சிந்தனையும் - மனிதர்களின் மாற்றமும்! மார்க்கஸ் அரேலியஸ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 2, 2023

சிந்தனையும் - மனிதர்களின் மாற்றமும்! மார்க்கஸ் அரேலியஸ்

சிந்தனையும் - மனிதர்களின் மாற்றமும்!

மார்க்கஸ் அரேலியஸ்

மனிதர்களின் வாழ்வில் ஏதோ ஒரு கட்டத்தில் மாறுதல்கள் ஏற்பட்டு 'பழைய மனிதன்' விடை பெற்றுக் கொண்டு அவர்களில் 'புதிய மனிதன்'  உள்ளே வந்து புகழுடம்பைப் பெற்று பின்னால் பல நூற்றாண்டுகள் உருண் டோடிய நிலை வர லாற்றின் நிலைத்த, பக்கங்களாகிய பாடங் களாகின்றான்!

கலிங்கப் போரினை மிக மூர்த்தண்யமாக நடத்தி வெற்றி யைக் குவித்த அசோக் சாம்ராட் மன்னனுக்கு வெற்றியின் ஒளி வேறு ஒரு வெளிச்சத்தைத் தந்தது! "இவ்வளவு உயிர்களை கொன்ற நாம், இரத்த வெள்ளத்தில் நீந்தி இந்த அரியணைச் சிம்மாசனத்தை அடைகிறோம். இதுவா சிம்மாச னம்? இல்லை சும்மாசனம்" என்று அவனுக்கு ஆறுதலும், அனுபவப் பாடமும் சொல்லி பகுத்தறிவைப் புகட்டியது!

அதுவே அவரது வாழ்வையும் புரட்டியது! 

அதுபோல மேற்கத்திய வரலாற்றில், கிறிஸ்த வர்களை அவர்களது மதத்திற்காக கொடுந் தொல்லைகளைக் கொடுத்து; ஏன் கொன்றும்கூட  மத வெறுப்புப் பிரச்சார ஏணிப் படிக்கட்டில் ஏறியே பல ஆண்டு காலம் ஆண்ட ரோமானியப் பேரரசன் மார்க்கஸ் அரேலியஸ் (கி.பி.121-180) என்பவர் தனது வாழ்நாளில் ஒரு சிறந்த தத்துவ ஞானியாகி, முந்தைய வெறுப்பான விளைச்சலை ஏற்க மறுத்தார்.

பிறகு இந்த மனிதன் - அரச ஞானியானார்! அவரது தத்துவங்களால், குறுகிய ரோம் நாட்டையும் தாண்டி, மக்கள் இதயச் சிம்மானத்தில் இன்றும் இடம் பெற்று வரலாற்றில் வைரமாக ஒளிர்கிறார்.

மனமாற்றங்கள்தான் மனிதன் பகுத்தறிவைக் கூர்மையாக் குவது!

விழுந்தவன் மாற்றம் தேவை யில்லை என்று எப்போதும் விழுந்து கிடப்பதா பகுத்தறிவு?

தவத்திரு குன்றக்குடி அடி களார்  அடிக்கடி கேட்டாரே அமுதமொழிக் கேள்வி.

"நேற்று விழுந்த இடத்தி லேயே - இன்றும் விழலாமா? நாளையும் இதே இடத்தில் விழ உறுதி பூண்டு விட்டீர்களா?" என்று!

"மாறுதல்தான் மாறாதது" என்பது புத்தரின் பகுத்தறிவுச் சிந்தனை - காரல் மார்க்சின் அறிவுரை - தந்தை பெரியாரின் சாட்டைச் சொடுக்கு, இப்படி அறிஞர்கள் பலரும் கேட்ட பிறகும் - மாறாதது எங்கள் தத்துவம் என்று கூறிடும் விசித்திர மனிதர்களின் விவஸ்தையற்ற அறிவினைப் பற்றி என்ன சொல்வது?

நாளும் நல்ல புதிய சிந்தனைகளால் உங் களைக் கூர் தீட்டிக் கொண்டு முனை மழுங்காத அறிவாளர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் - முன்னேறலாம்!

மார்க்ஸ் அரேலியஸ் பேசுகிறார் கேளுங்கள்.

"உன்னால் ஒரு காரியத்தைச் செய்ய முடியாவிட்டால் அதனால், மற்ற மனிதர்களாலும் அதைச் செய்ய முடியாது என்று நினைத்து விடாதே  - மற்ற மனிதர்களால் செய்ய முடிகிற ஒரு காரியத்தை உன்னால் நிச்சயம் செய்ய முடியும்"

"என்னுடைய கடமைகளை நான் செய்கிறேன். அவ்வளவுதான். மற்றவைகளைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை"

"மற்றவர்கள் என்ன சொன்னாலும் சரி, நான் நல்லவனாகவே நடந்து கொள்வேன் என்பதே உன் குறிக்கோளாக இருக்கட்டும்"

"திடீரென்று எதிர்பாராதவிதமாக ஏற்படக் கூடிய கஷ்ட நஷ்ட நிஷ்டூரங்களைச் சமாளித்துக் கொள்ளுகிற மாதிரி உன் வாழ்க்கை இருக்க வேண்டும்"

"செல்வம் வந்தால் அதற்கு அகந்தை கொள்ளாமல் வரவேற்புக் கொடு. அப்படியே அதனைப் போக விடவும் தயாராக இரு."

"ஒருவரோடொருவர் சேர்ந்து வாழ்வதற்காகத் தான் மனிதர்கள் உலகத்தில் பிறக்கிறார்கள். ஆதலின், உன்னால் முடிந்தால் மற்றவர்களுக்கு உனக்குத் தெரிந்ததைச் சொல்லிக் கொடு, அல்லது அவர்களிடம் பொறுமை காட்டு"

"ஒரு நல்ல மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதைப் பற்றி அதிகமாகப் பேசாதே! நீ நல்ல மனிதனாக நடந்து கொள்!"

"பொது நன்மைக்காக நான் ஏதேனும் செய்திருக்கிறேனா? இதுவே நீ, அடிக்கடி கேட்டுக்  கொள்ளும் கேள்வியாக இருக்கட்டும்!"

- இந்த அறிவு மொழிகள் - மாற்றத்தின் விளைச்சலே!

எனவே பழைமை - மூடத்தனத்திலிருந்து மாறிவிடத் தயாராகுங்கள்.

 

No comments:

Post a Comment