ஜனநாயகத்தின் ஆணிவேராகக் கருதப்படுகிறது தேர்தல். தேர்தல் களம் என்பது, நேர்மையான வெளிப்படையான சமதளமாக இருக்க வேண்டும்.
அவ்வாறு சமதளமாக இருக்க தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையம் சுதந்திரமானதாகவும், நேர்மையானதாகவும் ஒவ்வொருவரின் ஜனநாயக உரிமையையும் காக்க எந்த நிலையிலும் மன உறுதி கொண்டவர்களை உடைய தாகவும் இருக்க வேண்டும்.
இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 324 நேர்மையான தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடு செய்கிறது. இதற்காக தேர்தல் ஆணையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு தலைமைத் தேர்தல் அதிகாரியும், இரண்டு துணைத் தேர்தல் அதிகாரிகளும் இருப்பார்கள்.
நேர்மையான தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்க வேண்டும். எனவேதான் தலைமை தேர்தல் ஆணையரை நீக்குவது அரசிற்கு சாத்தியமில்லை.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பதவிகளுக்குப் பாதுகாப்பு அளித்திருப்பது போல, தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவிக்கும் அரசமைப்புச் சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது. ஆனால், இந்தப் பாதுகாப்பு மற்ற தேர்தல் ஆணையர்களுக்கு இல்லை.
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு பதவி பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருப்பினும் அவரை நியமிப்பது ஒன்றிய அரசே ஆகும். அதேபோல மற்ற தேர்தல் ஆணையர்களையும் ஒன்றிய அரசே நியமிக்கிறது.தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் 65 வயது முடியும் வரை அல்லது ஆறு ஆண்டுகள் ஆகும்.
1950ஆம் ஆண்டுகளில் நியமிக்கப் பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் 8 ஆண்டுகளுக்கும் மேல் பணியில் இருந்தார். ஆனால், அண்மைக் காலமாக குறிப்பாக 2004ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் தேர்தல் ஆணையர்கள் பதவியில் இருக்கும் காலம் சில நூறு நாள்களே ஆகும்.
இத்தகையை சூழல் தேர்தல் ஆணையர்கள் சுதந்திரமாகச் செயல்படுவதைத் தடுக்கிறது என்பதால், உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் ஒன்றிய அரசு மட்டுமே நியமனம் செய்யும் அதிகாரம் இல்லாதது போல, தேர்தல் ஆணையர்களையும் ஆளுகின்ற அரசின் பிரதமரோ அல்லது எதிர்க்கட்சித் தலைவரின் தலையீடோ இன்றி ஓர் அமைப்பால் நியமனம் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
2022 மே மாதம் முதல் ஒரு தேர்தல் ஆணையரின் காலம் முடிவடைந்து ஓர் இடம் காலியாக இருந்த நிலையில், இந்த வழக்கு கடந்த நவம்பரில் விசாரணைக்கு வந்தது.
வழக்கு நடைபெற்று வந்த நிலை யில் திடீரென்று ஒன்றிய அரசின் செயலாளர்களில் ஒருவராக இருந்த அருண் கோயல் அவர்கள் 17.11.2022 அன்று விருப்ப ஓய்வில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
18.11.2022 அன்று பதவி காலி அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கு அருண் கோயலிடம் மனு பெறப்பட்டு, அவர் மனு ஏற்கப்பட்டு, தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். அவர் 20.11.2022 திங்கள் அன்று பணியில் சேர்ந்தார்.
இது உச்சநீதி மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம். பல்வேறு வினாக் களை எழுப்பியது. இதற்குப் பதிலளித்த தலைமை வழக்குரைஞர் “தேர்தல் ஆணையர் நியமனத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலளித்த உச்சநீதிமன்ற நீதிபதி, “எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு அனுசரணையான வளைந்து கொடுக்கக்கூடிய தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வதால் இதில் தலையிட வேண்டிய கட்டாயம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் கருதுகிறது” என்றார்.
மீண்டும் வழக்கு 23.11.2022 அன்று விசாரணைக்கு வந்த போது தேர்தல் ஆணையர் ஆமாம் சாமி போடுகின்ற நபர்களாக இருக்கக் கூடாது என்றும், தேவைப்பட்டால் பிரதமர் பேரிலும் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு திறன் உள்ளவராக தேர்தல் ஆணையர் இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. ஆமாம் சாமி போடுபவராக தேர்தல் ஆணையர் இருப்பாரானால் தேர்தல் ஆணையம் ஒரு செயல் இழந்த அமைப்பாக ஆகிவிடும் என்ற கருத்தையும் தெரிவித்தது.
அரசுக்குப் பணிந்து போகும் ஆமாம் சாமியாக இல்லாமல் வாழ்க்கைக்கு ஆபத்தே வந்தாலும் அதையும் எதிர்கொள்பவர் ஆக தேர்தல் ஆணையர் இருக்க வேண்டும் என்றும், அப்போதுதான் தேர்தல் ஆணையம் ஒரு நேர்மையான தேர்தலை நடத்த முடியும் என்றும் கருத்துத் தெரிவித்தது.
தேர்தல் ஆணையர் சுதந்திரமாக இயங்குபவராக இருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக அரசு சொல்வதை அப்படியே செய்ப வராகவும், எடுப்பார் கைப் பிள்ளையா கவும், ஆமாம் சாமியாகவும் அரசின் கொள்கைக்கு ஒத்துப்போகும் தன்மை உடையவராகவும் உள்ள தேர்தல் ஆணையரைத்தான் எக்கட்சி ஆட்சி யில் இருந்தாலும் நியமனம் செய்கிறது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
அடுத்த நாள் விசாரணையான 23.11.2022 அன்று அருண் கோயல் அவர்களை தேர்தல் ஆணையராக நியமனம் செய்த கோப்புகள் அனைத்தை யும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அரசிற்கு உத்தரவிட்டது.
நீண்ட காலமாக மே மாதம் முதல் நிரப்பப்படாமல் இருக்கையில், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பின்னர் தேர்தல் ஆணையரை நியமனம் செய்தது சரிதானா என்றும் வினா எழுப்பியது. எந்த நடைமுறையைப் பின்பற்றி அருண் கோயல் நியமனம் நடந்தது என்பதை விளக்குமாறு அரசிடம் கேட்டது உச்ச நீதிமன்றம்.
24.11.2022 அன்று விசாரணையின் பொழுது, தேர்தல் ஆணையர் மின்னல் வேகத்தில் நியமனம் செய்யப்பட் டுள்ளார் என்ற கருத்தைத் தெரிவித்த உச்சநீதிமன்றம், அதாவது 17.11.2022 வரை அரசின் செயலராக இருந்த அருண் கோயல் அவர்கள் 18.11.2022 அன்று வேகமாக 24 மணி நேரத்திற்குள் நியமனம் செய்யப்பட்டதைப் பற்றி வினா எழுப்பியது.
அதற்குப் பதில் அளித்த ஒன்றிய அரசின் தலைமை வழக்குரைஞர், 2015ஆம் ஆண்டில் இருந்தே தேர் தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்படுவது இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குள் நடைபெற்று வந்திருப்பதாகத் தெரிவித்தார். மிக வேகமாக அரசு செயல்பட்டால் அதில் குறை காண்பது சரி அல்ல என்றார் தலைமை வழக்குரைஞர்.
விருப்ப ஓய்வில் சென்ற அடுத்த நாளிலேயே அருண் கோயல் நியமனம் செய்யப்பட்டது போல் தான் மற்ற நியமனங்களும் நடந்ததா? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
தேர்தல் ஆணையர் நியமனம் செய்யப்படும்போது இதற்கு முன்னர் அவரின் பதவிக் காலத்தில் எவ்விதக் குறையும் இன்றி செயல்பட்டார் என்பது மட்டும் போதாது என்றும், சுதந்திரமாகவும், தனித்து இயங்கு பவராகவும், எதற்கும் அஞ்சாதவராகவும், தேர்தல் ஆணையர் இருக்க வேண்டும் என்றும், அதற்கான ஓர் அமைப்பை உண்டாக்குவது அவசியம் என்றும் நீதிமன்றம் கருதுவதாகத் தெரிவித்தது.
கோப்பைப் பரிசீலனை செய்ததில் சட்ட அமைச்சர் ஒரு நான்கு நபர்கள் கொண்ட பட்டியலைத் தயார் செய்ததாகவும், அதில் மூன்று நபர்கள் 62 வயதைக் கடந்தவர்களாக இருந்ததையும் சுட்டிக் காட்டியது உச்சநீதிமன்றம்.
நியமிக்கப்படும் தேர்தல் ஆணை யர்கள் 6 ஆண்டுகள் பணி செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்றும், அரசின் அதிகாரிகளை மட்டும் நியமனம் செய்யாமல் அதையும் தாண்டி நியமனம் இருக்க வேண்டும் என்றும், தலைமைத் தேர்தல் அதிகாரி நேரடியாக நியமிக்கப்படலாம் என்றும், தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியை ஒரு பதவி உயர்வுக்கான பதவியாகக் கருதி, தேர்தல் ஆணையரை தேர்தல் தலைமை அதிகாரியாக நியமனம் செய்வது சரியில்லை என்ற கருத்தை உச்ச நீதிமன்றம் கூறியது.
இவ்வாறு நீதிமன்றம் கவலை தெரிவித்ததற்கு இந்த நியமனம் மட்டுமே காரணமல்ல. தேர்தல் ஆணையர்களின் நேர்மை அண்மைக் காலமாக கேள்விக்குறியாகி வருகிறது. எடுத்துகாட்டாக ஒரே நேரத்தில் குஜ ராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஆனால், இரண்டு மாநிலங்களுக்கும் வெவ்வேறு நாள்களில் அறிவிக்கப்பட்டன.
முதலில் இமாச்சல பிரதேசம் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத் தப்பட்டதுடன் குஜராத் மாநிலத்திற்கு புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு பிரதமர் மோடி குஜராத் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் சென்றார்.
அதிக எண்ணிக்கையிலான பொதுக் கூட்டங்கள் மற்றும் மக்கள் சந்திப்புகளையும் நடத்தினார்.
இவ்வாறு புதிய அறிவிப்புகள் மற்றும் நலத்திட்டங்களை எல்லாம் மோடி நேரில் வந்து அள்ளி வீசிய பிறகு, குஜராத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
குஜராத் தேர்தலின் போது பா.ஜ.க. வினர் பல்வேறு மோசடிகளைச் செய்தது தொடர்பாகப் புகார்கள் வந்த நிலை யிலும் இது குறித்து தேர்தல் ஆணையம் மவுனம் காத்தது.
பிரதமர் மோடி வாக்களிக்க வாக்குச் சாவடிக்குச் செல்லும்போது பல்லாயிரம் தொண்டர்களுடன் பேரணியாகச் சென்று வாக்களித்தார்.
இதற்கு வலுக்கட்டாயமாக சப்பை கட்டுக் கட்டிய தேர்தல் ஆணையம், தொண்டர்களுடன் மோடி நடந்து வாக்க ளிக்கச் சென்றதாகவும் மக்கள் கூட்டம் கூடிவிட்டதாகவும் தெரிவித்தது.
தெற்கு குஜராத்தில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றில் மக்கள் யாரையுமே வாக்குப்பதிவு கருவிக்கு அருகில்கூட செல்லவிடாமல் - வாக்குச்சாவடிப் பணியாளர்களில் ஒருவரே வாக்காளர்களுக்குக் கையில் மை வைத்த பிறகு அவர்களை அப்படியே அனுப்பி விட்டு தானே சென்று தொடர்ந்து பொத்தானை அழுத்திவிட்டு வந்தது - சமூகவலைதளங்களில் பரவியது. இந்தக் காட்சிப் பதிவு தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, இந்த நிலையில் குஜராத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக மோடி தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்துள்ளதானது - பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தைத் தவிர மற்ற இடங்களில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்தது குறித்து எந்த ஊடகமும் கருத்துத் தெரிவிக்கவில்லை.
இதுவரை தேர்தல் ஆணையத்துக்குப் பிரதமர்கள் நன்றி தெரிவித்ததுண்டா?
இவ்வாறு நேர்மையற்ற மனிதர்களை தேர்தல் அதிகாரிகளாகக் கொண்டு நடைபெறும் தேர்தல்கள் ஜனநாயகத்தை வீழ்த்தவே பயன்படும்.
தேர்தல் ஆணையம் மட்டுமல்ல; ஜனநாயகத்தின் நீதித்துறையும் இவ்வாறு சீரழிக்கப்படுவது தொடர்கிறது. குறிப்பாக பெரும்பான்மை எளிய மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். ஆளும் இந்துத்துவ பாசிசவாதிகளின் அட்டூழியங்களைக் கண்டிக்கும் நீதிபதிகள் இரவோடு இரவாக மாற்றப்படுகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். கொள்கைக்கு எதிர்ப்பாகத் தீர்ப்பளிப்பக்கும் நீதிபதிகள் புறக்கணிக்கப்பட்டு, பதவி உயர்வு பெற்றிருக்கின்றனர்.
எடுத்துக்காட்டாக, குஜராத் உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக இருக்கையில் நீதிபதி பர்தி வாலா அவர்கள் 2015ஆம் ஆண்டில் ஒரு தீர்ப்பு அளித்தார். அந்த தீர்ப்பில் இந்தியாவின் பின்னடைவுக்குக் காரணம் இரண்டு என்றும். அதில் ஒன்று ஊழல்; மற்றொன்று இட ஒதுக்கீடு என்றும் கூறினார்.
இதனால் 58 மாநிலங்களவை உறுப்பினர்கள் அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார்கள். இந்நிலையில் அவர் மேற்சொன்ன தீர்ப்பின் சம்பந்தப் பட்ட பகுதியை நீக்கினார். எனவே தீர்மானம் கைவிடப்பட்டது.
நீதிபதி பர்தி வாலாவை உச்ச நீதிமன்ற கொலிஜியம் மே அய்ந்தாம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்குப் பரிந்துரை செய்தது. உடனடியாக அவர் நியமனம் செய்யப்பட்டு மே மாதம் ஒன்பதாம் தேதி நீதிபதியாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். அவரைவிட சீனியர்கள் அதே நீதிமன்றத்தில் இருந்தபோது அவர்களைப் புறந்தள்ளி அவர் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே கொலிஜியம் நீதிபதி ஏ.எம்.ஜோசப் அவர்களைப் பரிந்துரைத் தபோது, அது புறக்கணிக்கப்பட்டு அவரது நியமனம் காலம் தாழ்த்தப்பட்டது. அது போல் டில்லியில் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்த டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி இரவோடு இரவாக மாற்றப்பட்டார்.
இவையெல்லாம் ஜனநாயகத்தின் தூண்களைத் தகர்க்கும் முயற்சிகளாகும்.
No comments:
Post a Comment