தி.மு.க. சட்டத்துறை சார்பில் "அரசியல் அமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்" சட்டக் கருத்தரங்கம்: - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 21, 2023

தி.மு.க. சட்டத்துறை சார்பில் "அரசியல் அமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்" சட்டக் கருத்தரங்கம்:

தமிழர் தலைவர் ஆசிரியர், நீதியரசர் சந்துரு, வழக்குரைஞர் விடுதலை போர் முரசம்!

சென்னை, ஜன. 21- திமுக சட்டத்துறை சார்பில் "அரசியல் அமைப்புச் சட்டமும் ஆளுநரின் அதிகார எல்லையும்" எனும் தலைப்பில் சட்டக் கருத்தரங்கம் நேற்று (20.1.2023) மாலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது.

திமுக சட்டத்துறை செயலாளர் மாநிலங்களவை உறுப் பினர் மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ தலைமை யேற்று உரையாற்றினார். சென்னையில் தொடங்கப்படுகின்ற இந்த கருத்தரங்கம் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாநகர்களில் நடத்தப்பட உள்ளது என்று அறிவித்தார்.

திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் சட்டமன்ற மேனாள் உறுப்பினர் வழக்குரைஞர் கே.எஸ்.இரவிச்சந்திரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

திமுக சட்டத்துறை இணைச்செயலாளர்கள் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் இ.பரந்தாமன், என்.மணிராஜ், கே.எம்.தண்டபாணி, சு.ராதாகிருஷ்ணன், பி.ஆர். அருள்மொழி, துணை செயலாளர்கள் கே.சந்துரு, ஜெ.பச் சையப்பன், பட்டி ஜெகநாதன், ப.வைத்தியலிங்கம், எஸ்.தினேஷ், திமுக தலைமைக்கழக வழக்குரைஞர்கள் சூர்யா வெற்றிகொண்டான், வீ.கவிகணேசன், எம்.எல்.ஜெகன், கே.மறைமலை மற்றும் சென்னை மாவட்ட அமைப்பாளர்கள் பெ.ரகு, த.பாபு, நா.மருதுகணேஷ், சி.கணேசபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திமுக சட்டத்துறைத் தலைவர் மூத்த வழக்குரைஞர் இரா.விடுதலை ஆளுநர் பதவி குறித்து பல்வேறு சட்டத் தகவல் களை விரிவாக எடுத்துக் கூறி சிறப்புரை ஆற்றினார்.

அரசமைப்புச்சட்டத்தின் பிரிவுகள் வாரியாக ஆளுநர் பதவிக்குரிய அதிகார எல்லைகள்குறித்தும், செயல்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள்குறித்தும் எடுத்துரைத்தார்.

ராஜமன்னார் குழு, வெங்கடாச்சலய்யா குழு, குஞ்ச் கமிஷன் உள்ளிட்ட பல்வேறு குழுக்களின் பரிந்துரைகளில் மாநில அரசுகளின் பரிந்துரையின் பேரிலேயே ஆளுநர் பதவி நியமனம் செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளதையும், ஆளுநர்களின் அதிகார எல்லைகள்குறித்து கூறப்பட்டவை குறித்தும் எடுத்துரைத்தார்.

தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, பீகார், டில்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஆளுநர்கள் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவே செயல்பட்டு வருகின்றனர் என்பதை சுட்டிக்காட்டினார். ஆளுநரை நியமிப்பதிலிருந்து திரும்பப் பெறுவதற்குரிய அதிகாரங்களை மாநிலத்துக்கு அளிக்கும்  வகையில் அரசமைப்புச்சட்டம் திருத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக் களுக்கு ஒப்புதல் பெறும் நடைமுறைகுறித்து விரிவாக எடுத்துரைத்ததுடன், கிடப்பில் போடுவதற்கு ஆளுநருக்கு உரிமையே இல்லை என்பதையும் சட்ட விளக்கங்களுடன் சுட்டிக்காட்டினார்.

மேனாள் நீதிபதி 

கே.சந்துரு சிறப்புரை 

நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட காலக்கட்டத்தில் ஆசிரியர் அவர்கள் இதே பெரியார் திடலில் 25.6.1975 அன்று கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் அரங்கமே நிரம்பி வழிந்ததை நினைவுபடுத்தினார்.

நெருக்கடி நிலைமையின்போது நிகழ்த்தப்பட்ட கொடு மைகள்குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வலியுறுத்தி, அப்போதைய ஆளுநரிடம் கோரியதைத் தொடர்ந்து, நீதிபதி இஸ்மாயில் தலைமையில் குழு அமைக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி, கொடுமைகளை செய்த காவல்துறை அதிகாரி களுக்கு தண்டனைக்குப் பதிலாக பதவி உயர்வு அளிக்கப் பட்டதையும், குழுவின் பரிந்துரையை அளித்த நீதிபதி இஸ்மாயில் பணியிட மாற்றமாக கேரளாவுக்கு மாற்றல் உத் தரவு பிறப்பிக்கப்பட்டு, அதனை ஏற்காத நீதிபதி இஸ்மாயில் தம்முடைய நீதிபதி பணியிலிருந்தே விலகியதையும் எடுத்துக் கூறினார்.

ரம்மி சூதாட்டத்தால் பணமிழந்து தற்கொலைகள் நடக்கின்றன. அதனைத் தடுக்க தமிழ்நாடு அரசு என்னுடைய  தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது. நாங்களும் அறிக்கை கொடுத்தோம். அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர். ஆறு மாதமே அவசரச்சட்டத்துக்கு உயிர் இருக்கும். நிலையான சட்டத்துக்கு அனுமதி தர ஆளுநர் மறுக்கிறார். ரம்மி முதலாளிகளுக்கு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கிறார்.

பல்கலைக்கழகங்களில் வேந்தர் பதவி குறித்து தேர்ந் தெடுக்கப்பட்ட அவை எடுக்கின்ற முடிவுக்கு எதிராக ஆளுநர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா மூன்று மாநிலத்திலும் இதே நிலைதான்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டுள்ள மசோதாக்கள் தமிழ்நாட்டில்  21, கேரளாவில் 19 ஆக உள்ளன. 

பல்கலைக்கழகங்களில் வேந்தர் பதவி குறித்து தேர்ந் தெடுக்கப்பட்ட அவை எடுக்கின்ற முடிவுக்கு எதிராக ஆளுநர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா மூன்று மாநிலத்திலும் இதே நிலைதான்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டுள்ள மசோதாக்கள் தமிழ்நாட்டில்  21, கேரளாவில் 19 ஆக உள்ளன. இங்கிலாந்து நடைமுறைப் படிதான் கவர்னர் நியமனம் இருந்தது. இங்கிலாந்தின் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட எந்த ஒரு சட்டத்துக்கும் அங்கே அனுமதி மறுக்கப்பட்டதில்லை.

அம்பேத்கர் அரசமைப்புச்சட்டத்தில் சகோதரத்துவம், சமத்துவம், சுதந்திரம் குறித்து கூறுகையில், பிரெஞ்சிலிருந்து எடுத்துக்கையாண்டதாக சொல்கிறார்கள். உண்மையில் புத்த நெறியிலிருந்துதான் தான் அதனைக் கையாண்டுள்ளதாக தெரிவித்தார். வரலாறு புரியாத ஆளுநராக உள்ளார். இந்த ஆளுநர் மட்டுமல்லாமல் எந்த ஆளுநரும் தமிழ்நாட்டுக்குத் தேவையில்லை என்பதுடன், அண்ணா கூறிய ஆட்டுக்கு தாடி தேவையில்லை என்பதுபோல் நாட்டுக்கு கவர்னர் தேவையில்லை என்பதை எடுத்துக்காட்டி ஆளுநர் பதவியே தேவையில்லை என்று முடிவான கருத்தை சுருக்கமாக எடுத்துரைத்தார். மேலும் மற்ற ஆளுநர்கள் தனிப்பட்ட வர்களாக இருந்து செயல்பட்டனர். இப்போதோ நாகபுரியில் திட்டமிடுவதை செயல்படுத்துகின்ற ஆளுநராக இருப்பதால் அதை நாம் அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார். 

சிறப்பு விருந்தினர்களுக்கு அம்பேத்கர் உருவச்சிலை, புத்தகங்கள் வழங்கி சிறப்பு

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு திமுக சட்டத்துறை சார்பில்  நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ பயனாடை அணிவித்து புத்தகங்கள் வழங்கி  டாக்டர் அம்பேத்கர் உருவச்சிலையை நினைவுப்பரிசாக அளித்தார்.

நீதியரசர் கே.சந்துரு அவர்களுக்கு திமுக சட்டத்துறை சார்பில்  பயனாடை அணிவிக்கப்பட்டு  டாக்டர் அம்பேத்கர் உருவச்சிலை நினைவுப்பரிசாக அளிக்கப்பட்டது.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவாக சிறப்புரை ஆற்றினார்.

கருத்தரங்க முடிவில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சட்டத்துறை அமைப்பாளர் துரை கண்ணன் நன்றி கூறினார்.

கருத்தரங்கம் என்று சொல்லப்பட்டாலும், திமுக சட்டத் துறையின் விரிவான ஏற்பாட்டில் மாநாடாகவே எழுச்சியுடன் நடைபெற்றது. 

பெரியார் ஈவெரா  நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் குழல் விளக்குகள் பொருத்தப்பட்டு திமுக கொடிகள் கட்டப்பட்டு, கருத்தரங்கத்துக்கு அனைவரையும் வரவேற்பு ஏற்பாடுகள் மாநாடுபோல் நிகழ்ச்சி சிறப்பு பெற்றது.

சென்னை கிழக்கு, சென்னை வடக்கு, புழல் ஒன்றியம் உள்ளிட்ட திமுக சட்டத்துறையின் பொறுப்பாளர்கள் அரங் கத்தை நிறைத்தனர். அரங்கத்துக்கு வெளியே திரை அமைக்கப்பட்டு பலரும் அரங்கத்துக்கு வெளியிலிருந்தும் நிகழ்ச்சிகளை கண்டு கேட்டு பயன் பெற்றனர்.

கலந்துகொண்டோர்

திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங் கோவன், நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் திமுக மகளிரணி பொறுப்பாளர்கள், நீதியரசர் அக்பர் அலி, திராவிடர் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, தாம்பரம் ப.முத்தையன், ஆவடி க.இளவரசன், வடசென்னை 

தி.செ.கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment