பாலத்தை இராமனே இடித்தான் என்கிறதே இராமாயணம் - இதற்கு என்ன பதில்?
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தக் கோரி விளக்கச் சிறப்புக் கூட்டத்தில்
கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி கேள்வி
சென்னை, ஜன.11 குரங்குகள் பாலம் கட்டுமா? உண்மை யில் பாலம் கட்டியது யார்? பாலத்தை இராமனே இடித்தான் என்கிறதே இராமாயணம் - இதற்கு என்ன பதில்? என்றார் திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள்.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் விளக்கச் சிறப்புக் கூட்டம்
கடந்த 3.1.2023 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் - செயல்படுத்தக் கோரி விளக்கச் சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைச் செயல் படுத்தக் கோரி திராவிடர் கழகம் நடத்தும் இந்த சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமையேற்று இருக்கின்ற திராவிடர் கழகத் துணைத் தலைவர் அய்யா கவிஞர் அவர்களே,
வரவேற்புரையாற்றிய தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சகோதரர் ப.முத்தையன் அவர்களே, நன்றியுரையாற்றவிருக்கின்ற சென்னை மண்டல திராவிடர் கழக செயலாளர் சகோதரர் தே.செ.கோபால் அவர்களே,
இந்த விழாவின் நிறைவுரையையும், சிறப்புரையை யும் ஆற்றவிருக்கின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களே,
இங்கு நாம் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய, அறிவியலும், அரசியலும் இணைந்த பல செயல் திட்டங்களை நமக்கு மிக எளிமையான முறையில் விளக்கி, உரைத்திருக்கின்ற ஒன்றிய அரசினுடைய மிகச் சிறந்த பொறுப்பில் இருந்தவரும், இந்தத் திட்டத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, அதனை செயல்படுத்த வேண்டும் என்று முனைந்தவருமான நமது மரி யாதைக்குரிய அய்யா செ.வேலுமணி அவர்களே,
வருகை தந்திருக்கக்கூடிய கழகத்தின் பொறுப் பாளர்களே மற்றுமுள்ள தோழர்களே அனைவருக்கும் என்னுடைய பணிவன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அனைத்துத் துறைகளும் வளமாகவும், வலுவாகவும் இருக்கவேண்டும்
ஒரு வலிமையான நாடு என்பதற்கு இலக்கணம், அதன் அனைத்துத் துறைகளும் வளமாகவும், வலுவாக வும் இருக்கவேண்டும் என்பது - அதற்கு இயன்ற வகையிலெல்லாம் வழி தேடுவதும், அதற்கான திட்டங்களை செயல்படுத்துவதும்தான் ஒரு நல்ல அரசினுடைய பொறுப்பாகவும், கடமையாகவும் இருக்கும்.
அவரவர் சார்ந்த கொள்கைகள் எப்படி முரண் பட்டாலும், நாட்டுக்கு என்று ஒரு திட்டத்தைச் செயல் படுத்தும்பொழுது, தங்களுடைய தனிப்பட்ட நம்பிக் கைகளை ஒருபக்கம் வைத்துவிட்டு, மக்களுக்கான பயன்தரும் திட்டங்களை நடத்துபவர்கள்தான், நிறை வேற்றுபவர்கள்தான் வரலாற்றிலே நல்ல ஆட்சியாளர்களாக நினைக்கப்படுகிறார்கள்.
தந்தை பெரியார் அவர்களுடைய போராட்டங்கள் அவ்வளவு கடுமையாக இருந்திருக்கின்றன
வாழும் காலத்தில் அரசியல் ரீதியாக, கொள்கை மாறுபாடுகள் காரணமாக, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களோடு, மிக அதிகமான எதிர்ப்பைக் கொண்டிருந்தது நம்முடைய திராவிட இயக்கம்; தந்தை பெரியார் அவர்களுடைய போராட் டங்கள் அவ்வளவு கடுமையாக இருந்திருக்கின்றன.
ஒரு துளியளவுகூட
நாம் குறைத்து மதிப்பிட முடியாது
ஆனால், இந்த நாட்டிற்கு பிரதமர் ஜவகர்லால் நேரு ஆற்றிய பணிகள் என்று வரும்பொழுது, அவருடைய உழைப்பையோ, அவர் ஆற்றிய பணியையோ ஒரு துளியளவுகூட நாம் குறைத்து மதிப்பிட முடியாது என்பதற்கு, இன்றைக்கு இந்தியாவில் பார்க்கும் பொதுத் துறை நிறுவனங்கள் எல்லாம் அவர் காலத்தில் உருவாக்கப்பட்டவை.
இன்று, இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு, நேருவை குறைசொல்லி, அவமானப்படுத்துகின்ற ஆட்சியாளர்கள் செய்கின்ற வேலையெல்லாம், அவர் உருவாக்கிய பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றுக் கொண்டிருப்பதுதான்.
இப்படிப்பட்ட தலைகீழ் மாற்றம் ஆட்சியாளர்களிடம் ஏற்பட்டு இருக்கக்கூடிய சூழ்நிலையில், வான்வழி, தரை வழி, கடல் வழி ஆகிய மூன்றிலும், இந்த நாடு முன் னேறுவதற்கான வாய்ப்புகளைச் செயல்படுத்தக் கூடிய சூழல் அமைந்தது. அதில் இரண்டையும் செய்யக்கூடிய வாய்ப்பு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ஒன்றிய அமைச்சராக இருந்த அய்யா டி.ஆர்.பாலு அவர்களுக்குக் கிடைத்தது.
அவர் காலத்தில் போடப்பட்ட நெடுஞ்சாலை வளர்ச்சி, இப்பொழுதும் அவர்களுடைய பெருமையைப் பேசுகிறது.
இதே பி.ஜே.பி.யின் மறைந்த பிரதமர் வாஜ்பேயி அவர்களுடைய சாதனையாக அந்தத் தங்க நாற்கரச் சாலை என்றும் பேசப்பட்டு, புகழ்பெறுகிறது.
ஓர் அருமையான திட்டத்தை
எதன் பெயரால் நிறுத்தினார்கள்?
ஆனால், அதைப்போல, அல்லது அதைவிடவும் சிறப்பான ஒரு பெயரை பெற்றிருக்கக்கூடிய இந்த சேது கால்வாய்த் திட்டத்தை - நன்றாக உருவாகிக் கொண் டிருந்த ஓர் அருமையான திட்டத்தை எதன் பெயரால் நிறுத்தினார்கள்? அதனுடைய இழப்புகள் என்ன? இது எவ்வளவு மோசமான விளைவுகளை உண்டாக்கும்? இவற்றையெல்லாம்தான் நாம் இன்றைய சூழலில் தெரிந்துகொள்ளவேண்டியவை.
அதில் நமக்குத் தெரியாத பல பகுதிகளை அய்யா வேலுமணி அவர்கள் இங்கு நமக்கு எடுத்துச் சொன் னார்கள்.
நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள், பல்வேறு நிகழ்ச்சிகளில், நம்முடைய எத்தனையோ மாநாடுகளில் ஒவ்வொரு மாநாட்டிலும், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்கிற தீர்மானத்தை நிறை வேற்றி இருக்கிறார்கள். அதைப்பற்றி ஏராளமான உரைகளையும் ஆற்றியிருக்கின்றார்கள்.
ஆனால், இப்போதும் பல நேரங்களில், நம்முடைய துணைத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, நீதிமன்றங்களுக்கு என்ன இலக்கணம்? நீதி எப்படி வழங்கப்படுகிறது? சில கேள்விகளுக்கு விடையே இல்லை.
நம்முடைய குமரி மாவட்டத்தின் ராதாபுரம் தொகுதியில், 70 வாக்குகள் வித்தியாசத்தில், அந்த 70 வாக்குகளை எண்ணுகின்ற பிரச்சினையில், வெற்றி பெறவேண்டிய வேட்பாளர் வெற்றி இல்லாதவராக - குறைந்த வாக்குகளைப் பெற்றவர் சட்டமன்ற உறுப்பி னராக - இதற்காகத் தொடுக்கப்பட்ட வழக்கு 5 ஆண்டு கள் நிலுவையில் இருந்து, மக்கள் யோசித்துப் பார்த்தால், நம்மைப் பார்த்துக் கேட்கமாட்டார்களா?
இந்த வழக்கு எதற்காக 5 ஆண்டுகளாக உங்கள் நீதிமன்றத்தால் தீர்க்கப்படாமல் இருந்தது? நீதிபதியின் கண் பார்வையின் முன்பாகவே, ஒரு அட்வகேட் ஆணையரைப் போட்டு வாக்குகளை எண்ணுங்கள்; 70 வாக்குகள்தானே என்றுகூட சொல்ல முடியும்.
‘‘வாக்குகளை எண்ணுங்கள்,
ஆனால், முடிவை அறிவிக்காதீர்கள்’’
இதையெல்லாம் தாண்டி, மிகப்பெரிய இடத்தில் இருக்கும் உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற பிறகு, ‘‘வாக்கு களை எண்ணுங்கள், ஆனால், முடிவை அறிவிக் காதீர்கள்’’ என்றார்கள்.
இப்படிப்பட்ட விபரீதங்களும், விசித்திரங்களும் நடக்கக்கூடிய இடமாக நீதிமன்றங்கள் மாறத் தொடங்கிய காலகட்டத்தில், இந்த சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து ஒரு வழக்குத் தொடரப்படுகிறது. அந்த வழக் கின் ஒரே ஆதாரம் ‘எங்கள் நம்பிக்கை’ என்பதுதான்.
இன்றைக்கு காசி விசுவநாதர் கோவிலுக்குப் பக்கத் தில் ஒரு மசூதி இருக்கிறது. ஞானவாபி என்று அந்த மசூதிக்குப் பெயர். அந்த ஞானவாபி என்கிற மசூதிக்குள் ஒரு கிணறு இருக்கிறது. அந்தக் கிணற்றிலிருந்து நீர் எடுத்து, அவர்கள் கை, கால்களைக் கழுவிக்கொண்டு மசூதிக்குச் செல்கிறார்கள்; அந்தக் கிணற்றில் மற்றவர் களும் நீர் எடுக்கிறார்கள்.
இரண்டாம் முறை பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்த பிறகு, திடீரென்று ஒரு பெண்மணிக்கு அந்தக் கிணற்றுக்குள் ஒரு லிங்கம் இருப்பது தெரிகிறது.
அடுத்த மசூதி, கரசேவகர்களுக்குத் தயார்!
இத்தனை நூறு ஆண்டுகளுக்குப்பிறகு - அந்த லிங்கம், அந்தப் பெண்மணியின் கண்களுக்குத் தட்டுப் பட்டவுடன், இந்த இடம் சிவன் இருந்த இடம், சிவலிங்கம் இருந்த இடம் என்று அதற்கு ஓர் ஆராய்ச்சி. அதனை ஆய்வு செய்வதற்கு ஒரு குழு. அந்தக் குழு ஒரு முடிவை சமர்ப்பிக்கிறது. அந்தக் குழுவின் ஆய்வின்படி, அங்கே சிவலிங்கம் இருந்தது; ஆகவே, ஹிந்துக்களும் வழிபடலாம்.
அடுத்தது என்னாகும்?
அடுத்த மசூதி, கரசேவகர்களுக்குத் தயார்.
கரசேவகர்களும் தயார்!
இதற்கு நீதிமன்றம் எப்படி பயன்படுகிறதோ, அதன் இன்னொரு வடிவம்தான் சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்துவதற்கு உச்சநீதிமன்றம் செயல்பட்ட முறை.
என்ன ஆதாரம்?
நாசா காட்டியது என்கிறார்கள்.
நாசா என்ன காட்டியது?
ஒரு மணல் திட்டைக் காட்டியது.
மறவன்புலவு சச்சிதானந்தன்
நம்முடைய ஆசிரியர் அவர்கள் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த நூலில், பல்வேறு ஆதாரங்கள் இருக்கின்றன. அதில், ஈழத்தைச் சேர்ந்தவரான மறவன் புலவு சச்சிதானந்தன் அவர்கள், ஓர் அருமையான கேள்வியைக் கேட்கிறார்.
கோடியக்கரையில் இருந்து யாழ்ப்பாணம் வரைக்கும் அந்த மணல் திட்டுக்கள் இருக்கின்றன. அதே மணல் திட்டின் இன்னொரு பகுதி, மன்னார்வளைகுடாவிலிருந்து தனுஷ்கோடி வரை நீளுகிறது. உங்கள் கருத்தின்படி, தெற்கில் இருக்கக்கூடிய யாழ்ப்பாணம் வரை போகிற மணல் திட்டுதான், இராமர் கட்டிய பாலம் என்றால், மன்னார்வளைகுடாவிற்கும், தனுஷ்கோடி இடையிலே இருக்கிற அந்த மணல் திட்டினை யார் கட்டியது? அந்தப் பாலத்தை யார் கட்டியது?
இது என்ன ஓர் அதீத கற்பனை?
குரங்குகள் பாலம் கட்டுமா?
அவர்களுடைய கற்பனைக்கு அளவே இல்லை. அதை நாம் கொஞ்சம் நுட்பமாகப் பார்த்தால்தான் புரிந்துகொள்ள முடியும்.
குரங்குகள் பாலம் கட்டுமா? அப்படியெல்லாம் இல்லை; அதற்கு ஒரு விஸ்வகர்மா இருந்தார்; அவர்தான் பாலம் கட்டினார்கள் என்றார்கள்.
எதற்காகக் கட்டினார்கள்? என்றால், கிஷ்கிந்தை பகுதியிலிருந்து இலங்கைக்குப் போவதற்கு, சீதையை மீட்டு வருவதற்குப் பாலம் தேவைப்பட்டது.
அப்படியென்றால், இன்னொரு கேள்வி வந்தது.
இராவணன் எப்படி சீதையைத் தூக்கிக் கொண்டு போனார்?
இராமன் சீதையை மீட்பதற்குப் பாலம் தேவைப் பட்டால், இராவணன் எப்படி சீதையைத் தூக்கிக் கொண்டு போனார் என்றால், அவர் புஷ்பக விமானத்தில் வந்து, சீதையைத் தூக்கிக் கொண்டு போனார்.
இராவணனிடம் விமானம் இருந்தது; இராமனிடம் விமானம் இல்லை.
யார் போவதற்காக பாலம் கட்டினார்?
நீங்கள் பாலம் கட்டியதற்குப் பதிலாக, ஒரு விமானத் தைக் கட்டியிருக்கலாம்; சரி, பாலத்தைக் கட்டிய பிறகு, வால்மீகி இராமாயணம் என்ன சொல்கிறது என்றால், எப்படிப் போனார்கள் என்றால், அனுமன், இராமனைத் தூக்கிக் கொண்டானாம். குரங்குகள்தான் தூக்கிக் கொள்கின்றன. குரங்குகளின் தோளில் அமர்ந்துதான், இவர்கள் போகிறார்கள். குரங்குகள் எல்லாம் பறக் கின்றன; இராமனையும், இலட்சுமணனையும் குரங்குகள் தூக்கிக் கொள்கின்றன. குரங்குகளுக்குப் பறக்கத் தெரியும். பறக்கத் தெரியாத உங்களை, குரங்குகள் தூக்கிக் கொண்டு போகின்றன.
அப்படியென்றால், எதற்காக இராமன் பாலம் கட்டினார்?
யார் போவதற்காக பாலம் கட்டினார்?
இந்தக் கேள்விக்கும் நமது விடை - தெரியாது.
இதற்கு உபந்நியாசர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
பிறகு, கட்டிய பாலத்தை இடித்துவிட்டதாக ஒரு குறிப்பு.
இவ்வளவும், ஒரு கதையில், ஒரு காவியத்தில் பல்வேறு கற்பனைகள் வருவது இயற்கை.
அதுதான் கதை; அதுதான் காவியம்.
இதுபோன்று இருந்தால்தான், ஹாரிபார்ட்டர் கதைக்கு நாம் லாஜிக் தேட முடியுமா?
அருள்கூர்ந்து உங்களை அறிவியல்படுத்திக் கொள்ளுங்கள்
இங்கே இருக்கும் நிறைய பேருக்கு வயதாகிவிட்டது; ஹாரிபார்ட்டர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதனால், வீட்டிலுள்ள குழந்தைகளைக் கேட்டு, அருள்கூர்ந்து உங்களை அறிவியல்படுத்திக் கொள்ளுங்கள்.
ஹாரிபார்ட்டர் படத்தில், இப்படியே நடந்து போவார் கள்; மூடியிருக்கும் கதவு வழியாக அந்தப் பக்கம் போய்விடுவார்கள். கதவு எப்படி திறந்தது? தெரியாது.
அதற்கு எப்படி நாம் விளக்கம் கேட்க முடியாதோ, அதுபோன்றே, காவியங்களில் சொல்லப்படுகின்ற கற்பனைகளுக்கு அறிவியல் விளக்கம் தேட முடியாது. அறிவியல் விளக்கம் கிடையாது.
ஆனால், அதை வைத்து, அதை வரலாறு என்று சொல்ல முயற்சிப்பதில்தான், இந்த நாட்டில் நடக்கின்ற திரிபு வேலையும், ஆபத்தும் அவ்வளவு வேகமாக வேலை செய்கிறது.
உச்சநீதிமன்றம் ஒரு வழக்கை எடுத்துக்கொள் ளும்பொழுது, அடிப்படைக் கேள்வி, என்ன உங்கள் ஆதாரம்? நாசா காட்டுகிற படம் என்றால், அந்தத் திட்டுக்களை ஆய்வு செய்தீர்களா?
நீங்கள் காட்டுகின்ற போட்டோவில் இருப்பது என்ன? அது மணல் திட்டுதானா? வெறும் மணலா? கால்சியமா? அது என்ன திட்டு? அல்லது பாலத்திற்கான பொருட்கள் அங்கே இருக்கிறதா? என்பதற்கு, ஞான வாபிக்கு சிறப்புக் குழு அமைத்து ஆய்வு செய்கின்ற நீதிமன்றங்கள், சேது சமுத்திரம் என்று சொல்லுகின்ற அந்தப் பகுதியில் ஆதாம் பாலத்தினுடைய திட்டு என்ன? என்பதற்குக் குழு அமைக்கவில்லை; மாறாக, தடைதான் போட்டார்கள்.
இத்தனை ஆயிரம் கோடி திட்டத்திற்கு, போகிற போக்கில், ஒரு தடை ஆணை.
நாளைக்கு வேறு ஏதாவது திட்டத்தைக் கொண்டு வந்தால், அந்தப் பக்கம் சரசுவதி நதி ஓடியது என்று சொன்னால், அந்தத் திட்டமும் போய்விடும்.
இல்லாத சரசுவதி நதியைத் தேடுவதற்குப்
பல நூறு கோடி ரூபாய்களை செலவு செய்கிறார்கள்
ஏனென்றால், இன்றைக்கு சரசுவதி நதியைத் தேடு வதற்காக ஒரு 500 கோடியை ஒதுக்குவதாக திட்டம் போட்டிருக்கிறார்கள்.
சரசுவதி நதி எங்கே இருக்கிறது என்று நமக்குத் தெரியாது; வேத காலத்தில் இருந்ததாம். அப்படி இருந்து மறைந்து போனது.
மனுஸ்மிருதியில் சொல்லப்படுகிறது - இது எந்தப் பிரதேசம் என்றால், சரசுவதி நதி மறைந்த இடம் என்று சொல்கிறார்கள்.
ஆகவே, இன்றைக்கு அந்த மறைந்துபோன சரசுவதி நதியைத் தேடுவதற்குப் பல நூறு கோடி ரூபாய்களை செலவு செய்கிறார்கள், அந்தத் தடத்தைத் தேடுவதற்கு.
ஆனால், எந்த அடையாளமும் இல்லாத ஒன்றை, இது கட்டப்பட்ட பாலம் என்று பொய்யாக நிறுவி, சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்தினார்கள்.
அந்தத் திட்டத்தினுடைய பலன்கள் என்ன?
எத்தனை துறைமுகங்களுக்கு அவை உதவி செய்யக்கூடும்?
எப்படியெல்லாம் தொழில்வளர்ச்சி ஏற்படும்?
பன்னாட்டு வணிகத்திற்கு அத்திட்டம் எப்படி உதவி செய்யும்?
வினா - விடையாகத் தொகுக்கப்பட்டு இருக்கின்றன
மீனவர்கள் முன்னேற்றத்திற்கு அத்திட்டம் எப்படி உதவி செய்யும்? என்பதற்கான விடைகள் அத்தனையும் இந்த நூலில், வினா - விடையாகத் தொகுக்கப்பட்டு இருக்கின்றன.
இன்னொரு வகையான எதிர்ப்பு வந்தது?
ஆர்.எஸ்.எசுக்குப் பல முகங்கள் உண்டு!
எப்படியென்றால், ஆர்.எஸ்.எசுக்குப் பல முகங்கள் உண்டு. அதில், பேட்டா வாங்குவது, பீட்டா வாங்குவது போன்ற விலங்கு நல ஆர்வலர்கள் என்ற பெயரில்.
அவர்களுக்கு முக்கியமான வேலை என்னவென் றால், குடியிருப்புப் பகுதியில் மீன் கடை வைக்கக் கூடாது என்று சொல்வது.
ஜல்லிக்கட்டில் மாட்டைக் கொடுமைப்படுத்துகிறோம் என்று சொல்வது.
அந்த மாட்டின் பாலைத் திருடித் தின்கிறோமே, அதனுடைய கன்றுக்குட்டிப்பாலை - அது விலங்குக்கு செய்கிற கொடுமை அல்லவா?
தயிரை சப்புக் கொட்டி, சப்புக் கொட்டி சாப்பிடு கிறோமே! ‘பேஷ், பேஷ்’ நரசுஸ் காபி ரொம்ப நல்லா யிருக்கு’’ என்று சொல்கிறார்களே, பால் உன்னுடையதா? கன்றுக்குட்டிக்கு உரியதல்லவா?
அசல் காஞ்சிபுரம் பட்டு - எத்தனை லட்சம் புழுக்களின் உயிரைக் கொன்று செய்யப்பட்டது அந்தப் பட்டு. அந்தப் பட்டைக் கட்டிக்கொண்டு மினுக்குகின் றோமே, அது உயிர்களுக்குச் செய்கின்ற கொடுமை யல்லவா என்றால், இல்லையாம்!
இந்திய அரசினுடைய தொழில்நுட்ப நிறுவனம் அதற்கு சான்று கொடுத்திருக்கிறது
சுற்றுச்சூழல் பாதிப்பால் பவளப் பாறைகள் வீணாகி விடும், தூத்துக்குடிப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள்.
