தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார் விருது, கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு வழங்கப்பட்டது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 17, 2023

தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார் விருது, கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு வழங்கப்பட்டது!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது, தங்கப்பதக்கம், காசோலை ஆகியவற்றை வழங்கி சிறப்பித்தார்!

சென்னை. ஜன. 17 திராவிடர் கழக துணைத் தலைவருக்கு தந்தை பெரியார் விருதை தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2022 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் 16-01-2023 அன்று காலை 8:30 மணிக்கு நடைபெற்றது. குறித்த நேரத்தில் முதலமைச்சர் வருகை தந்தார். இந்நிகழ்வில் 2022 ஆம் ஆண்டுக்கான 10 ஆன்றோர் பெருமக்களுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இவ்விருதானது தகுதி உரை, பொன்னாடை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், ரூ.2 லட்சத்திற்கான காசோலை ஆகியவற்றைக் கொண்டது. 

தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. நிகழ்வில் மாண்புமிகுவாளர்களான இளைஞர் நலம் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை பெருநகர மேயர் ஆர். பிரியா, ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். முன்னதாக இவர்களுக்கு நிகழ்ச்சியின் சார்பில் வள்ளுவர் சிலை வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

தமிழறிஞர்கள் பதின்மருக்கு விருதுகள்!

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு தந்தை பெரியார் விருது, இரணியன் நா.கு. பொன்னுசாமி அவர்களுக்கு அய்யன் திருவள்ளுவர் விருது, எஸ்.வி.ராஜதுரை அவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் விருது உபயதுல்லா அவர்களுக்கு பேரறிஞர் அண்ணா விருது, ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன் அவர்களுக்கு பெருந் தலைவர் காமராஜர் விருது, ஆ.இரா.வெங்கடாசலபதி அவர்களுக்கு மகாகவி பாரதியார் விருது, வாலாசா வல்லவன் அவர்களுக்கு பாரதிதாசன் விருது, நாமக்கல் பொ.வேல்சாமி அவர்களுக்கு திரு.வி.க. விருது, கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு கி.ஆ.பெ.விசுவநாதம் விருது, முனைவர் இரா.மதிவாணன் அவர்களுக்கு தேவநேயப் பாவாணர் விருது உள்ளிட்ட 10 விருதுகள் முதலமைச்சரால் வழங்கப்பட்டன.

தந்தை பெரியார் விருது!

”2022 ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு பாடுபடுகிறவர்களை சிறப்பிக்கும் பொருட்டு இந்த விருது வழங்கப்படுகிறது.  முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால், கவிமாமணி பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டவர்; தந்தை பெரியார் தன்மானப் பேரவையை உருவாக்கியவர்; தந்தை பெரியாரின் கொள்கைகான சமூக நீதி, ஜாதி மறுப்பு, சுயமரியாதை, பெண் உரிமைகளை உறுதியுடன் செயல்படுத்த வேண்டுமென்று முனைப்புடன் 60 ஆண்டுகளாக செயல்பட்டு  வருகிறார்கள். இந்த அரிய பணிகளைப் பாராட்டி சிறப்பிக்கிறது தமிழ்நாடு அரசு” என்ற தகுதியுரை வாசிக்கப்பட, துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மேடையேறி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கரங்களால் பொன்னாடை, தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டு, தகுதியுரை ரூ.5 லட்சத்துக்கான காசோலை ஆகியவை வழங்கப்பட்டன.

தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி!

வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் கீழ் 5 தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கி சிறப்பிக்கப் பட்டது. நீலகிரியைச் சேர்ந்த இண்டியா பிராஜக்ட் பார் அனிமல் அண்ட் ரிசர்ச் தொண்டு நிறுவனம், சென்னையைச் சேர்ந்த அனிமல் கேர் ஃபர்ஸ்ட் தொண்டு நிறுவனம், சென்னையைச் சேர்ந்த மெட்ராஸ் அனிமல் ரெஸ்கியூ சொசைட்டி தொண்டு நிறுவனம், பிரித்திவி அனிமல் வெல்பேர் சொசைட்டி தொண்டு நிறுவனம், சென்னையைச் சேர்ந்த வைரவா பவுண்டேஷன் தொண்டு நிறுவனம் என கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக முதல் முறையாக மொத்தம் 5 தொண்டு நிறுவனங்களுக்கு முதல் தவணையாக 2, 13, 77,250 ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தித்துறை இயக்குநர் அரசு இணைச் செயலாளர் நன்றி கூறினார்.

இறுதியில் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, விருது பெற்ற அறிஞர் பெருமக்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டார்.

 கவிஞரை உச்சி முகர்ந்த ஆசிரியர்!

தொடர்ந்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம் திட்டத்தில் ஒரு மாறுதல் செய்து தனது வீட்டில் விடுவதற்கு  முன் அடையாறு சென்று தமிழர் தலைவரை காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர்கள் உடனே சம்மதித்தனர். அவ்வாறே அடையாறு ஆசிரியர் இல்லம் சென்று தான் பெற்ற விருதைக்காட்டி நெகிழ்ந்தார் கவிஞர். ஆசிரியர் தானே பெற்றது போல மகிழ்ந்து, துணைத் தலைவர், வெற்றிச்செல்வி இருவருக்கும் ஒருசேர ஆடையணிவித்து மரியாதை செய்தார். பின்னர் வழங்கப்பட்ட தகுதியுரையை ஊன்றிப்படித்து மகிழ்ந்தார். அப்போது ஆசிரியரை சந்திக்க வருகை தந்திருந்த வி.ஜி.பி சந்தோசம் அவர்கள், கவிஞ ருக்கும், வெற்றிச் செல்விக்கும் ஒருசேர ஆடையணிவித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். உடன்: கி. ராகுலன், முனைவர் சுடரொளி, காரல் ஆகியோர் இருந்தனர்.

கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்கள்!

பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் இன்பக்கனி, மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் சே.மெ.மதிவதனி, வெற்றிச்செல்வி பூங்குன்றன், பொதுக்குழு உறுப்பினர் பூவை செல்வி, மாணவரணியின் மாநிலப் பொறுப்பாளர் செ.பெ.தொண்டறம், தென்சென்னை மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி, சரவண ராஜேந்திரன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், வை. கலையரசன், ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் கார்த்திகேயன், பெரியார் மாணாக்கன், ஆவடி தோழர்கள் வஜ்ரவேல், ஆ.வெ.நடராஜன், பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவு பாசறை ஒருங்கிணைப்பாளர் கோபால், பார்த்திபன், வெற்றி, துணைத் தலைவர் குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விருதாளர்கள், அன்னார்களது குடும்பத்தினர் ஆகி யோருக்கு காலைச் சிற்றுண்டியாக பொங்கல், வடை வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment