தமிழர் திருநாள் - ஜெ.பாலச்சந்தர் முனைவர்பட்ட ஆய்வு மாணவர், பொன்னேரி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 14, 2023

தமிழர் திருநாள் - ஜெ.பாலச்சந்தர் முனைவர்பட்ட ஆய்வு மாணவர், பொன்னேரி

தமிழர் திருநாள், தைத் திருநாள், உழவர் திருநாள், பொங்கல் திருநாள், தமிழர் புத்தாண்டு என உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இத்திருநாளை கொண்டாடி வருகின்றார். ஆனால் தின்று செரிப்பது, எதிர்த்து நின்று அழிப்பது இல்லையேல் ஊடுருவி பிரிப்பது என்ற கொள்கையைக் கொண்ட ஆரியர்கள் இந்த தமிழர் திருநாளை, தைப் பொங்கல் விழாவை பொங்கல் பண்டிகையாக மாற்றி அதற்கு கற்பனை கதைகளின் வழியே மகரசங்கராந்தி எனப் பெயரிட்டு கதைகளை கூறி வந்தனர்.

இந்த கூட்டதினரின் செயலை முறியடிக்க தந்தைப் பெரியார், தமிழ்ச் சான்றோர்கள் வரலாற்று ஆய்வாளர்கள், மொழியியல் அறிஞர்கள் அனைவரும் 1935இல் ஒன்று கூடி பொங்கல் திருநாள் தமிழ் விழா - தமிழர் விழா -தமிழ் நாட்டுத் திருவிழா, மதச்சார்பற்ற விழா என்று தமிழர் திருநாளை தமிழ் நாட்டிற்கு அறிவித்தனர். இத்தகைய பெருமைக்குரியது. ( (UZHAIPPALI TAMIL MONTHLY: VOLUME 49, ISSUE: 8, Jan 2023)

தமிழர் திருநாளைப்பற்றி தலைவர்கள் 

தந்தை பெரியார்: திராவிடத்தின் ஆதி மக்களான தமிழர்களுக்கு தமிழர்களுக்குரிய பண்டிகை என்பதாக ஒன்றைக் காண்பது மிக அரிதாக உள்ளது. இதன் காரணம் என்னவென்றால், கலாச்சாரத் துறையில் தமிழனை ஆதிக்கம் கொண்டவர்கள் தங்களது கலாச்சாரங்களைத் தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக தமிழ்நாட்டின் தமிழனின் கலாச்சாரங்களை, பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்துவிட்டார்கள். இதனால் தமிழனுக்குரிய கலாச்சாரம் எது என்று அறிவது கூட மிகமிகக் கடினமான காரியமாக ஆகிவிட்டது. தமிழனின் கலாச்சாரப் பண்புகள் அழித்து ஒழித்து மறைக்கப்பட்டுவிட்டன என்பது மாத்திரமல்லாமல், தமிழனுக்கு வரலாறு, சரித்திரம் என்பது கூட இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டது. (முரசொலி - தமிழ்ப் புத்தாண்டு - தைதிங்கல் முதல் நாள் பொங்கல் சிறப்பு மலர் 2016)

எப்படி ஆனாலும் தமிழ் பாஷை உணர்ச்சி தமிழ் மக்களுக்கு இன்றியமையாதது. அதன்மூலம் தமிழ் மக்கள் ஒன்று சேர வசதி உண்டு. தலைவர் திரு.வி.க அவர்களும், அமைச்சர் கா.நமச்சிவாய முதலியார் அவர்களும், இத்திருநாளை இம்மாதிரி ஒழிந்த நேரத் திருநாளாக இல்லாமல் தமிழ் மக்களுக்கு ஒரு புது எழுச்சியையும், ஊக்கத்தையும் உண்டாக்கும் திருநாளாகச் செய்ய வேண்டும். ஆண்டுதோறும் ஒவ்வொரு ஊரில் தமிழ்த் திருநாள் நடைபெறச் செய்ய வேண்டும். தீபாவளி போன்ற மூடநம்பிக்கையும், சுயமரியாதை அற்றதும், ஆபாசமானதுமான பண்டிகைகள் கொண்டாடுவதை விட இப்படி தமிழ் திருநாள் என்று தமிழ் மக்கள் கூட்டுறவுக்கும், மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்துக்கும் அனுகூலமாகத் திருநாள்களை பரப்ப வேண்டும். (‘குடிஅரசு’ - சொற்பொழிவு - 26.01.1936. 13.01.1936 சென்னை பச்சையப்பன் கல்லூரி பெரிய மண்பத்தில் தமிழ்த் திருநாள் விழாவில் பேசியது)

பேரறிஞர் அண்ணா: அன்று தொட்டு இன்றளவும் நம்மை அகமகிழச் செய்துவரும் பொன்னான விழாவாகப் பொங்கல் அமைந்துள்ளது. எனவே இந்நாளும் திருநாளை நடத்திட முனைகின்றோம், என்றும் போல் உள்ள எழுச்சி குறைவெனினும், இனம் தெரியாத ஓர் மகிழ்ச்சி இன்றும் பிறந்திடத்தான் செய்கிறது. மற்ற விழாவைப் போல, இந்த விழா, மாய வாழ்வை நம்பாதே! ஈசன் பாதம் சேர்ந்திடுவாய்! என்ற வாழ்க்கை நிலையாமை பற்றிய எண்ணத்தின் மீது எழுத்தன்று வாழ்க்கை பெரும் பொறுப்பு, தூய கடமை என்று கொண்டு அதில் சுவையைத் துய்ப்பதுடன் பயன்பெறும் முறையும், கண்டுபெற்ற பயன் பிறருக்கும் பகிர்ந்தளிக்கும் வகைக ண்டு அதற்கேற்ப நாம் நடந்து செல்ல வேண்டிய நன்னெறியாகும். 

தலைவர் கலைஞர்: தை முதல் நாள்!

இது தமிழர்களின் திருநாள்! பகுத்துண்டு பல்லுயிர் கலந்து மகிழும் பண்பாட்டின் அடிப்படையிலே முகிழ்த்த பழந்தமிழ் விழா! உழுது பயன்விளைத்து உலகம் காக்கும் உழவர் பெருமக்களின் உவகைத் திருநாள்! ஓரூருக்கும் ஒரு மொழிக்கும் ஒரு சமயத்திற்கும் ஒரு நாட்டிற்கும் உரிய திருவிழாக்கள் நிறைய உண்டு! தை முதல் நாளில் நாம் காணும் பொங்கல் விழா, உலகெங்கிலும் பிறந்து மொழி பயின்று வாழும் மனித குலத்துக்கே பொதுவான விழா! ஆம்! பசிக்கின்ற நல் வயிறு படைத்துள்ள மனித இனம் முழுவதுக்கும் சொந்தமான உலகப்பெருவிழா!  (Dr.ஆறுமுகம் கலைஞரின் பொங்கல் வாழ்த்துரை இலக்கியம், பூம்புகார் பதிப்பகம், சென்னை-1990)

இனமானப் பேராசிரியர்: நாடும் வீடும் ஒரு சேரக் கொண்டாடும் திருநாளாய், ஏழைகளும், செல்வரும் ஏற்றிப் போற்றிடும், இஞ்சியும், மஞ்சளும், வாழையும், தென்னையும், கரும்பும், கமுகும் வீடு புகுந்து சேர்வதால் ஏற்படும் ஒரு மனநிறைவிலிருந்து பிறக்கும் குதுகல விழாவாகப் பொங்கல்’ விழாவைத் தை முதல் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடுகிறோம்.

தமிழர் தலைவர் ஆசிரியர்: திராவிடர் நாகரிகம் என்பது தனித்துவம் வாய்ந்தது. சிந்து சமவெளி நாகரிகம் என்ற ஒன்று போதும் - அதன் பண்பாட்டுத் தளம் எவ்வளவுச் செப்பமானது என்பதற்கு!

