சென்னை, ஜன. 26- வட சென்னையில் ரூ.9.70 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு வளாகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 21.4.2022 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில், வடசென்னை பகுதி இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய நவீன குத்துச்சண்டை வளாகம் அமைக்கப்படும் என அறிவித்தார். அதேபோல் அங்கு இறகுப் பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கபடி மற்றும் இதர உள்ளரங்கவிளையாட்டுகளுக்கான வசதிக ளோடு நவீன உடற்பயிற்சிக் கூடமும் அமைக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். இதையடுத்து விளையாட்டு வளாகம் அமைக்க மாநகராட்சியால் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கையில், விளையாட்டு வளாகத்தினுள் ஆண்களுக்கான உடற் பயிற்சிக் கூடம், பெண்களுக்கான உள்ளரங்க உடற் பயிற்சிக் கூடம், குழந்தைகளுக்கான விளையாட்டுக் கூடம், விளையாட்டுக் கருவிகள் மற்றும் இதர வசதிகள் குறித்து விளக்கப்பட்டிருந்தன. அதன்படி, தண்டையார்பேட்டை, சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் அமைந்துள்ள மாநகராட் சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.9.70 கோடி மதிப்பீட்டில் சிறந்த விளையாட்டு வசதிகள் மற்றும் கட்டமைப்புகளுடன் கூடிய விளையாட்டு வளாகம் அமைக்க நிர்வாக அனுமதியும், இதற்கான செலவினம் ரூ.9.70 கோடியை மானியமாக வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment