எங்களுக்கும், நாட்டுக்கும் வழிகாட்ட வேண்டும்
பல்வேறு கட்சித் தலைவர்களின் வாழ்த்தும் பாராட்டும்!
சென்னை, டிச. 3- 90 வயதில் 80 ஆண்டு பொதுவாழ்வு என்று புதிய வரலாறு படைக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்வு 02.12.2022 அன்று மாலை கலைவாணர் அரங்கத்தில் அனைவராலும் மிகுந்த மகிழ்வுடனும், கருஞ்சட்டை தோழர்களின் உணர்ச்சிப் பெருக்குடனும் நடைபெற்றது.
ஆசிரியருக்கு நிகர் ஆசிரியரே
வரலாற்றுப் பெருமைமிகு நிகழ்வில், திராவிடர் கழகப் பொருளாளர் குமரேசன் அவர்கள், 10 ஆவது அகவை தொடங்கி 90 ஆவது அகவையிலும் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோருக்கு பிறகு திராவிடர் கழகம் என்ற சுயமரியாதை, பகுத்தறிவு, பெண்ணுரிமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இயக்கத்தை வழிநடத்தினார் என்றும், அவரது மற்ற கல்வி நிறுவனப் பணிகள், விடுதலையின் 60 ஆண்டு ஆசிரியர், இதழியல் பணிகள் ஆகியவற்றையெல்லாம் பட்டியலிட்டு, "ஆசிரிய ருக்கு நிகர் ஆசிரியரே" என்பதை உறுதியாகக் கூறி, அவர் வாழும் வரலாறு அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே பெருமை என்பதை பதிவு செய்து, நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.
ஆசிரியரின் ஆயுள் நீள்வது மூலமாக,
தமிழரின் நலமும் நீளும்
ஆசிரியருடன் 57 ஆண்டுகாலம் உடனிருந்து, பொதுத் தொண்டாற்றிய, ஆசிரியரின் நிழலாய் அமைந்த, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை உரை ஆற்றினார். அவரது தலைமை உரையில்: திராவிட இனத்தின் மூத்த தலைவரின் பிறந்தநாள் நிகழ்வில் எப்படி மகிழ்ச்சியின் உச்சத்தில் அனைவரும் இருக்கிறோம், இது மகிழ்ச்சித் திருநாள் என்று தொடங்கி, 90 ஆண்டில் 80 ஆண்டு விகிதாச்சாரம் என்பது பொதுவாழ்வில் இவருக்கு மட்டுமே அமைந்திருக்கிறது என்றும், 88 ஆண்டுகளில் விடுதலையின் 60 ஆண்டு கால ஆசிரியர் என்ற விகிதாச்சாரத்தை பெற்றவரும் உலகில் இவர் ஒருவரே என்றும், ஆசிரியர் என்றால் பள்ளிக்கூட ஆசிரியர் அல்ல; ‘விடுதலை' ஆசிரியர் என்று தான் அனைவரும் அறிவர் என்றார்.
தொடர்ந்து, தந்தை பெரியார் அவர்கள் ஆசிரியரைப் பற்றி சொன்னவற்றையெல்லாம் அப்படியே இன்றைய தலைமுறையின் கண் முன் நிறுத்துவது போல், "இவரைப் போல் முன் ஒருவர் வந்தார், வருகிறார் வரக்கூடும் என்று உவமை சொல்ல முடியாதவாறு வீரமணி நமக்கு கிடைத்திருக் கிறார்" என்றதையும், விடுதலை அலுவலக நாற்காலியில் ஆசிரியரின் தோளினைப் பற்றி அய்யா அவர்கள் அமர வைத்த நிகழ்வினை எல்லாம் கூறி, முதல் அரசியல் சட்டத் திருத்தம் என்றால் அய்யா நினைவுக்கு வருவார்; 76ஆவது சட்டத் திருத்தம் என்றால் ஆசிரியர் நினைவுக்கு வருவார் என்றார். ஆசிரியரின் சமூக நீதிப் பணிகளில், 9000 ரூபாய் வருமான உச்ச வரம்பாணையை எதிர்த்தது, 69% இடஒதுக்கீடு, மண்டல் குழு பரிந்துரையை சட்டமாக்க அவரது உழைப்பு, அதற்காக இந்த இயக்கத்தின் பணி என்பதை எல்லாம் விவரித்து, சென்னை பெரியார் திடலில் பி.பி.மண்டல் அவர்கள் "இந்த பரிந்துரையை நாங்கள் சமர்ப்பித்து விட்டோம். இது செயல்படுத்தப்படுமா என்பது கேள்விக்குறி. இதை செயல்படுத்த வைக்கும் ஆற்றல் பெரியார் இயக்கத்திற்கும், தலைவர் வீரமணிக்கும்தான் உண்டு என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்று சொன் னதை நினைவுப்படுத்தி, இன்று திராவிட மாடல் ஆட்சியால் நாளும் மகிழ்ச்சி அடைகிறார், தினமும் இளமையாய் உணர்கிறார் என்பதை விளக்கி, அதிலும் குறிப்பாக தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை, இந்த திராவிட மாடல் ஆட்சி அகற்றியது; தந்தை பெரியார் பிறந்த நாளை ‘சமூகநீதி நாள்' ஆகவும் அம்பேத்கர் பிறந்த நாளை ‘சமத்துவ நாளாகவும்' அறிவித்தது போன்றவை ஆசிரியருக்கு மகிழ்ச் சியை தருகிறது. இதனால் அவரின் ஆயுள் நீளும்; ஆசிரிய ரின் ஆயுள் நீள்வது மூலமாக தமிழர் நலமும் நீளும் என்றார். அவரின் தலைமையுரை, அனைத்துத் தோழர்களுக்கும் பெரும் கொள்கை உணர்ச்சியை தரும் வகையில் அமைந்தது.
பெரியார் எனும் பல்கலைக்கழகத்தில் நேரடியாக பயின்றவர் ஆசிரியர்
சென்னை மாநகராட்சியின் மேயர் ஆர். பிரியா அவர்கள் தனது பாராட்டு உரையினை நிகழ்த்தினார். பெரியார் எனும் பல்கலைக்கழகத்தில் நேரடி யாக பயின்றவர் ஆசிரியர் என்றும், 1944ஆம் ஆண்டு பகுத்தறிவு, ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை ஆகிய கொள் கைகள் அடிப்படையில் ‘திரா விடர் கழகம்' என்று பெயர் சூட்டப்பட்ட திராவிடர் கழகத் தின் தேரை வைர விழா தாண்டி, நூற்றாண்டு காண ஆசிரியர் வழிநடத்தும் விதத்தையும், ஆசிரியர் அவர்களின் பொதுச் செயலாளர், தலைவர் ஆகிய பொறுப்புகளை எல்லாம் விளக்கி, பெரியார் கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கும் ஆசிரியருக்கு பிறந்தநாள் வாழ்த்து களை தெரிவித்து நிறைவு செய்தார்.
காங்கிரசுக்கு தெரியாத சாதனைகள்,
ஆசிரியருக்கு தெரிந்தது
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழ்நாடு செய்தி தொடர்பு செயலாளர் கோபண்ணா அவர்கள் தனது வாழ்த்துரையில் : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் உயர்திரு கே. எஸ். அழகிரி அவர்களுக்கும் ஆசிரியர் அவர்களின் குடும் பத்திற்கும், திராவிடர் இயக்கத்திற்கும் இருக்கும் உறவினை எடுத்துரைத்து, அவரால் இந்நிகழ்விற்கு வர முடியாததற்கான காரணங்களை கூறி, தனக்கும் திராவிடர் இயக்கத்திற்கும் ஏற்பட்ட புரிதல் பற்றி பல்வேறு நிகழ்வுகளின் ஊடாக விளக்கி, அன்றைக்கு இருந்த காங்கிரசின் நோக்கம் இந்தியா வின் விடுதலையாக இருந்தது; இட ஒதுக்கீடாக அல்ல. ஆனால், தந்தை பெரியார் நடத்திய வகுப்புரிமைப் போராட் டம் பற்றி காமராஜர் அவர்கள் அன்றைய பிரதமர் நேருவிடம் வலியுறுத்தியதையும், அதற்குப் பிறகு ஏற்பட்ட முதல் சட்டத் திருத்தத்தை பற்றியும் கூறினார். தொடர்ந்து, 1952 இல் எந்த காங்கிரசை ஆழக் குழி தோண்டி புதைப்பேன் என்று பெரியார் சொன்னாரோ, அதே காங்கிரசில் இருந்த காம ராஜரை 1954 தமிழர் நலனுக்காக ஆதரித்ததையும், எடுத்துக் கூறி, "காமராஜரின் சாதனைகள்" என்ற நூல் காங்கிரசால் வெளிவராதபோது ஆசிரியர் தான் வெளிக் கொண்டு வந்தார் என்றும், காங்கிரசுகாரர்களுக்கு கூட தெரியாத பல தகவல்களை அது உள்ளடக்கியிருந்தது என்றார். 69% இட ஒதுக் கீட்டின் முழுப் பொறுப்பெ டுத்து, அந்த சாதனையை நிகழ்த்தியவர் ஆசிரியர் என்றும், சமூக நீதிக்காகவும் தமிழ் சமூகத்திற்காகவும் தொடர்ந்து ஆசிரியர் பாடுபட வேண்டும் என்ற தனது வாழ்த் தினை பதிவு செய்து அமர்ந்தார்.
ஆண்டவனுக்கே சவால் விடும் ஆசிரியர்
இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநில செயலாளர் தோழர் கே.பால கிருஷ்ணன் அவர்கள் தனது வாழ்த்துரையில்: நம்புவதற்கு சந்தேகமான விஷயங்களில் ஒன்று, ஆசிரியருக்கு 90 வயது என்பதும். 90 வயதுக்கு இவர் சவால் விடுகிறார். ஆண்டவன் அருளால் தான் ஆயுள் நீளு கிறது என்பார்கள்; அந்த ஆண் டவனுக்கே சவால் விட்டு சுறு சுறுப்பாக 90 வயதில் ஆசிரியர் வாழ்கிறார் என்றும், ஆண்ட வனை நம்புகிற தத்துவத்திற்கும் அது சவாலாக அமைந் திருக்கிறது என்றார். ஆசிரியர் எப்போது அமர்கிறார், உணவு உண்கிறார் என்பது தெரியவில்லை. இன்றும் 16 வயது இளைஞனைப் போல் செயல்படுகிறார் என்றார். வாழ்நாள் முழுவதும் சனாதனத்தை எதிர்ப்பது என்ற நோக்கத்தோடு இன்னும் பல பத்து ஆண்டுகள் வாழ வேண்டும் என்று தான் வாழ்த்திய போதும், அப்படி வேலையை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆசிரியர் சிரித்த விதத்தை எடுத்துரைத்து, 80 ஆண்டுகளுக்கு முன் எந்த நம்பிக்கையில் அவரது ஆசிரியர் திராவிட மணி அவருக்கு பெயர் சூட்டினாரோ, அதேபோல் வீரராக வாழ்ந்து கொண்டிருக் கிறார் என்றார். பொதுக்கூட்டத்தில் கூட நடமாடும் நூலகம் போல், நீதிமன்றத்தில் விவாதிக்கும் சட்ட நுணுக்கங்களை சாமானிய மக்களும் புரியும் வண்ணம் எடுத்துரைக்கும் சட்ட நிபுணராக ஆசிரியர் இருக்கிறார் என்பதை எடுத்துரைத்து, இன்று பெரியார் அவர்கள் இருந்தாலும் பிரமித்திருப்பார், நம்மால் உருவாக்கப்பட்ட வீரமணி இந்த உலகம் முழுவதும் பெரியாரியத்தை கொண்டு செல்கிறார் என்றும், தொடர்ந்து திராவிடர் கழகம் பொதுவுடைமை இயக்கத்திற்கு பெரியார் - ஜீவானந்தம் - சிங்காரவேலர் ஆகியோருக்கு இருந்த நட்பினை விவரித்து, 69% இட ஒதுக்கீடு அடிப்படாமல் அந்த சாதனையை நிலை நிறுத்திய பெருமை ஆசிரியரையே சாரும் என்றார். பெரியாரின் எல்லாக் கொள்கைகளையும் முன்னெடுக்கிற வீரர் ஆசிரியர் என்ற பெருமை அவருக்கு இருக்கிறது என்றும், இன்றைக்கு ஆளும் ஒன்றிய பாஜகவின் சனாதன ஆட்சியால் சட்ட விழுமியகளுக்கு ஏற்பட்டு இருக்கும் ஆபத்தையும், மனு ஆட்சி நிறுவ துடிப்பதையும் எடுத்துரைத்து அதனை அழித்தொழிக்கும் போராட்டம் 2024 தேர்தலில் தான் அடங்கி இருக்கிறது என்றும், இந்தியாவை காப்பாற்ற அனைவரும் ஒரு அணியாய் திரள வேண்டும்; அதனை சனாதன ஆட்சியை வீழ்த்த, மற்றவர்களை இணைத்து கடமையாற்ற ஆசிரியர் அவர்கள்தான் வழி நடத்த வேண்டும் என்றும், இந்த மகத்தான பணிக்கும் தமிழ்நாட்டில் என்றென்றைக்கும் தலைவராக ஆசிரியர் தான் பணிபுரிவார் என்றுரைத்து, ஆசிரியரின் துணைவியார் அம்மா மோகனா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனை வருக்கும் நன்றி சொல்லி அமர்ந்தார்.
அப்பா போருக்கு செல்கிறார்,
மகன் தொடங்கி வைக்க வேண்டும் என்கிறார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசன் அவர் கள் வாழ்த்துரை வழங்கினார். அவரது உரையில் : ஆசிரிய ரின் வயது 90 என்று மேடை யில் பேசும் நாங்களும், எதிரில் அமர்ந்திருப்பவர்களும் குறிப்பிடு கிறோம். ஆனால், அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை; பத்து வயது பாலகனாகவே திகழ்கிறார் என்றார். 89ஆம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்வில், இந்த வயதில் அலைய வேண்டாம் என்று சொல்லி மாட்டிக் கொண்டேன். எப்படி அலையாமல் இருக்க முடியும் என்று ஆசிரியர் கேட்டதையும், இன்றும் பேரணி நடந்தால் எல்லாரையும்விட முன்னாடியே நடந்து செல்வார். அவரது வேகம், சுறுசுறுப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது, இனியும் தொடரும் என்றார். அய்யாவின் கரம் பிடித்த ஆசிரியர், அவரின் கருத்தை கைவிடவில்லை. அய்யா எப்படி தேவைப்படுகிறாரோ, அதேபோல் அய்யாவின் கரம் பற்றிய ஆசிரியரும் தேவைப்படுகிறார் என்றார். அன்றைக்கு அய்க்க்கிய முன்னணியின் வெற்றிக்கு 1952இல் பெரியார் எப்படி பெரும்பாடு பட்டார் என்பதையும், பொதுவுடைமை சமுதாயம் அமைய பெரியார் நினைத்த அவரின் கொள்கை வழியில் ஆசிரியர் அவர்களும் அதே வழியில் முன் மாதிரியாக இருக்கிறார் என்றார். சமூக நீதிக்கு ஆபத்து வரும் அனைத்து நேரத்திலும் முதல் குரல் பெரியார் திடலில் தான் தொடங்கும். அக்குரலில் மேடையில் இருக்கும் நாங்களும் இணைந்து அதனைத் தடுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
மேலும், அவரின் இளமையின் ரகசியம் அவர் மேற்கொண்டுள்ள, ஏற்றுக்கொண்டுள்ள தத்துவமே ஆகும். அவர் ஏற்றுக்கொண்ட தத்துவம் விஞ்ஞானம்; விஞ்ஞானம் வளர்ந்து கொண்டே இருக்கும். விஞ்ஞானம் வெற்றி பெற வேண்டும் என்றும், அஞ்ஞானம் வெற்றி பெற அதன் வழியில் ஆட்சி செய்யும் பிஜேபி எப்படி செயல்பட்டு வருகிறது என்றும், பிஜேபியின் தமிழ், தமிழர் விரோதப் போக்கை பட்டியலுடன் விவரித்து, கல்லோடு பேசப்படும் சமஸ்கிருத மொழிக்கு அதிக நிதி, மக்கள் பேசும் தமிழ்மொழிக்கு மிகக் குறைவான நிதி என்பதையெல்லாம் புள்ளி விவரங்களுடன் விவரித்து, இதனை, இந்த பிஜேபி நாடகத்தை தோலுரித்துக் காட்ட தலைவர் தேவை என்றும், அதற்கு ஆசிரியர் தேவை என்றார். காத்திருக்கும் கொக்கு போல் ஆசிரியர் பிஜேபியின் அனைத்து நடவடிக்கைகளுக் கும் உடனடியாக அறிக்கை, போராட்டம் என்று வெளியிடும் விதத்தை பாராட்டி, ஹிந்தி மொழியினைத் திணித்தால், தார் சட்டியை அவர் தூக்கிக்கொண்டு செல்கிறார். பொதுவாக மகன் போருக்கு செல்வார், அப்பா வழியனுப்பி வைப்பார். ஆனால்,இங்கு போருக்கு அப்பா சொல்கிறார்; மகன் தொடங்கி வைக்க வர வேண்டும் என்கிறார். இப்படி எல்லாரையும் இணைப்பதற்கு ஆசிரியர் தேவை என்றார். மேலும், ஆளுநரின் சனாதனப் போக்கை கடுமையாக சாடி விவசாயிகளின் மீது நடத்தப்படும் கொடுமை, ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காதது போன்றவற்றையெல்லாம் விளக்கி வரும் டிசம்பர் 29 ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்துவதை அனைவருக்கும் கூறி, இதனை ஆசிரியர் தீவிரப்படுத்த வேண்டும், நாங்களும் அதற்கு துணையாக இருக்கிறோம், உங்களை விட மாட்டோம், கரம் கோர்த்து வருவோம் என்று வாழ்த்துரை வழங்கி அமர்ந்தார்.
மிகப்பெரிய சாதனையாளர்,
சமூகநீதிக் காவலர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரி யர் கே. எம். காதர் மொய்தீன் அவர்கள் தனது வாழ்த்துரை யில்: நாள் இருக்கும் நாளெல் லாம் அவர் நலமாக வாழ வேண்டும் என்ற தனது விருப் பத்தினை தெரிவித்து, பெரியார் விட்டு சென்ற பணியை, அவர் போட்டுத் தந்த பாதையில், எந்தவித சபலங்களுக்கும் ஆளாகாமல், செய்து முடிப்ப தாக உறுதிமொழி ஏற்று, அந்த உறுதிமொழியினை நாளும் பிசகாமல், இவ்வளவு வருடமாக ஆசிரியர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் என்றும், பெரியார், அண்ணா கலைஞர், தளபதி ஆகியோரின் பணிகளையும், தமிழ் மக்களின் பெருமை, தமிழின் பெருமை, திராவிடப் பெருமை, வரலாறு அனைத்தையும் நாளும் எழுதி, பேசி, பரப்புரை செய்து மாற்றம் ஏற்படச் செய்யும் பெருமை ஆசிரியரே சாரும் என்றார். ஆசிரியர் மிகப்பெரிய சாதனையாளர்; சமூக நீதிக் காவலர் என்று அவரை பாராட்டுவது சரியானதாக இருக்கும் என்றார். இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சினை இட ஒதுக்கீடு. அதற்கு, அரசியல் கட்சியில் இருந்து மாற்றம், திருத்தம், தீர்வை நாம் எதிர்பார்க்க முடியாது. திராவிடர் கழகத் தலைவர் மூலமாகதான் அதற்கான தீர்வை பெற முடியும் என்பது தான் வரலாறு. அன்றைய வரலாறும் அது தான்; இன்றைய வரலாறும் அதுதான் என்றார். தொடர்ந்து, சமூக மாற்றம், இட ஒதுக்கீடு பிரச்சினை முன்பு இருந்ததைவிட இன்று அதிகம் இருப்பதை விவரித்து, அதனை எதிர்த்து முன்பும், இன்றும், இனியும் ஆசிரியர் வைத்துதான், அவரின் வழிகாட்டுதல்தான் தடுக்க முடியும் என்றார். சமூகநீதிக்கு பிரச்சினை என்றபோது, அனைத்து அரசியல் தலைவர்களை யும் ஓரணியில் திரட்டி அற்புதங்களை ஆசிரியர் செய்திருக் கிறார். இன்று இன்னும் வேகமாக தமிழ்நாட்டில் மட்டுமன்றி, இந்தியா முழுவதும் அவர் செல்ல வேண்டும்.உலகம் முழுவதும் பெரியாரை பரப்பிக் கொண்டிருக்கக்கூடிய அவர் பணி, அதற்கு நாம் ஆதரவாக நிற்க வேண்டும் என்றும், பெரியாரின் பாரம்பரியத்தை அவர் தொடர வேண்டும்; நாம் அனைவரும் அதற்கு உதவ வேண்டும் என்றும் வாழ்த்தி அமர்ந்தார்.
