அய்.அய்.டி.யின் அநியாயத்தைப் பாரீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 6, 2022

அய்.அய்.டி.யின் அநியாயத்தைப் பாரீர்!

596 பேராசிரியர்கள் உள்ளிட்ட பதவிகளில் 515 பேர் பார்ப்பன உயர்ஜாதியினரே!

EWS செயல்படுமானால் பார்ப்பனர்கள் மட்டுமே எல்லாவற்றிலும் வலுப்பெறுவர்-மனுநீதியே ஆட்சி செய்யும்!


சென்னை அய்.அய்.டி.யில் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் 596 இடங்களில் 515 பேர் பார்ப்பன உயர்ஜாதியினரே! இந்த நிலையில், உயர்ஜாதியினரில் ஏழை என்ற பெயரால் ஒன்றிய பி.ஜே.பி. கொண்டு வந்துள்ள சட்டம் (EWS) மேலும் பார்ப்பன ஆதிக்க மனுவாதி ஆட்சியைக் கொண்டு வரும்; இதனை எதிர்த்து ஒழிக்காவிட்டால் பார்ப்பனரல்லாதார் படுகுழிக்குத் தள்ளப்படுவர் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நூற்றுக்கு நூறு சரியானது என்பதற்கு 

இரண்டு எடுத்துக்காட்டுகள்!

ஆபத்து! ஆபத்து! சமூக நீதித் தலையின் மீது விழுந்த பேரிடி! EWS என்ற உயர் ஜாதி ஏழைகளுக்கு பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு வந்தால், அது பட்டியலின மக்களையும், பிற்படுத்தப்பட்டோரையும் எந்த அள விற்குப் பாதிப்புக்கு ஆளாக்கும் என்று நாம் எச்சரித்து வந்தோம். அது எந்த அளவிற்கு உண்மையானது - நூற்றுக்கு நூறு சரியானது என்பதற்கு இரண்டு எடுத்துக்காட்டுகளை வெளியிட்டுள்ளோம்.

இதனைப் படிக்கும் ஒவ்வொருவரும் இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஒன்றிய அரசு சமூக நீதியை கொல்லைப்புற வழியாக ஆயிரம் அடிகளுக்கும் கீழே எப்படிப் புதைத்துக் கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாக, திட்டவட்டமாக தெரிந்து கொள்ள முடியும்.

பிஜேபி ஒன்றிய அரசின் கொள்கை என்பது ஆர்.எஸ்.எஸ்.இன் கொள்கையே!

இந்தப்  போக்கு  தொடருமேயானால், அதன் பார தூர விளைவு மிகக் கடுமையானதாக இருக்கும்; பட்டிய லின மக்களும், பிற்படுத்தப்பட்டோரும் இனித் தலை எடுக்க முடியாது என்ற நிலை உறுதி செய்யப்பட்டு விடும். இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் பிஜேபி தலைமையிலான ஒன்றிய அரசின் கொள்கை என்பது ஆர்.எஸ்.எஸ்.இன் கொள்கையே!

ஆர்.எஸ்.எஸ்.இன் கொள்கை என்பது இட ஒதுக் கீடுக்கு எதிரானது - சமூக நீதிக்கு எதிரானது. 1990 இல் பிரதமராக இருந்த சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் ஆட்சியை, அவர் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மண்டல்குழு பரிந்துரை யின் அடிப்படையில் கொண்டு வந்தார் என்பதற்காக கவிழ்த்தவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ்.அய்  தலைமை யாகக் கொண்ட பிஜேபியினர் என்பதை மறந்து விடக்கூடாது.

சமூகநீதியை மறைமுகமாக கொல்லைப்புற வழியாக வீழ்த்துகின்ற சூழ்ச்சிதான்!

எப்படியும் இந்த இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்ற நினைப்பில் 24 மணிநேரமும் கவனத்துடன் சிந்தித்துக் கொண்டிருந்த இந்த ஆர்.எஸ்.எஸ்.அய் தலைமையாகக் கொண்ட பிஜேபி இன்றைக்கு ஒன்றிய அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நேரடி யாக இட ஒதுக்கீட்டை ஒழித்தால், அது பெரும்பான் மையான மக்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொள்ள  நேரிடும் என்ற அச்சத்தால், சமூகநீதியை மறைமுகமாக கொல்லைப்புற வழியாக வீழ்த்துகின்ற சூழ்ச்சிதான் - திட்டம் தான் உயர் ஜாதி ஏழைகளுக்குப் பத்து விழுக் காடு இட ஒதுக்கீடு என்ற சட்டமாகும். அதனுடைய விளைவு இதுதான் என்பதை மேற்கண்ட புள்ளி  விவரங்கள் நமக்கு உணர்த்தவில்லையா?

