மக்களை நாளும் சந்தித்து, பெறும் பட்டறிவும், அனுபவமும் வாழ்வை அறிந்துகொள்ளக் கிடைத்த பெரும் வாய்ப்புகள். பயணங்கள்தான் தனிமனிதர்களின் வாழ்விலும், மனிதகுலத்தின் வரலாற்றிலும் பெரும் மாற்றங்களை நிகழ்த்துபவை. பயணம் மூலம்தான் தேசமெனக் கருதிய தென்னமெரிக்கக் கண்டத்தை அறியத் துடித்த ஆர்வம் இரண்டு கட்டப் பயணங்களாக அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் சைக்கிளில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்ய வைத்தது சே குவேராவை! துடுக்குத் தனமும், சுதந்திர உணர்ச்சியும் கொண்ட ஈ.வெ.ராமசாமிக்கு அவர் மேற்கொண்ட வடநாட்டுக் காசிப் பயணம் பெரும் பாடத்தைத் தந்தது.
பக்குவத்தைத் தந்தது. எதையும் நேரில் சென்று கற்று வரும் ஆர்வம் ஒரு பயணிக்குரிய ஆர்வம். தன் வாழ்நாளின் இறுதிவரை பயணித்துக் கொண்டே இருந்தவர் பெரியார். அவற்றில் முக்கியமான சில பயணங்கள் கற்றலுக்கான பயணங்கள். உலக நாட்டு மக்களைப் போல தன் மக்களையும் முன்னேறச் செய்ய வேண்டும் என்று விரும்பிய பெரியார், புரட்சிச் சிந்தனையும், புதுமையும் பூத்துக் குலுங்கிய தேசங் களைக் கண்டு வரதன் இயக்கத் தோழர் எஸ்.ராம நாதனுடனும், உதவியாளர் ராமுவுடனும் மேற்கொண்ட பயணம் அவற்றுள் ஒன்று. கிரீஸ், ஸ்பெயின், ஜெர்மனி, இங்கிலாந்து என்று பயணித்த இந்தக் குழுவினரின் ரஷ்ய சுற்றுப்பயணம், பொதுவுடைமைக் கொள்கையின் மீதான பெரியாரின் காதலைச் சொல்லும். தாம் காண விரும்பும் ஒரு தேசத்திற்கான கால்கோள் நடப்பட்டிருக்கிறது என்னும் பெருங்கனவுடன்தான் ரஷ்யா சென்றார் பெரியார். (அதற்கு முன்பே கம்யூ னிஸ்ட் கட்சி அறிக்கையைத் தமிழில் வெளியிட்டிருந் தார்.) எனினும், ரஷ்யாவில் இருந்த அதீத கட்டுப்பாடு அவர் மனதை உறுத்தியது. இந்தக் கட்டுப்பாடு தளர்ந்தால் சோவியத் உடைந்துபோகக் கூடும் என்ற அச் சத்தை வெளிப்படையாக அங்கேயே பதிவு செய்து விட்டு வந்தார் பெரியார். கியூபாவின் அமைச்சராகவும், பிரதிநிதியாகவும் விளங்கிய சேவுக்கு, உலகின் மிகப்பெரிய பொதுவுடைமை பூமியாகத் திகழ்ந்த ரஷ்யா மீது இருந்த ஈர்ப்பை விட சீனாவின் மீது நேசப் பார்வை இருந்தது.
இருவரும் ஏழ்மையான சூழலில் வாழ்ந்தவர்களல்லர். ஆடம்பர வாழ்க்கையிலிருந்து மக்களுக்கான வாழ்க்கையை நோக்கி தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டவர்கள். தங்கள் குடும்பத்தையும் போராட்டத்தில் இணைத்தவர்கள். காங்கிரசில் இருந்த காலத்திலேயே தன் இணையர் நாகம்மையையும், தங்கை கண்ணம்மாளையும் போராட்டக் களத்திற்கு வழிநடத் தியவர் பெரியார். பெரியாரின் பத்திரிகைக்கு வெளியீட்டாளர்களாக இருந்த காரணத்திற்காக பெரியாரின் தங்கை கண்ணம்மாளும், அண்ணன் ஈ.வெ.கிருஷ்ண சாமியும், இணையர் ஈ.வெ.ரா.மணியம்மையாரும் தண்டனை பெற்றவர்கள் என்பதை நாம் அறிவோம்.
