வீண் வம்புக்கு வரும் ஆளுநர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 11, 2023

வீண் வம்புக்கு வரும் ஆளுநர்!

வெள்ளைக்காரன் காலத்தில், அவன் ஆட்சி முறைக்கு ஆளுநர் நியமனம் என்பது சரியாக இருக்கலாம்.

வெள்ளைக்காரன் வெளியேறி விட்டான். ஆனால் அவன் ஆட்சி முறைக்கு ஏற்ப நியமனம் செய்யப்பட்ட   ஆளுநர். சுதந்திர இந்தியாவின் ஜனநாயக அமைப்பு முறையில் நியமனம் செய்யப்பட்ட ஆளுநர் பதவி எதற்கு?

அறிஞர் அண்ணா சொன்னதுபோல 'ஆட்டுக்குத் தாடி எதற்கு? நாட்டுக்குக் கவர்னர் எதற்கு?' என்ற கேள்வி பூதாகரமாக வெடிக்கக் கூடிய ஒரு சூழலை ஆளுநர்களே வரவழைத்துக் கொண்டு விட்டனர்.

பிஜேபி ஆட்சியில்லாத மாநிலங்களில் பிரச்சினையை ஏற்படுத்துவதற்காக, பொறுக்கி எடுக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.காரர்களை நியமனம் செய்திருப்பது வெளிச்சமாகவே தெரிய ஆரம்பித்து விட்டது.

புதுச்சேரியில் திரு. நாராயணசாமி அவர்கள் முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் ஆட்சியில் லெப்டினென்ட் ஆளுநராக இருந்த கிரண்பேடி  அய்.பி.எஸ். அம்மையார் என்ன பாடுபடுத்தினார்!

தெலங்கானா மாநிலத்தில் ஆளுநர் தமிழிசையின் செயல்பாட்டின் காரணமாக ஆளுநர் உரையே தேவை இல்லை என்ற நிலைக்கு அம்மாநில ஆட்சி செல்லவில்லையா?

மகாராட்டிரத்தில் என்ன நடந்தது? நள்ளிரவில் சட்டமன்றத்தைக் கூட்டி பிஜேபி ஆட்சியைக் கொண்டு வந்து திணிக்கவில்லையா - இந்தத் திருக்கூத்து எங்கே நடந்திருக்கிறது?

தமிழ்நாட்டில் மட்டுமென்ன? அம்மையார் ஜெயலலிதா மறைந்த நிலையில், சசிகலா முதலமைச்சராக அ.இ.அ.தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வராமல் ஆளுநர் 'அப்ஸ்கான்ட்' ஆகவில்லையா?

அ.இ.அ.தி.மு.க. பிளவுபடும் நிலையில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ். கைகளை இணைத்து வைப்பதுதான் ஓர் ஆளுநரின் வேலையா?

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் கால கட்டத்தில் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து அரசு அதிகாரிகளைக் கூட்டி ஆய்வு நடத்திடவில்லையா? இங்கே என்ன அமைச்சரவை இல்லாத ஆளுநர் ஆட்சியா - நடந்தது? வெட்கம் கெட்ட முறையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியும் அடி பணிந்து கிடந்ததே! இப்பொழுதுகூட ஆளுநர் ஆர்.என். இரவி சட்டமன்ற  உரையில் அண்ணாவின் பெயரைக்கூட உச்சரிக்க மறுத்தாரே,  அவருக்குப் பக்க வாத்தியம் வாசிப்பது பச்சைத் துரோகம் இல்லையா?

ஏட்டிக்குப் போட்டியாக எதையாவது பேசி, அமைதியாக - அதே நேரத்தில் ஆழமாக ஆட்சி வாகனத்தை மக்கள் நலக் கண்ணோட்டத்தோடு நடத்திச் செல்லும் 'திராவிட மாடல்' அரசுக்கு எந்தெந்த வகைகளில் எல்லாம் இடையூறுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் ஆளுநர் ரவி.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஓர் அவையில், மசோதாவை நிறைவேற்றினால் அவற்றைக் கால வரையரையின்றி ஊறுகாய் ஜாடியில்போட்டு வைக்கும் உரிமை என்பது ஜனநாயக முறைக்கு நேர் எதிரான ஏற்பாடு அல்லவா?

சட்டமன்றம் நிறைவேற்றி, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று, தமிழ்நாடு அரசின் சின்னத்திலேயே பொறிக்கப்பட்ட 'தமிழ்நாடு' என்பதை ஏற்க மாட்டேன் என்று கூறும் ஆர்.என்.இரவிக்கு அதற்கான அதிகாரம் உண்டா?

கடந்த ஆண்டு, ஆளுநர் மாளிகையில் தமிழ்ப் புத்தாண்டு (14.4.2022) விழா என்று கூறி, இதே ஆளுநர் அழைப்பிதழில் திருவள்ளுவர் ஆண்டு என்றெல்லாம் குறிப்பிட்டு இருந்தது; அழைப்பவர் 'தமிழ்நாடு ஆளுநர்' என்றும் இருந்தது.

இவ்வாண்டு பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ் இலச்சினை காணவில்லை.  மாறாக ஒன்றிய அரசின் இலட்சினையுடன் அழைப்பு வெளி வந்துள்ளது. 'தமிழக ஆளுநர்' என்று உள்ளது. 

இவர் தமிழ்நாட்டுக்கு ஆளுநர் என்கிறபோது தமிழ்நாட்டின் இலச்சினையைப் பொறிக்காமல் ஒன்றிய அரசின் இலச்சினையைப் பொறித்திருப்பது சரியானதுதானா?

கடந்தஆண்டு இடம் பெற்ற திருவள்ளுவர் ஆண்டு, இவ்வாண்டு அழைப்பிதழில் குறிப்பிடாதது ஏன்?

இதெல்லாம் சிறுபிள்ளை விளையாட்டல்லவா!

ஆக, வீண் வம்புக்கு வருவதற்குத் தயாராகி முண்டா தட்டுகிறார்; அய்.பி.எஸ். அதிகாரியாக இருந்தவர் அல்லவா!

ஆளுநர் ரவி அவர்களே தமிழ்நாடு உரிய முறையில் அதனை எதிர் கொள்ளும். இப்பொழுதே கல்லூரி மாணவர்கள் "கிளர்ந்தெழ" ஆரம்பித்து விட்டனர் என்பதை மறந்து விடாதீர்கள்!

No comments:

Post a Comment