காந்தியாரின் 76 ஆவது நினைவு நாள் இன்று! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 30, 2023

காந்தியாரின் 76 ஆவது நினைவு நாள் இன்று!

காந்தியார் காண விரும்பிய மதச்சார்பின்மையைக் காப்போம்; 

மதவெறி மாய்ப்போம் - மனிதநேயம் காப்போம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

காந்தியார் காண விரும்பிய மதச்சார்பின்மையைக் காப்போம்! மதவெறி மாய்ப்போம்! மனிதநேயம் காப்போம் என்று காந்தியாரின் 76 ஆவது நினைவு நாளான இன்று உறுதி ஏற்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இன்று (30.1.2023) அண்ணல் காந்தியாரின் 76 ஆவது நினைவு நாள்.

இந்த நினைவு நாள் மட்டுமல்ல; எல்லா ஆண்டும் காந்தியாரின் நினைவு நாளையும், பிறந்த நாளையும். வெறும் சம்பிரதாயமாகவும், சடங்காச்சாரமுமாகவே பலரும் நடத்துகிறார்கள்!

அதுமட்டுமா?

சனாதன மதவெறியின் கோரத்தாண்டவம்!

காந்தியார் எப்படி மரணமடைந்தார்?

படுகொலை செய்யப்பட்டு, மரணமடைந்தார்!

அதுவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்று, 'பக்குவப்படுத்தப்பட்ட' நாதுராம் விநாயக் கோட்சே என்ற மராத்தி உயர் பிரிவு (சித்பவன்) பார்ப்பனரால் துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் கொல்லப்பட்டார்!

இயற்கை மரணமல்ல அவர் மறைவு! சனாதன மதவெறியின் கோரத்தாண்டவம் அது!

'காந்தியைப்போல் ஒரு சாந்த சொரூபனை கண்டதுண்டா உலகில்?' என்ற எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடல்கூட இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கவே செய்கின்றன?

காந்தியாரின் உயிர்த் தியாகத்திலிருந்து 

பாடம் கற்றுக்கொண்டது உண்டா?

அவரது படுகொலையிலிருந்து, அந்த 'தேசப் பிதா'வின் உயிர்த் தியாகத்திலிருந்து- இந்த நாடும், அரசியல்வாதிகளும் இன்றளவும் பாடம் கற்றுக்கொண்டது உண்டா?

ஹிந்து மதவெறி அத்தகைய மகத்தான மனிதரின் உயிரைக் குடித்ததே - அதற்குரிய தக்க பரிகாரம் கண்டு, பிறகாவது நாட்டை மதவெறி நோய் தாக்காமல் தக்க தடுப்பூசி போடப்பட்டதுண்டா?

மாறாக, கொலை வெறியன் சனாதன மதவெறியன் கோட்சேவைப் புகழ்ந்து 'புகழஞ்சலி' செலுத்திக் கொண்டு, பட்டாங்கமாய் பவனிவரும் 'சோற்றால் அடித்த பிண்டங்கள்' சோர்வின்றி சுற்றி வருகின்றனர் ஆரிய மதவெறியர்கள்!

நாடாளுமன்றத்திற்குள்ளேயே கோட்சேவை 

புகழ்ந்து பேசும் ஆணவம்!

நாடாளுமன்றத்திற்குள்ளேயே கோட்சேவைப் புகழ்ந்து பேசு வதைப்பற்றி எதிர்க்கட்சிகளின் கண்டனத்தையும்பற்றி, சிறிதும் கவ லைப்படாத ஆணவம், ஆளுங்கட்சியான பா.ஜ.க.வில் காணப்படு கிறது!

அப்படியென்ன அண்ணல் காந்தியார் மகத்தான ''தேசியக் குற்றத்தை''ச் செய்துவிட்டார்?

அவர் கொல்லப்படுவதற்கு சுமார் 40 நாள்களுக்கு முன் அவர் உணர்ந்து கூறினார்:

1. ''அரசாங்கத்தில் மதம் கலக்கப்படக் கூடாது.

2. வேதம் ஓதிப் பிழைக்கவேண்டியவர்கள் (பார்ப்பனர்கள்) எதற்கு டாக்டராக, என்ஜினியராக ஆசைப்படுகிறீர்கள் - நீங்கள் பின்பற்றும் வருணாசிரமப்படி, எது தர்மமோ அதைத்தானே கற்கவேண்டும் என்றார்.

''அஹிம்சை'' காந்தியாரின் 

வலிமை வாய்ந்த ஆயுதம்!

'எல்லா மதக் கடவுள்களும் ஒன்றே' என்று அனுதினமும் பஜனை நடத்திவிட்டுத்தான் பிரார்த்தனை நடத்திவிட்டுத்தான் தனது அறவுரை - அறிவுரைகளைச் சொன்னார்.

''அஹிம்சை'' (வன்முறை தவிர்த்தல்) அவரது வலிமை வாய்ந்த ஆயுதம்.

ஆனால், சனாதன மதமான ஹிந்து மதம் என்றழைக்கப்படும் (இன்று) ஆரிய மதமோ வருணாசிரமத்திற்காக 'தண்டம்' (ஆயுதம்) எடுத்துப் போராடு; என்று வற்புறுத்தும் மதத்தைக் கடுமையாகப் பின்பற்றிய நபர்தான் நாதுராம் கோட்சே!

''பகவான் கிருஷ்ணனின் பகவத் கீதைதான் எனது பாட நூல். அதனை கற்ற பின்பே (வருண தர்மத்தைக் காக்க) - ''எதிரியை ஆயுதமேந்தியும் களத்தில் போராடத் தயங்காதே'' என்று கோர்ட்டில் கூறியவர்; உசுப்பேற்றிய நூல்தானே பகவத் கீதை?

அதை கோட்சே தனது வாக்குமூலத்திலே நீதிமன்றத்தில் எழுதிப் படித்திருக்கிறான்.

இன்றும் பல தீவிரவாத வழக்குகளில் சிக்குண்டு, தேர்தலில் நிற்காமல் எம்.பி.,யான சிலர் (பிரக்யாசிங் தாக்கூர்) கோட்சேவை நாடாளுமன்றத்தில் புகழ்வது மட்டுமா?

காந்தியாரின் கருத்துக்கு மாறாக 'ஹிந்துராட்டிரம் இது' என்று பகிரங்கமாக பிரகடனப்படுத்துகின்றனர்!

2014 இல் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். ஆட்சிக்கு வருவதற்குமுன் ''வளர்ச்சி, வளர்ச்சி'' என்று வாய் கிழியப் பேசி, வளர்ச்சிப் போர்வை யைப் போர்த்திக் கொண்டு இளைஞர்களை நம்ப வைத்து ஆட்சி யைப் பிடித்தவர்கள் இன்றும் பகிரங்கமாகவே, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை  (Preamble)  என்ற அடிக்கட்டு மானத்தையே இடித்துத் தள்ளுவதைப்போல, நாட்டுத் தந்தை நாயகர் காந்தி அண்ணல் கருத்துக்கு மாறாக, 'ஹிந்துராட்டிரம் இது' என்று பகிரங்கமாக பிரகடனப்படுத்துகின்றனர்!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் நாட்டில் பன் மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பண்பாடுகள் இருப்பதைக்கூட வசதியாக மறந்துவிட்டு, இங்கு எல்லோரும் ஒரு மதத்தவரே, ஹிந்துக்களே - அதை ஏற்றவர்களுக்கு குடிமக்களாக இருக்கும் தகுதி உண்டு என்பதுபோல, பகிரங்கப் பிரகடனம் செய்து கொண்டிருக்கிறார்!

இன்று காந்தியார் சிலைக்கு அவர்களும் மாலை போடுகின்றனர்! ஓநாய்கள் பசு மாட்டிற்கு மாலை அணிவித்துத் தடவி வருடிக் கொடுப்பதுபோல்!

வெறுப்பு விதைக்கப்படக் கூடாது - புதைக்கப்படவேண்டும்!

ஒருவரின் நினைவு நாளில் ஏற்கவேண்டிய சூளுரை, அவரது தொண்டிலிருந்து கற்கவேண்டிய பாடம் - மானுடம் ஒன்று; வெறுப்பு விதைக்கப்படக் கூடாது - புதைக்கப்படவேண்டும் என்பதே!

அதனால் 1948 இல் கொதிப்பு அடைந்த மக்களின் ஆவேச நெருப்பு தந்தை பெரியார் என்ற மனிதநேயர்  மிகுந்த பொறுப்புணர் வோடு அணைக்கும் வகையில், பார்ப்பனர்களையும் பாதுகாத்தே உரையாற்றினார்! (1948 சன்னாசிநல்லூர் - நன்னிலம் அருகில்).

கருத்தியல்களே நமக்கு விரோதிகள் - 

தனி மனிதர்கள் அல்ல!

அவர் இன்றும் நமக்குப் போதிக்கும் பாடம், கருத்தியல்களே - கொள்கைகளே நமக்கு விரோதிகள் - தனி மனிதர்கள் அல்ல என்ற அரிய பாடத்தை 1948 லேயே தந்தை பெரியார் கூறினார்!

காரணம், ரகசியமில்லாத தலைவர் அவர்; எதிலும், எப்போதும் 'இரட்டை வேடம்' போடத் தெரியாத தலைவர் அவர்! முன்னோக்குத் தலைவரும்கூட!

தந்தை பெரியார், காந்தியாரிடம் கூறியது 

நடந்ததா - இல்லையா?

அதனால்தான் 1948 இல் காந்தியாரிடம், ''நீங்கள் பார்ப்பனர்களை எதிர்க்கத் தொடங்கிவிட்டீர்கள்;  உங்களை விட்டு வைக்கமாட்டார்கள் அவர்கள்'' என்று நேருக்கு நேர் கூறியது பலித்ததா இல்லையா?

பகுத்தறிவும், அனுபவமும் பெற்றெடுத்த பிள்ளைக்கனி அல்லவா அய்யா அவர்களது அறிவுரை!

காந்தியார் காண விரும்பிய மதச்சார்பின்மையைக் காப்போம்!

மதவெறி மாய்ப்போம்! 

மனிதநேயம் காப்போம்!! என்று உறுதி ஏற்போம்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

30.1.2023

No comments:

Post a Comment