2022ஆம் ஆண்டின் அவலங்களும் நலன்களும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 2, 2023

2022ஆம் ஆண்டின் அவலங்களும் நலன்களும்

2022ஆம் ஆண்டுக்கு விடை கொடுத்து 2023ஆம் ஆண்டில் நுழைந்து விட்டோம். 2022இல் நடந்த அவலங்களிலிருந்து பாடங் கற்று, நடந்த நல்லவைகளை மேலும் வளர்ப்பது தான் அறிவுள்ள மனிதனுக்கு அழகாகும் - மனிதன் என்றால் பகுத்தறிவுவாதியல்லவா!

திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையில் - மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை மடாதிபதி பட்டினப் பிரவேசம் என்ற பெயரால் மனிதனை மனிதன் சுமக்கும் மனித உரிமைக்கு எதிரான நடடிக்கையை எதிர்த்து - திராவிடர் கழகத் தோழர்கள் மறியல் செய்து கைது செய்யப் பட்டனர். 

கை ரிக்ஷாவை ஒழித்த தமிழ்நாட்டில் இத்தகு நிகழ்ச்சி நடந்திருக்கக் கூடாது. இனியும் அது மாதிரியான அவலங்கள் நடைபெறாமல் 'திராவிட மாடல்' அரசு தடை விதிக்கும் என்று கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.

தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கக் கூடியவர் அரசமைப்புச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவரே தவிர ஆன்மீக  சனாதனங்களைத் தூக்கிப் பிடிக்கும் பாகவதர் அல்ல என்பதை விளக்கிப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தியும், போராட்டங்களை நடத்தியும் வந்திருக்கிறது திராவிடர் கழகம்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 'நீட்' உள்ளிட்ட 22 மசோதாக்களை முடக்கி இருப்பது எந்த வகையில் நியாயம்?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைக்கு அதிகாரமா? குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட மக்கள் பணத்திலிருந்து மாத ஊதியம் வாங்கும் உயர் மட்ட சிப்பந்திக்கு அதிகாரமா என்பதற்கு ஒரு முடிவு காணப்பட வேண்டும்.

ஒன்றியத்தில் ஆளும் பொறுப்பில் இருக்கும் பிஜேபி ஆட்சிப் பொறுப்பில் இல்லாத மாநிலங்களில் எதிர்க்கட்சி ஆட்சிகளைக் கவிழ்ப்பதற்கும், எதிர்க்கட்சி சட்டப் பேரவை உறுப்பினர்களைக் கட்சித் தாவல் செய்ய வைப்பதற்கும் ஆளுநர் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டு அரசமைப்புச் சட்டத்திற்கு வாயும் கையும் இருந்தால் கை தட்டி சிரிக்காதா?

"ஆட்டுக்குத் தாடி எதற்கு? நாட்டுக்கு ஆளுநர் எதற்கு?" என்று வினா எழுப்பிய அறிஞர் அண்ணாவின் தொலைநோக்குக் கருத்துக்கு இந்திய அளவில் வலிமை கூடுதலாகும் என்பதில் அய்யமில்லை.

நாகர்கோயில் தொடங்கி சென்னை வரை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் 21 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட தொடர் பிரச்சாரப் பயணம் திராவிட இயக்க வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும்.

'நீட்' எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமைகள் மீட்பு என்ற மூன்று முத்தாய்ப்பான நோக்கங்களை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி விழிப்படையச் செய்யும் அடிப்படையான பணியாகும் இது.

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் ஜாதியினருக்கு குறிப்பாகப் பார்ப்பனர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது பல முறை நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்ட ஒன்றாகும்.

ஆனால் மோடி தலைமையிலான ஒன்றிய அரசால், அவசர அவசரமாக இந்த வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டு அவசர அவசரமாக செயல்படுத்தப்பட்டதானது சமூகநீதி வரலாற்றில் கறை படிந்த மோசமான அத்தியாயமாகும்.

அதைவிடக் கொடுமை உச்சநீதிமன்றம் அந்தச் சட்டம் செல்லும் என்று சொன்ன தீர்ப்பாகும்.

எந்த அடிப்படையில், எந்தத் தரவுகளின் அடிப்படையில் இந்த 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்று உச்சநீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டும் - அதற்குப் பதில் சொல்லாத நிலையிலும் - உச்சநீதிமன்றம் அதற்குப் பச்சைக் கொடி காட்டியது எப்படி?

சில நாட்களுக்கு முன், 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட தற்கான புள்ளி விவரம் அரசிடம் இல்லை என்று சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சரே நாடாளுமன்றத்தில் கை கழுவி விட்டாரே  - மறு ஆய்வு சீராய்வு மனுவின்மீது உச்சநீதிமன்றம் என்ன சொல்லப் போகின்றது என்பது நாடே எதிர்பார்க்கும் கேள்வியாகும்.

தமிழ்நாடு நிறைவேற்றிய அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டம் செல்லத்தக்கதே என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கதேயாகும்.

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏழரை விழுக்காடு இடஒதுக்கீடு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பும் வரவேற்கத்தக்கதே!

மருத்துவக் கல்வி முதுநிலைப் படிப்பில் அகில இந்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்குப் போராடிப் பெறப்பட்ட 27 விழுக்காடு என்பது 2022இல் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

32 ஆண்டுகள் சிறையில் வாடிய (ராஜீவ்காந்தி கொலை வழக்கில்) அத்தனைப் பேரும் விடுதலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தகுந்த நிகழ்வாகும்.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்னும் பார்ப்பனீய மனுதர்ம ஆட்சி நடத்தும் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி. 2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும்  மக்களவைத் தேர்தல் மூலம் தொடரக் கூடாது என்ற நோக்கில் இளந் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்துள்ள குமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைப்பயணம் காலத்தாற் மேற்கொள்ளப்பட்டதாகும்.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இதில் செயல்படாவிட்டால் வரலாறு ஒரு போதும் மன்னிக்காது - பச்சைப் பாசிச ஆட்சி வலிமை பெற துணை போனதாகவே கருதப்படும்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் தேர்வானதும் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கத்தக்கதாகும்.

திராவிட மாடல் ஆட்சி 2022இல் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் வைரக் கல் பொறித்த ஒன்றே!

2023இல் முற்போக்குச் சக்திகள் ஒன்றிணையட்டும்  - ஒழிக்கப்பட வேண்டியது ஒன்றிய பிஜேபி ஆட்சியே - என்ற ஒற்றைக் குறிக்கோளே மக்கள் கண்முன் நிற்கட்டும்!

திராவிடர் கழக அமைப்புப் பணிகளும் பிரச்சாரமும், களமாடலும் கணீர் கணீர் என ஒலிக்கப் போகிறது - நாடு பார்க்கப் போகிறது.

தமிழர் தலைவரின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - 88 ஆண்டு விடுதலை வரலாற்றில் 60 ஆண்டு ஆசிரியர் என்ற வரலாற்றுச் சிறப்பு நிகழ்வுகளும், அவற்றையொட்டி 'விடுதலை' சந்தா சேர்க்கும் ஆக்க ரீதியான திராவிடர் கழகப் பணியும், தோழர்களின் ஓய்வறியா உழைப்பும், உன்னதமானவை.

செஞ்சி - பகுத்தறிவாளர் கழக மாநாடும், திருப்பம் தரும் திருப்பத்தூர் மாலை நேர திறந்த வெளி மாநாடும் மனதில் தேன்  சுரப்பவையே!

மேலும் இலட்சியம், இலக்குகள் நோக்கி கழகத் தலைவர் தலைமையில் திட்டமிட்ட முறையில் பயணிப்போம்!!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!

வெல்க திராவிடம்!!!


No comments:

Post a Comment