பா.ஜ.க. அமைச்சரின் ஒழுக்கம் பாரீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 2, 2023

பா.ஜ.க. அமைச்சரின் ஒழுக்கம் பாரீர்!

பாலியல் குற்றச்சாட்டு - அரியானா 

பா.ஜ.க. அமைச்சர் பதவி விலகல் 

புதுடில்லி,ஜன.2- அரியானா மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் சந்தீப் சிங் மீது தடகளப் பயிற்சியாளர் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தார். இதனடிப்படையில் சண்டிகர் காவல் துறையினர் அமைச்சர் சந்தீப் சிங் மீது  வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, அமைச்சர் சந்தீப் சிங் பதவி விலகியுள்ளார்.

அரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநில விளையாட்டுத் துறை அமைச்சராக சந்தீப் சிங் பொறுப்பு வகித்தார். இந்நிலையில், கடந்த 30.12.2022 அன்று பெண் தடகளப் பயிற்சியாளர் ஒருவர், சந்தீப் சிங் மீது பாலியல் குற்றாச்சாட்டை முன்வைத்தார்.

அந்தப் பெண் பயிற்சியாளர், எதிர்க்கட்சியான இந்திய தேசிய லோக் தளம் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து, அமைச்சர்சந்தீப் சிங்கின் பாலியல் அத்துமீறலைப் பகிரங்கப்படுத்தினார்.

“அமைச்சர் சந்தீப் சிங் முதலில் என்னை இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டார். எனது விளையாட்டுச் சான்றிதழ் நிலுவையில் இருப்பதாகவும், இது தொடர்பாக நான் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் கூறினார். நான் மற்ற ஆவணங்களுடன் அமைச்சரை சந்திக்க, அவரது வீட்டுக்குச் சென்றேன். அப்போது அவர் பாலியல் ரீதியாக எல்லை மீறினார். தொடர்ந்து எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி, மிரட்டினார். கடந்த பிப்ரவரி முதல் நவம்பர் வரை என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் அரியானா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சண்டிகர் காவல் துறையினர் சந்தீப் சிங் மீது நேற்று (1.1.2023) பாலியல் துன்புறுத்தல் பிரிவில் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, சந்தீப் சிங் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

பாலியல் புகார் தொடர்பாக சந்தீப் சிங் கூறும்போது, “என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் புகார் அளிக்கப்பட் டிருக்கிறது. விசாரணையில், உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்

ஹாக்கி வீரரான சந்தீப் சிங், இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக இருந்துள்ளார். அவரது தலைமையின் கீழ் இந்திய அணிபல்வேறு கோப்பைகளை வென்றுள்ளது. அவரது வாழ்க்கையை மய்யப்படுத்தி 2018-ஆம் ஆண்டில் ‘சூர்மா’ என்ற திரைப்படம் வெளிவந்தது.

விளையாட்டுத் துறையில் அவருக்கு இருந்த புகழின் அடிப்படையில், 2019-ஆம் ஆண்டு அரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்டு சந்தீப்சிங் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண் பயிற்சியாளர், அரியானா மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ்ஜை நேற்று (1.1.2023) சந்தித்து, சந்தீப் சிங் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அப்போது அவர் “பலமுறை அமைச்சர் சந்தீப் சிங்கின் அத்துமீறலைக் கண்டித்துள்ளேன். அதையும் மீறி, அவர் எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தார்.

ஒரு பெண் எவ்வளவு நாள்தான் அமைதியாக இருப்பது? குரல் எழுப்ப வேண்டிய நேரம்வந்துவிட்டது. அவர் கைது செய்யப்பட்டால், அவரால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும், தாங்கள் அனுபவித்த கொடுமையை வெளியே பகிர தைரியமாக முன்வருவார்கள்” என்றார்.


No comments:

Post a Comment