இவை அத்தனையும் ஆய்வுக்கு எடுத்துக்கொள் ளப்பட்டு - பவளப் பாறைகள் பாதிக்கப்படாமல் எப்படி அந்த வழியை நாம் தேர்ந்தெடுப்பது என்று இந்திய அரசினுடைய தொழில்நுட்ப நிறுவனம் அதற்கு சான்று கொடுத்திருக்கிறது.
இராமேசுவரத்திலிருந்து போகலாம்; இப்படி தொடங்குங்கள்; அது பவளப் பாறைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது. சுற்றுச்சூழல் பாதிக்காது என்று ஆய்வின் அடிப்படையில் அந்நிறுவனம் வழிகாட்டியுள்ளது.
அப்படியென்றால், எல்லாமே கிடைத்துவிட்டது; ஆனாலும், சில துறைகள் அதற்கான ‘‘நோ அப்ஜெக் ஷன்’’ சான்றிதழ் கொடுக்கவில்லை.
அப்படியென்றால், யார்?
ஓர் அரசை முடக்குவதற்கு, அரசுக்குள் இருக்கின்ற வர்கள் வேலை செய்கின்றார்கள் என்றால், அவர்கள் யார்?
அவர்கள் எதற்காக அந்த வேலைக்கு வருகிறார்கள்?
இன்றைக்கு நாம் தெரிந்துகொள்ளவேண்டியது, இந்தியாவில் நடக்கின்ற அரசியலின் ஒரு சின்ன படப்பிடிப்புதான் சேது சமுத்திரத் திட்டம்.
அவர்கள் எல்லாம் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? என்று நமக்குத் தெரியாது.
திடீரென்று ஒருவர் அமைச்சராகிறார்!
திடீரென்று ஜெய்சங்கர் என்கிற ஓர் அமைச்சர் வருகிறார்; அவர் யார்? அவர் எங்கோ பணியில் இருந்த வர். அவர் வெளியுறவுத் துறை அதிகாரி. அவர் எப்படி அமைச்சராகிறார்? அவரை நாம் பார்த்ததேயில்லை.
அரசியலில், தேர்தலில் தோற்றவர்கள்கூட அமைச் சராக முடியும்; ஆனால், அவர்கள் அரசியலில் இருக்கவேண்டும். அப்படி தோற்றவர்கள் அமைச்சராக ஆகி இருக்கிறார்கள்; முதலமைச்சராகி இருக்கிறார்கள். அதற்குப் பிறகு அவர்கள் தேர்தலில் நின்று வெற்றி பெறுவார்கள்.
ஆனால், நம் யாருக்குமே தெரியாத ஒருவர், தமிழ்நாட்டிற்கு ஆளுநராக வந்து, என்னென்னமோ பேசுகிறார்; ஆளுநர் வேலையைத் தவிர, மற்ற அத்துணை வேலைகளையும் செய்கிறார்.
இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?
எப்படி இந்தப் பதவிக்கு வந்தனர்?
ஆர்.எஸ்.எஸ்.சினுடைய அதிகாரிகளுக்கான தேர்வு மய்யம் சங்கல்ப்!
தமிழ்நாட்டிற்கு பி.ஜே.பி. தலைவராக வந்திருப்பவர், எங்கே இருந்து வந்தார்?
கருநாடகத்திலிருந்து வந்தார்.
அவர் எங்கே படித்தார்?
சங்கல்ப்பில் படித்தார்.
சங்கல்ப் என்பது என்ன?
ஆர்.எஸ்.எஸ்.சினுடைய அதிகாரிகளுக்கான தேர்வு மய்யம்.
அங்கே படித்த ஒருவரை, இங்கே எப்படி கொண்டு வந்து காட்டுகிறார்கள்; ஒரு அய்.பி.எஸ். அதிகாரி, பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விவசாயம் செய்ய வந்திருக்கிறார்.
