கேரள பள்ளிகளில் வழக்கமாக நடைபெறும் கலைத் திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றுக் காரணமாக நடத்தப்படவில்லை; 2023ஆம் ஆண்டு நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது. 10,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், 239க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளனர். பல ஆண்டுகளாக நடைபெறும் இந்த விழாவில் வழங்கப்படும் உணவு எப்போதும் மரக்கறியாகவே இருந்துள்ளது. இந்த நிலையில் ”ஹிந்து அய்க்கிய வேதிக்” என்ற அமைப்பு நமது பாரம்பரிய விழாக்களில் இஸ்லாமியர்களின் அடையாளங்களுள் ஒன்றாக கருதப்படும் 'ஹலால்' இருக்கக்கூடாது என்று அறிவிப்பை வெளியிட்டது, இதனை அடுத்து உணவு தொடர்பான சர்ச்சை சமூக வலைதளங்களில் எழத் துவங்கியது. பொதுவாகவே இந்த விழாவில் வழங்கப் படும் உணவு பார்ப்பனீயக் கண்ணோட்டத்தில் இருப்பதாகப் புகார் எழுந்துகொண்டே இருந்தது, நுழைவு வாயிலிலேயே சுத்தசைவம் என்ற அறிவிப்பு இருப்பதால் கலந்து கொள்ளவரும் பெரும்பான்மை அசைவ உணவு விரும்பிகள் தாங்கள் தனித்து விடப்பட்டதாக உணர்ந்தனர்.
இந்தியாவிலேயே வடகிழக்கு மாநிலங்களை அடுத்து, கேரளாவில் தான் மாட்டிறைச்சி அதிக மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. மாமிசப் பிரி யர்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் ஒன்று கேரளா. இங்கே அதிக மக்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் கலை விழாக்களில் சமையல் ஒப்பந்தங்கள் நம்பூதிரி களுக்குத்தான் வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு அமைச்சர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. மேலும் சமூவலை தளங்களிலும் கேரள அரசின் நிலைப்பாட்டை விமர்சித்து பல பதிவுகள் வலம் வரத் தொடங்கின.
இதனைத் தொடர்ந்து கேரள கல்வித்துறை அமைச்சரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சிவன் குட்டி கூறுகையில்”அடுத்த ஆண்டு முதல் மாமிச உணவும் விழாவில் இடம் பெறும்; ஆரோக்கியமான கருத்துக்களை நாங்கள் வரவேற்கிறோம். இதில் அரசியல் செய்ய வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசும் போது, கலைத் திருவிழாக்களில் தேவையற்ற விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும், எங்களுக்கு உணவு முறை குறித்து எந்த ஒரு புகாரும் வரவில்லை. இருப்பினும் மாமிச உணவைத் தவிர்க்கவேண்டும் என்று சில அமைப்பினர் திடீரென்று கோரிக்கை விடுக்கின்றனர். இத்தனை ஆண்டுகளாக இங்கே மரக்கறி உணவு மட்டுமே வழங்கப்படுகிறது என்று கூறினார்கள். அடுத்த ஆண்டிலிருந்து இந்த விழாவில் மாமிச உணவுகளும் இடம் பெறும். முக்கியமாக இந்த நிகழ்ச்சி நடக்கும் ஊரில் பெயர் பெற்ற கோழிக்கோடு பிரியாணி வழங்கப்பட வேண்டும் என்பது எனது விருப்பமாகும், என்று கூறியிருந்தார்.
இந்நிலையில்தான் இந்தத் திருவிழாவில் வழங்கப் படும் உணவு குறித்து தொடர்ச்சியாக சர்ச்சைகள் எழுந்தன. இதனால் ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மோகன் நம்பூதிரி கேட்டரிங் சர்வீஸ் உரிமையாளர் அளித்த பேட்டியில், அடுத்த ஆண்டு முதல் கேரள கலைத் திருவிழாவில் மாமிச உணவும் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளதால் தனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ளார். “அரசாங் கத்திற்கு மாமிச உணவு தான் வேண்டுமென்றால் நான் அதையும் சமைக்க ஏற்பாடு செய்வேன். என் குழுவில் மாமிசம் சமைக்க தனியாட்கள் உள்ளனர். அதற்காக நான் தனியாக பாத்திரங்களும் வைத்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.
எவ்வளவு சாமர்த்தியம் பார்ப்பனர்களுக்கு - பணப்பை நிரம்புமானால், எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள்.
ஹிந்துத்துவவாதிகள் இதனை எதிர்க்கின்றனர் என்பதையும் கவனிக்கத் தவறக் கூடாது - இந்தக் கலை விழாவில் முஸ்லிம்களின் உணவுக் கலாச்சாரம் பற்றியும் பிரச்சினையைக் கிளப்பியுள்ளனர்.
இந்தப் பாழாய்ப் போன ஹிந்துத்துவம் வந்தாலும் வந்தது - எல்லாவற்றிலும் பிரச்சினைதான் சர்ச்சை தான்!
எப்படியோ அடுத்தாண்டு முதல் மாமிச உணவுக்கும் வழி செய்யப்படும் என்று கேரள அமைச்சர் மாண்புமிகு சிவன்குட்டி (சி.பி.எம்.) உறுதி கொடுத்தது வரவேற்கத் தக்கதே!
No comments:
Post a Comment