ஆசிரியரின் கரம்பற்றி... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 2, 2022

ஆசிரியரின் கரம்பற்றி...


வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி 
மாநில மகளிர் பாசறை அமைப்பாளர், திராவிடர் கழகம்

புராண இதிகாச, மூடநம்பிக்கைகள் ஆகிய அனைத்தையும் புரட்டு என்று ஒப்புக்கொண்டு அறிவியல் பார்வையோடு சிந்திக்கும் - சிந்திக்க முற்படும் பலருக்கும் கடவுள் மறுப்பை தீவிரமாகப் பேசவோ, கடவுள் இல்லை என்று ஒப்புக் கொள்ளவோ அச்ச உணர்வு ஏற்படலாம்;

கடவுள் இல்லை என்று கடவுள் மறுப்பைப் பேசும் பலருக்கும் ஜாதி ஒழிப்பை ஏற்றுக் கொள்வதில் சிக்கல் இருக்கலாம்; ஜாதி ஒழிப்புக் களத்தில் ஆர்வம் காட்டும் சிலருக்கும் மத நம்பிக்கையை எதிர்த்து கேள்வி கேட்கத் தயக்கம் காணப்படலாம். ஆனால், கடவுள் மறுப்பு, ஜாதி ஒழிப்பு, மத மறுப்பு, புராண, இதிகாச, சாஸ்திர மூடநம்பிக்கை,  எதிர்ப்பு ஆகிய அனைத்தையும் ஒப்புக்கொண்டு, முற்போக்காளராக மாற முயற்சி செய்பவருக்கு மேற்சொன்ன அனைத்தையும் எதிர்த்து நிற்பதும், அதற்கு எதிராகக் களம் காண்பதும், அதற்குரிய மனநிலையைப் பெறுவதும் எளிதில் ஏற்படலாம். இவ்வாறு அனைத்து சமூக அநீதிகளுக்கும் எதிராக, சரியான சிந்தனையுடன் பயணம் செய்யும் ஒருவரால்கூட, பெண் அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டும் - ஆணாதிக்க மனநிலையை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது கடினமான காரியமாக இருக்கிறது. காரணம், மற்ற அனைத்தும் தங்களை அடிமைப்படுத்தும் கூறுகள். ஆனால், பெண் அடிமைத்தனம் என்பது காலம் காலமாக அவர் எந்த மதத்தையும் பின்பற்றி இருந்தாலும், எந்த ஜாதியில் பிறந்திருந்தாலும், எந்தக் கடவுளை வணங்கிப் பழக்கப்பட்டிருந்தாலும், தனக்கு கீழ், தனக்கு அடிமைச் சேவகம் செய்ய ஒரு பெண் இருக்கிறாள் என்ற மனநிறைவுடன் வாழ, பழ நெடுங்காலமாக பழக்கப்பட்டிருந்த ஒரு சமூகம். இப்படியாக பழக்கப்பட்ட ஆணாதிக்க மனநிலை கொண்ட பொது சமூகத்திற்கு அவ்வளவு எளிதாக பெண்ணுரிமை, பெண் விடுதலை, 'பெண் விடுதலையே மானுட விடுதலை' என்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இந்த நிலையில், ஜாதி ஒழிப்பும் பெண் விடுதலையுமே தனது முதன்மைக் கொள்கைகள் என்று தனக்குத்தானே கொள்கையை வரித்துக் கொண்டு,  அக்கொள்கைக்குச் செயல் வடிவம் கொடுத்து, மற்றவர்களும் அதனை ஏற்றுக்கொள்ளும் வண்ணம் தொடர் பிரச்சாரம் செய்து, வாழ்வின் இறுதிவரை பெண்ணியப் போராளியாக,பெண் விடுதலை போர் முரசம் கொட்டியவர் தந்தை பெரியார் அவர்கள்.

ஒரு தலைவரின் சிந்தனை, கொள்கை பேச்சு, எழுத்து ஆகிய அனைத்தும் எவ்வித  மாற்றமுமின்றி, எவ்வித கருத்தியல் திரிபும் இன்றி, அவர் எண்ணத்தை தலைமுறை கடந்தும், கருத்துப் புரட்சியாகக் கடத்துவதற்கு இன்றியமையாத முதன்மைத் தேவை யாதெனில், அத்தலைவரின் கொள்கைக்கு செயல் வடிவம் கொடுத்து, கொள்கை வழிப் பயணத்தையே தனது வாழ்வாக மாற்றிக் கொள்ளும் ஒரு கொள்கை வாரிசு கிடைப்பதே. வரலாற்றில் பல தலைவர்களின் சிந்தனையும், எழுத்தும் பேச்சும் மிகச் சரியானதாக, மிக முக்கிய தேவையாக இருந்தும்கூட, காலப்போக்கில் அவை நின்று நிலை பெறாமல் போனதற்கான காரணிகளில் ஒன்று, அவர்களுக்குப் பின்னால் அவற்றைச் சரியான நேர்கோட்டில் எடுத்துச் செல்ல, கொள்கை வாரிசுகள் இல்லாமையே! இப்படியாக வரலாற்றில் பல சான்றுகள் தொடரும் நேரத்தில், பெரும் வாய்ப்பாய் பெரியாரின் பெரும் பணிக்கு, பெரியார் எனும் அறிவு ஊற்றுக்கு, பெரியார் எனும் கிளர்ச்சிக்காரருக்கு அவர்தம் கொள்கைகள் எந்தவித சபலமும் இன்றி, உச்சம் தொட முதன்மைக் காரணியாக இருப்பது அவருக்குக் கிடைக்கப்பெற்ற தகைசால் கொள்கை வாரிசே! ஆம்,  வரலாற்றுப் பக்கங்களில் கிடைத்தற்கரிய பெரியாரின் கொள்கைச் சீடராக ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திகழ்கிறார். ஆம், இவரின் ஒவ்வோர் அசைவும் பெரியாரின் கொள்கை நிழலாக இருக்கிறது. களம் எதுவாயினும், எத்தனை வசவுகளை ஏற்று நடக்கும் சூழல் நேரினும், இதுபற்றி யார் என்ன நினைப்பார் என்று இவர் சிந்திப்பதில்லை; மாறாக, பெரியார் என்ன செய்திருப்பார் என்று அய்யாவின் வழி ஒன்றையே தனது கொள்கை அகராதியாக ஏற்றுப் பயணம் செய்கிறார். 

பெண் விடுதலை என்று பேசும் நிலையில் பெரியார் எந்த எல்லைக்கு சென்று உரிமைக் குரல் எழுப்பினாரோ, அக்குரலின் ஓசை குறையாமல், பெண்ணுரிமைக் களத்தில் ஆசிரியர் நிற்கிறார். மதங்களுக்குள் நடைபெறும் போட்டிகளில் மிக முக்கியமானது, "பெண்ணை அதிகம் அடிமைப்படுத்துவது உன் மதமா இல்லை, என் மதமா என்பதே!" அப்போட்டியில் வெற்றி பெற்று காலங்காலமாக பெண்ணினத்தைக் கொச்சைப்படுத்தி, அவர்களின் கல்வி, வேலை, சுய சிந்தனை, சுயமரியாதை, அறிவு உணர்ச்சி என்று அனைத்திற்கும் தகர்க்க முடியா வேலி அமைத்த மனுதர்ம சாஸ்திரத்தின் விலாவினை பெரியார் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் உடைத்தார். அய்யாவின் வழியிலே ஆசிரியர், மகளிரை கொச்சைப்படுத்தும் நூலினை மகளிரே தலைமையேற்று, கொளுத்த வேண்டும் என்ற அறிவிப்பினை வெளியிட்டு, பல எதிர்ப்புகள் தாண்டி ஆசிரியர் காட்டிய வழியில், மனு எரிந்தது - மகளிர் ஏந்திய சுயமரியாதை நெருப்பால். 

பெண் விடுதலைப் போரில், அடிமைத்தனத்தைக் கட்டமைத்த மனுவை மட்டுமன்றி, மனுவாத சிந்தனை படைத்தவர்கள் யாராயினும் அவர்களைத் துணிந்து எதிர்த்து நிற்பதில் ஆசிரியர் சமரசம் செய்து கொள்வதே இல்லை. 1994 ஆம் ஆண்டு பூரி சங்கராச்சாரியார் கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஒரு பெண்ணை வேதத்தைக் கூற விடாமல் மேடையில் இருந்து அகற்றி, பெண்களுக்கு வேதம் ஓத உரிமை கிடையாது என்று சொன்னதை எதிர்த்து பூரி சங்கராச்சாரியாருடைய கொடும்பாவியை தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் குறிப்பாக மகளிர் தோழர்கள் எரித்துக் கைதாயினர். போருக்குச் செல்லும் மகனை தாய் வழியனுப்பியதாக இலக்கியத்தில் படித்திருப்போம். ஆனால், நம் வரலாற்றில், கைதான மகளிரை, கைத்தறி ஆடை அணிவித்து  பெண்ணுரிமைப் போருக்குச் செல்லும் மகளை தந்தை வழியனுப்புவதுபோல் ஆசிரியர் வழி அனுப்பினார்.