தளபதிக்கு தமிழர் தலைவர்
கிடைத்திருப்பது பெரும் வாய்ப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் நாடாளு மன்ற உறுப்பினர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவரது பாராட்டு உரையில்: 35 ஆண்டுகளாக தமிழர் தலைவரை அறிவேன் என்று தொடங்கி, கல்லூரி காலத்தில் அவரைப் பார்ப்பது , அவரின் உரையைக் கேட்பது, வாய்ப்பு கிடைக்கும் போது அவரோடு அமர்ந்து பேசுவது என்று இருந்த நாட்களை நினைவுபடுத்தி, அன்று ஆசிரியருக்கு 55 வயது. அன்று இருந்த அதே வேகம், சுறுசுறுப்பு இன்றும் எள்ளளவும் அவரிடம் குறையவில்லை என்றார். தமிழர் தலைவரின் உழைப்பு நமக்கே மலைப்பைத் தருகிறது என்றார். இந்த சுறுசுறுப்பும், இளமையும் அவருக்கு எங்கிருந்து வந்தது என்பதை அவரது பிறந்தநாள் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் என்று கூறி, தமிழர் தலைவரின் அறிக்கையில் பல்வேறு பகுதிகளை எடுத்து அதனை விளக்கினார். குறிப்பாக, எப்படி இளமை வந்தது என்று ஆசிரியரின் அறிக்கையில் பெரியாரின் பிரச்சார அணுகுமுறையை அவர் விவரித்த விதத்தையும், அருகில் இருந்து அதனை ஆசிரியர் பார்த்ததையும், "ஓயாமல் உழைப்பதே மாறாத இளமைக்கு காரணம்" என்ற ஆசிரியரின் வார்த்தையை விளக்கி, கொள்கையைப் பரப்புதல் இருக்கும் இனிமையே இளமைக்குக் காரணம் என்பதையும், உடன் இருப்பவர்களின் எதையும் எதிர்பார்க்காத உழைப்பைப் பற்றிய ஆசிரியரின் குறிப்பையும், திராவிடர் கழகத் தோழர்களோடு ஒப்பிட்டு களத்தில் இருக்கும் கருஞ்சட்டை தோழர்கள் உழைப்பைப் பாராட்டி பேசினார். "ஓய்வு என்பது ஒருவகை நோய்" என்ற ஆசிரியரின் வரிகளை கூறி, வாழ்வில் அரசு வேலையில் ஓய்வு பெற்றாலோ, பேரப் பிள்ளைகள் தாத்தா என்று அழைத்தாலோ எப்படி உளவியல் ரீதியாக சலிப்பு வரும் என்பதையும், 95 வயது வரை சோம்பலின்றி உழைத்த பெரியாரை வழிகாட்டியாக எடுத்துக் கொண்ட ஆசிரியருக்கு என்றும் சோம்பல் எட்டிப் பார்க்காது என்றார். அடுத்தடுத்த தலைமுறை சனாதன சக்திகளை எதிர்த்துப் போராட பெரியார் என்ற ஆயுதத்தை அவர்கள் ஏந்தி நிற்பதை ஆசிரியர் விவரித்த விதத்தை விளக்கிப் பாராட்டி, இந்த மண்ணை, சமூக நீதியை காக்க ஆசிரியர் சொன்ன செய்தி (னீமீssணீரீமீ) மிகவும் முக்கியம் என்றார். திராவிடர் கழகம் தேர்தலில் பங்கேற்காத இயக்கம். ஆனால், தேர்தலில் இருக்கும் கட்சி பார்த்துக் கொள்ளட்டும் என்று ஆசிரியர் நினைக்கவில்லை. மாறாக, இது பரம்பரை யுத்தம். இந்த யுத்தமானதை சமூகப் போரின் புதிய பரிணாமமாக நாம் பார்க்க வேண்டும் என்றும், 2024 பொதுத் தேர்தல் அரசியல் தேர்தல் அல்ல என்ற ஆசிரியரின் எச்சரிக்கை மணியை விவரித்தார். தொடர்ந்து, 10% உயர் ஜாதி ஏழை களுக்கான இட ஒதுக்கீடு எப்படி இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடைப் பாதிக்கும் என்பதை பல்வேறு தகவல்களுடன் எடுத்துரைத்து, ஆசிரியரின் பார்வை என்பது பெரியாரின் பார்வை; அம்பேத்கரின் பார்வை என்றார். நமக்கு நல்வாய்ப்பாக திராவிட மாடல் ஆட்சி அமைந் திருப்பதை விளக்கி, மிகப் பெரிய பேரிடர், பேராபத்து, சூது தமிழ்நாட்டை சூழ்ந்து வரும் சூழலில், நமது முதலமைச்சர் ‘திராவிட மாடலை' இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தி இருக் கிறார் என்றார்.
தொடர்ந்து, இந்திய அரசியலை மண்டல் கமிஷன் முன் - பின் என்று எப்படி பிரித்துப் பார்க்க வேண்டும் என்பதை வரலாற்று குறிப்புகளோடு விளக்கி, ஜனநாயக சக்திகளை ஒன்றுப்படுத்தி, சனாதன சக்திகளை தனிமைப்படுத்தும் செயலை நாம் செய்ய வேண்டும் .என்றும் அதற்கு பலமாக இன்னும் பல பத்து ஆண்டுகள் ஆசிரியர் சுறுசுறுப்பாக இருப்பார் என்பதை அவரின் பணிகள் நமக்கு உணர்த்துகிறது என்றும், தளபதிக்கு தமிழர் தலைவர் கிடைத்திருப்பது ஒரு பெரும் வாய்ப்பு. கலைஞர் இல்லாத நேரத்தில், பெரியார் இல்லாத, நேரத்தில் இந்த ஆட்சிக்கு மட்டுமல்ல, அவருக்கு மட்டுமல்ல, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், இடதுசாரிகளுக்கும், இதர ஜனநாயக சக்திகளுக்கும் தமிழர் தலைவர் ஓர் அரண். தமிழர்களுக்கும் அது பெரும் வாய்ப்பு என்று வாழ்த்தி அமர்ந்தார்.
10 வயதில் மேடை ஏறி 90 வயதிலும் மேடையில் பேசும் தலைவர் உலகில் இவர் மட்டுமே!
மறுமலர்ச்சி திராவிட முன் னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திராவிட இயக்கப் போர்வாள் வைகோ அவர்கள் பாராட்டுரை வழங்கினார்.அவரது உரையில்: நீதிக் கட்சி நடேசனார் தொடங்கி கலைஞர் வரை உள்ள திரா விட இயக்கத் தலைவர்களைப் பட்டியலிட்டு, அந்த வரிசையில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட இருக்கும் தமிழர் தலைவரின் பெயர் என்று உரையை தொடங்கினார்.
தொடர்ந்து, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பினை வயது வாரியாக கூறி, அவரது ஆற்றலை எடுத்துரைத்தார். ஆசிரியரின் முதல் மேடைப் பேச்சைப் பற்றி விவரித்து, பத்தாவது வயதில் மேடையில் ஏறிய இவர் 60 ஆண்டுகள் ஓர் இதழுக்கு ஆசிரியர். பத்தாவது வயதில் மேடை ஏறி, 90 வயதிலும் மேடையில் பேசும் தலைவர் உலகிலேயே ஆசிரியர் ஒருவர் தான் என்றார். பெரியாருடனான ஆசிரியரின் முதல் சந்திப்பையும், 16 வயதில் ஆசிரியர் எடுத்த முடிவையும், பெரியார் ஆசிரி யருக்குக் கல்விக்கு செய்த உதவியையும், ஆசிரியர் பெற்ற தங்கப்பதக்கத்தையும், ஆசிரியரின் திருமணத்திலும் அவ ருக்குச் சரியான இணையராக அம்மா மோகனா அவர்களை அய்யா அடையாளப்படுத்தியதையும், திருமண மேடையில் தனது நன்றி உரையில், 'எங்களுக்கு சிறைக்குச் செல்வதும் மாமியார் வீட்டுக்கு செல்வது போன்று தான்' என்ற ஆசிரிய ரின் கொள்கை உறுதிப்பாட்டினை எல்லாம் விளக்கினார். ஆசிரியரின் திருமணத்தில் புரட்சிக்கவிஞர் வரிகளை எடுத்து இயம்பி, இன்றும் அதற்கு பாத்திரமாக ஆசிரியர் விளங்கு வதை விளக்கினார்.
தொடர்ந்து, டில்லியில் பெரியார் மய்யம் இடிக்கப்பட்ட போது ஆசிரியருக்கும், அவருக்கும் இருந்த உணர்வுகளை உணர்வுப்பூர்வமாக எடுத்துக் கூறி , அதன் பின் நடந்த நிகழ்வுகளையும், பெரியார் மய்யம் வேறு இடத்தில் எழுப்பப் பட்டது மட்டுமல்லாமல், இடிக்கப்பட்ட இடமும் ஆசிரியரால் பெறப்பட்டதை விவரித்தார். தனது வாழ்வில் தான் செய்த மிக மகிழ்ச்சியான காரியங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்றார். சனாதன சக்திகளை வீழ்த்த தமிழர் தலைவரின் வழிகாட்டுதலில், தளபதி ஆட்சி நடைபெற வேண்டும் என்றும், காசி ஆனந்தன் அவர்களின் கவிதையை உணர்வுப் பெருக்குடன் கூறி, இன்னும் நூறாண்டு அல்ல. 120 ஆண்டுகள் கடந்து ஆசிரியர் வாழ்ந்து சரித்திரம் படைப்பார் என்றார். அவருடைய பயணத்தை குறைத்துக் கொண்டு வாழ வேண்டும் என்றும், நீங்கள் நலமாக, வலுவாக இருந்தால்தான் எங்கள் தளபதிக்கு அது நலமாக, வலுவாக இருக்கும் என்று வாழ்த்தி நிறைவு செய்தார்.
சமூகநீதிக்கான கி.வீரமணி விருது!
வரலாற்றுச் சிறப்புமிகு நிகழ்வின் ஒரு பகுதியாக, வரலாற்று சிறப்புக்குரிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் 21 வருடமாக வழங்கப்பட்டு வரும் "கி.வீரமணி சமூகநீதிக்கான விருதினை", தமிழ்நாட்டின் முதலமைச்சர், சமூகநீதிக்கான சரித்திர நாயகர், திராவிடம் மாடல் ஆட்சியை நாள்தோறும் வழங்கிக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் பேராசிரியர் இலக்குவன் தமிழ், மருத்துவர் சோம இளங்கோவன், மருத்துவர் சரோஜா இளங்கோவன், அரசு செல்லையா ஆகியோர் தமிழர் தலைவர் முன்னிலையில் வழங்கி மகிழ்ந்தனர்.
பெரியார் உலகுக்கு ரூ.25 லட்சம் நன்கொடை
தொடர்ந்து, பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம் என்ற தமிழர் தலைவரின் லட்சிய நோக்கில் திருச்சி சிறுகனூரில் உருவாக இருக்கும் பெரியார் உலகத்திற்கு பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் ரூபாய் 25 லட்சம் வழங்கப்பட்டது.
குறிப்பு: முதல் அமைச்சரின் உரையும், கழகத் தலைவர் உரையும் தனியே காண்க!
(தொகுப்பு: சே.மெ.மதிவதனி)
No comments:
Post a Comment