சாவுக்குத் துணிந்தவர்கள்
“நீண்ட காலத்துக்குப் போராட வேண்டியிருக்கிறது. ஆகையால் நீயும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும். உன்னைத் தயார் செய்து கொள்.” என்று தன் மகள் ஹில்டா வுக்கு எழுதிய கடிதத்தில் எழுதுகிறார் சே. மனிதகுலம் என்னும் பெருங்குடும்ப நேசங் கொண்டவர்கள், தம் குருதிக் குடும்பத்தையும் பெருங்குடும்ப உறுப்பினர்களாகத்தான் பார்த்தார்கள்.
பொதுவாழ்க்கைக்கு, போராட்டக் களத்திற்கு வந்தபின் உயிரைப் பற்றிய கவலை இருக்க முடியாது. நான் சுடப்பட்டுச் சாக வேண்டும்; அது என் பணிக்குக் கிடைக்கும் மரியாதையாக இருக்கும் என்று கருதியவர் பெரியார். சாவுக்குத் துணிந்தவர்கள் இருவரும்!
“கோழையே, சுடு! நீ சுடப்போவது சேவை அல்ல; சாதாரண ஒரு மனிதனை மட்டும் தான்” என்று தன்னை நோக்கி துப்பாக்கியை நீட்டியிருந்த மரியோ ஜேமியிடம் இறுதி வார்த்தைகளை உதிர்த்தார் சே. அவருக்குத் தெரியும்... சே என்பது தனி மனிதனின் பெயரல்ல - அது போர்க்குணத்தின் பெயர்! பெரியார் என்பதும் தனி மனிதனின் பெயரல்ல... தத்துவத்தின் பெயராகிப் போனது.
சே-வும், தந்தை பெரியாரும் தங்கள் இயற்பெயர் களை விட, தங்களுக்குச் சூட்டப்பட்ட பட்டப் பெயர்களாலேயே அழைக்கப்பட்டவர்கள். சே என்றால் தோழன் என்று பொருள்; ‘தந்தை பெரியார்’ என்றே அழைக்கப்பட்டுவரும் ஈவெரா, தன்னை தோழர் என்று எல்லோரும் விளிக்க வேண்டுமென்று விரும் பியவர். அதே நேரத்தில், ‘ராமனை எதிர்த்த உங்களின் பெயரில் ராமன் என்று இருக்கிறதே?’ என்று கேட்ட சிறுமதியாளருக்கு, பெயரில் என்ன இருக்கிறது... ராமசாமி என்பதை உன் விருப்பத்துக்கு மாற்றிக் கூப்பிட்டுவிட்டுப் போயேன்... என்ன கிடக்கிறது இதில்? வெங்காயம்! என்று தூக்கியெறிந்து பதில் சொன்னவர் பெரியார். இன்னும் சில இயல்பாக அமைந்த ஒற்றுமைகளும் உண்டு இருவருக்குள்ளும்!
கவலையற்று வளர்த்த தாடிகள்
பெயரில் மட்டுமல்ல... தோற்றம், உடை, தாடி குறித்தெல்லாம் பெரிதும் கவலை கொள்ளாதவர் பெரியார். சேவுக்கும் இது பொருந்தும். அந்தத் தாடியும், இந்தத் தாடியும் கவலையற்று வளர்த்த தாடிகள், அவர்களின் அடையாளங்களாக மட்டுமல்ல... தனித்த ஸ்டைலாகவும் மாறிப் போயின.
