மன்னார்குடி கழக மாவட்டம் உள்ளிக்கோட்டையில் 94 வயதிலும் உற்சாகமாகவும் தீவிர இயக்கப் பற்றுதலோடும் வாழ்ந்து வருபவர் வி.குமாரசாமி. கிளைக் கழகத் தலைவராக ஒன்றிய கழகத் தலைவராக இன்றும் ஒன்றிய விவசாய அணி நிர்வாகியாக பொறுப்புகளை வகித்தவர் - வகிப்பவர் குமாரசாமி. அவரின் வாழ்விணையர் இந்திய ராணி. காமராஜ், வீரமணி, அன்புமணி, பகுத்தறிவு இவரின் பிள்ளைகள். உடல்நலம் குன்றிய நிலையில் இருக்கிறார் என்பதை அறிந்து அவர் உடல்நலம் விசாரித்திட நானும்(துரை.சந்திரசேகரன்), மன்னைகழக மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், ஆர்.எஸ்.அன்பழகன், கணேசன், ரமேஷ், தமிழ்ச்செல்வன் ஆகியோரும் சென்றிருந்தோம். அவருடன் உரையாடியபோது.......
தங்களின் சட்ட எரிப்புப் போராட்ட அனுபவம் குறித்து சொல்லுங்கள் அய்யா?
எங்கள் கிளை கழகத் தலைவர் அண்ணன் பக்கிரிசாமி மற்றும் ஏழு பேருடன் ஜாதி ஒழிப்புக்கான சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோம். காவல்துறையினர் எங்களை கைது செய்து நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுக் கொடுத்தனர். ஆறு மாதம் திருச்சி மத்திய சிறையில் தண்டனையை அனுபவித்தோம். ஜெயிலில் பாய் நெசவு எங்களுக்கு பணியாக கொடுக்கப்பட்டது. விடுதலை செய்யப்பட்டதற்கு பின்னால் ஆறு மாதம் கழித்து வீட்டிற்கு வந்தோம்.
இதுபோல் இன்னும் போராட்ட அனுபவங்கள் தங்களுக்கு உண்டா?
கழகம் அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்று இருக்கிறேன். கடலூர் மத்திய சிறை, திருச்சி மத்திய சிறை என்று சில முறை மீண்டும் சிறையில் இருந்த அனுபவங்களும் உண்டு. பல போராட்டங்களில் காலையில் பிடித்து மாலையில் விட்டுவிடுவார்கள். எந்தப் போராட்டமாக இருந்தாலும் அதற்குரிய விலை கொடுக்க நாங்கள் தயாராகவே செல்வோம்.
உங்கள் இயக்கப் பணிகள் பற்றி?
தந்தை பெரியார் காலத்திலும் அன்னை மணியம்மையார் காலத்திலும் ஆசிரியர் காலத்திலும் இருந்து கழகப் பணியாற்றிய அனுபவங்களும் அவர்களின் அன்பை பெற்று இருக்கிறோம் என்ற மனத் திருப்தியும் எப்போதும் எனக்கு உண்டு. எங்கள் இல்ல நிகழ்வுகளுக்கும் எங்கள் ஊர் நிகழ்வுகளுக்கும் தலைவர்களை அழைத்து வந்து பங்கேற்க வைத்து அவர்களை கவனித்து வரவேற்று அனுப்பியதை இப்போது நினைக்கும் போதும் பெருமிதம் கொள்கிறேன்...
கொடிகாத்த குமரன் என்று உங்களை அழைக்கிறார்களே அது பற்றி கூறுங்களேன்?
(தோழர் குமாரசாமி சிரித்துக்கொண்டே) அதுவா நான் இயக்க நிகழ்ச்சிகளுக்கு எப்போது சென்றாலும் ஒரு பெரிய கழகக் கொடியுடன் செல்வது வழக்கம். குமாரசாமி வருகிறான் என்றால் நீண்ட கம்பில் பெரிய கொடியுடன் வருவான் என்று எல்லோரும் நேரில் பார்த்த காரணத்தினால் அப்படி என்னை அழைக்கிறார்கள். நானும் அதை மகிழ்வோடு ஏற்றுக் கொள்கிறேன்.
ஆசிரியர் தலைமையில் தற்போது இயக்கத்தின் நடப்பு எப்படி இருக்கிறது?
அதிக வளர்ச்சியும் மதிப்பும் இயக்கத்திற்கு இருப்பதை பார்க்கிறேன். ஆசிரியர் அய்யா அவர்கள் மிகவும் கடுமையாக உழைக்கிறார். இப்படி ஒரு தலைவர் கிடைத்ததனால் தான் அய்யாவின் கொள்கை அகிலமெல்லாம் ஒளி வீசுகிறது. மற்ற அரசியல் கட்சிகளுக்கு ஈடு கொடுத்து - அவர்கள் அனைவரும் நம்முடைய தலைவரின் ஆலோசனையை அறிந்து பின்பற்றி செயல்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இயக்கத்திற்கு பெருமையான காலம் என்று கருதும்படி உள்ளது. ஏராளமாக மாணவர்கள், இளைஞர்கள் இயக்கத்திற்கு வலு சேர்த்து வருவதை என்னைப் போன்ற வயது முதிர்ந்த தோழர்கள் மகிழ்ச்சியோடும் மன திருப்தியோடும் அதைப் பார்த்து பெருமிதம் கொள்கிறோம். இதற்கெல்லாம் காரணமாய் நம்முடைய கழகத்தின் தலைவரின் ஓய்வறியா உழைப்பு அடிப்படையாய் இருக்கிறது. தந்தை பெரியாருக்கு பின்னால் இந்த இயக்கம் இருக்குமா என்று கேட்டவர்கள் வியக்கும் வண்ணம் இயக்கத்தை வேர் பிடிக்கச் செய்து வளர்த்திருக்கிறார். வேகமாக நடைபோடச் செய்கிறார் ஆசிரியர் அய்யா அவர்கள். அவரை பின்தொடர்ந்து இயக்கப் பணி ஆற்றினாலே இயக்கம் இன்னும் வளர்ச்சி பெறும் - வளமை பெறும்.
பேட்டி நாள்:26.11.2022
பேட்டி கண்டவர்: முனைவர் துரை.சந்திரசேகரன், பொதுச் செயலாளர்
No comments:
Post a Comment