நேற்று (25.1.2023) மாலை புகழ் வாய்ந்த ஆற்றலாளர் இதய நோய் மருத்துவர் டாக்டர் எழிலன் - அவர்களிடம் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தேன். இவர் (நமது சீரிய திராவிடர் இயக்கச் செம்மலும், ஆயிரம் விளக்குத் தொகுதியில் ஆயிரமாயிரம் சாதனைகளைப் புரிந்து வருபவருமான சட்டப் பேரவை உறுப்பினர் டாக்டர் நா. எழிலன் அல்ல) இதய நோய் நிபுணர் (Interventional Cardiologist) ஆவார். (எனது மருத்துவர்களில் ஒருவரும்கூட) அவருக்கு 'மணிவிழா' - விழா (23.1.2023) நாளன்று செல்ல இயலாததால், சென்று கண்டு வாழ்த்தி விடை பெற்று உரையாடிய போது, ஒரு சீனப் பழ மொழியைக் கூறினார். "வயிற்றைச் சரியாக வைத்துக் கொண்டால், உடல் நலம் எப்போதும் சீராக இருக்கும்" என்பதுதான் அந்தப் பழமொழி!
நினைத்துப் பார்த்து, சற்று அசைபோட்டுச் சிந்தித்துப் பாருங்கள். எவ்வளவு எளிமையான கருத்து- எவ்வளவு சிக்கலான சோதனையை உள்ளடக்கிய மூதுரை அது!
'வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி சேர்த்த பொருள்' என்று சில நேரங்களில் - அது நம்மைவிட்டுப் போனதால் ஏற்படும் துன்பத்தின் வெளிப்பாடாக வரும் சொல்லது!
வயிற்றைச் சரியாக, 'கட்டி' வைத்தால் செரிமானக் கோளாறு வராது.
அதனால் ஏற்படும் பல நோய்களும், தொல்லைகளும் துன்பந் துயரங்களும்கூட நேராது அல்லவா?
ஆழ்ந்து எண்ணிப் பார்த்தால் நம்மால் அந்த எளிய நியதியைக் கடைப்பிடிக்க முடியாதா என்றால், நிச்சயம் கடைப்பிடிக்க முடியும்!
வாக்கில் தெளிவு இருந்தால் மட்டும் போதாது; மனதில் உறுதி வேண்டும். சபலங்களுக்குப் 'பலி'யாகக் கூடாது - 'பலி'யானால் காக்கும் உறுதி காற்றோடு போய் விடும் அல்லவா? எனவே மனதில் உறுதி வேண்டும்.
வாழ்வதற்காகத்தான் உணவு; உணவுக்காக வாழ்க்கை இல்லை! இன்றியமையாததும் கூட! ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதை நாம் உண்ணும் முன்பு உறுதி எடுத்துக் கொண்டு உண்ணத் துவங்க வேண்டும்.
'உண்ணுமுன் எண்ணு மின்' என் இனிய தோழர்களே!
எவ்வளவு சுவையாக இருப்பினும், 'வயிற்றில் கொஞ்சம் வெற்றிடம் - நிரப்பப்படாத வெற்றிடத் தோடு எழுவேன்' என்ற உறுதி மொழியுடன், உள்ளத்தின் உறுதிப்பாட்டுடன் அமர்க. அது அமிழ்து, அமிழ்து என்று அதன் சுவை நம்மைச் சுண்டி இழுத்தாலும் அதற்கு நாம் இரையாகி விடாமல் நமது 'இரையை' அளவோடு எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண் டால் வாழ்வு சுருங்காது; மருத்துவமனைகளைத் தேடி ஓட வேண்டிய நிலையும், செலவும் - சிற்சிலருக்கு தீராக் கடனும் ஏற்படவே ஏற்படாது என்பது உறுதி!
விருந்துகளுக்குப் போய் உண்ணுவதை கூடுமான வரை - முதுகுடி மக்கள் - தவிர்ப்பது நல்லது - சென்று அமர்ந்தால் சுவையும் - பக்கத்தில் எதிரிலே, அமர்ந்து உண்ணுபவர்களும் - உங்களைச் சுண்டி இழுத்து, நீங்கள் காத்து வந்த உறுதியைக் 'காலாவதி'யாக்கிட செய்யக் கூடும். எனவே செல்லுக; வெல்லுக என்று அனுப்பினால், குறிப்பிட்ட அளவோடு நில்லுங்கள் என்பதே நமது வேண்டுகோள்!
"இன்று ஒரு நாள்தானே; ஒரு நாளில் என்னவாகி விடப் போகிறது? - பரவாயில்லை, சாப்பிடுங்கள் - அல்லது சாப்பிடுவோம் - என்றால் உடல் நலக் குறைவிற்கு அது ஆரம்பம். அதனால் ஏற்படுவது விருந்து சாப்பிட்டவருக்கு மட்டுமா மனக் கவலை? விருந்தளித்த நண்பர்களுக்கும்கூட வேதனை விலாவைத் தாக்க 'அய்யோ அவரது உடல் நலக் குறைவுக்கு நாம் அல்லவா காரணம் ஆகிவிட்டோம்' என்ற வேதனையில் வாடி வருந்த வேண்டிய நிலையும் ஏற்படாதல்லவா? எண்ணிப் பாருங்கள்!
திருவள்ளுவரின் 'மருந்து' என்ற தலைப்பில் உள்ள பத்துக் குறட்பாக்களை மீண்டும் மீண்டும் நான் படித்ததில், வியப்பில் ஆழ்ந்து உறைந்தே போனேன்!
2500 ஆண்டுகளுக்குமுன்பே எந்தத் துறையும் அவருக்கு அத்துப்படி என்று கூறுவதற்கு சான்றாவணமாக திருக்குறள் என்ற - 'சமயம் கணக்கர் மதிவழி கூறாத' - நல்லறிஞராக நின்று மக்கள் சமுதாயத்தின் கலங்கரை வெளிச்சமாக வாழ்க்கைக் கப்பலில் பயணிக்கும் நாம், துன்பப் பாறைகளில் மோதி நொறுங்கி விடாமல் சிறக்க வள்ளுவப் பேராசன் வழி காட்டும் நெறியாளராக இருப்பதை எண்ணி எண்ணி வியப்பின் உச்சிக்கே சென்று அவரை மெச்சிக் கொண்டாடுகிறோம்.
அந்தக் குறளையும் - மருத்துவர்கள் அறி வுரைக் குரலையும் நாளையும் பார்ப்போமா?
(வளரும்)
No comments:
Post a Comment