பழங்குடி சிறுமிக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமா? விடுதி காப்பாளர் இடைநீக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 11, 2022

பழங்குடி சிறுமிக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமா? விடுதி காப்பாளர் இடைநீக்கம்

கோபால், டிச. 11- மத்திய பிரதேச மாநிலம் பெட்டூல் என்ற பகுதியை அடுத்துள்ளது டம்ஜிபுரா என்ற கிராமம். இங்கு ஒரு அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்றவாறு, அங்கு 'பழங்குடி மாணவிகள்' விடுதி வசதியும் உள்ளது.

பல்வேறு மாணவ - மாணவிகள் தங்கி படிக்கும் இந்த பள்ளியில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த சிறுமிகளும் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் இந்த விடுதியில் தங்கி 5ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி, பக்கத்து மாணவியிடமிருந்து ரூ.400 திருடியதாக குற்றம்சாட்டினார் விடுதி காப்பாளர். அதற்கு மறுப்பு தெரிவித்தபோதும் கூட, தண்டனை வழங்க எண்ணியுள்ளார் காப்பாளர். அதன்படி சிறுமிக்கு பேய் போல் ஒப்பனை செய்து, செருப்பு மாலை அணிவித்து விடுதி வளாகத்தை சுற்றி வரும்படி கட்டளையிட்டுள்ளார் காப்பாளர். இதனால் மனமுடைந்த சிறுமி இது குறித்து தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த சிறுமியின் தந்தை அவரை அழைத்துக் கொண்டு இது குறித்து மேலிடத்தில் புகார் அளித்தார். அதன்படி இந்த நிகழ்வு குறித்து கல்வி அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு விடுதி காப்பாளரை அந்த பணியில் இருந்து விடுவித்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கூறுகையில், "எனது பிள்ளையை இப்படி ஒரு கொடூர சூழ்நிலையில் வைத் துள்ளார் அந்த காப்பாளர். எனது மகள் மேல் திருட்டு பழி போட்டு, அவருக்கு செருப்பு மாலை அணிவித்து விடுதி வளாகத்தை சுற்றிவருமாறு தண்டனை வழங்கப்பட்டுள் ளது. இதற்கு மேலும் எனது மகள் இங்கு தங்கி படிக்க எனக்கு விருப்பமில்லை" என்று மன வருத்தத்துடன் தெரிவித்தார்.

விடுதியில் தங்கி படிக்கும் 5ஆம் வகுப்பு மாணவி திருடியதாக குற்றம்சாட்டி, அவருக்கு செருப்பு மாலை அணிவித்து விடுதி வளாகத்தை சுற்றிவருமாறு மத்திய பிரதேச அரசு விடுதி காப்பாளர் தண்டனை வழங்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment