரைக் கை சட்டை, வெள்ளை வேட்டி உடைதான். அவர் வேடம் போடவேண்டிய அவசியமில்லை.
ஏமாற்றுகிறவன்தான் வேடம் போடுவான்; மக்களை ஏமாற்றுகிறவன்தான் வேடம் போடு வான்.
அண்ணாமலை சொல்கிறார், உண்மைகளைப் பேச மறுக்கிறார்கள் என்று.
தேசிய புதிய கல்விக் கொள்கையை,
பொது மேடையில் விவாதிப்பதற்கு
நீங்கள் தயாரா?
உங்களுடைய தேசிய புதிய கல்விக் கொள்கையை, பொது மேடையிலிருந்து நீங்கள் விவாதிப்பதற்குத் தயாரா?
நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
எதை தந்தை பெரியார் எதிர்த்தாரோ?
எதை திராவிடர் கழகம் எதிர்த்ததோ?
எதை கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்த்ததோ?
எதை அண்ணா எதிர்த்தாரோ?
எந்தக் குலக்கல்வி முறையை எதிர்த்தார்களோ,
அவற்றையே இன்றைக்கு மறைமுகமாக தேசியக் கல்விக் கொள்கை 2020 என்ற முறையில் கொண்டு வருகிறீர்கள்.
அதுதானே உண்மை!
தேசியக் கல்விக் கொள்கை என்ன?
பழையபடி நம்முடைய பிள்ளைகள் படிக்காமல் போகவேண்டும், அவ்வளவுதான்.
இப்பொழுதுதான் நம்முடைய பிள்ளைகள் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., தாசில்தார், காவல்துறை அதிகாரி, பொறியாளர்கள், டாக்டர்கள் என வந்தி ருக்கிறார்கள்.
கம்பம் மாநாடு எதற்காக?
இந்த நிலை இருக்கக்கூடாது; எப்படியாவது நம் பிள்ளைகளை படிக்கவிடாமல் செய்யவேண்டும். நான்காவது வருணத்தைச் சேர்ந்தவர்கள் படிக்கக் கூடாது - அதற்காகவே மறைமுகமாக புதிய கல்விக் கொள்கை என்பதைக் கொண்டு வருகிறார்கள்.
இது உண்மை இல்லை என்று நீங்கள் சொல்ல முடியுமா?
ஆக, வேடதாரிகள், புரிந்துகொள்ளவேண்டும். அதற்காகத்தான் இந்த மாநாடுகள்.
காந்தியாரைச் சுட்டுக்கொன்ற
கொடியவன் யார்?
இந்த நாட்டை சீரழிக்கக்கூடிய கொள்கைகளைப் பின்பற்றுகிறார்கள். இந்த நாடு ஏற்றுக்கொண்ட மதச் சார்பின்மை கொள்கை - அது என்ன சாதாரண விஷயமா? அதற்காக செய்த தியாகம் என்ன?
காந்தியாரைக் கொன்றீர்களே, எதற்காகச் சுட்டுக் கொன்றீர்கள்?
ஒரு நாட்டினுடைய விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஒரு மாபெரும் தலைவர்; ‘தேசப் பிதா’ என்று போற்றப்பட்டவர்.
அவர் என்ன குடியரசுத் தலைவரானாரா? பிரதமரா னாரா? எந்தப் பொறுப்பையும் அவர் ஏற்கவில்லை.
நாட்டின் விடுதலைக்குத் தலைமை தாங்கிய ஒரு மாபெரும் தலைவர் - இந்த நாடு விடுதலை பெற்ற பிறகு, 5 மாதம் 15 நாள்கள்தான் உயிரோடு இருந்தார். 6 மாதங்கள்கூட உயிரோடு இல்லை.
சாவர்க்கார் நாட்டிற்குச்
செய்த சேவை என்ன?
அவரை சுட்டுக் கொன்ற கொடியவன் யார்? வீர சாவர்க்கார் என்ற ஒருவர். நாடாளுமன்றத்தில், வெட்க மில்லாமல் அவருடைய படத்தை வைத்திருக்கிறார்கள். அவர் இந்த நாட்டிற்குச் செய்த சேவை என்ன?
அவர் என்ன வீர தீர செயல்களைச் செய்தார்?