திராவிடர் பண்பாடு பட்டுப்போய், ஆரிய இருள் சூழந்த சமூகமாக படையெடுப்பிலே மிக்க கொடியதான பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்புக்கு ஆட்பட்டதாக ஆக்கப்பட்ட திராவிட சமுதாயத்தின் சார்பாக எதிர்புரட்சி நடத்தி, திராவிட பண்பாட்டை மீட்டெடுப்போம்! தமிழர் தம் திருநாளாம் பொங்கல் நாளில் இந்த சூளுரையை மேற்கொள்வோம்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்: தை மாதம் உழவர்களின் வாழ்வில் வசந்த காலம்! நெல் அறுவடை நடைபெறும் காலம்! தைத் திங்கள் முதல் நாள்! தமிழர்களின் திருநாள் திராவிடர் திருநாள்!  உழவர் திருநாள்! உழைக்கும் இனத்தின் ஒப்பற்ற பெருநாள்! உழவர் உவகை கொள்ளும் நாள்! உழைப்பின் பலனை கொண்டாடும் நாள்! பொங்கல் புதுநாள்!

தமிழர்களின் இல்லங்கள் தோறும் கொண்டாடப்படும் திருவிழா நாள்! (‘முரசொலி’ தமிழ்ப்புத்தாளண்டு - தைத்திங்கல் முதல் நாள் பொங்கல் சிறப்பு மலர்-2016)

உலக நாடுகள் கொண்டாடும் உழவர் திருநாள்:

அமெரிக்கா: “கிரீன் கார்னி பெஸ்டிவல்” என்று பூர்வகுடி அமெரிக்க மக்களால் அறுவடைத் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆப்ரிக்கா : பல ஆப்ரிக்க நாடுகளில் 3 நாட்கள் “யாம் விழா” என கொண்டாடுகின்றனர்.

 கொரியா: கொரியர்கள் “சூசாக் அல்லது அறுவடைத் நிலவுத் திருநாள்” என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

ஜப்பான்: ஜப்பானியர்கள் “ஓட்டேரி சாய் என்றும் ஓட்டோரி சாமா” என்றும் அறுவடைத்திருநாள் கொண்டாடப்படுகிறார்கள்.

ஜெர்மனி: ஜெர்மனியில் அறுவடை விழா “அக்டோபர் விழா” என்று கொண்டாடுகிறார்கள்.

சீனா: சீனர்கள் “சந்திரவிழா அல்லது அறுவடை விழா” என கொண்டாடுகின்றார்.

வியட்நாம்: வியட்நாமியர்கள் பல நூற்றாண்டுகளாக மிகப் பழைமையாக கொண்டாடப்படும் “தெட் - தி-ரங்து” என அறுவடைத் திருவிழா கொண்டாடுகிறார்கள்.

இஸ்ரேயல்: யூதர்கள் “சுக்கோத்” என்று அறுவடைத் திருநாள் கொண்டாடுகின்றார்.

ரோம்: ரோமானியர்கள் “செரிலியா” எனும் பெயரில் அறுவடைத் திருநாள் கொண்டாடுகின்றார்.

இங்கிலாந்து : பிரிட்டனில் “அறுவடை வீடு” என்ற பெயரில் அறுவடைத் திருநாள் கொண்டாடுகின்றனர்.

இவ்வாறு உலக நாடுகள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு பெயர்களில் அறுவடைத் திருநாள் கொண்டாடப்படுகிறது. தமிழர்கள், ஆரியர் பண்டிகைகளையும், அறிவுக்கு ஒவ்வாத கற்பனை கதைகளை அடிப்படையாக கொண்ட பண்டிகைகளையும், மூட நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்ட பண்டிகைகளையும் புறந்தள்ளி, தமிழர்களுக்கென்று ஒருநாள் தமிழர் திருநாள், தமிழ் புத்தாண்டு - தைத் திங்கள் முதல் நாளை உலகத் தமிழர்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்வோம்.

“அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்”

No comments:

Post a Comment