தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார் விருதினை திராவிடர் கழகத் துணைத் தலைவரும் 'விடுதலை' நிர்வாக ஆசிரியருமான கவிமாமணி கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது எல்லா வகையிலும் பொருத்தமும் ஏற்றமும் உடையதாகும்.
மானமிகு கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களது கொள்கை - இயக்கப் பங்களிப்பு என்பது அரை நூற்றாண்டு தாண்டிய ஒன்று; அந்த விருதுக்காக அவரை நாம் பாராட்டுவது - வாழ்த்துவது - என்பது நம்மை நாமே பாராட்டி மகிழ்வதாகும். இந்த ஒரு கருத்திலேயே எல்லாமும் அடங்கியுள்ளது!
தக்காரை அடையாளம் காணும் தகைமை சான்ற திராவிட மாடல் ஆட்சிக்கும் அதன் ஒப்பற்ற முதலமைச்சருக்கும் நமது ஆழமான பாராட்டை மகிழ்ச்சி கலந்த நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈரோட்டுப் பாதையில் பயணிப்பவர்களான நமக்கு விருதுகள் வந்து விழும் போது இன்ப அதிர்ச்சியேயாகும்!
என்றாலும் மக்கள் அரசின் அங்கீகாரம் என்பது தந்தை பெரியார் நெறி புரட்சியின் கனிந்த விளைச்சலின் வெற்றிகளின் அறுவடையாகும்!
புதுப்பொங்கலாக கொள்கைகளைப் பொங்க வைத்து, பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு என்பதன் புதுவடிவமே இவ்விருது அளிப்பு.
அதுபோலவே திருவாளர்கள் இரணியன் நா.கு. பொன்னுசாமி அவர்களுக்கு அய்யன் திருவள் ளுவர் விருது, எஸ்.வி.ராஜதுரை அவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் விருது, எஸ்.என்.எம். உபயதுல்லா அவர்களுக்கு பேரறிஞர் அண்ணா விருது, ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களுக்கு பெருந் தலைவர் காமராஜர் விருது, ஆ.இரா.வெங்கடாசலபதி அவர்களுக்கு மகாகவி பாரதியார் விருது, வாலாசா வல்லவன் அவர்களுக்கு பாரதிதாசன் விருது, நாமக்கல் பொ.வேல்சாமி அவர்களுக்கு திரு.வி.க. விருது, கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு கி.ஆ.பெ.விசுவநாதம் விருது, முனைவர் இரா.மதிவாணன் அவர்களுக்கு தேவ நேயப் பாவாணர் விருது அளிக்கப்பட்டது மகிழ்ச் சிக்குரியதே! அனைவருமே தொண்டறச் செம்மல்கள் - அனைவருக்கும் வாழ்த்துகள் - பாராட்டுகள்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
17.1.2023
No comments:
Post a Comment