காந்தியாரைச் சுட்டுக் கொல்வதற்கு சதித் திட்டம் தீட்டிய குற்றவாளிகளில் இவரும் ஒருவர். ஒருமுறை அல்ல, மூன்று முறை அந்த முயற்சி மேற்கொள்ளப் பட்டது.
சாவர்க்கார் சிறையில் இருந்தபொழுது, மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு, வெளியே வந்தவர், வெள்ளையர் ஆட்சிக் காலத்தில். அவரும், வாஜ்பேயியும்.
நாடாளுமன்றத்தில் சவார்க்கார் படம் வைத்திருக் கிறார்கள். இங்கே சென்னை கல்வி வளாகத்தில் பேராசி ரியருடைய சிலை வைக்கக் கூடாது என்கிறார்கள்.
தேசத்தின் துரோகிக்கு நாடாளுமன்றத்தில் படம்; இந்த தேசத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பேராசிரியருக்கு சிலை வைக்கக் கூடாது என்கிறார்கள்.
ஆசிரியர் அவர்கள்தான் கேட்டார், பேராசிரிய ருடைய நூற்றாண்டு விழாவில் - ‘‘அவாள் சிலைகள் மட்டும் இருக்கலாமா?’’ என்று.
மூன்று அமைப்புகளும்
ஒரே ஆண்டில்தான் பிறந்தன
இப்படி சூட்சமும், வஞ்சகமும் நிறைந்த அமைப்பு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு - அந்த அமைப்பும் 1925 ஆம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் 1925 ஆம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது.
அதேபோல, சுயமரியாதை இயக்கம் 1925 ஆம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது.
மூன்று அமைப்புகளும் ஒரே ஆண்டில்தான் பிறந் தன. உண்மையைச் சொல்கிறேன், நீ பிழைக்கமாட்டாய்; நாங்கள் இரண்டு பேரும் நீடித்து, நிலைத்து இருப்போம். கண்டிப்பாக, உறுதியாக இருப்போம்.
ஏனென்று சொன்னால், நாங்கள் போராடுவது எங்களுடைய சுயநலத்திற்காக அல்ல - ஒரு குறிப்பிட்ட மதத்திற்காக அல்ல - குறிப்பிட்ட நபருக்காக அல்ல.
இங்கே எல்லோரும் குறிப்பிட்டதைப்போல, ஒரு புதிய உலகத்தைக் காண விரும்புகின்றோம். ஒரு புதிய சமுதாயத்தைக் காண விரும்புகின்றோம்.
புதியதோர் உலகு செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
பொதுவுடைமைக் கொள்கையை
திசை எட்டும் சேர்ப்போம்!
‘புனித’மோடு அதை எங்கள்
உயிர் என்று காப்போம்!
தந்தை பெரியாரால், புரட்சிக்கவிஞர் என்று பாராட்டப் பெற்ற பாரதிதாசன் அவர்கள் எழுதி வைத்த வைர வரிகள் அவை.
லட்சியத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கக் கூடிய இயக்கங்கள்
இந்த நோக்கத்திற்காக, இந்த லட்சியத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கக் கூடிய இயக்கங்கள்தான் இந்த மேடையில் இருக்கின்றன.
தந்தை பெரியாரைப்பற்றி நிறைய செய்திகளை இங்கே சொல்லியிருக்கிறார்கள்.
கவிஞர் சொன்ன ஒரு சின்ன செய்தியை சொல்லி என்னுரையை முடிக்க விரும்புகிறேன்.
இங்கே ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் இருப்பதினால், அந்தச் செய்தியை சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன்.
தந்தை பெரியார் எப்படி சிக்கனமாக இருந்தார் என் பதை நிறைய முறை ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.
தந்தை பெரியாரின் சிக்கனமும் -
இயக்கத்தின் நேர்மையும்!
பெரியார் திடலில், பெரிய அளவிற்கு ஒரு மாநாட்டினை நடத்த ஏற்பாடு செய்தார்களாம். பெரியார் அவர்கள், மாநாட்டு ஏற்பாடுகள் எந்த அள விற்கு இருக்கிறது என்ப தைப் பார்க்க வேண்டும் என்று ஆசிரியரிடம் சொன்னாராம்.
இல்லை, இல்லை நீங்கள் வரவேண்டாம்; நாங்கள் பார்த்துக் கொள் கிறோம் என்று ஆசிரியர் சொன்னாராம்.
ஏனென்றால், இதற் காக ஏன் அதிகமாக செலவு செய்தீர்கள்; அதற்காக ஏன் இவ் வளவு செலவு செய் தீர்கள் என்று கேட்பார் என்பதற்காக பயந்து கொண்டு, நீங்கள் வர வேண்டாம் என்று அவ் வாறு சொன்னார்களாம்.
அண்ணன் ஈ.வெ. கி.ச. இளங்கோவன் அவர்களுடைய தந்தை, யார் என்று எல்லோ ருக்கும் தெரியும் - சொல்லின் செல்வர் அவர்.
அவருக்கு பண நெருக்கடி ஏற்பட்டதி னால், தந்தை பெரியாரி டம் சென்று பணம் கேட்டிருக்கிறார்.
பெரியார் அவர்கள், நான் பணம் தருகிறேன்; அதற்காக நோட்டு எழுதித் தரவேண்டும் என்று சொன்னார்.
சரி, நோட்டு எழுதி தருகிறேன் என்று சொல்லி, நோட்டு எழுதிக் கொடுத்துவிட்டு, மரியாதைக்குரிய சம்பத் அவர்கள் பணம் பெற்றிருக்கிறார்.
பிறகு, சம்பத் அவர்கள் இயற்கை எய்திவிட்டார்கள். அதற்குப் பிறகு அன்னை மணியம்மையார் அவர்கள் பொறுப்பிற்கு வந்திருக்கிறார்.
அந்தப் பத்திரம் அப்படியே இருந்திருக்கிறது; அவருடைய மனைவியை அழைத்து, உங்களுடைய வீட்டுக்காரர், அய்யாவிடம் கடன் வாங்கியிருக்கிறார். அதைக் கொடுக்கவில்லை; ஆகவே, பணம் கொடுங்கள் என்று கேட்டு இருக்கிறார்கள்.
சரி என்று சொல்லி, அந்த அம்மையாரும் பணத்தைக் கொடுத்திருக்கிறார்.
எவ்வளவு நேர்மையாக ஒரு இயக்கத்தில் நேர் மையாக ஒரு தலைவர் இருந்திருக்கிறார் என்பதற்கு இதைக் காட்டிலும் சாத்தியங்கள் வேண்டுமா?
கொள்கைக்காக வாழ்நாளையெல்லாம் அர்ப்பணித்துக் கொண்ட
ஒரு மாபெரும் தலைவர்
இப்படி மிகச் சிறப்பான முறையில், ஒரு கொள் கைக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டு, அந்தக் கொள்கை வெற்றி பெறவேண்டும் என்பதற்காக, தன்னுடைய வாழ்நாளையெல்லாம் அர்ப்பணித்துக் கொண்ட ஒரு மாபெரும் தலை வருடைய நினைவு நாள்.
அவர் பின்பற்றிய அந்தக் கொள்கையை, விடாது தொடர்ந்து பின்பற்றி, வெற்றி பெறச் செய்யவேண்டும் என்பதற்காக, நம்முடைய மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்கள், அந்தப் பணியை சிரமேற்கொண்டு, அவருக்கு வயது 90 என்று சொன்னார்கள்; அப்படி சொன்னால், நான் அவரிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளவேண்டும்; அவர் 9 வயதைத் தாண்டவேயில்லை, இன்னமும். நீங்களாகவே சைபரைப் போட்டு, அவருக்கு வயது 90, 90 என்று சொன்னீர்கள் என்றால், அவர் ஒப்புக்கொள்ளவேண்டும் அல்லவா, அவருக்கு 90 வயது என்று. ஒப்புக்கொண்டது கிடையாது.
ஆசிரியரின் பணி தொடரட்டும் -
நாங்களும் உங்களைத் தொடருவோம்!
அதைப்பற்றி கவலையில்லை. வாழ்வது மக் களுக்காக - வாழ்வது நாட்டிற்காக என்கிற அந்த உணர்வோடு, அந்த நல்ல கொள்கை வெற்றி பெறவேண்டும் என்பதற்காக, அர்ப்பணித்துக் கொண்டு பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற எனது அருமைத் தந்தை ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துகள் - உங்கள் பணி தொடர, நாங்களும் உங்களைத் தொடருவோம்!
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள் உரையாற்றினார்.
No comments:
Post a Comment