திருச்சி,ஜன.23- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியரும், பூம்புகார் ஆய்வுத் திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான சோம.ராமசாமி கூறியிருப்பதாவது:
ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ரூ.10 கோடி நிதியுதவியுடன்,
கடலில் மூழ்கிய பூம்புகார் நகரத்தை ஆய்வு நடத்தும் பணி கடந்த 2019-2020 ஆண்டில் தொடங்கப்பட்டு நடை பெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட வேண்டிய இந்த ஆய்வு, கரோனா பரவல் காரணமாக இடையில் தடைபட்டதால், 2024 மார்ச்சுக்குள் முடிக்கும் வகையில், மேலும் ஓராண்டு நீட்டிக்க வேண்டும் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வில், கடலுக்கு கீழே 3 மிகப்பெரிய டெல்டாக் களை காவிரி நதி உருவாக்கி உள்ளதும், இதன் மூலம் அப்போதைய கடற்கரை தற்போதைய கடற்கரையில் இருந்து 40-50 கி.மீ கிழக்காக இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், தற்போதைய கடற்கரையில் இருந்து 30-40 கி.மீ தூரத்தில் கடலுக்கு கீழே 50-100 மீட்டர் ஆழத்தில் மிகப்பெரிய துறைமுக நகரம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இது 15 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான நகரம் என்று தெரிகிறது. இங்கு ஒரே நேரத்தில் 70-க்கும் மேற்பட்ட கப்பல்கள் நிற்கும் அளவுக்கு மிகப்பெரிய கப்பல் துறைகள், அதைச் சுற்றிலும் பல விதமான கட்டடங்களைக் கொண்ட மணலால் மூடப்பட்ட சுற்றுச்சுவருடன் கூடிய குடியிருப்புகள், அழிந்த நிலையில் அடித்தூண்களுடன் கலங்கரை விளக்கம் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.
மேலும், மேற்கே காவிரியின் வண்டல் பகுதிக்கும், கிழக்கே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பூம்புகார் 1-க்கும் இடையே உள்ள பகுதியில் கடலுக்கு கீழே காவிரியும், அதன் கிளை நதிகளும் உருவாக்கி உள்ள ஆழமான பள்ளத்தாக்கு களும், பெரிய நீர் வீழ்ச்சியும் கண்டறியப் பட்டுள்ளன.
இவை சுனாமி, கடல் மட்ட உயர்வு, வெள்ளம் போன்ற வற்றால் இடம் மாறி வந்த இந்த 3 பூம்புகார்களையும் அழித்து இருக்கக்கூடும். பருவநிலை மாற்றம் குறித்த அட்டவணைப்படி நடத்திய ஆய்வில், சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறை கடற்கரை நகரமாக இருந்தது தெரிய வந்துள்ளது.
பின்னர், சீர்காழியில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பும், நாங்கூரில் 3,000 ஆண்டுகளுக்கு முன்பும், காவிரிப் பூம்பட்டினத்தில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பும் கடற்கரை நிலை கொண்டிருந்தது. தற்போது இந்த ஆராய்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது என்றார். அப்போது, பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.செல்வம், பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் சீனிவாசன் ராகவன், தொலை உணர்வுத் துறை பேராசிரியர்கள்
க.பழனிவேல், ஜெ.சரவணவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment