சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேறினால் தி.மு.க.விற்கு அந்தப் புகழ் போய்ச் சேருமென்பதால் வழக்குத் தொடுத்தனர்!
ராமர் பெயரை வைத்து அரசியல் செய்யக்கூடிய சூதாடிகளுக்கு எச்சரிக்கை!
மக்களிடையே ஒரு பொதுக் கருத்தை உருவாக்க தனிப் பயணத்தைத் தொடங்கி விட்டார் தமிழர் தலைவர்!
ஒன்றிய ஆட்சி அதிகாரத்தைத் தூக்கி எறிந்துவிட்டால், சேதுக் கால்வாய்த் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது எளிது!
மதுரை, ஜன.31 சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேறினால் தி.மு.க.விற்கு அந்தப் புகழ் போய்ச் சேருமென்பதால் வழக்குத் தொடுத்தனர்! ராமர் பெயரை வைத்து அரசியல் செய்யக்கூடிய சூதாடிகளுக்கு எச்சரிக்கை! மக்களி டையே ஒரு பொதுக் கருத்தை உருவாக்க தனி பயணத்தைத் தொடங்கி விட்டார் தமிழர் தலைவர்! ஒன்றிய ஆட்சி அதிகாரத்தைத் தூக்கி எறிந்துவிட்டால், சேதுக் கால்வாய்த் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது எளிது என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்தி திறந்தவெளி மாநாடு
கடந்த 27.1.2023 மாலை மதுரையில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்த வலி யுறுத்தி நடைபெற்ற திறந்தவெளி மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
வரலாற்று சிறப்பு வாய்ந்த மாநாடு
வரலாற்று சிறப்பு வாய்ந்த இம்மாநாட்டை தலைமை வகித்து சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே,
முன்னிலை வகித்து சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற எடிசன் ராசா அவர்களே,
வரவேற்று உரையாற்றி அமர்ந்திருக்கின்ற அ.முரு கானந்தம் அவர்களே, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நெறிப்படுத்திக் கொண்டிருக்கின்ற வே.செல்வம் அவர் களே, மற்றும் இந்த நிகழ்வில் பங்கேற்று இதனை சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களே, மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் அவர்களே,
இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக் கின்ற, இந்தத் திட்டத்தின் நாயகர் பெருமதிப்பிற்குரிய மேனாள் இந்திய ஒன்றிய அமைச்சர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் அண்ணன்
டி.ஆர்.பாலு அவர்களே,
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பெருமதிப்பிற்குரிய அண்ணன் கே.எஸ்.அழகிரி அவர்களே,
வாழ்த்தி உரையாற்றி அமர்ந்திருக்கின்ற இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியின் மக்களவை உறுப்பினர் அன்புச்சகோதரர் கே.நவாஸ்கனி அவர்களே,
மாண்புமிகு அமைச்சர் பெருமதிப்பிற்குரிய அண்ணன் பி.மூர்த்தி அவர்களே,
திராவிட முன்னேற்றக் கழக உயர்மட்ட செயல் திட்டக் குழு உறுப்பினரும், மேனாள் அமைச்சருமான அண்ணன் பொன்.முத்துராமலிங்கம் அவர்களே,
இந்த நிகழ்வில் பங்கேற்று இதனைச் சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற திருமதி. இந்திராணி பொன்.வசந்த் அவர்களே, அண்ணன் வ.வேலுச்சாமி அவர்களே, அண்ணன் பெ.குழந்தைவேலு அவர்களே,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உரையாற்றி அமர்ந்திருக்கின்ற அருமைத் தோழர் பொறியாளர் மு.செந்திலதிபன் அவர்களே,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உரை யாற்றி அமர்ந்திருக்கின்ற பேராசிரியர் அ.அருணன் அவர்களே, சட்டப்பேரவை உறுப்பினர் மாண்புமிகு கோ.தளபதி அவர்களே, ம.தி.மு.க.வை சார்ந்த மாவட்டக் கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் பூமிநாதன் அவர்களே,
மற்றும் தோழமை இயக்கங்களைச் சார்ந்த தலைவர் பெருமக்களே, திரளாகக் கூடியிருக்கின்ற தமிழ்ச் சொந்தங்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தின் நாயகர்
எனக்குன் பின் நம்முடைய அண்ணன் அழகிரி அவர்கள் பேசவிருக்கின்றார்; இந்தத் திட்டத்தின் நாயகர் 70 விழுக்காடு பணிகளை முடித்துவிட்டு, எஞ்சிய பணிகளை முடிக்கவிருக்கின்ற தருவாயில், உச்சநீதி மன்றத்தில் தடையாணை பெறப்பட்ட நிலையில், அந்தத் திட்டத்தை அப்படியே நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது; அந்த வலியோடு இன்னும் இருக்கிற அண்ணன் டி.ஆர்.பாலு அவர்கள் நம்மிடையே உரையாற்றவிருக்கிறார். அவருடைய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்ளவிருக்கிறார்.
நிறைவாக தமிழர் தலைவர் அவர்களும் உரையாற்றவிருக்கின்ற நிலையில், நான் நீண்ட நேரம் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.
கருத்தியல் போர்தான் - சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது!
அறிவியல் சார்ந்த உண்மையைப் பேசக்கூடியவர் களுக்கும், புராணங்களைச் சார்ந்த புனைவுகளைப் பேசக்கூடியவர்களுக்கும் இடையில் நடக்கின்ற ஒரு கருத்தியல் போர்தான் - சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
ராமன் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார் என்று கேள்வி எழுப்பியவர் நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.
அந்த ஒற்றைக் கேள்வி, சனாதன சக்திகளின் குடுமியை உலுக்கியது. உத்தரப்பிரதேசத்திலிருந்து ஒருவன் கூச்சல் போட்டான். வேதாந்தி என்கிற ஒருவன், கலைஞரை கடுமையாகச் எச்சரித்தான்.
அவருடைய நாவை அறுப்பவனுக்குப் பரிசளிப்பேன் என்று சொன்னான்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர்
பெரியாரின் பாசறையில் வளர்ந்தவர்
அதற்கெல்லாம் அஞ்சக்கூடியவர் அல்ல முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர். அவர் பெரியாரின் பாசறை யில் வளர்ந்தவர். மிக உயர்ந்த ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், வாக்கு வங்கி அரசியலைப்பற்றி கவலைப் படாதவர்.
எது வரலாறோ அதைப் பேசவேண்டும்; எது அறிவியலோ அதைப் பேசவேண்டும்; அதில் உறுதியாக இருக்கவேண்டும் என்பதில், உறுதியாக நின்றவர் தலைவர் கலைஞர் அவர்கள்.
அதனால்தான் இந்தக் கேள்வியை மிக இயல்பாக எடுத்து வீசினார் - ராமன் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தான்? என்று கேள்வி எழுப்பினார்.
அதில் ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு விடை அடங்கியிருக்கிறது.
ராமர் பெயரை வைத்து அரசியல் செய்யக்கூடிய சூதாடிகளுக்கு எச்சரிக்கை
ராமரைக் கொச்சைப்படுத்தவேண்டியது என்பதல்ல; ராமர் பெயரை வைத்து அரசியல் செய்யக்கூடிய சூதாடி களுக்கு எச்சரிக்கை விடுக்கக் கூடிய கேள்வி இது.
நாம் பகுத்தறிவைப் பேசினால்,
அறிவியல் உண்மைகளைப் பேசினால்,
உண்மை வரலாற்றைப் பேசினால்,
ராமரைக் கொச்சைப்படுத்துகிறோம் என்று உண்மையைத் திரிக்கிறார்கள்.
அவர்களின் ஹிந்துத்துவப் புரட்டுகளைப்பேசினால்,
அல்லது பார்ப்பனியப் புரட்டுகளைப் பேசினால்,
அல்லது சங் பரிவார் கும்பலின் அரசியல் அடாவடிகளைப் பேசினால், நாம் ஹிந்துக்களுக்கு எதி ராகப் பேசுகிறோம் என்று வரலாற்றைத் திரிக்கிறார்கள்.
இங்கேதான் நாம் கவனமாகப் பார்க்கவேண்டும்.
நமக்கு எதிரான ஓர் உளவியலைக்
கட்டமைக்க முயற்சிக்கிறார்கள்
நாம் எதைப் பேசினாலும், அறிவியல் சார்ந்து பேசு கிறோம்; உண்மை வரலாற்றைச் சார்ந்து பேசுகிறோம் என்பதை தாங்கிக் கொள்ள முடியாத கும்பல் - சகித்துக் கொள்ள முடியாத கும்பல் - அவற்றைத் திரித்து, உண்மையைத் திரித்து நமக்கு எதிரான ஓர் உளவியலைக் கட்டமைக்க முயற்சிக்கிறார்கள்.
இது ராமர் பாலம் இல்லை என்று சொன்னால், ஏன் ராமர் பாலம் இல்லை என்கிற விவாதத்தை அவர்கள் நடத்துவதில்லை.
இது ராமர் பாலம்தான் என்று உறுதிப்படுத்த அவர்கள் ஆதாரம் காட்டலாம்.
ராமர் பாலம் இல்லை என்று சொல்வதற்கு, நீ என்ன கருத்துகளை வைத்திருக்கிறாய், வாதாட வா என்று நம்மை அழைக்கலாம்.
ஆனால், அப்படியே அதைவிட்டுவிட்டு, என்ன சொல்லுகிறார்கள் என்றால், ‘‘இராமரைக் கொச்சைப் படுத்துகிறார்கள்’’ என்று.
தங்களின் அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்!
அவ்வளவுதான், ராம பக்தர்கள் எல்லாம் கோபப்படக் கூடிய அளவிற்கு. ஹிந்து சமூகத்தில் இருக்கின்ற மக்களின் அந்த நம்பிக்கையை தங்களின் அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது தான் மிகவும் முக்கியமானது.
ராமரைக் கொச்சைப்படுத்துவதாக அவர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
தலைவர் கலைஞர் அவர்களின் அரிய முயற்சியால், அளப்பரிய முயற்சியால், கடின முயற்சியால், அன்றைக்கு அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு புதுடில்லியில் கோலோச்சிக் கொண்டிருந்த நிலையில், அறிவியல்பூர்வ மான இந்த செயல்திட்டத்திற்கு இணக்கம் தெரிவித்து, சுமார் 2500 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து, அந்தப் பணியை செய்து முடிக்கின்ற பொறுப்பை அண்ணன் டி.ஆர்.பாலு அவர்களிடம் ஒப்படைத்து, இதே மதுரை மண்ணில் பிரம்மாண்டமான தொடக்க விழாவை நடத்தி, 70 விழுக்காடு பணிகள் முடிந்த நேரத்தில், உச்சநீதிமன்றம் தடை விதிக்கிறது.
சாட்சியங்கள், சான்றாவணங்களின்
அடிப்படையில்தான் தீர்ப்பு சொல்லவேண்டும்!
நீதிமன்றம் ஒரு தீர்ப்பைச் சொல்லுவதற்கு முன்பு, சாட்சியங்கள், சான்றாவணங்களின் அடிப்படையில்தான் தீர்ப்பைச் சொல்லவேண்டும்.
இந்த இரண்டும் இல்லாமல், தீர்ப்புச் சொல்ல முடியாது; தீர்ப்பு சொல்லவும் கூடாது.
நீதிமன்றம் யூகத்தின் அடிப்படையில் தீர்ப்புச் சொல்லக்கூடாது.
நீதிமன்றம் புராணக் கதைகளின் அடிப்படையில் தீர்ப்பு சொல்லக் கூடாது.
நீதிமன்றம், இது ஒரு நம்பிக்கை என்கிற அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு சொல்லக்கூடாது.
ஆனாலும், உச்சநீதிமன்றம் அப்படி ஒரு தீர்ப்பைத் தருகிறது.
ராமர் பாலம்தான் என்பதற்கான
எந்த சான்றாவணத்தையும் அல்லது
சான்றுகளையும் காட்டவில்லை!
வழக்கைத் தொடுத்த சுப்பிரமணியசாமி அவர்களோ, அல்லது அ.தி.மு.க.வினுடைய பொதுச்செயலாளர் ஜெயலலிதா அம்மையார் அவர்களோ, அது ராமர் பாலம்தான் என்பதற்கான எந்த சான்றாவணத்தையும் அல்லது சான்றுகளையும் காட்டவில்லை.
ஆனால், அது ராமர் பாலம் என்று பெரும்பான்மை ஹிந்துக்கள் நம்புகிறார்கள்; அந்த நம்பிக்கையை இது உடைக்கிறது - அவ்வளவுதான்.
நம்பிக்கையை சீண்டக் கூடாது;
நம்பிக்கையை உடைக்கக் கூடாது;
நம்பிக்கையை மதிக்கவேண்டும் என்று அர சமைப்புச் சட்டத்தில் ஓர் இடம் இருக்கிறது.
அதைத்தான் தந்தை பெரியார், இந்த அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தவுடனேயே, இந்த சட்டத்தைக் கொளுத்துவோம் என்று சொன்னார்.
அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்துகின்ற போராட்டத்தை நடத்தியவர்
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்
மதங்களை, மதங்களின் நம்பிக்கைகளை இது ஏற்கிறது, மதம் தொடர்பான நம்பிக்கையைப் பிரச்சாரம் செய்வதற்கு இந்தப் பிரிவு அனுமதிக்கிறது. இதனால், ஹிந்து சமூகத்தைச் சார்ந்த மக்களின் உணர்வை, அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளுகின்ற கும்பல், இதைக் கையிலெடுப்பார்கள் என்று அப் பொழுதே முன் உணர்ந்து, இந்தப் பிரிவு நீக்கப்பட வேண்டும் என்று எதிர்ப்புத் தெரிவிக்கின்ற வகையிலே, அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்துகின்ற போராட் டத்தை நடத்தியவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள்.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களால் வகுத் தளிக்கப்பட்ட சட்டம் - இரண்டு பேரும் ஒரே நேர்க் கோட்டில் சிந்திக்கக் கூடியவர்கள், செயல்படக்கூடிய வர்கள். இரண்டு பேரும் பார்ப்பன மேலாதிக்கத்தை எதிர்க்கக் கூடியவர்கள்; சனாதனத்தை எதிர்க்கக் கூடியவர்கள்; ஜாதியின் பெயராலான பாகுபாடுகளை எதிர்த்துப் போராடக் கூடியவர்கள்.
மதம் சார்ந்த நம்பிக்கைகளை
சுதந்திரம் என்கிற அடிப்படையில்...
ஆனால், இந்த இடத்திலே புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், அரசமைப்புச் சட்டத்தில், மதம் சார்ந்த நம்பிக் கைகளை சுதந்திரம் என்கிற அடிப்படையில் அனுமதிக் கிறார்.
அந்த சுதந்திரம் என்கிற அந்த வாய்ப்பு, பெரும் பான்மை சமூக மக்கள், இது மூடநம்பிக்கையா? சரியான நம்பிக்கையா? என்று உணர முடியாத நிலையிலே இருக்கின்ற மக்கள் - தங்கள் நம்பிக்கையாக வெளிப் படுத்துகின்ற உணர்வுகளைப் பயன்படுத்தி சுரண்டக் கூடிய கும்பல் இங்கே இருக்கிறார்கள்; அதற்குத்தான் இந்தப் பிரிவு பயன்படும்.
பெரியார் முன்பு உணர்ந்தது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது
எனவே, அந்தப் பிரிவு நீக்கப்படவேண்டும் என்று தந்தை பெரியார் எதிர்ப்புத் தெரிவித்ததை வரலாறு நமக்குச் சொல்கிறது.
தோழர்களே, அதைப் பயன்படுத்திதான், பெரியார் முன்பு உணர்ந்தது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்பதை இந்த சேது கால்வாய்த் திட்டத்தில்கூட நம் மால் உணர முடிகிறது.
இதனைப் பயன்படுத்தித்தான், ஹிந்துக்கள் கொண் டிருக்கின்ற நம்பிக்கை என்கிற அடிப்படையில், அது அறிவியல்பூர்வமான உண்மையா? இல்லையா? என்கிற எந்த ஆராய்ச்சிக்குள்ளும் ஈடுபடாமல், அதற்குரிய முயற்சிகளை செய்யாமல், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஏனென்றால், அந்தக் கருத்துள்ளவர்களின் ஆதிக்கம் உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது.
நீதிபதிகள் சனாதன நம்பிக்கை
உள்ளவர்களாக இருக்கிறார்கள்
அதுதான், இன்றைக்கும் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி களில், 80 விழுக்காட்டிற்கு மேலானவர்கள், ஒரு குறிப் பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களே இருக்கிறார்கள்; சனாதன நம்பிக்கை உள்ளவர்களே இருக்கிறார்கள். மெத்தப் படித்தவர்களாக இருந்தாலும், சட்ட வல்லுநர் களாக இருந்தாலும், உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக இருக்கின்ற அவர்கள், சனாதன நம்பிக்கை உள்ளவர் களாக இருக்கிறார்கள். அதனால்தான் அப்படி ஒரு தடையை போட முடிந்தது.
70 விழுக்காடு முடிந்த பணி - அண்ணனிடம் கேட்டேன், இன்னும் 23 கிலோ மீட்டர் பணிகள்தான் மிச்சமிருக்கின்றது; எல்லாவற்றையும் நாம் சீர்செய்து விட்டோம் என்றார். இன்னும் ஓரிரு மாதங்கள் அந்தப் பணிகள் நடந்திருந்தால், அந்தத் திட்டத்தை அவர் முடித்திருப்பார்.
தி.மு.க.விற்கு அந்தப் புகழ் போய்ச் சேருமென்பதால் வழக்குத் தொடுத்தனர்!
அப்படி முடித்தால், வரலாறு நெடுகிலும் அந்தப் புகழ் தி.மு.க.விற்கு அந்தப் புகழ் போய்ச் சேரும். கலைஞருக்கு அந்தப் புகழ் போய்ச் சேரும். அண்ணன் டி.ஆர்.பாலு அவர்களுக்கு அந்தப் புகழ் போய்ச் சேரும் என்கிற பொறாமையும்கூட.
அதற்காக அப்படி ஒரு வழக்கைப் போட்டு, அதற்கான நீதிபதியை சரியான நேரத்தில் பிடித்து, அப்படி ஒரு தீர்ப்பை வாங்கினார்கள். பேராசிரியர் அருணன் அவர்கள் சொன்னதைப்போல, பாபர் மசூதியை இடித்தது மன்னிக்க முடியாத குற்றம்தான். அங்கே ராமர் பிறந்தார், ராமர் கோவில் இருந்தது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. உண்மைதான். ஆனாலும், ராமர் கோவில் கட்டுவதற்கு அந்த இடத்தைத் தருகிறோம் என்று தீர்ப்புத் தருகிறார்கள்.
எவ்வளவு பெரிய ஒரு வேடிக்கையாக இருக்கிறது பாருங்கள்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டது குற்றம்தானாம்; அதை நீதிமன்றம் ஒப்புக் கொள்கிறது. அந்த இடத்தில், ஹிந்துக் கோவில் இருந்தது என்பதற்கான எந்தச் சான்றுகளும் இல்லை. தோண்டிப் பார்த்ததில் கீழே கட்டடங்கள் இருந்திருக்கின்றன. ஆனால், அந்தக் கட்டடங்களின் அமைப்பு ஹிந்துக் கோவில்தான் என்பதற்கான சான் றாக இல்லை. அதுவும் நீதிமன்றத்தின் தீர்ப்பிலே இடம்பெறுகிறது.
பாபர் மசூதியை இடித்தது
குற்றம் என்றும் சொல்கிறது!
ஆக, ராமர் கோவில் இடிக்கப்படவும் இல்லை; ஏனென்றால், ராமர் கோவில் அங்கே இல்லவே இல்லை. ராமர் கோவில் இடிக்கப்படவில்லை; எனவே, பாபர் மசூதி கட்டப்பட்டது குற்றமில்லை. கட்டப்பட்ட பாபர் மசூதியை 400 ஆண்டுகளுக்குப் பிறகு இடித்தது குற்றம் - இதையும் நீதிமன்றம் ஒப்புக்கொள்கிறது. ஆனாலும், தீர்ப்பு அந்த இடம் ராமர் கோவில் கட்டுவதற்கு உரியது என்பது.
அதேபோல்தான், இது ராமர் பாலம் என்று உறுதிப் படுத்துவதற்கு எந்த ஆதாரமும் இல்லை; எந்த சான்றும் இல்லை.
வெறும் ஹிந்துக்களின் நம்பிக்கை என்கிற ஒற்றைச் சொல்லைப் பயன்படுத்தி...
அறிவியல் பூர்வமாக அதை ஆராய்ச்சி செய்வதற்கு எந்த முனைப்பும் இல்லை; முயற்சியும் இல்லை. வெறும் ஹிந்துக்களின் நம்பிக்கை என்கிற ஒற்றைச் சொல்லைப் பயன்படுத்தி, அதை மதிக்கவேண்டும், அதற்கான சுதந்திரம் வேண்டும் என்கிற இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கிற அந்தப் பிரிவைப் பயன்படுத்தித் தடை விதித்துவிட்டார்கள்.
எவ்வளவு பெரிய பொருளாதார நட்டம்; எவ்வளவு பெரிய மனித உழைப்பு விரயம்.
சிந்தித்துப் பாருங்கள், எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் -
30 மணிநேரம் பயண நேரம் குறையும்!
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால், இலங்கையைச் சுற்றிச் செல்லுகின்ற வணிகக் கப்பல்கள் நேரிடையாகச் செல்ல முடியும்; ஏறத்தாழ 30 மணிநேரம் பயண நேரம் குறையும் என்கிற நிலையில், அது இந்தியாவின் பொருளாதாரத்தை மேம் படுத்துவதற்குப் பயன்படும். அதைவிட மிக முக்கியமாக தென் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய அளவிலே அது வேலைவாய்ப்புக்கான சூழலை, பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான சூழலை ஏற்படுத்தும் என்கிற நிலை இருந்தது.
அதைப் பாழ்படுத்திவிட்டார்கள், ஒரு வார்த்தையை மட்டும் பயன்படுத்தி.
எல்லாத் தளங்களிலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள்!
எந்த அளவிற்கு இன்னும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள் எல்லாத் தளங்களிலும்!
நீதித் துறை தளங்களிலும்,
அரசியல் துறை தளங்களிலும்,
பொருளாதாரத் தளங்களிலும்,
சமூகத் தளங்களிலும் அவர்கள் இன்னும் எந்த அளவிற்கு மேலாதிக்கம் செலுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
உண்மையை ஒருபோதும் மறைக்க முடியாது
நல்லவேளை அவர்கள் சில நேரங்களில் அவர் களையும் மீறி ஒப்புக்கொள்கிறார்கள். ஏனென்றால், உண்மையை ஒருபோதும் மறைக்க முடியாது; எல்லா நேரங்களிலும் விழிப்பாக இருந்து பொய்யைச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.
ஒரு பா.ஜ.க. உறுப்பினர் கேள்வி எழுப்புகிறார்; ஜிதேந்திர சிங் என்கிற அமைச்சர் பதில் சொல்லுகிறார்.
ஒன்றிய அமைச்சரே ஒப்புக்கொள்கிறார்!
அங்கே ராமர் பாலம் இருந்ததற்கான எந்த சான்றும் இல்லை என்று அமைச்சரே ஒப்புக்கொள்கிறார்.
அதை அறியவியல் பூர்வமாக உறுதிப்படுத்த முடி யாது; சாட்டிலைட் மூலம் எடுக்கப்பட்ட படங்களிலிருந்து அங்கே சுண்ணாம்புப் பாறைகள் இருந்ததாகத்தான் தெரிய வருகிறது.
இதைச் சொல்லுவது திராவிடர் கழகத்தைச் சார்ந்த தலைவர்கள் இல்லை; திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த தலைவர்கள் இல்லை; இடதுசாரிக் கட்சித் தலை வர்கள் இல்லை.
பா.ஜ.க.வை சார்ந்த அமைச்சர் மாநிலங்களவையில் சொல்லுகிறார். அது அப்படியே அவைக் குறிப்பில் இடம்பெற்றிருக்கிறது.
அண்ணன் தளபதி சட்டமன்றத்தில்
தீர்மானம் நிறைவேற்றுகிறார்
அதற்குப் பிறகுதான், கலைஞரின் பிள்ளை, கலை ஞரைவிட பல மடங்கு எட்டிப் பாயக்கூடிய ஆற்றல் பெற்ற வல்லமை கொண்ட ஒரு தலைவராக விளங்கு கிறார் அண்ணன் தளபதி அவர்கள். அப்படி ஒரு செய்தி வந்தவுடனேயே, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுகிறார்.
ஏற்கெனவே தொடங்கி, பாதியிலே நிறுத்தப்பட்டு இருக்கின்ற அந்தப் பணி, மீண்டும் தொடங்கப்பட வேண்டும்; சேதுக் கால்வாய்த் திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற் றுகிறார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம்.
தனிப் பயணத்தைத் தொடங்கி விட்டார்
தமிழர் தலைவர்!
அந்தத் தீர்மானம் வெறும் தீர்மானமாகப் போய்விடக் கூடாது; அது மக்கள்வயப்படுத்தபடவேண்டும். அந்தக் கருத்து மேலும் மக்களிடத்திலே உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்கிற அடிப்படையில், 90 அய் தொட்ட இளைஞர் தமிழர் தலைவர் அய்யா அவர்கள், இதற் கென்று தனிப் பயணத்தைத் தொடங்கிவிட்டார். அதனு டைய அச்சாரமான நிகழ்வுதான் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த மாநாடு.
மக்களிடத்திலே ஒரு பொதுக் கருத்தை உருவாக்க வேண்டும்; சேதுக் கால்வாய்த் திட்டத்தின் தேவையை, வெகுமக்களிடையே ஒரு கருத்துருவாக்கமாகப் பரி ணாமம் பெறச் செய்யவேண்டும் என்கிற அடிப்படை யிலே ஆசிரியர் அவர்கள் இதை முன்னெடுத்திருக்கிறார்.
அருமைத் தோழர்களே, இன்றைக்கு நாம் புராணப் புனைவுகளின்மீது நம்பிக்கையுள்ள சக்திகளோடு மோதிக் கொண்டிருக்கின்றோம். அதுதான் பிரச்சினை.
அறிவார்ந்தவர்களோடு விவாதிக்கிறபொழுது, அறிவியல் சார்ந்த விவாதங்கள் செய்கிறபொழுது, அதை மேலும் மேலும் கூர்மைப்படுத்தவும் முடியும்; நாமும் அதில் கற்றுக்கொள்ள முடியும்; நம்மிடம் பிழை இருந்தாலும் திருத்திக் கொள்ள முடியும்; நாமும் அதை சீர்செய்துகொள்ள முடியும்.
புராணக் கருத்துகளை உயர்த்திப் பிடிக்கிறவர்களிடத்தில் வாதிட முடியாது!
ஆனால், நம்பிக்கை என்ற பெயரில், அறிவியலுக்கு முரணான கருத்துகளை, புராணக் கருத்துகளை உயர்த்திப் பிடிக்கிறவர்களிடத்தில் வாதிடவும் முடியாது; அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரவும் முடியாது. அதுதான் சிக்கல்.
மோடியின் முகத்திரை கிழிந்து வருகிறது!
இன்றைக்கு மோடியின் முகத்திரை கிழிந்து வருகிறது; அதுவும் பிபிசி கிழிக்கிறான். எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான். மோடி மறைத்த உண்மையை மறுபடியும் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்கு, உலகின் ஏதாவது ஒரு மூலையிலிருந்து அறிவார்ந்த தாக்குதல் நிகழும். பிபிசி வெளியிட்டு இருக்கிற இரண்டு தொகுப்பு ஆவணப் படம் இருக்கிறதே, குஜராத் வன்முறை - அதில் மோடி முதலமைச்சராக இருந்தபொழுது பேசிய பேச்சு இருக்கிறதே - சிறுபான்மை சமூகத்தினருக்கு முஸ்லீம்களுக்கு எதிரான அந்த வெறுப்பு அரசியல் இருக்கிறதே, இன்றைக்கு மீண்டும் அது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
எவ்வளவு பெரிய குற்றத்தை இழைத்த ஒரு நபர் - கொடூரமான ஒரு இனப் படுகொலையை நடத்திய நபர் இன்றைக்குப் ‘புனித’னாகப் போற்றப்படுகிறார்; மிகப் பெரிய ஆளுமையாகப் போற்றப்படுகிறார்; மிக உயர்ந்த ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருக்கிறார்.
குஜராத் வன்முறைதான், மோடியை
தேசியக் கதாநாயகனாக உயர்த்தியது
இது எவ்வளவு ஆபத்தானது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். குஜராத் வன்முறைதான், அவரை தேசியக் கதாநாயகனாக உயர்த்தியது.
3 ஆயிரம் இஸ்லாமியர்களைப் படுகொலை செய்த அந்த கொடூரமான இனப் படுகொலைதான் அவரை பிரதம வேட்பாளராக உயர்த்தியது. சனாதனக் கும்பல் இப்படி ஒரு ஆள்தான் நமக்குத் தேவை என்று கையிலெ டுத்தார்கள்.
என்னென்னவோ பல திட்டங்களைக் கையில் வைத்திருக்கிறார்கள் தோழர்களே!
2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல் வழக்கமான, சராசரியான பொதுத் தேர்தல் அல்ல!
2024 ஆம் ஆண்டு நாம் எதிர்கொள்ளவிருக்கிற நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் என்பது வழக்கமான, சராசரியான பொதுத் தேர்தல் அல்ல. நான் மிகுந்த கவலையோடு இதைப் பதிவு செய்கிறேன்.
தமிழ்நாட்டில் நாம் 40 இடங்களில் வெற்றி பெற்றால் போதும் என்கிற நிலையில் மட்டும் செயல்பட்டால் போதாது.
டில்லியிலிருந்து இந்த சனாதனக் கும்பலை ஓடஓட விரட்டியடிக்கவேண்டும்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் போதும் என்கிற நிலையில் மட்டும் நாம் செயல்பட்டால் போதாது; டில்லியிலிருந்து இந்த சனாதனக் கும்பலை ஓடஓட விரட்டியடிக்க வேண்டும்; ஆட்சி பீடத்திலிருந்து அவர்களை அப்புறப்படுத்தவேண்டும்.
நாட்டைக் காப்பாற்ற, அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க, சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க - மிகப்பெரிய ஆபத்து நம்மை சூழ்ந்திருக்கிறது.
மீண்டும் ஒருமுறை அவர்கள் ஆட்சிக்கு வந்தால், யாராலும் இந்தத் தேசத்தைக் காப்பாற்ற முடியாது; எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒரு ‘‘மாரல் பீயர்'' இல்லாத ஒரு கும்பல். மொராலிட்டி என்பது முக்கிய மானது; நீதிக்கு அஞ்சுகிற அந்த உளவியல் முக்கிய மானது. எத்திக்ஸ் என்று சொல்வார்களே, அப்படிப்பட்ட மொராலிட்டி அவர்களிடத்தில் இல்லை.
மீண்டும் சனாதனம் ஆட்சி பீடத்தில் ஏறினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்!
எதையும் செய்வார்கள்; எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செய்வார்கள்.
அதிபர் ஆட்சி முறையைப் பிரகடனம் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
ஏற்கெனவே ஒரு கும்பல் உத்தரப்பிரதேசத்தில், புதிய அரசமைப்புச் சட்டத்திற்கான வரைவு நகலை வெளியிட்டு இருக்கிறார்கள்.
2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவின் பெயர் ஹிந்துராஷ்டிரமாக இருக்கும்; இந்தியாவின் தலைநகரம் டில்லியாக இருக்காது; காசியாக இருக்கும்.
இந்தியாவின் ஆட்சி நிர்வாகம் - ஜனநாயகப்பூர்வமாக இருக்காது - வருணாசிரம ஆட்சி முறை நிர்வாகமாக இருக்கும்.
இந்தியாவின் தேசியக் கொடி மூவர்ணக் கொடியாக இருக்காது; காவிக் கொடியாக இருக்கும்.
இப்படி அவர்கள் அறிவிப்புச் செய்திருக்கிறார்கள்.
மோடி அதற்கு ஒத்துழைப்பார் என்று பிரகடனம் செய்திருக்கிறார்கள்.
இவற்றிலெல்லாம் அவர்கள் தன்னிச்சையாக செயல்படுகிறார்கள் என்று நாம் எண்ணிவிடக் கூடாது. இத்தகைய அமைப்புகள் எல்லாம் சங் பரிவார் பின் னணியில் - எல்லோரும் இணைந்து செய்து கொண் டிருக்கிறார்கள்.
நாள்தோறும் தி.மு.க. எதிர்ப்பு அரசியலைக் கையிலெடுக்கிறார்கள்!
தமிழ்நாட்டைக் குழப்புகிறார்கள்; நாள்தோறும் தி.மு.க. எதிர்ப்பு அரசியலைக் கையிலெடுக்கிறார்கள். தி.மு.க.வைதானே எதிர்க்கிறார்கள் என்று நாம் சும்மா வேடிக்கைப் பார்க்க முடியாது.
நமக்கு அதில் பொறுப்பில்லை என்று
நாம் விலகியிருக்க முடியாது
அது தி.மு.க. எதிர்ப்பாக மட்டும் இல்லை; திராவிட அரசியல் எதிர்ப்பு - திராவிடர் கழகத்திற்கும், தி.மு.க. விற்கும்தான் அதில் பொறுப்பு இருக்கிறது; நமக்கு அதில் பொறுப்பில்லை என்று நாம் விலகியிருக்க முடியாது.
அவர்கள் பெரியாரின்மீது கைவைக்கிறார்கள்;
பெரியார் அரசியலின்மீது கை வைக்கிறார்கள்.
சமூகநீதி அரசியலின்மீது கை வைக்கிறார்கள்;
சமத்துவ அரசியலின்மீது கை வைக்கிறார்கள்.
அதுதான் திராவிட அரசியல் -
அதுதான் திராவிட முன்மாதிரி.
வெறும் தி.மு.க.வை விமர்சித்தால், அதை தி.மு.க. எதிர்கொள்ளும்.
வெறுமென திராவிடர் கழகத்தை விமர்சித்தால், அதை திராவிடர் கழகம் எதிர்கொள்ளும்.
அதற்கான வலிமை தி.மு.க.விற்கு இருக்கிறது; திராவிடர் கழகத்திற்கு இருக்கிறது.
தமிழ் மண்ணின் அரசியலில் -
அடிமடியில் கைவைக்கிறார்கள்!
ஆனால், அவர்கள் நமது ஒட்டுமொத்த அரசியலின் அடிமடியில் கை வைக்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்களின் தேசத்திற்கே வழிகாட்டக் கூடிய கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கின்ற தமிழ் மண்ணின் அரசியலில் அடிமடியில் கைவைக்கிறார்கள்.
தமிழ்நாட்டிற்குள்ளே காலூன்றத் துடிக்கிறார்கள்; அதற்கு அ.தி.மு.க. துணை போகிறது. பலகீனமான தலைமை; இன்னும் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியாத அளவிற்கு அவர்கள் சிதறிக் கிடக்கிறார்கள். பி.ஜே.பி.யை நத்திக் கிடக்கிறார்கள். புதுடில்லியிலே தீர்வைத் தேடுகிறார்கள். போட்டிப் போட்டுக்கொண்டு பி.ஜே.பி. தலைவர்களை சந்திக்கிறார்கள்.
தமிழ்நாட்டிற்குள்ளே
வேரூன்றத் துடிக்கிறது பா.ஜ.க
அ.தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகளின் ஊடாக தமிழ்நாட்டிற்குள்ளே வேரூன்றத் துடிக்கிறது பா.ஜ.க.
நாம் ஒரே நேரத்தில், இவை அனைத்தையும் எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது.
தமிழ்நாட்டில் அவர்கள் காலூன்றக் கூடாது. இந்தி யாவில் மீண்டும் ஆட்சி அதிகாரப் பீடத்தில் அமர்ந்து விடக் கூடாது.
இந்த இரண்டு சவால்களையும் முன்னிறுத்தி, காய் களை நகர்த்தவேண்டி இருக்கிறது; களமாடவேண்டி யிருக்கிறது.
ஒன்றிய ஆட்சி அதிகாரத்தைத் தூக்கி எறிந்துவிட்டால், சேதுக் கால்வாய்த் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது எளிது
அந்த ஆட்சி அதிகாரத்தைத் தூக்கி எறிந்துவிட்டால், சேதுக் கால்வாய்த் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது எளிது என்பதைச் சொல்லி, இந்த வாய்ப்புக்கு நன்றி சொல்லி முடிக்கிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் சிறப்புரை யாற்றினார்.
No comments:
Post a Comment