- மக்களவையில் கனிமொழி எம்.பி., கேள்வி -
புதுடில்லி, டிச.9 மக்களவையில் விளையாட்டுத் துறை மேம்பாடு பற்றிய விவாதம் நேற்று (8.12.2022) நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை திமுக துணைத் தலைவரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி உரையாற்றினார்.
அவரது உரை விவரம் வருமாறு:
“விளையாட்டு என்பது நமது பாடத் திட்டத்தின் ஓர் அங்கமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல. பாடத் திட்டத்தில் விளையாட்டு என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். இன்று பல்வேறு பள்ளிகளிலும் குறிப்பாக பல தனியார் பள்ளிகளிலும் விளையாட்டு மைதானம் என்பதே இல்லாத நிலை நிலவுகிறது. பள்ளிகளுக்கான விளம்பரங்களில் வகுப்பறைகள் குளிரூட்டப்பட்ட தாக இருக்கின்றன என்று விளம்பரப் படுத்தப்படுவதை பார்க்கிறோம். ஆனால் மாணவச் செல்வங்கள் வெளியே வந்து விளையாட அங்கே மைதானங்கள் இருப்பதில்லை.
குழந்தைகளை விளையாட அனுமதிக்கவில்லை என் றால், விளையாட்டின் மூலம் அவர்கள் குழு உணர்வை கற்றுக் கொள்ளவில்லை என்றால், அவர்கள் எவ்வாறு ஆரோக்கியமான வாழ்வை பெறுவார்கள்? ஒற்றுமையாக இருப்பதன் முக்கியத்துவத்தை விளையாட்டின் மூலமாக அல்லாமல், அவர்கள் வேறு எவ்வாறு உணர்வார்கள்? ஒருவேளை, 'ஒற்றுமையாக இருங்கள்' என்பது இப்போதைய காலகட்டங்களில் நல்ல வார்த்தைகளாக அல்லாமல் போயிருக்கலாம்.
ஆனால், என்னைப் பொறுத்தவரை குழு உணர்வு என்பதும் வேறுபாடுகளைக் கடந்து மக்கள் ஒற்றுமைப்படுவது என்பதும் மிக முக்கியமான விஷயங்கள். இவற்றை நாம் குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும்.
இந்தியாவின் பலம் என்பது கிராமங்களிலும் ஊரகப் பகுதிகளிலும் இருக்கிறது என்று நாம் பேசி வருகிறோம். ஆனால், அப்பேர்ப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குழந்தை களின் விளையாட்டுத் திறனை நாம் ஊக்குவிக்கிறோமா? இது தொடர்பாக நாம் கிராமத்து குழந்தைகளை சென்ற டைந்திருக்கிறோமா? அவர்களுக்கு ஆதரவையும் உதவியை யும் நாம் அளித்திருக்கிறோமா என்ற பல கேள்விகள் நம் முன் எழுகின்றன.
எவ்வாறு பயிற்சி மேற்கொள்வார்கள்?
அவர்களின் கனவுகள் என்ன ஆகும்?
எனது தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் குறிப்பாக கோவில்பட்டி பகுதியில் குழந்தைகள் இப்போது 'ஹாக்கி' விளையாடுவதை பெரிதும் விரும்புகிறார்கள். ஹாக்கி விளையாட விரும்பும் அவர்களில் எத்தனை பேரால் 'ஹாக்கி' ஸ்டிக் வாங்கிவிட முடிகிறது? அவர்கள் எத்தனை பேரால் விளையாட்டுக்கான காலணிகளையும் உடைகளையும் வாங்கி விட முடிகிறது? அவர்களை நாம் எவ்வாறு சென்று சேர்ந்து உதவப் போகிறோம்? பெரும்பாலான பகுதிகளில் 'ஹாக்கி' விளையாட்டுக்கான பிரத்தியேக புல் தரை மைதா னங்களே இல்லை. தடகள விளையாட்டு ஆர்வம் கொண்டு ஓட விரும்பும் குழந்தைகளுக்கு ஓட்டப் பயிற்சிக்கான பாதைகள் இல்லை. பின் அவர்கள் எவ்வாறு பயிற்சி மேற்கொள்வார்கள்? அவர்களின் கனவுகள் என்ன ஆகும்?
நகர் பகுதிகளிலும் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இருக் கும் குழந்தைகளுக்கு கிடைக்கும் வசதிகளை கிராமத்துக் குழந்தைகள் எப்படி பெறப் போகிறார்கள்?
இந்திய அரசு ஃபிட் இந்தியா இயக்கம் மற்றும் சமக்கர சிக்ஷா அபியான் திட்டங்கள் மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வருகிறது. ஆனால், இந்த திட்டங்களின் மூலம் சில பள்ளிகளே மேற்கண்ட உதவி களை பெறுகின்றன. கணிசமான பள்ளிகள் இத்திட்டங்கள் மூலம் எந்த உதவியும் பெற முடியாமல் தான் இருக்கின்றன என்பது வேதனையான விஷயம்.
விளையாட்டு வீரர்களுக்கு
எவ்வாறு நீதி கிடைக்கும்?
நம் நாட்டின் முக்கியமான விளையாட்டு அமைப்புகள் எல்லாம் அரசியலோடு பிணைந்து இருக்கின்றன. அரசியல் வாதிகளால் செல்வாக்கு செலுத்தப்படுகின்றன. அதிகார விளையாட்டுகளும் ஊழலும்தான் அவற்றில் நடக்கின்றன. விளையாட்டு அமைப்புகளை அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் கட்டுப்படுத்துவதை உறுப்பினர்களில் பலரும் குறிப்பிட்டார்கள். அந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தான், யார் விளையாட தேர்வாக வேண்டும் என்பதை தீர் மானிக்கிறார்கள். பாரபட்சம் இல்லாமல் அங்கு எதுவும் நடப்பதில்லை. இந்த சூழலில் விளையாட்டு வீரர்களுக்கு எவ்வாறு நீதி கிடைக்கும்?
இங்கே எனக்கு முன்பாக பேசிய உறுப்பினர் மர்கானி பாரத் துரோணாச்சாரியார்பற்றி பேசினார். நான் இந்த இடத்தில் துரோணாச்சாரியாரின் வாழ்வில் நடந்த இன்னொரு நிகழ்வைப் பற்றி சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அது ஏகலை வனை பற்றியது. ஏகலைவன் தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவன். அதாவது பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவன். அவன் வில் வித்தையில் சிறந்த நிபுணத்துவம் பெற்று இருந்தான். அர்ஜுனனை விட சிறந்த வில்வித்தை பெற்றிருந்தான். ஆனால் அவன் பழங்குடி இனத்தில் இருந்து வந்ததால் அவனது கட்டைவிரலை இழக்க நேரிட்டது. மிகச் சிறந்த ஆசிரியர் என போற்றப்படும் துரோணாச்சாரியார் தனது மாணவன் ஏகலைவனிடம் இருந்து அவனது கட்டைவிரலை தட்சணையாக கேட்டார். அன்று தொடங்கிய விளையாட்டில் ஜாதி அரசியல் இன்னும் முடிந்துவிடவில்லை.
தீண்டாமைக் கொடுமைகள் நடக்கும்போது...
ஜாதி ரீதியான அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் விளையாட்டுத் துறையில் இன்றும் நிலவுகிறது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த எத்தனை குழந்தைகள், எத்தனை பெண்கள் ஆர்வம் இருந்தும் விளையாட்டுத் துறையில் வாய்ப்புகள் பெற்றிருக்கிறார்கள்? கிராமங்களில் ஒருவரை ஒருவர் தொட்டு விடக்கூடாது, ஒருவரது தெருவில் இன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர் நடந்து விடக்கூடாது என்ற தீண்டாமைக் கொடுமைகள் நடக்கும்போது அனைத்து குழந்தைகளும் ஒன்றாக விளையாட எப்படி அனுமதிக்கப் படுவார்கள்? அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
குறிப்பாக குழுவாக சேர்ந்து விளையாட வேண்டிய 'கபடி', 'ஹாக்கி' போட்டிகளில் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அப்படி புறக்கணிக்கப்பட்ட மக்களை நாம் அதாவது அரசாங்கம் எப்படி சென்று சேரப் போகிறோம்? அந்த மக்களுக்கு நீதியை இந்த அரசாங்கம் எவ்வாறு உறுதிப் படுத்தப் போகிறது? விளையாட்டுத்துறையில் இட ஒதுக்கீடு கொண்டு வருவதைப் பற்றி நான் இங்கே பேசவில்லை. ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளுக்கு நிச்சயம் நாம் செய்ய வேண்டும்.
விளையாட்டுத் துறைக்கு வரும் பெண்களை நாம் எவ்வாறு பாதுகாக்கப் போகிறோம்?
விளையாட்டுத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை நீங்கள் அறிவீர்கள். விளையாட்டுத் துறையில் ஈடுபடும் பெண்கள் அவர்களது குடும்பத்தினரை சம்மதிக்க வைப்பது எளிதல்ல. அதைத் தாண்டி அவர்கள் விளையாட வரும்போது பாலியல் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள வேண்டி இருப்பதையும் நாம் அறிகிறோம். விளையாட்டுத் துறைக்கு வரும் இப்படிப்பட்ட பெண்களை நாம் எவ்வாறு பாதுகாக்க போகிறோம்?
பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்கு நாம் என்ன மாதிரியான முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம்? யாரும் இதுபற்றிப் பேசுவதில்லை, யாரும் இதுபற்றிக் கவலைப்படுவதில்லை . சாதாரண மனிதர்களுக்கு உள்ள திறமைகளை வெளிப் படுத்தும் அத்தனை உரிமைகளும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உள்ளது. மூன்றாம் பாலினத்தவருக்கு விளையாட்டுத்துறையில் இப்போது இடமே இல்லை. விளையாட்டுத் துறை வளர்ந்து கொண்டே இருக்கிறது. விளையாட்டு துறையில் அறிவியலை நாம் பயன்படுத்தவேண்டும். தடகள போட்டிகளில் விளை யாடும் பலர் காயமடைகிறார்கள். அதற்கான மருத்துவச் சிகிச்சைகளை எவ்வாறு பெறுவது என்பது கூட அவர்களுக்கு தெரியாததால் அவர்களின் விளையாட்டு வாழ்வே முடிந்து போகிறது. இவர்களுக்கெல்லாம் எப்படி நாம் உதவிக்கரம் நீட்ட போகிறோம்?
விளையாட்டில் ஈடுபடும் வீரர் வீராங்கனைகளுக்கு உயர்தர புரோட்டீன் தேவை. ஆனால் இந்த அரசு உயர்தர புரோட்டீன் உணவு வகைகளை அங்கீகரிக்கவில்லை. அதிகமான ஆற்றலை வெளிப்படுத்தி விளையாடும் வீரர் வீராங்கனைகளுக்கு உயர்தர புரோட்டீன்கள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட உணவு முறை களைப் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டும். விளையாட்டுத் துறையில் இன்னும் அதிகமானவர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றால் அவர்களுக்கான உயர்தர ஊட்டச்சத்து உணவு, அறிவியல் ஆகியவற்றை விளையாட்டுத் துறையில் பயன்படுத்த வேண்டும். இன்னும் இன்னும் அதிக இளை ஞர்கள் விளையாட்டு துறையில் ஈடுபடுவது ஊக்குவிக்கப்பட வேண்டும்.
நீச்சல் விளையாட்டு விஷயத்தில் நான் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். கடற்கரை ஓர மக்களிலிருந்து எத்தனை பேர் நீச்சல் விளையாட்டு வீரர்களாக உருவாகி இருக்கிறார்கள்? கடற்கரை பகுதிகளில் இருந்து ஒற்றை நீச்சல் வீரர் கூட இதுவரை உருவாகவில்லை. அவர்கள் நீந்துவதற்காகவே பிறந்தவர்கள். ஆனால் அவர்களை நாம் ஊக்கப் படுத்து வதில்லை. இது போன்ற பல்வேறு விஷயங்களை விளை யாட்டுத் துறையில் நாம் பரிசீலிக்கவேண்டும்” என்று இந்த விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி உரையாற்றினார்.
No comments:
Post a Comment