எதிரிகளால் இன்றும் அவதூறு செய்யப்படுவோர் இருவரும். ஏனெனில் இறந்த பின் இறந்துபோன தனி மனிதர்களல்லர் இருவரும் - ஆதிக்க வாதிகளை மிரட்டும் ஆயுதங்கள் - சமத்துவத்திற்காகச் சமர் செய்த தத்துவங்கள்! கியூபாவின் வெற்றிக்குப் பின் தனக்குக் கிடைத்த அரச போகங்களையும், மக்களின் பேரன்பினையும் விட்டுவிட்டு, வேறொரு நாட்டுக்குப் போராட வந்து, தான் யாருக்காகப் போராடினாரோ, அதே மக்களால் காட்டிக் கொடுக்கப்பட்டவர் சே. அதை எதிர்பார்த்தும் கூட இருப்பார். ஏனெனில் அவர் பதிலுக்கு எதிர்பாராதது நன்றி. தனது தொண்டுக்கு நன்றி எதிர்பார்ப்பது சிறுமைக்குணம் என்றவர் பெரியார். தான் யாருக்காகப் போராடினாரோ, அம் மக்களால் தொடக்கத்தில் எதிர்க்கப்பட்டவர்தான், எனி னும் இறுதியில் ஏகதேசமாய் ஏற்கப்பட்டவர் பெரியார். காலம் சேவுக்குக் குறைவாகக் கிடைத்துவிட்டது எனலாம். இல்லையேல், அந்தச் சிறப்பைத் தான் வாழும் போதே அனுபவித்திருப்பார் சே. ,
“In fact, if Christ himself stood in my way, I, like nietzsche, would not hesitate to squish him like a worm” என்று சொன்ன சே, தனியாக தன்னை ஒரு நாத்திகர் என்று பெரிதாக சொல்லிக் கொள்ளா விட்டாலும் அவர் ஒரு நாத்திகராகத் தான் வாழ்ந்திருக்கிறார். அதே நேரம் குவேராவை பொலிவிய விவசாயிகள் சிலர் புனிதர் என்றே வழிபடுகிறார்களாம்; புனித எர்னஸ்டோ என்றும் அழைக்கிறார்களாம். வடபுலத் திற்கு மீண்டும் அண்ணாவையும் உடன் அழைத்துக் கொண்டு சென்றிருந்த பெரியாரைக் காசியிலும், முன்னர் மலேயாவிலும் கூட சிலர் சாமியாராகப் பார்த்ததுண்டு என்று நாம் அறிவோமே!
பெண்ணுரிமையை முன்னெடுத்தவர்கள்
பெண்ணுரிமையைப் பெரிதாக முன்னெடுத்தவர் பெரியார். யாரும் சிந்திக்காத எல்லைவரை சிந்தித்தவர். பெண்களை ராணுவத்திலும், போலீசிலும் சேர்க்க வேண்டும் என்றவர் அவர். தன் போராட்டக் களத்தில் பெண்களுக்கொரு தனித்த முக்கியமான இடமும் தந்தவர்.
The women is capable of performing the most difficult tasks, of fighting beside the men; and despite current belief, she does not create conflicts of a sexual type in the troopsஎன்று பெண்களைப் படையணியில் சேர்ப்பதை ஆதரித்தவர் சே. ஆண்களுக்கிணையாகச் சண்டையிடவும், கடின மான பணிகளை நிறைவேற்றவும் தகுதி படைத்தவர்கள் பெண்கள் என்கிறார் சே. (‘Women in the guerilla’)
தன்னுடைய நண்பரும், தன் போராட்டக் குழுவின் தலைவருமான பிடலுக்கு எழுதிய கடிதத்தில், என்னுடைய மோசமான தவறு ஒன்றுதான். சியரியா மாஸ்ட்ரோவின் ஆரம்ப நாட்களில் உங்கள் மீது மேலும் நம்பிக்கை வைக்காமலிருந்து விட்டேன் என்கிறார் சே. ஏனெனில் தலைமைக்குக் கட்டுப்படுதல் ஓர் இராணுவ வீரனின் கடமை. அப்போது தான் அந்தப் படை வெற்றியை அடைய முடியும் என்பதை இந்தக் கடிதத்திலிருந்து, சே உணர்ந்ததை நாம் அறிய முடிகிறது.
தன் இயக்கத்தையும் ஓர் இராணுவத்துக்கு நிகராகத்தான் கட்டமைத்தார் பெரியார். அதனால்தான் தலைமைக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற தந்தை பெரியாரின் கருத்து. அப்படியே இயக்கத்தைப் பழக்கவும் செய்தார்.
சளைக்காத போராளிகளில் நாட்டு விடுதலைப் போராளிகளோ, சமூக விடுதலைப் போராளிகளோ, தத்தம் நாட்டுக்கும், மக்களுக்குமான போராட்டங்களில் ஈடுபட்டோரே பெரும்பாலோர்! அது இயல்பானது; அதற்கு நியாயமும் உண்டு. அந்த எல்லையைக் கடந்து போராடிய தலைவர்கள் தந்தை பெரியாரும் சேகுவேராவும்! எனினும், சில செயல்பாட்டு எல்லை களையும் அவர்கள் வகுத்துக் கொண்டனர். அந்த எல்லைகள் அவர்களது மனத்தின் எல்லைகளல்ல. தங்கள் ஆயுட்காலத்தையும், சூழலையும் கணக்கில் கொண்டவை - அவ்வளவே!
சமூக விடுதலைக்காக
அர்ஜெண்டைனாவில் பிறந்து கியூபா விடுதலைக் குப் போராடி, அங்கு கிடைத்த முதன்மைப் பதவிகளை யெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, காங்கோ, பொலிவியா என இன்னும் சில நாடுகளின் விடுதலைக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டு மடிந்த சேகுவேரா, தென் அமெரிக்கா முழுவதையும் ஆதிக்கப் பிடியிலிருந்து விடுவிக்க எண்ணினார். உலக நாடுகளை அடிமைத் தனத்திலிருந்து விடுவிக்கவும், அவற்றைப் பொதுவு டைமைப் பாதையில் அழைத்துச் செல்லவும் விரும் பிய சேகுவேரா, தென்னமெரிக்காவைத் தன் செயல் பாட்டு எல்லையாகக் கொண்டார்.
தந்தை பெரியாரும் தேச விடுதலை எனும் நோக் கில் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து போராடியவ ரல்லர். மக்களுக்குத் தான் விரும்பிய சமூக விடு தலையைப் பெற்றுத் தரவே அவர் அரசியலில் ஈடுபட்டார். இந்தியா போன்ற பல்வேறு அடுக்குகளில் அடிமைத்தனக் கட்டுகள் நிறைந்த ஒரு தேசத்தில், நாட்டு விடுதலை மட்டுமே மக்களுக்கு சமூக விடு தலையைத் தராது என்பதையும், சமூக மேலாதிக்கம் கொண்டோரின் கைகளில் ஆதிக்கத்தைக் கொண்டு சேர்க்கவும், அதிகாரம் கை மாறவும் மட்டுமேதான் தேச விடுதலை பயன்படும் என்று உணர்ந்ததும் அதை எதிர்க்கவும் தயாரானார்.
தனித் தமிழ்நாடு - திராவிட நாடு என்ற நோக்கம் கொண்டிருந்தார்; அதற்காகப் போராடினார். ஆனால், இவையெல்லாம் நில எல்லைகளை அடிப்படையாகக் கொண்டவையல்ல; தான் காண விரும்பிய சமத்துவ மானிட சமூகத்தினை உருவாக்குவதுதான் அவர் நோக்கம். அதற்கான சாத்தியப்பாடுள்ள செயல்பாட்டு எல்லையாகவே அவர் திராவிடநாட்டையும், தமிழ் நாட்டையும் கண்டார். திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாக இருந்தவர்.
தந்தை பெரியாரின் முதன்மை நோக்கம் நாட்டு விடுதலை எனப்படும் மண் விடுதலை அல்ல; பிறப் பின் அடிப்படையிலான பேதமும், இழிவும் நீங்கிய சமூக விடுதலை. ஆனால், அந்த சமூக விடுதலை நேரடியாக அவருக்குப் பயன் தரக்கூடியதல்ல; தனக்குப் பிறப்பின் அடிப்படையில் கிடைத்திருந்த அனைத்து உயர் வாய்ப்புகளையும் உதறி எறிந்து, அதைக் கடந்து சிந்தித்தவர் தந்தை பெரியார். அதுவே அவரது போராட்ட வாழ்க்கையின் தனித்துவம்!
பணக்காரராகப் பிறந்தார் - ஏழை, எளியோருக்காகச் சிந்தித்தார்; ஆணாகப் பிறந்தார் - பெண்களுக்காகக் குரல் கொடுத்தார்; உயர் ஜாதி என்று கருதப்பட்ட சமூகத்தில் பிறந்தார் - ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினார். அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி அரும்பசி எவர்க்கும் ஆற்றி மனத்தினுள் பேதாபேதம் ஒழிந்த சமூகமாக மாற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டுதான் ‘குடிஅரசு’ இதழைத் தொடங்கினார். அனைவருக்கும் அனைத்தும்; எல்லார்க்கும் எல்லாமும் இருப்பதான இடம்நோக்கி நடக்கட்டும் இந்த வையம் என்ற எண்ணம்தான் அவர்தம் இறுதி வரையிலும் கொண்டிருந்ததும், அதற்குப் பின் இறுதி யற்ற தம் இயக்கத்திற்கு, உறுதியான கொள்கையாக விட்டுச் சென்றதும்!
தேச எல்லைகளையும் கடந்து
மனிதகுலத்தின் மீதான பற்றுதான் அவரைப் போராட வைத்தது. கடவுள் பற்று, மதப் பற்று, மொழிப் பற்று, ஜாதிப் பற்று, நாட்டுப் பற்று போன்ற வேறு எந்தப் பற்றும் கிடையாது. மனித வளர்ச்சிப் பற்று மட்டும்தான் உண்டு என்றதோடு மட்டுமல்லாமல், அதுதான் அனை வருக்கும் இருக்க வேண்டிய ஒன்று என்பதிலும் உறுதியாக இருந்தார். தேச எல்லைகளைக் கடந்து சேகுவேரா போராடியதும், பால், ஜாதி, மத, பொருளாதார எல்லை களைக் கடந்த சமத்துவச் சமுதாய விடுதலைக்காகப் போராடியதும் அந்த மனிதவளர்ச்சிப் பற்றின் அடிப் படையில்தான்.
வாழ்க்கை நிகழ்வுகளில் இவர்கள் இருவரிடையே உள்ள ஒற்றுமை மிக யதார்த்தமானது (Co-incidence); நாம் பொருத்திப் பார்த்துக் கொள்ள வசதியாக இருக்கிறது என்பதைத் தவிர அதில் பெரிய சிறப்பு களில்லை. ஆனால், இந்த ஒப்புமையின் சிறப்பு, அவர்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் மூலமாக நாம் பெறும் கருத்துதான்; அதை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதுதான். தங்கள் சிந்தனை யையும், செயலையும், வாழ்க்கையையும் எல்லை களற்ற மனித சமூகத்திற்கான நலனை நோக்கி நகர்த் திய மனித நேயர்கள் இருவரும்! அதனாலேயே காலத் தையும் கடந்து வாழ்வார்கள் இருவரும்!
.(நிறைவு)
No comments:
Post a Comment