தமிழில் 40 விழுக்காடு மதிப்பெண் வாங்கியவர்களுக்கே அரசுப் பணி
தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதிய சட்ட திருத்தம் வரவேற்கத்தக்கது - பாராட்டத்தக்கது!
தமிழ் படிக்காமலேயே தமிழ்நாடு அரசுப் பணி களில் சேர்ந்த அவலத்தை நீக்கும் வகையிலும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கூடுதலாகக் கிடைக்கும் வகையிலும், இனி தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேர்பவர்கள் தமிழில் 40 விழுக்காடு மதிப்பெண் பெற்றாகவேண்டும் என்ப தற்கான சட்டத் திருத்தம், தமிழ்நாடு சட்டப்பேரவை யில் நிறைவேற்றப்பட்டுள்ளதைப் பாராட்டியும், வரவேற்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேர்ந்திட தமிழ் மொழிக் கட்டாயம் என்று, சட்டத்தின் முன்வரைவு நேற்று (13.1.2023) தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருப்பது மிகமிக வரவேற்றுப் பாராட்டப்படவேண்டிய ‘திராவிட மாடல்' ஆட்சியின் தனிப்பெரும் சாதனையாகும்!
நிதியமைச்சரும், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நேற்று (13.1.2023) தாக்கல் செய்த இந்த மசோதா தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பு உரிமை - வாய்ப்புகளைக் காப்பாற்ற பெரிதும் பயன்படும்.
தமிழ்நாடு அரசுப் பணியில் சேர்ந்திட தமிழில் 40% மதிப்பெண் அவசியம் - சட்டத் திருத்தம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016 அய் திருத்துவதற்கான சட்ட மசோதா கூறுவது என்ன?
அச்சட்டத்தின் 21 ஆம் பிரிவில் 21-ஏ என்ற புதிய பிரிவு சேர்க்கப்படுகிறது. அந்தச் சட்டத்தின் 21 ஆம் பிரிவின்படி, தமிழ்நாட்டின் அலுவல் மொழியான தமிழில் போதிய அறிவு பெறாத எவரும், நேரடி ஆள் சேர்ப்பின்மூலம் நடைபெறும் பணி எதிலும் நியமனம் செய்யப்பட, தகுதி உள்ளவராக கருதப்பட மாட்டார்.
அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கும்போது, தமிழில் போதிய அறிவு இல்லாதிருந்த விண்ணப்பதாரர்கள், தமிழ் மொழித் தகுதி பெறாமலேயே பணி நியமனம் பெற்றிருக்கலாம்; அப்படிப்பட்டவர்கள், பணியமர்த் தப்பட்ட நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில், இரண்டாம் மொழித் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு பணியில் சேர விண்ணப்பிக்கவேண்டும். தமிழில் தேர்ச்சி பெறவில்லையானால், பணியிலிருந்து அவர் களை விடுவிக்கலாம்.
தற்போது அந்தச் சட்டத்தில் புதிதாக சேர்க்கப்படும் 21-ஏ பிரிவின்படி, 1.12.2021 ஆம் நாளில் இருந்து, நேரடி ஆள்சேர்ப்பு மூலம் எந்த ஒரு பதவிக்கும் விண்ணப் பிக்கும் நபர் எவரும், பணி நியமனத்திற்காக நடத்தப் படும் தேர்வில், தமிழ் மொழித் தாளில் 40 விழுக் காட்டிற்கும் குறையாமல் மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றவராக இருக்கவேண்டும்.
தமிழ் மொழித் தேர்வுக்கான அப்பாடத் திட்டத்தை அவ்வப்போது அரசு வெளியிடும்.
முந்தைய சட்டத்திலிருந்த
ஓட்டை அடைக்கப்பட்டுள்ளது
இம்மசோதா முந்தைய சட்டத்தில் உள்ள ஓட்டை களை அடைக்கின்ற வகையில் உள்ளது என்றாலும், வெளிமாநிலத்தவர் நம் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறித்துக்கொண்டு செல்லாத அளவுக்கு, உயர்நிலைப் பள்ளிகளில் தொடர்ந்து தமிழ்ப் படித்தவர்களா (அவர்கள்) என்பதை உறுதி செய்து, பிறகு வேலை வாய்ப்பை அளிக்கும் ஓர் ஓட்டையை விட்டுள்ள (Fool-proof) முறையை ஆய்வு செய்வது அரசின் கண்ணோட்டமாகி, நமக்குப் பயன்படவேண்டும்!
தமிழ்நாட்டு இளைஞர்கள் பல லட்சம் பேர் ஏங்கித் தவிக்கையில், முன்பிருந்த அ.தி.மு.க. அரசு, பிற மாநில இளைஞர்களுக்குப் பணி நியமனங்களில் அகலமாகக் கதவுகளைத் திறந்து வைத்த காரணத்தினால், இத்திருத் தங்கள் இன்று முக்கியமாகத் தேவைப்படுகின்றன.
அவர்கள் தமிழ்நாட்டில் படித்தவர்களா? தமிழில் படித்தவர்களா? என்று உறுதிப்படுத்திக் கொண்டு பணி நியமனத்திற்கு மனு போடும் தகுதியை முன்நிபந்தனை ஆக்கவும் வேண்டும்.
தமிழ் ஆட்சி மொழியாக தமிழ்நாட்டில் இருக்கும் போது, தமிழ் தெரியாதவர்கள் - அவர்கள் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்.,களாக இருந்தாலும் அல்லது நான்காம் பிரிவு (குரூப் 4) பணியாளர்களாக இருந்தாலும் அரசுப் பணிகளைப் பெறும் நிலை இனியும் இருக்கக்கூடாது.
மாநிலத்தின் ஆளுமைத் திறனையும் இது வெகுவாகப் பெருக்கப் பெரிதும் உதவவும் கூடும்.
தமிழ்ப் படிக்காமலேயே
அரசுப் பணியில் சேர்ந்த அவலம்!
இந்தத் திருத்தத்தின் முக்கியத்துவம், தமிழ் மொழித் தாளில் 40 விழுக்காடு மதிப்பெண் என்பது முன் நிபந் தனையாகும். நம் இளைஞர்களும்கூட, தமிழ் படிக்கா மலே அரசுப் பணிகளில் சேரலாம் என்ற அவலத்திற்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்பதால், இதனை மகிழ்ச்சியுடன் வரவேற்கலாம்!
உணவின் தரம், சமைப்பதைவிட அதை உண்ணுபவர்களின் ருசியே முக்கியம். சத்தும் மிகமிக முக்கியம் என்பதே இதன் நோக்கமாகும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
14.1.2023
No comments:
Post a Comment