பெண்ணுரிமை, பெண் விடுதலை என்ற நிலைகளைக் கடந்து அனைத்து பாலினத்திற்கும் சரியான, சமமான நீதி தேவை என்ற உணர்விலே பாலியல் நீதி மாநாடுகளை நடத்தியவர் ஆசிரியர்.

பாலியல் நீதி (பெண்ணுரிமை) மாநாட்டில் "உலக மக்கள் தொகையில் சரிபாதி அளவில் உள்ள பெண்களின் அறிவு வளர்ந்தால்தான் சமுதாயம் வளரும் என்று பெண் விடுதலையே சமூகத்தின் விடுதலை என்பதை பிரகடனப்படுத்தினார்".

ஆசிரியரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் தொடர்ந்து முற்போக்கு சமூகத்தை, இன்றைய இளைஞர்களை முற்போக்குப் பாதையில் அழைத்துச் செல்வதில் தீவிரம் காட்டுகிறது. அவ்வகையில் தாயின் பெயரை முன்னொட்டாகப் போட வேண்டும் என்ற தீர்மானம் தொடங்கி, ஜாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்; அப்படிச் செய்வதன் மூலம் நாடே சமத்துவபுரம் ஆகட்டும் என்று ஒவ்வொரு நிலையிலும் ஜாதிய, மதவாதக் கொடுமைகளை ஒழிப்பது பெண்கள் கையில் தான் இருக்கிறது என்பதை உறுதி செய்து இருக்கிறார். அவ்வகையில், தான் கடவுள் மறுப்பை உலகம் தோறும் பரப்பக்கூடியவர் எனினும், மானுட விடுதலை என்ற நோக்கிலே சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயதுப் பெண்களும் செல்வதற்கு உரிமை வேண்டும் என்று குரல் கொடுத்தார்.

இந்தியாவில் எந்த மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்றாலும் அதை எதிர்க்கும் முதல் குரலாக ஆசிரியரின் அறிக்கைகள் இருக்கின்றன. உத்தரபிரதேசம் மாவட்டத்தில் மதவாத பிஜேபி கொடூரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக கழக மகளிர் அணியின் மகளிர் பாசறையின் தலைமையிலே கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இப்படியாக பாலின சமத்துவம், பாலியல் நீதி இவையே சமூக நீதி என்பதில் மிகுந்த உறுதியுடன் இருக்கும் ஆசிரியர், திராவிடக் கொள்கை விளக்க அறிக்கையை கடந்த 2017இல் வெளியிட்டு அதிலும், 

பாலின சமத்துவம்

ஆண் எஜமானன்- பெண் அடிமை என்ற தற்போத நிலைக்கு மாறாக பெண்கள் திருநாள் (திருநங்கை,திருநம்பி) உட்பட பாலின சமத்துவம்; எல்லா நிலைகளிலும் ஆண்களுக்கு நிகராகக் கல்வி, உத்தியோகம், அரசியல் பொருளாதார நிலைக்கு உத்தரவாதம்;

தற்போது நிலையில் வழிபாட்டில், அர்ச்சகத் தன்மையில் ஆண்களுக்குள்ள எல்லா உரிமைகளும் பால் வேறுபாடற்று அனைவருக்கும் தேவை - இது எல்லா மதங்களுக்குமே;

என்ற திராவிடத்தின் கோட்பாட்டினைப் பறைசாற்றினார்.

கழகத்தில் மகளிரணி, மகளிர் பாசறை என்று தனியாக அணிகள் அய்யா காலத்தில் இல்லை. ஆனால், அதனையும் ஆசிரியர் ஏற்படுத்தி, உங்கள் விடுதலைக்கான குரல் உங்களிடம் இருந்தே முதலில் எழட்டும் என்ற உணர்வில் மாநில, மாவட்ட அளவில் பெண் பொறுப்பாளர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தி, அமைப்பினை நாளும் வலுப்படுத்துகிறார்.

சமூக விடுதலை, பயணத்தில், அரவணைக்கும் தந்தையாய், வழிநடத்தும் தலைவராய், உற்ற தோழராய், பாடம் நடத்தும் ஆசானாய், அய்யாவின் கரம் பற்ற இயலாத குறையை ஆசிரியரின் கரம்பற்றி நடக்கிறோம். ஆசிரியரின் வாழ்நாள் நீட்டிப்பே, மானுட விடுதலையின் வாழ்நாள் நீட்டிப்பு.

நூற்றாண்டு காண அகம் மகிழ்ந்து வாழ்த்துகிறோம்.

வாழ்க ஆசிரியர்! வளர்க மனிதநேயம்!!


No comments:

Post a Comment