சென்னை, ஜன. 26- சட்டப்பேரவையில், பேரவை நிகழ்வுகளை ஆளுநரின் விருந்தினர் கைபேசியில் பதிவு செய்த விவகாரத்தில், அவைக்காவலர்கள் உள்ளிட்டோரிடம் உரிமைக்குழு விசாரணை நடத்தியது.
சட்டப்பேரவையில் ஜன.9ஆம்தேதி நடந்த, ஆண்டு முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது ஆளுநருடன் வந்த விருந்தினர்களில் ஒருவர், பேரவை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்தபடி, பேரவை நிகழ்வுகளை தனது கைபேசியில் பதிவு செய்தார்.
இதுதொடர்பாக, சட்டப்பேரவையில் உரிமை மீறல் பிரச்சினையை சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா எழுப்பி,உரிமைக் குழுவுக்கு அனுப்பி விசாரிக்க வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் வலியுறுத்தினார்.
இதையடுத்து, இதில் அவை உரிமை மீறல் இருப்பதாக கருதுவதால், ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, அவை உரிமைக் குழுவுக்கு உத்தரவிடுவதாக பேரவைத்தலைவர் அப்பாவு அறிவித்தார்.
இந்நிலையில் அவை உரிமைக்குழுவின் கூட்டம், பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி தலைமையில் நேற்று (25.1.2023) நடைபெற்றது. கூட்டத்தில், பொள்ளாச்சி ஜெயராமன், இனிகோ இருதயராஜ், ஈஸ்வரப்பன், இ.கருணாநிதி, நல்லதம்பி, பிரின்ஸ் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, சட்டப்பேரவை கூட்டத்தின் போது பணியில் இருந்த அவைக்காவலர்கள், நேரில் பார்த்த அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, விதிகளை மீறி சட்டப்பேரவை நிகழ்வுகளை பதிவு செய்தவரிடம் அடுத்தகூட்டத்தின்போது விசாரணை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment