தமிழர் தலைவர் பிறந்த நாள் விழாவில் - ம.தி.மு.க. பொதுச்செயலாளர்
திராவிட இயக்கப் போர் வாள் வைகோ எம்.பி., சிறப்புரை
சென்னை, டிச.10 ஆசிரியர் வீரமணி நலமாக இருந் தால்தான் - தளபதி முதலமைச்சர் ஸ்டாலினும் நலமாக இருப்பார் என்றார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் திராவிட இயக்கப் போர்வாள் வைகோ எம்.பி., அவர்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியரின்
90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
கடந்த 2.12.2022 அன்று மாலை சென்னை கலை வாணர் அரங்கில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., கருத்துரையாற்றினார்.
அவரது கருத்துரை வருமாறு:
பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவிருக்கின்ற எங்களுடைய
திராவிடர் கழகத்தினுடைய தலைவர்
திராவிட இயக்கத்தின் அடித்தளமாக அமைந்த டாக்டர் நடேசனார், பிட்டி தியாகராயர், தார்வாத் மாதவ நாயர், அடுத்து அறிவாசான் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர் களுடைய வரிசையில், அடுத்து இடம்பெறப் போகின்ற, பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவிருக்கின்ற எங்களுடைய திராவிடர் கழகத்தினுடைய தலைவர், இந்த விழாவினுடைய நாயகர் - பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தர், ஈடு இணையற்ற எழுத்தாளர், தலைசிறந்த பேச்சாளர், பத்திரிகையாளர் என்ற அனைத்துத் தகுதிகளும் கொண்டு, இந்த விழாவில் நாயகராக அமர்ந்திருக்கின்ற என்னுடைய ஆருயிர் அண்ணன் மானமிகு வீரமணி அவர்களே,
இனி அடுத்து வரப் போகின்ற தேர்தல்களிலும் எவராலும் வீழ்த்த முடியாது
எதையெல்லாம் பெரியார் கனவு கண்டாரோ, அந்தக் கனவுகளை நனவாக்க முடியாமல், தந்தை பெரியாரு டைய எண்ணத்தை நிறைவேற்ற முடியவில்லையே என்று கலைஞர் பட்ட கவலையெல்லாம் போக்கி, தந்தை பெரியாருடைய எண்ணத்தை நிறைவேற்றி, அவர் நெஞ்சிலே தைத்திருந்த முள்ளை வெளியே எடுத்துப் போட்டார் என்ற பெருமையைப் பெற்றிருக்கக் கூடிய, இனி அடுத்து வரப் போகின்ற தேர்தல்களிலும் எவராலும் வீழ்த்த முடியாது என்று சொல்லக்கூடிய தகுதியைப் பெற்றிருக்கக்கூடிய தமிழ்நாடு முதலமைச்சர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், ஆரூயிர் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே,
மேடையில் இருக்கும் வாழ்த்துரை வழங்கிய தலைவர்களே,
அன்புத் தாய்மார்களே, அருமைப் பெரியோர்களே, கருஞ்சட்டைப் படை வீரர்களே, ஊடகவியலாளர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1933 ஆம் ஆண்டு, இதே டிசம்பர் 2 ஆம் நாளில், கடலூர் முதுநகரில், கிருஷ்ணசாமி - மீனாட்சியம்மையார் இணையருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர்தான் நம்முடைய அண்ணன் வீரமணி அவர்கள்.
அவர்கள் பிறந்த 11 மாதத்திலேயே அவருடைய தாயார் மறைந்துவிட்டார். அதற்குப் பிறகு அவருடைய தந்தையார் பட்டம்மாள் என்கிற சகோதரியை மணம் செய்துகொண்டார். அந்தப் பட்டம்மாள், சொந்த மகனை வளர்ப்பதைவிட, அவ்வளவு பாசத்தைக் கொட்டி வளர்த்து, இவரை ஆளாக்கினார்.
வீரமணி என்று பெயர் சூட்டியவர்
ஆசிரியர் ஆ.திராவிடமணி
அவருக்கு சின்ன வயதிலேயே சாரங்கபாணி என்ற பெயரை, வீரமணி என்று மாற்றியவர் - தன்னுடைய சுப்பிரமணியன் என்ற பெயரை திராவிடமணி என்று மாற்றிக்கொண்ட ஆசிரியர், இவருக்கு வீரமணி என்று பெயர் சூட்டினார்.
அவர் வீரமணி என்று பெயர் சூட்டியது மட்டுமல்ல, அவருக்குத் தொடக்கக் காலத்திலேயே ‘குடிஅரசு', ‘திராவிட நாடு' இதழ்களைப் படிக்கக்கூடிய சூழ் நிலையை உருவாக்கினார். வீரமணி என்று பெயரைச் சூட்டிய ஆசிரியர் திராவிடமணி, மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
1943 ஆம் ஆண்டு கடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம்
1943, ஜூன் 27 ஆம் தேதி, ‘திராவிட நாடு' பத்திரி கைக்கு நிதி திரட்டுவதற்காக கடலூரில் ஒரு பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்தக் கூட்டத்திற்கு அறிவாசான் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் வந்திருந்தார்கள்.
அந்தக் கூட்டத்திற்கு ஆசிரியர் திராவிட மணி அவர்கள், 10 வயதுள்ள வீரமணி அவர்களை அழைத்துக் கொண்டு போயிருந்தார். அந்தக் கூட்டத்திலே அண்ணன் வீரமணியைப் பேச வைத்தார்.
60 ஆண்டுகள் ஒரு பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்த வரலாறு
வேறு யாருக்கும் கிடையாது
10 வயதில் மேடை ஏறினார் என்கிற வரலாறு, எனக்குத் தெரிய, தொடர்ந்து 60 ஆண்டுகள் ஒரு பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்த வரலாறு வேறு யாருக்கும் கிடையாது.
10 வயதிலே மேடையேறிய ஒருவர், இன்றைக்கு 90 ஆவது வயதிலும் மேடை ஏறிக் கொண்டிருக் கின்ற தலைவர், இந்தியாவில் என்ன? உலகத்தி லேயே இருக்க முடியாது என்பதை - நான் வரலாற்றை ஓரளவு படித்தவன் என்கிற முறையிலே தெரிவித்துக் கொள்கின்றேன்.
டார்பிடோ ஏ.பி.ஜனார்த்தனம்,
பெரியாரிடம் அறிமுகப்படுத்துகிறார்!
அதன் பிறகு, அந்த நிகழ்ச்சி முடிந்ததற்குப் பிறகு, 1944 ஜூலை 29 ஆம் தேதி, நீதிக்கட்சியின் மாகாண மாநாடு சேலத்தில் நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு - தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் கழக மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டிற்கு தந்தை பெரியார் வருகிறார். அங்கே டார்பிடோ ஏ.பி.ஜனார்த் தனம், அண்ணன் வீரமணியை அழைத்துக்கொண்டு போய், ‘‘இந்த மாணவன், நம்முடைய இயக்க உணர் வுள்ளவனாக ஆசிரியர் திராவிட மணி வளர்த்தி ருக்கிறார்'' என்று சொல்லிவிட்டு, ‘‘நன்றாக மேடையில் பேசுகிறான்'' என்று சொன்னார்.
அண்ணன் அவர்கள், பிரமித்துப் போய், பெருமிதத் தினால், பெருமையினால் அப்படியே அயர்ந்து போய் நிற்கிறார்.
பெரியார் அவர்கள், ‘‘உன்னுடைய வயது என்ன? என்ன படிக்கிறாய்?'' என்று கேட்கிறார்.
‘‘நான் அய்ந்தாம் வகுப்பு படிக்கிறேன்'' என்று சொல்லுகிறார் அண்ணன் வீரமணி.
‘‘நீ நன்றாகப் படி!’’ என்று சொல்லுகிறார்கள்.
திண்ணைப் பள்ளிக்கூடத்தில்
சொல்லிக் கொடுத்தவர் சொர்ணத்தம்மாள்!
ஏனென்றால், அவர்களுக்குத் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுத்தவர் யார் தெரியுமா?
சொர்ணத்தம்மாள்.
சொர்ணத்தம்மாள் வேறு யாருமல்ல, ‘ஞானபீட' விருது வாங்கிய ஜெயகாந்தனுடைய சொந்த அத்தை தான் அவர்.
அவர்தான் அண்ணன் வீரமணிக்குத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பில் சொல்லிக் கொடுத் தவர். அங்கேயே 2 ஆம் வகுப்பு, 3 ஆம் வகுப்பு படித்த பிறகு, கடலூரிலேயே பள்ளி இறுதி வகுப்புவரை படித்துவிட்டு, அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்குச் செல்கிறார்.
வேறு யாருக்கும் இந்தப் பெருமை கிடைக்காது!
1944 ஆம் ஆண்டிலேயே, அவர் திராவிடர் கழகக் கூட்டங்களில் பேசுவதற்கு முன்பு, சேலத்தில் நடை பெறுகின்ற மாநாட்டிற்குச் செல்கின்றார். இந்த வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது.
சேலத்தில் நடைபெறுகின்ற மாநாட்டிற்கு, ‘ஜஸ்டிஸ்’ கட்சி என்ற பெயரை மாற்றுகின்ற அந்த மாநாட்டிற்குச் சென்று, ஆகஸ்ட் 27, 1944 இல் நடைபெற்ற அந்த மாநாட்டில், திராவிடர் கழகம் என்ற தீர்மானத்தை அண்ணா அவர்கள் கொண்டு வந்தார்கள் அல்லவா - அந்தத் தீர்மானத்தை வழிமொழிந்து பேசுகிறார் அண்ணன் வீரமணி அவர்கள். இந்தப் பெருமை வேறு யாருக்கும் தமிழ்நாட்டில் கிடைக்காது. அந்த மாநாட்டில் பேசிய யாராவது ஒருவர் இன்றைக்கு இருக்கிறார்கள் என்று சொன்னால், அது அண்ணன் வீரமணியைத் தவிர வேறு யாரும் கிடையாது.
வறுமை வாட்டுகிறது; படிப்பை நிறுத்துகின்ற சூழ்நிலை ஏற்படுகிறது
அப்படி இந்த உணர்வோடு அவர் வளர்ந்து வந்த காலத்தில், அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்குச் செல்கிறார்; அவருடைய தந்தையார் நல்ல தையற் கலைஞர் - ஒரு நடுத்தரக் குடும்பம் - செல்வந்தர் குடும்பம் அல்ல. ஆகவே, அவர் தொடர்ந்து படிக்க முடியவில்லை; வறுமை வாட்டுகிறது; படிப்பை நிறுத்துகின்ற சூழ்நிலை ஏற்படுகிறது.
அந்தக் காலகட்டத்தில், காலையில் மதுரை பாசஞ்ஜர் ரயில் வரும்; விடியற்காலை 4.30 மணிக்கு எழுந்து, அந்த ரயிலைப் பிடித்து, அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்குப் போய்விட்டு, இரவு 9.30 மணிக்கு மீண்டும் ரயில் நிலையத்திற்கு வந்து, வீட்டிற்குச் செல்வதற்கு இரவு 12.30 மணியாகும்.
மீண்டும் 4.30 மணிக்கு எழுந்து, விடியற்காலையில் ரயிலைப் பிடித்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத் திற்குப் போவார்.
அதற்கும் இப்பொழுது இடையூறு வந்துவிட்டது; வருமானம் இல்லை; பல்கலைக் கழகப் படிப்பை முடிக் காமலேயே, ரயில் நிலையத்திற்கு அருகே ‘‘தமிழர் தேநீர் விடுதி'' என்ற பெயரில் தேநீர்க் கடையை தொடங்குகிறார்.
அறிஞர் அண்ணாவோடு
மணவிழாவிற்குச் செல்கிறார்!
அங்கே தென்னார்க்காடு மாவட்ட அன்றைய திராவிடர் கழக செயலாளர் சாம்பசிவம் வந்து பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு கார் வந்து நிற்கிறது; அந்தக் காரில் அறிஞர் அண்ணா இருக்கிறார்; அண்ணா விடத்தில், இவரைப்பற்றி சொன்னவுடன், ‘‘அவர் குறிஞ்சிப்பாடிக்கு வரவேண்டும் அல்லவா? அவரையும் காரில் ஏற்றிக் கொள்ளலாம்'' என்று அண்ணன் வீரமணி அவர்களை காரில் ஏற்றிக்கொண்டு செல்கிறார்.
வழியில் போகும்பொழுது, ‘‘படிப்பு எப்படி இருக் கிறது?'' என்று அறிஞர் அண்ணா கேட்கிறார்.
வறுமையின் காரணமாக கல்லூரிக் கட்டணம் செலுத்த முடியவில்லை; ஆகவே, கல்லூரியிலிருந்து நிற்கப் போகிறேன் என்று சொல்லுகிறார்.
திருமண மண்டபத்திற்கு முன்பு கார் வந்து நின்றது. எல்லோரும் திருமணத்திற்குச் சென்றார்கள்.
திரும்பிப் போகும்பொழுது, ‘‘நான் குறிஞ்சிப்பாடிக்குக் கடலூர் வழியாகத்தான் போகிறேன், நீ காரில் ஏறிக் கொள்'' என்று அண்ணா அவர்கள் சொல்கிறார்.
உன்னை பட்டதாரியாக ஆக்குவது
என் பொறுப்பு என்கிறார் அண்ணா!
அப்படி சொல்லிவிட்டு, ‘‘நீ காஞ்சிபுரத்திற்கு வந்து விடு; உன்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்த்து விடுகிறேன்; பணப் பிரச்சினை ஒன்றுமில்லை; உன்னை பட்டதாரியாக ஆக்குவது என் பொறுப்பு'' என்று அண்ணா அவர்கள் சொன்னார்.
‘‘யோசிக்கிறேன்'' என்று அண்ணன் வீரமணி சொல்கிறார்.
வீட்டிற்கு வருகிறார்; வீட்டில் அனைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தை - அறிஞர் அண்ணாவை ஆத ரிக்கிறவர்கள். திராவிடர் கழகத்தை ஆதரிக்கின்றவர் இவர் ஒருவர்தான்.
அவர்களிடத்தில் சொல்கிறார், ‘‘அண்ணா அவர்கள் காஞ்சிபுரத்திற்கு வா என்று அழைத்தார், நான் யோசிக் கிறேன் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்''
என்றார்.
நான் கடைசிவரையிலும் பெரியாரோடுதான் இருப்பேன் என்கிறார்!
உடனே அவருடைய குடும்பத்தினர்,
‘‘நீ பெரியாருடைய ஆளாயிற்றே? பிறகு வேறு எப்படி இருப்பாய்?'' என்று சொன்னார்கள்.
‘‘ஆமாம், நான் பெரியாருடைய ஆள்தான்; நீங்கள் என்ன சொன்னாலும் சரி, நான் கடைசி வரையிலும் பெரியாரோடுதான் இருப்பேன்'' என்று சொன்னார்.
அன்று சொன்னதை நிலைநாட்டி இருக்கிறார்.
இதையெல்லாம் அவருடைய வாழ்க்கை வரலாற் றைப் படிக்கின்றபொழுது, ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர் எப்படி கடந்து வருகிறார் என்பதைப் பார்க்கிறேன்.
1944 ஆம் ஆண்டு, திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டியதற்குப் பிறகு, இவர் ஒவ்வொரு ஊருக்கும் சென்று பேசுகிறார்; திருத்துறைப்பூண்டியில் கொடி யேற்றி உரையாற்றுகிறார். மதுரைக்குச் சென்று பெரியார் படத்தைத் திறந்து வைக்கிறார்.
14 வயதிலேயே பெரியார் படத்தைத் திறந்து வைத்தவர் அண்ணன் வீரமணி!
14 வயதான அண்ணன் வீரமணி அவர்களைக் கொண்டு, மதுரையில், பெரியார் படத்தைத் திறந்து வைக்கின்ற நிகழ்ச்சியை, ஏராளமான தோழர்கள் திரண்டு நடத்துகிறார்கள்.
கல்லூரி கட்டணம் செலுத்தவேண்டும் அல்லவா! இவருடைய படிப்பிற்காக நிதி திரட்டுவதற்காக - நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்கள், நாடகம் நடத்துகிறார். அப்படி திரட்டிய 50 ரூபாய் நிதியை தந்தை பெரியாரிடம் கொடுக்கிறார்கள். அவர் அந்தப் பணத் தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, 100 ரூபாய் மணி யார்டரை அண்ணன் வீரமணி அவர்களுக்கு அனுப்பி வைக்கிறார்.
தான் வாங்கிய ‘‘கோல்டு மெடலை’’
பெரியாரிடம் காண்பித்தார்!
100 ரூபாய் என்பது நினைத்துப் பார்க்க முடியாத தொகை அந்தக் காலகட்டத்தில். அவ்வளவு பெரிய தொகையை அனுப்பியதால், அவர் படித்து முடித்து, ‘‘கோல்டு மெடல்’’ வாங்கினார். தந்தை பெரியார் அவர்களிடம் சென்று, அந்தக் கோல்டு மெடலைக் காட்டி, நான் கோல்டு மெடலை வாங்கிவிட்டேன். நீங்கள் 100 ரூபாய் மணியார்டரை எனக்கு அனுப் பினீர்கள் அல்லவா! என்கிறார்.
நான் அனுப்பினேனா? எனக்கு ஞாபகம் இல்லையே என்று பெரியார் அவர்கள் சொல்கிறார்.
இப்படி பெரியார் அவர்களோடு இணைந்த அந்த வாழ்க்கையில், அடுத்து திருமணம் வருகிறது.
நீங்கள் சொன்னால் திருமணம் செய்துகொள்கிறேன்!
பெரியார் அவர்கள், ‘‘நான் ஒரு பெண் பார்த்து வைத்திருக்கிறேன்; நீங்கள் போய் பார்த்துவிட்டு வரு கிறீர்களா?’’ என்று.
‘‘நீங்கள் பார்த்துவிட்டீர்கள் அல்லவா? பிறகு நான் ஏன் பார்க்கவேண்டும்; நீங்கள் சொன்னால், நான் திருமணம் செய்துகொள்கிறேன்’’ என்று அண்ணன் வீரமணி அவர்கள் சொல்கிறார்.
கோட்டையூர் சிதம்பரம் - ரங்கம்மாள் ஆகியோரின் மகள் மோகனா. அவருக்கும் - அண்ணன் வீரமணிக்கும் திருமணம் சீர்திருத்த திருமணமாக நடைபெறுகிறது.
அந்தத் திருமணத்தில் உறுதிமொழி எடுக்கிறார்கள் - அப்பொழுது அண்ணன் வீரமணி பேசுகிறார், என்ன பேசுகிறார் தெரியுமா?
சிறைதான் எங்களுக்கு
மாமியார் வீடு என்றார்!
அப்பொழுது தேசப்படத்தை - தமிழ்நாடு தவிர மற்ற இந்தியப் பகுதிகளையெல்லாம் தீயிட்டுக் கொளுத்துவது என்று பெரியார் ஒரு போராட் டத்தை அறிவித்திருந்தார்.
அந்தத் திருமணத்தில் நன்றியுரை ஆற்றும் பொழுது அண்ணன் வீரமணி சொல்கிறார், ‘‘நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்; இந்தப் போராட்டத்தில் நாங்கள் இரண்டு பேரும் கலந்துகொண்டு, இந்திய தேசிய வரைப்படத்தைத் தீயிட்டுக் கொளுத்துவோம். சிறைதான் எங்களுக்கு மாமியார் வீடு’’ என்று சொல்கிறார்.
மறுநாள் தினத்தந்தி நாளிதழில், எட்டுக் காலத்தில் செய்தி- ‘‘எங்களுக்கு மாமியார் வீடு ஜெயில்தான்; புதுமணமக்கள் சபதம்!’’ என்ற தலைப்பில் வெளியிடுகிறார்கள்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின்
அகவல்பா!
அந்தத் திருமணத்திற்குப் புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் அவர்கள் 42 வரிகள் கொண்டு அகவல்பாவை வாழ்த்தாகச் சொல்கிறார்.
அந்த அகவல்பாவில் முதல் மூன்று வரிகளில்,
‘‘இளமை வளமையை விரும்பும் என்பார்
ஆனால், இளமை எளிமையை விரும்புகின்ற
புதுமையை நான் இங்கு வீரமணியிடத்தில் கண் டேன்’’
என்று சொல்கின்றார்.
அந்தத் திருமணத்திற்குப் பிறகு அவருடைய வாழ்க் கையில் எவ்வளவோ நிகழ்வுகள் நடைபெறுகின்றன
ஒரே ஒரு நிகழ்வை மட்டும் இங்கே நான் குறிப்பிட விரும்புகின்றேன்.
என்றும் இல்லாத பதற்றத்தோடு
அண்ணன் வீரமணி பேசினார்
நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபொழுது, நண்பகல் வீட்டிற்கு வந்திருந்தபொழுது, எனக்குத் ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது; தழுதழுத்த குரலில், தடுமாற்றக் குரலில், என்றும் இல்லாத பதற்றத்தோடு அண்ணன் வீரமணி பேசுகிறார்.
‘‘நான் வீரமணி பேசுகிறேன்’’ என்று சொல்லுகிறார்.
‘‘என்ன அண்ணே, ரொம்பப் பதற்றமாகப் பேசு கிறீர்களே?’’ என்றேன்.
பெரியார் மய்யத்தை இடிக்கிறார்கள்; எப்படியாவது தடுத்து நிறுத்துங்கள் என்றார்!
‘‘பெரியார் மய்யத்தை புல்டோசர் கொண்டு இடித்துக் கொண்டிருக்கிறார்கள். பாதி இடித்துவிட்டார்கள்; எப்படி யாவது அதைத் தடுத்து நிறுத்தவேண்டும் நீங்கள்’’ என்று சொல்கிறார்.
உணவுகூட அருந்தாமல் உடனே நான், அந்தத் துறை அமைச்சர் அனந்தகுமார் அவர்களை சந்தித்தேன். அவர், லெப்டினன் கவர்னரை தொலைப்பேசியில் தொடர்புகொள்கிறார். ஆனால், அவருடைய தொலைப் பேசி சுவிட்ச் ஆஃப்பில் இருக்கிறது.
உடனே உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி மூலம் முயற்சி செய்யலாம் என்றபொழுது, அவர் முக்கியமான நிகழ்வில் இருக்கிறார்; அவர் வெளியே வர முடியாது என்று சொல்கிறார்கள்.
அதற்குள், பெரியார் மய்யம் முழுவதையும் இடித்து முடித்துவிட்டார்கள். முழுவதையும் தரைமட்டமாக்கி விட்டார்கள்.
பிரதமரை சந்திக்க
ஏற்பாடு செய்யுங்கள்!
மறுநாள் காலையில் நான் அந்த இடத்திற்குச் சென்றேன். சந்திரஜித் யாதவும் அங்கே வந்திருந்தார். நாங்கள் கண்ணீர் வடித்துவிட்டு, திரும்பி வருகையில், அண்ணன் வீரமணி அவர்கள் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, ‘‘நான் உடனே டில்லிக்கு வருகிறேன்; நீங்கள் பிரதமரைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள்’’ என்கிறார்.
உள்துறை அமைச்சர் அத்வானியிடம் பெரியார் மய்யம் இடிக்கப்பட்ட செய்தியை சொன்னேன்.
‘‘அப்படியா? பெரியார் மய்யத்தை இடித்துவிட்டார் களா? இது பெரிய கொடுமை! இந்தக் கொடுமையைத் தாங்கிக் கொள்ள முடியாது. இன்று மாலையில் நான் பிரதமரைப் பார்க்கப் போகிறேன்’’ என்றார்.
நானும், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங், இரா.செழியன் அண்ணன், அண்ணன் வீரமணி ஆகியோர் சென்றோம்.
அண்ணன் வீரமணி அவர்கள், வீட்டிற்கு வந்து, என் கைகளைப் பிடித்துக்கொண்டு, அவர் கண்களில் திரண்ட கண்ணீரை - நான் இந்தக் கூட்டத்திற்காகச் சொல்லவில்லை; என்னால் என்றைக்கும் மறக்க முடியாது.
‘‘எனக்கு வீரமணியை நன்றாகத் தெரியுமே!’’ என்றார் பிரதமர் வாஜ்பேயி!
மாலை 4.30 மணியளவில் பிரதமர் வாஜ்பேயி அவர்களை சந்திக்கின்றோம்.
பிரதமர் வாஜ்பேயி அவர்களிடம், ‘‘இவர்தான் வீரமணி’’ என்றேன்.
‘‘எனக்கு அவரைப்பற்றி நன்றாகத் தெரியுமே? தேர்தலில் போட்டியிடமாட்டார்கள், திராவிடர் கழகத் தினர். அவர்கள் தனி நாடு கேட்டவர்கள்’’ என்றார்.
(இன்றைக்கும் அந்தக் கொள்கை எங்களுடைய உள்ளத்தின் ஆழத்தில் இருக்கிறது; எங்களையும் அங்கே கொண்டு போய் சேர்த்துவிடாதீர்கள் என்றார் வைகோ அவர்கள்).
பெரியார் மய்யத்தை மீண்டும் எழுப்பித் தாருங்கள் என்றோம்!
நான் கேட்டேன், ‘‘திலகருக்கு சிலை இருக்கிறது; நேருவுக்கு சிலை இருக்கிறது; திலகர் பெயரிலேயே மைதானம் இருக்கிறது. எங்களுடைய தலைவர்களின் பெயர்கள் டில்லியில் இருக்கிறதா? இல்லையே! பெரியார் மய்யத்தை மீண்டும் எழுப்பித் தாருங்கள்’’ என்று சொன்னேன்.
நான் மிக உரிமையோடு வாஜ்பேயி அவர்களிடம் பேசக்கூடியவன் என்று எல்லோருக்கும் தெரியும்.
‘‘பதற்றப்படாதீர்கள், கோபப்படாதீர்கள்’’ என்று சொல்லிவிட்டு, அமைச்சர் அனந்தகுமாரை தொலைப் பேசியில் தொடர்புகொண்டு, ‘‘பெரியார் மய்யத்தை இடித்துவிட்டார்களாம்; அதைவிட நல்ல இடமாக - அவர்கள் எந்த இடத்தைக் கேட்கிறார்களோ, அந்த இடத்தைக் கொடுங்கள்; மிஸ்டர் வீரமணி அவர்கள், வைகோவுடன் வருவார்’’ என்று சொன்னார்.
பெரியார் மய்யம் முன்பு இருந்த இடத்தைவிட, நூறு மடங்கு அதிக மதிப்புள்ள அப்பல்லோ மருத்துவ மனைக்கு அருகில், பெரியார் மய்யத்திற்கு இடம் கிடைத்தது. அங்கே பெரியார் மய்யமும் எழுப்பப் பட்டுவிட்டது; முன்பு பறிபோன அந்த இடமும் கிடைத்து விட்டது.
என் வாழ்க்கையில் மகிழ்ச்சியடைகின்ற பணிகளில் ஒன்று இது!
ஆகவே, என்னுடைய வாழ்க்கையில் நான் ஏதாவது ஒரு காரியத்தை செய்தேன் என்று மகிழ்ச்சியடைகின்றேன் என்றால், அந்தக் காரியங்களில் இதுவும் ஒன்று என்று நான் கருதுகின்றேன்.
காலம் விரைந்து கொண்டிருக்கின்றது; தளபதி அவர்கள் பேசவேண்டும்.
சனாதன சக்திகளை வீழ்த்துவதற்கு அண்ணன் வீரமணி அவர்களுடைய ஆலோசனை அவசியம்!
இன்றைய அரசியலில், சனாதன சக்திகளை வீழ்த்து வதற்கு அண்ணன் வீரமணி அவர்களுடைய ஆலோ சனையோடு, தளபதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில், இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய இடத்தில், நாம் உறுதியாக இருப்போம். உறுதியாக இருந்து பாடுபடு வோம் என்று இந்த நேரத்தில் சொல்லுகின்ற அதே வேளையில், நான் அண்ணன் வீரமணி அவர்களுக்குச் சொல்வேன்,
கவிஞர் காசி ஆனந்தனின் கவிதை,
‘‘ஒலித்தது காண்!
திசை எட்டும்
வீரமணியின் ஓசை!
ஒலித்தது காண்!
திசை எட்டும்
வீரமணியின் ஓசை!
புலியென புறப்பட்டான் தமிழன்
பொங்கிற்று எங்கும் எழுச்சி வெள்ளம்
மேனி சிலிர்த்ததடா -
தென்னாடு சிவந்ததடா!’’
என்ற அந்தப் பாடல் வரிகளோடு,
நீங்கள் நூறாண்டு கடந்து வாழ்க!
120 ஆண்டு கடந்து வாழ்க!
உங்களுக்கு வயதில்லை!
நீங்கள் வலுவாக, நலமாக இருந்தால்தான், எங்கள் தளபதிக்கு அது நலமாக, வளமாக இருக்கும்!
நீங்கள் இதே உடல்நலத்தோடு, அதிகமான அலைச் சலைக் குறைத்துக்கொண்டு - பயணத்தைக் குறைத்துக் கொண்டு - நீங்கள் 120 ஆண்டுகளுக்கு மேலும் வாழ வேண்டும் - வாழ்ந்து ஒரு சரித்திரத்தைப் படைக்க வேண்டும்!
நீங்கள் வலுவாக, நலமாக இருந்தால்தான், எங்கள் தளபதிக்கு அது நலமாக, வளமாக இருக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து,
120 ஆண்டு கடந்து வாழ்க!
நலமோடு வாழ்க! வளமோடு வாழ்க!
வாழ்க அண்ணன் வீரமணி!
நூறாண்டு கடந்து வாழ்க!
120 ஆண்டு கடந்து வாழ்க!
நலமோடு வாழ்க!
வளமோடு வாழ்க!
எங்கள் முதலமைச்சருக்கு ஆலோசனை சொல்லி வாழ்க என்று கூறி, விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., அவர்கள் உரையாற்றினார்.
No comments:
Post a Comment