தக்க சமயத்தில் உடல் உறுப்புகள் கிடைக்காமல் போவதால் ஆண்டு தோறும் ஏறத்தாழ அய்ந்து லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
உறுப்புக்கொடை வழங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் பத்து முதல் இருபது சதவிகித உயிர்கள் காப்பாற்றப்படலாம். நூறு கோடிக்கு மேல் ஜனத்தொகை உள்ள நாடு இது. இதில் உடல் உறுப்புக்கொடை வழங்க முன் வருபவர்கள் பத்து லட்சம் மக்களில் 0.08 பேர்தான் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
திராவிடர் கழக இளைஞர் அணியின் முயற்சியால் உருவாகியுள்ள அமைப்பு ‘பெரியார் லைஃப்’. பொதுத் தொண்டுக்காகவே வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் தந்தை பெரியார். அவருடைய அடிச்சுவட்டைப் பின்பற்றி வாழும் இளைஞர்கள் உருவாக்கியுள்ள மனிதநேய வலைதளம் இது.
22.1.2023 அன்று மாலை திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் அச்செயலியைத் தொடங்கி வைத்தார்.
எளிதில் தொடர்பு! விரைவில் உதவிக்கரம்!!
குருதிக் கொடையும் உடல் உறுப்புக் கொடையும் நம்மை நிஜ மனிதர்களாக்கக் கூடியவை. திராவிடர் கழக இளைஞர் அணி ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து குருதிக் கொடை முகாம்கள் நடத்திவருகிறது. எதிர்பாராத சூழ்நிலைகளில் உறவினர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினர் மறைந்தவர்களின் உடல் உறுப்புகளை கொடையாக வழங்க முன்வரலாம் என்று பொது மக்களுக்கு இளைஞர் அணியினர் எடுத்துச் சொல்வது வழக்கம்.
இந்த வலைதளத்தின் மூலம் கொடை வழங்க முன் வருபவர்கள் எளிதில் மருத்துவமனைகளுடன் தொடர்புகொள்ள முடியும். கழகத்தின் இளைஞர் அணி இதற்கு உதவி செய்யும். பல்வேறு மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் இந்தப் பணியில் ஈடுபடுவார்கள்.
நாட்டில் நிலவும் சமத்துவமின்மைக்கும், ஜாதிப் பாகுபாடுகளுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் எதிராகப் போராடிவரும் இளைஞர் அணியினர் கூடுதலாக இந்த மனிதநேயப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளனர். 'எல்லோருக்கும் எல்லாம்’ என்னும் ஆசிரியரின் கொள்கைப்படி தொண்டாற்றி வருகின்றனர்- இளைஞர் அணியினர். பிறருடைய துயரங்களை நீக்கவும், அன்பையும் மனித நேயத்தையும் பரப்பவும் அயராது உழைக்க முன் வந்துள்ள இளைஞர்கள் அவர்கள். ’திராவிட மாடல்’ தொண்டு என்றே இதனைப் பெருமிதத்துடன் குறிப்பிடலாம். அந்தப் பாதையில் இந்தப் புதிய வலைதளத்தின் பயணம் துவங்கியுள்ளது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
யார் எல்லாம் விழிக்கொடை செய்யலாம்?
விழிக்கொடையின் அவசியம் என்ன?
விழிக்கொடை வழங்கப்பட்டபின் எவ்வளவு விரைவாக விழியின் வெண்படலம் இன்னொருவருக்குப் பொருத்தப்பட வேண்டும்?
குருதிக் கொடைக்கு எவ்வளவு நேரமாகும்?
பதிவு செய்வதற்குரிய படிவம் புதிய வலைதளத்தில் உள்ளது.
அர்த்தமுள்ள வாழ்க்கை
எதற்கும் அஞ்சாத நெஞ்சமும் துணிவும் நிறைந்த, ஈடு இணையற்ற தலைவராக விளங்கியவர் தந்தை பெரியார். ஓய்வின்றி உழைத்தவர். நிகரற்ற சிந்தனையாளர். அரசியல், பொருளாதாரம், சமூகம், இலக்கியம், தத்துவம், கடவுள் மறுப்பு, மதமறுப்பு- இப்படிப் பல பரிமாணங்களில் காட்சியளித்தவர் அவர்.
அவர் அணுகாத பிரச்சினை ஏதுமில்லை. அவரது பார்வைக்கு வராத சமுதாயச் சீர்கேடும் எதுவுமில்லை. வாழ்ந்த காலத்திலேயே ஒரு சகாப்தமாகி விட்ட மேதை பெரியார். ஒப்பற்ற மனித நேயர் அவர் என்றால் மிகையாகாது.
மொழிப்பற்றும், இனப்பற்றும் இல்லாதவராக வாழ்ந்த பெரியார், கடவுளும் இல்லை, மதம் என்ற ஒன்றும் இல்லை என்று முழங்கியவர். ஜாதிகளை அடியோடு அழிக்கப் போராடிய பெரியார், அரசியல் ஆதாயம் எதையும் நாடியதில்லை. மனிதர்கள் இருக்கும் போதும், இறந்த பிறகும் பிறருக்குப் பயன்படவேண்டும் என்று சொன்னவர்.
No comments:
Post a Comment