இது என்ன முகமூடி?
எங்கெங்கே இருந்து வருகிறார்கள்?
சுப்பிரமணியசாமி வழக்குத் தொடர்ந்தால் ஆதாரம் தேவையில்லையா?
அப்படியென்றால், இவர்கள் எத்தனை இடங்களில் மறைந்திருக்கின்றார்கள் என்றால், அரசு துறைகளுக்குள்ளும் இருக்கிறார்கள்.
அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த முட்டுக்கட்டை கள் - சுப்பிரமணியசாமி அவர்கள் வழக்குப் போடுகிறார்.
அவர் ஒரு பெரிய வழக்குரைஞர், அதிலொன்றும் சந்தேகமேயில்லை. எல்லா இடங்களுக்கும் சென்று ஆதாரங்கள் எடுப்பவர்தான்.
ஆனால், அவர் வழக்குத் தொடர்ந்தால், அதற்கு ஆதாரம் தேவையில்லையா?
மனு போட்டவர் யார் என்று பார்த்து, அந்த அடிப் படையில் ஆதாரம் தேவையில்லை என்பது நீதிமன்றத் தினுடைய கருத்தாக முடியுமா? அது நீதியாக முடியுமா?
ஆனால், இந்த சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முடக்கியதில், உச்சநீதிமன்றம் அந்த அணுகுமுறையை மேற்கொண்டது.
தவறை, ஒப்புக்கொண்ட பிறகும், தங்களைத் திருத்திக் கொள்கிறவர்கள் இல்லை!
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, வேறு வழியில்லாமல், அந்த உண்மையை நாடாளுமன்றத்தில் அவர்கள் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், எப்பொழுதுமே, ஒரு தவறை, ஒப்புக் கொண்ட பிறகும், அவர்கள் தங்களைத் திருத்திக் கொள் கிறவர்கள் இல்லை.
அதுதான், முந்தைய ஆட்சியாளர்களுக்கும் - இவர்களுக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய வேறுபாடு.
அவர்கள் தங்கள் தவறைத் திருத்திக் கொள்ளமாட் டார்கள்; மேலும், இது எங்கள் நம்பிக்கை என்பார்கள்.
மதவெறிக் கும்பல் இந்த நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறது
அது எதற்கு உதவும் என்றால், ஒரு கலவரம் செய்ய உதவும். இந்த நம்பிக்கைகளின் பெயரில், கலவரங்கள் செய்கிற ஓர் அடிப்படை மதவெறிக் கும்பல் இந்த நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறது.
அந்த ஆபத்தை நாம் எதிர்கொள்ளவேண்டிய சூழலில் இருக்கிறோம். அதில் மிக அதிகமாகப் பாதிக்கப்படுகிற மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது.
அதனால்தான், தமிழ்நாட்டினுடைய இந்தத் திட்டம், அவர்களுக்கு ஒரே கல்லில், இரண்டு மாங்காய்.
ஒன்று, திட்டமும் முடக்கப்படும்; இரண்டாவது அவர்கள் முன்வைக்கின்ற அந்தப் பொய்த் தத்துவத் திற்கு ஒரு வலிமையும் கிடைக்கும்.
நமக்கும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!
நாம் இதை மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் சென்று, போராடி வெல்வது என்பது, தமிழ்நாட்டிற்கும் நன்மை கிடைக்கும் - இந்த மோசடித் தத்துவத்திற்கும் பதிலடி கிடைத்ததுபோல, நமக்கும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்கிற அளவில்,
மக்களிடத்தில் இந்தப் பரப்புரையை விடாமல் செய்வோம் - சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுகிற வரை செய்வோம் என்பதைச் சொல்லி, வாய்ப்புக்கு நன்றி கூறி முடிக்கின்றேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.
No comments:
Post a Comment