''திராவிட மாடல்''ஆட்சி - புத்தகப் புரட்சியை ஓர் அறிவுப் புரட்சியாக செய்கிறது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 17, 2023

''திராவிட மாடல்''ஆட்சி - புத்தகப் புரட்சியை ஓர் அறிவுப் புரட்சியாக செய்கிறது!

புத்தக வாசிப்பாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை; மாவட்டந்தோறும் புத்தகக் காட்சிகளை நடத்தி

''திராவிட மாடல்''ஆட்சி - புத்தகப் புரட்சியை

 ஓர் அறிவுப் புரட்சியாக செய்கிறது!

சென்னை புத்தகக் காட்சியில் 'நியூஸ் தமிழ்' தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் அளித்த பேட்டி

சென்னை, ஜன.17  புத்தக வாசிப்பாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை; மாவட்டந் தோறும் புத்தகக் காட்சிகளை நடத்தி 'திராவிட மாடல்' ஆட்சி - புத்தகப் புரட்சியை ஓர் அறிவுப் புரட்சியாக செய்கிறது! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் புத்தகக்காட்சி  (16.1.2023)   பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன தி-18 அரங்கில் நேற்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 'நியூஸ் தமிழ்' தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார். 

அவரது பேட்டி வருமாறு:

புத்தக வாசிப்பாளர்கள் குறைந்திருக்கிறார்களா?

செய்தியாளர்: இந்த ஆண்டு புத்தக வாசிப்பாளர்கள் குறைவாகி விட்டனர் என்று சொல்கிறார்களே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

'திராவிட மாடல்' ஆட்சி - புத்தகப் புரட்சியை 

ஓர் அறிவுப் புரட்சியாக செய்கிறது!

தமிழர் தலைவர்: இந்த ஆண்டு வாசிப்பாளர் கள் குறையவில்லை; புத்தக விற்பனையும்கூட குறையவில்லை. இந்த இடத்தில் வேண்டு மானால் குறைந்திருக்கலாம்; காரணம் என்னவென்றால், 'திராவிட மாடல்' அரசு - அறிவார்ந்த செய்திகளைப் பரப்ப வேண்டும் - நவில்தோறும் நூல்நயம் என்று சொல்லக்கூடிய அளவிற்குப் புத்தகப் புரட்சியை - ஓர் அறிவுப் புரட்சியைத் தொடர்ந்து செய்வதற்காக - நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட் டங்களில், இதுபோன்ற புத்தகக் காட்சிகளை - விற்பனையகங்களை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களே ஏற்பாடு செய்து நடத்தி, பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் புத்தகக் காட்சி

அதற்கு முன்பு ஒரே ஒரு இடத்தில்தான் புத்தகக் காட்சி - சென்னையில் மட்டும் நடைபெற்றது. எனவே இங்கே வந்துதான் புத்தகங்களை வாங்கவேண்டும் என்ற நிலை இப்பொழுது இல்லை. சென்னை போல, தமிழ்நாடு முழுவதும் புத்தகக் காட்சிகள் நடைபெறுகின்றன.  அந்த வகையில், தமிழ் நாட்டில் ஓர் அமைதியான, அறிவுப்புரட்சி, புத்தகப் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. அது பரவலாக்கப்பட்டு விரிவாகியுள்ளது. ஆகவே, ஆங்காங்கே மாவட்டங்கள்தோறும் விற்ற விற்பனையையும், இங்கே விற்கின்ற விற்பனையையும் சேர்த்தால், நிச்சயம் இலக்கைத் தாண்டியிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. புத்தகங்களைப் படிக்கின்றவர்கள், குறிப்பாக இளைஞர்கள் இப் பொழுது நல்ல திருப்பத்திற்கு ஆளாகியிருக் கின்றார்கள் என்பதை நாங்களே கண்கூடாகப் பார்க்கின்றோம். மகளிர் அதிக மாகப் படிக்கின்றார்கள்; இளைஞர்களும் அதிக மாகப் படிக்கின்றார்கள்.

தொலைக்காட்சி ஈர்ப்பு - கைப்பேசி ஈர்ப்புகளையும் தாண்டி புத்தகங்களைப் படிக்கின்ற உணர்வு ஏராளம்!

எனவே, ஒரு பக்கத்தில் தொலைக்காட்சி ஈர்ப்பு; இன்னொரு பக்கத்தில் கைப்பேசி ஈர்ப்பு - இவற்றையெல்லாம் தாண்டி, புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற உணர்வு ஏராளம் வந்திருக் கின்றது. எனவே, ஒரு புத்தகப் புரட்சி -அறிவுப் புரட்சியாக வந்திருக்கிறது. இது ஒரு நல்ல திருப்பம்; நல்ல அறிகுறியும்கூட!

 - இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 'நியூஸ் தமிழ்' தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார். 

No comments:

Post a Comment