பொங்கல் புது நாள் இந்த மாதம் பதினான்காம் நாள் புதன்கிழமை. இப்புது நாளிலே திராவிடத் தமிழ்த் தோழர்களுக்கு நமது வாழ்த்து உரியதாகுக! என நாம் வாழ்த்துக் கூற முன்வரவில்லை. திராவிடா! வாழ முயற்சி செய்! ஓய்வின்றி முயற்சி செய்! இன்பவுணர்ச்சி பொங்க முயற்சி செய்! இதுதான் நாம் திராவிடத் தோழர்களுக்குத் தரும் செய்தி.
மனிதன் மனிதனாக மதிக்கப்பட்டு, உழைப்போரே உயர்ந்தோர் எனக்கொண்டு, உழைப்புத் தொழில்களுக்கெல்லாம் தாய்த்தொழிலாக விளங்கும் உழவர்களே, உலகை உண்பித்து வாழச் செய்வோர் எனப்போற்றிய காலத்தில், பாடுபடும் பாட்டாளிகளின் மனம் பொங்கிப் பூரிப்புக் கொள்ளும் புது நாள் பொங்கல் நாள். அதன் பயனைப் பெற்று உண்டு வாழ்வோர், அத்தொழிலைப் போற்றி, அத்தொழிலாளர்களைப் போற்றி, அவர்தம் மகிழ்ச்சியிலே பங்கு கொள்ளும் திருநாள் பொங்கல் நாள். மழையிலும், பனியிலும் நனைந்து, காய்ந்து வருந்திய உழவோர், உழைத்த உழைப்பின் பயனைப் பெற்று, புதுப்பருவத்தைக் கண்டு புதிய வாழ்க்கைக்கு வழிகோலும் நாள் பொங்கல் நாள். நெல்லே உயிரென்று கண்டு புது நெல் பெற்ற புதுமையால், புத்தாடை பூண்டு, புழங்கும் பொருள்களையெல்லாம் புதுப்பித்து, வாழும் இடத்தையும் புதுப்பித்து, புதுப்பானையில் சமைத்து, புதுக்கறிகளுடன் புதிய பச்சிலையில் உண்டு, புத்துணர்ச்சி பூணும் நாள் பொங்கல் நாள். பொங்கல் நாள் புதுமை வீறு பெறும் நாள். உணவில், உடையில், உறையும் மனையில், உள்ளத்தில், செயலில், இவ்வாறு அகமும் புறமும் புதுமை. பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் புதுமை.
புதுமை நிலையானதல்ல; புதுமை பழைமையாகும்; மீண்டும் புதுமை தோன்றும். அப்புதுமையும் மகிழ்ச்சியோடு வரவேற்கப்படும். ஆண்டு தவறாமல் வந்து சென்ற பொங்கலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் வரவிருக்கும் பொங்கலும் இதைத்தானே நமக்குப் பாடமாக உணர்த்த முடியும்?
உழவுத்தொழிலே தலைசிறந்த தொழில் என எண்ணிய திராவிடர், எங்கு சுற்றியும் ஏருக்குப் பின்னால் கைகட்டி நின்றே வாழ வேண்டுமெனக் கண்ட திராவிடர், உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்யும் அடிப்படையில் அமைத்த பொங்கல் விழா எவ்வாறு சங்கராந்தியாகப், போகிப் பண்டிகையாக, கரிநாளாக, இருக்க முடியும்? உழுதொழிலைப் பாவமென்றும் உழவர்களைப் பாவியர் என்றும் கடிந்து எழுதி வைத்து, அன்றிலிருந்து இன்றுவரை அத்தொழிலைக் கைகொள்ளாது, எழுதி வைத்ததைப் பேணி வரும் ஆரியப் பார்ப்பனர்கள், எவ்வாறு பொங்கல் நாளில் கலந்து பூரிப்படைய முடியும்?
திராவிடத்தை உருக்குலைத்த பார்ப்பனர்கள் - திராவிடர்களின் வாழ்வையும், வாழ்வின் குறிக்கோளையும் கருகச் செய்த பார்ப்பனர்கள், அச்செயலுக்குத் திராவிடர்களின் ஒவ்வொரு செயல்களையும் மாற்றி, திருத்தி, புகுத்தித் திராவிடர்களுக்குரியதென எண்ணுமாறு ஒன்றையும் விட்டுவையாமல், ஆரிய வழிபட்டவர்கள் என எண்ணுமாறு வழி கோலப்பட்டதே பொங்கல் - சங்கராந்தியும் போகியுமான செயல். இச்செயல்தான் இன்று சண்முகம் அவர்களையும், ஆரியமும் - திராவிடமும் இரண்டறக் கலந்தது எனக் கூறுவதற்கு ஏதுவாக இருந்ததுமாகும்.
ஆரியமும் - திராவிடமும் கலந்தது. ஆனால் பாலும் நீரும் போல அல்ல. எண்ணெயும், தண்ணீரும் போல. இதோ எண்ணெய்! இதோ நீர்! சுயமரியாதை இயக்கம், இதோ ஆரியம்! இதோ திராவிடம்! என உலகமறியப் பிரித்தெடுத்து உணர்த்தினும், இந்திக்கட்டாய எதிர்ப்புணர்ச்சி “அது உண்மைதான்” என உலகை அறிந்துகொள்ளச் செய்தது. அன்று தொட்டுத்தான் பூஜா மனோபாவத்துடன் “சங்கராந்திப் பண்டிகையாக” இருந்த பொங்கல் நாள், தமிழ் நாளாக, தமிழர் நன்னாளாக, திராவிடர் திருநாளாக, பொங்கல் புதுநாளாக மலர்ந்தது, விரிந்தது என்ற உண்மையைத் திராவிடம் நன்கறியும்.
இப்புது நாளிலே நாம் அளிக்கும் பொங்கல் விருந்து, தந்தை பெரியார் அவர்கள் தமது சிந்தனைத் திறனால் பல ஆண்டுகளாகத் திராவிடர்களுக்கு அளித்து வந்த அறிவுரைகளாகிய பொன்னுரைகளேயாம். இதில் அத்தனையும் இடம் பெற்றது என்று சொல்ல முடியாது. ஏதோ நம்மால் இயன்ற அளவு இங்கு திரட்டித் தந்திருக்கின்றோம். இதனைத் தாராளமாய் அருந்துங்கள்! எனக் கூவி அழைக்கின்றோம். இவை உண்பதற்கு இனிப்பானவையாயிருக்க முடியாது. ஆயினும் இவற்றையுண்டு ஜீரணித்தால்தான், ஜீரணத்ததின் பயன் செயலுக்கு வந்த அந்த நாள்தான் - திராவிடத்தின் புதுநாளாக - இன்ப நாளாக - இருக்க முடியும் என்ற நம்பிக்கையின் விளைவே இப்பொங்கல் விருந்து.
பட்டினியால், தரித்திரத்தால், ஏமாற்றம், வஞ்சங்களுக்கு ஆளாகிப் பரிதவிக்கும் திராவிடமே! தமிழகமே! நெருக்கடி நெருங்குகிறது! வஞ்சகர்களின் தந்திரம் பெருகுகிறது! வல்லூறும் கழுகும் வட்டமிட்டுப் பறக்கின்றன. உன் வாழ்வை ஒடுக்க புதுப் புதுச் செயல்கள் ஓங்குகின்றன! அஞ்சாதே! எதிர்த்து நில்! வெற்றி உனதே! வாழ முயற்சி செய்!
- குடிஅரசு - தலையங்கம் - 10.01.1948
No comments:
Post a Comment