6 காங்கிரஸ் அரசுகளை திருடியது பா.ஜ.க.
காங்கிரஸ் தலைவர்
மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
புதுடில்லி, ஜன 21 காங்கிரஸ் மேனாள் தலை வர் ராகுல் காந்தி மேற் கொண்டுள்ள இந்திய ஒற் றுமை நடைப் பயணம் ஜம்மு காஷ்மீரை அடைந் துள்ளது. இந்த நடைப் பயணம் நேற்று முன்தினம் (19.1.2023) பஞ்சாபில் நடை பெற்றபோது பதான்கோட் என்ற இடத்தில் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே பாஜகவின் குறிக்கோளாக உள்ளது. மக்கள் நலனுக்காக எதையும் சிந்திக்கவோ செயல்படுத்தவோ இல்லை.
ஆறு காங்கிரஸ் அரசுகளை அவர்கள் திருடிவிட்டனர். எங்களுக்கு உத்தரவு வழங்கிய 6 மாநிலங்களை அவர்கள் திருடினார்கள். அவர்களிடம் அதிகாரம் உள்ளது, மக்கள் காங்கிரஸை தேர்ந்தெடுத்த பிறகு அவர்கள் சதி செய்து எங்கள் கட்சியினரை அழைத்துச் சென்றனர். இந்திய ஒற்றுமை யாத்திரையில் பல்வேறு தரப்பை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் இணைகின்றனர். நடைப் பயணத்தின் வெற்றியை கண்டு பாஜக அஞ்சி நடுங்குகிறது.
மனுஸ்மிருதி அல்லது ஆர்எஸ்எஸ்ஸில் பெண் களுக்கு இடமில்லை. ஆப்கனில் பெண்களை படிக்க விடாமல் தலிபான்கள் எப்படி அழுத்தம் கொடுக்கிறார்கள், அச்சுறுத்துகிறார்கள் என்பதை படித்தேன். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவும் அதையே செய்ய முயற்சிக்கின்றன. இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கு தடைகோரி வழக்கு
உச்சநீதிமன்றம் தள்ளுபடி
பாட்னா, ஜன.21 பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், அது தொடர்பான மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டுள்ளது. வழக்குரைஞர் வருண்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘பீகாரில் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கும் பணிகள் தற்போது துவங்கி நடந்து வருகிறது. குறிப்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நாடாளுமன்றத்தால் மட்டுமே செய்யக் கூடியதாகும். அதனால் சட்ட விதி முறைகளை மீறி நடத்தப்படும் அந்த ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு தடை விதிக்க வேண்டும்.
மேலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் சமமான சட்டப் பாதுகாப்பு அளித்தல், ஆகியவற்றை நிலைநிறுத்தும் இந்திய அரசியல் சாசன சட்டத்தின் 14ஆவது பிரிவை பீகார் அரசு மீறியுள்ளது என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று (20.1.2023) விசாரணைக்கு வந்தபோது, பீகாரில் ஜாதி வாரிய கணக்கெடுப்பு நடத்துவது என்பது மாநில அரசின் கொள்கை சார்ந்த ஒன்றாகும். அதில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு எந்தவித உத்தரவும் பிறப்பிக்க விரும்ப வில்லை. இருப்பினும் மனுதாரருக்கு ஏதேனும் நிவாரணம் வேண்டும் என்று நினைக்கும் பட்சத்தில் பீகார் உயர்நீதி மன்றத்தை நாடலாம் என தெரிவித்த நீதிபதிகள், பீகாரில் நடத்தப்படும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டனர்.
கருநாடகாவில் அரசுப் பள்ளியில் படித்து
25 வயதில் நீதிபதி ஆன தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்!
பெங்களூரு,ஜன.21- கருநாடக மாநிலத்தை சேர்ந்த வறுமையான குடும்பப் பின்னணியில் அரசுப் பள்ளியில் படித்த தாழ்த்தப்பட்ட சமூக பெண் என்.காயத்ரி நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
கருநாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள காரஹள்ளியை சேர்ந்தவர் 25 வயதான என்.காயத்ரி. இவரது பெற்றோர் நாராயணசாமி - வெங்கடலட்சுமி இருவரும் விவசாய கூலிகளாக வேலை செய்கின்றனர். காரஹள்ளி அரசு உயர் நிலைப் பள்ளியில் பயின்ற காயத்ரி, பங்காரு பேட்டை அரசு கல்லூரியில் பி.ஏ. படிப்பை முடித்தார். பின்னர் கோலார் தங்கவயல் கெங்கல் ஹனுமந்தையா கல்லூரியில் சட்டம் பயின்றபோது அதிக மதிப்பெண்கள் பெற்று, கருநாடக சட்டப் பல்கலைக் கழகத்தில் 4-ஆவது மாணவியாக தேர்வானார்.
கடந்த இரு ஆண்டுகளாக பங்காருபேட்டை நீதி மன்றத்தில் வழக்குரைஞர் சிவராம் சுப்பிரமணியனிடம் ஜூனியர் வழக்குரைஞராக பணியாற்றினார். இந் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கருநாடக சிவில் நீதிபதிகளுக்கான தேர்வில் என்.காயத்ரி பங்கேற்றார். இதில் வெற்றிப் பெற்றுள்ளதால், சிவில் நீதிபதியாக பணியாற்ற தேர்வாகியுள்ளதாக கருநாடக உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த என்.காயத்ரி வறுமையிலும் கடினமாக உழைத்து இளம் வயதில் நீதிபதியாக தேர்வாகியுள்ளதால் ஏராளமானோர் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து என்.காயத்ரி கூறுகையில், ''என்னுடைய அப்பாவும் அம்மாவும் கூலி வேலை செய்து என்னை படிக்க வைத்தனர். அவர்களை சந்தோசமாக கவனித்துக் கொள்வதே என்னுடைய முதல் கடமை. என்னைப் போல பின்தங்கிய மாணவர்களுக்கு உதவுவேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க பாடுபடுவேன்'' என்றார்.
No comments:
Post a Comment