காலித்தனமும் வட்டி சம்பாதிக்கின்றது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 14, 2023

காலித்தனமும் வட்டி சம்பாதிக்கின்றது

- 05.02.1928 - குடிஅரசிலிருந்து... 

சென்னை கடற்கரையில் பார்ப்பன ரல்லாதாரால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் கதர் இலாகா காரியதரிசி ஸ்ரீ எஸ். ராமநாதன் அவர்கள் பகிஷ்காரப் புரட்டைப்பற்றி பேசிக் கொண்டிருக் கையில் காங்கிரசு வீரப்புலிகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் திருட்டுத்தனமாக கூட்டத்தின் மத்தியில் இரண்டு செருப்புகளை வீசி எறிந்துவிட்டு ஓடிப்போய் விட்டார்கள் என்றும் அந்தச் செருப்புகள் ஏலம்போடப்பட்டன வென் றும் கேள்விப்பட்டோம். ஆனால் அடுத்த சில தினத்தில் அதே கடற்கரையில் பார்ப் பனர்களால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் பல பார்ப்பனரல்லாதார்களைக் கூலிக்குப் பிடித்துக் கொண்டு போயிருந்துங்கூட கல்லும் செருப்பும் பறந்ததோடு கலகமும் அடிதடியும் காயமும் ஏற்பட்டு விட்டதாம்: காங்கிரசுகாரர்கள் தாங்கள்தான் மிக புத்தி சாலிகள் என்பதாக கருதி காலித்தனத்தை ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால் அந்த சமயம் வெற்றி கிடைத்ததுபோல் காணப் பட்டாலும் வட்டியுடன் திரும்பவும் அனுபவித்து விடுகின்றார்களேயொழிய இதுவரை ஒரு இடத்திலாவது தப்பித்துக் கொண்டதாகச் சொல்வதற்கே இல்லை.

பகிஷ்கார இயக்கப் பிரச்சாரத்திற்கு ஸ்ரீ சத்தியமூர்த்தி தலைவராகி விட்டார், ஸ்ரீ வரதராஜுலு வாலராகிவிட்டார். மற்றபடி ஸ்ரீமான்கள் குழந்தை, ஓ. கந்தசாமி செட்டியார், பஷீர் அகமது முதலியவர் களுக்குள்ளாகவே தேசபக்தி அடங்கி விட்டது. இவர்கள் போகும் கூட்டங்கள் முழுவதும் இந்தக் கதியையே அடைந்து வருகின்றன. பிரச்சாரத்திற்கு என்று காங்கிரஸ் நாடகத்தில் மீதியான ரூபாயில் 5000, 6000 ரூபாய்களை எடுத்து வீசி எறிகின்றார்கள். இந்த ரூபாய் களுக்காக எப்போதும் கூட்டங்கள் கூடிக் கொண்டே இருக்கின்றன. இது எங்குபோய் முடியும் என்பது மாத்திரம் விளங்கவில்லை.

ஸ்ரீமான் வரதராஜுலு பேச ஆரம்பித்த வுடன் கலகம் ஏற்பட்டதென்றும், அடி தடிகள் நடந்ததென்றும் பொதுஜனங்கள் அவரைப் பேசவிடாமல் உட்காரச் செய்து விட்டார்கள் என்றும் பத்திரிகைகளில் காணப்படுகின்றன. பொது ஜனங் களால் இந்த யோக்கியதை பெற்ற ஸ்ரீ வரதராஜுலு அவர்கள், ராமசாமி நாயக்கர் சர்க்கார் பிரச்சாரம் செய்கின்றார் என்று எழுது கின்றார், பேசுகின்றார், வாசகர்களைச் சுத்தமுட்டாள்கள் என்றும் எதையும் நம்பி விடுவார்கள் என்றும் எண்ணிக் கொண்டு இம்மாதிரி தந்திரங்களைச் செய்கின்றார்.

அப்படியே நாயக்கர் சர்க்கார் பிரசாரம் செய்வதாக வைத்துக் கொண்டாலும், பார்ப்பனப் பிரச்சாரத்தைவிட சர்க்கார் பிரசாரம் எத்தனையோ மேலானதென் பதை இவரே பலதடவை உணர்ந்திருந்தும் பேசியிருந்தும் இன்று மாத்திரம் ஸ்ரீ வரதராஜுலுக்குப் பார்ப்பனப் பிரசாரம் இவ்வளவு பயனளிக்கக் கூடியதாகி விட்டதின் இரகசியமென்ன?

ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார் தலை மையும், இரங்கசாமி அய்யங்கார் காரிய தரிசித் தன்மையும் ஒழிந்த பிறகு ஸ்ரீமான்கள், சத்திய மூர்த்தி அய்யரின் தலைமையும் வரதராஜுலுவின் காரியதரிசித் தன்மையும் இவ்வருஷம் முழுவதும் தாண்டவமாடக்கூடும். இனி, இவர் தலைமையில் அவர் பிரசங்கமும் அவர் தலைமையில் இவர் பிரசங்கமும் மாறி மாறி நடந்ததாக பத்திரிகை கலங்கள் நிறையக் கூடும். ஆனாலும் நம்புவதற்கு தான் இனி தமிழ் நாட்டில் ஆட்கள் கிடையாது என்பதும் அவர்களுக்கே தெரிந்துவிட்டது.

ஆனாலும் ஜனங்களின் முட்டாள் தனத்தில் அவர்களுக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கின்றது. பொது ஜனங்கள் சீக்கிரம் இவர்களுக்குப் புத்தி கற்பிப் பார்களாக.


No comments:

Post a Comment