 மூன்று விழுக்காடு உள்ள பார்ப்பனர்களுக்கு, பத்து விழுக்காடு ஒதுக்கீட்டை செயல்படுத்துவதன்மூலம் என்ன விளைவு ஏற்படும்? தற்போதுள்ள சனாதன வர்ணாசிரம முறை - அதாவது சமூகப் படிநிலைகள் அப்படியே தொடர வழிவகுக்கும். இனி அனைத்துத் துறைகளிலும் பார்ப்பனர்களே தலைமைப் பொறுப்பில் ஆதிக்கத்தில் வேரூன்றி நிற்பார்கள். பட்டியலின மக்க ளும், பிற்படுத்தப்பட்ட பழங்குடி சமூகமும் தலைமைப் பொறுப்புக்கு வருவது தடுக்கப்படும். மூன்று சதவிகித மக்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது அவர் களின் வளர்ச்சியை விரைவுப்படுத்தும்; மற்ற பார்ப் பனரல்லாதாரின் வளர்ச்சியை வீழ்த்தும். நூற்றுக்கு 10 மதிப்பெண் வாங்கிய பார்ப்பான் தேர்வாகி விடுவான்; ஆனால் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் 50 விழுக்காடு மதிப்பெண் பெற்றாலும், தேர்வு செய்யப் பட மாட்டார்.  இந்த பத்து விழுக்காடு - அவர்களுக்கான பொருளாதார இட ஒதுக்கீடு என்பது உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கானது.  மீண்டும் மனுதர்ம ஆட்சி தான் வெளிப்படையாக கோலோச்சும். அதனால் அய்.அய்.டி. போன்ற உயர் தொழில் நிறுவனங்கள் பார்ப் பானுக்கு மட்டுமே என்ற ஏகபோக நிலை உறுதியாகி விடும். பார்ப்பனரல்லாதவர்களின் உயர்கல்வி கானல் நீர் ஆகும்.

அய்.அய்.டி. என்றால், அய்யர் அய்யங்கார் டெக்னாலஜி என்று கருதவேண்டும். 

பார்ப்பனரல்லாதவர்கள் தெளிவாகப் புரிந்து - விழிப்புணர்வு பெற வேண்டும்!

இதில் நகை முரண் என்னவென்றால், ஆண்டுக்கு ரூபாய் இரண்டு லட்சத்தை ஒருவரது வருமானம் தாண் டினால், அவர் வருமான வரி கட்ட வேண்டி இருக்கும். அப்படியிருக்க ரூபாய் 8 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவன் எப்படி ஏழை? ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பிஜேபி ஆட்சிக்கு இது எல்லாம் மிக நன்றாகவே தெரியும். ஆனாலும், அவர்களுடைய ஆட்சி என்பது உயர்ஜாதி பார்ப்பனர்களுக்கான ஆட்சி என்பதால், சட்டத்தைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னிச்சையாக அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக இப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்பனரல்லாதவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும், விழிப்புணர்வு பெற வேண்டும்.

நீதிமன்றங்கள் சாதிக்க முடியாதவற்றை 

மக்கள் மன்றம் சாதிக்கும்!

திராவிடர் கழகம் ஒவ்வொரு கட்டத்திலும் இதுபற்றி எச்சரித்து வந்திருக்கிறது. அந்த எச்சரிக்கை எவ்வளவு உண்மையானது, துல்லியமானது என்பதை பார்ப்பன ரல்லாதவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். சட்ட மன்றங்கள், நாடாளுமன்றங்கள், நீதிமன்றங்கள் சாதிக்க முடியாதவற்றை  மக்கள் மன்றம் சாதிக்கும் என்பது வரலாறு. முதல் சட்டத் திருத்தமே தந்தை பெரியார் அவர்களால் மக்களிடத்தில் ஏற்படுத்திய விழிப்புணர்வுப் போராட்டம் - இவற்றின் காரணமாக அன்று பிரதமராக இருந்த பண்டித ஜவகர்லால் நேரு தலைமையில் இருந்த ஆட்சி இட ஒதுக்கீட்டுக்காக முதல் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்ததை நாம் அறிவோம். (சட்ட அமைச்சர் அண்ணல் டாக்டர் அம்பேத்கர்).

அதேபோல தமிழ்நாட்டில் இருந்து வந்த 69 சதவிகி தத்திற்கு உச்சநீதிமன்றத்தால் ஆபத்து வந்தபொழுதும் திராவிடர் கழகம் முன்னின்று போராடிய காரணத்தி னாலும், மாநாடுகளை நடத்தி மக்கள் மத்தியில் விழிப் புணர்வை ஏற்படுத்திய காரணத்தாலும் அன்று இருந்த ஆட்சிக்கு சட்ட ரீதியாக 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை எப்படி காப்பாற்றலாம் என்ற சட்ட வழிமுறையை திராவிடர் கழகம் காட்டிய காரணத்தினாலும் 76 ஆவது சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு, அரசமைப்புச் சட்டம் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது என்பதையும் இந்த நேரத்தில் நினைவூட்டுகிறோம். திராவிடர் கழகத்தின் பங்கு இதில் முக்கியமானது என்பது சுவரெழுத்தாகும்!

நாடு தழுவிய அளவில் 

பிரச்சாரம், போராட்டம்!

மற்ற சக்திகளை விட மக்கள் சக்தி வலிமையானது, மேலானது, வெற்றியை  ஈட்டக் கூடியது என்பதை வரலாறு உணர்த்திக் கொண்டுதான் இருக்கிறது. இப் பொழுது ஏற்பட்டு இருக்கின்ற சமூகநீதிக்கு எதிரான ஆபத்தை மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்து வெற்றி பெற வேண்டும். இதில் ஒத்த கருத்துள்ள அனைவரையும் ஒன்றிணைத்து, நாடு தழுவிய அளவில் பிரச்சாரம், போராட்டம் என்ற முறையில் அழுத்தம் கொடுத்து ஒன்றிய அரசை சமூக நீதிப் பாதையில் கொண்டுவர வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இதனால் பலன் பெற வேண்டிய பார்ப்பரல்லாத மக்கள் ‘யாருக்கோ வந்த விருந்து' என்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இல்லாமல், நம்முடைய வருங்கால தலைமுறையினர் தலை எடுக்க திராவிடர் கழகம் - அதேபோல சமூக நீதியில் அக்கறை உள்ள அத்தனை அமைப்புகளும் காட்டும் சமூக நீதிப் பாதையில் தங்கள் பங்களிப்பையும், பயணத்தையும் அளிக்க வேண்டும் என்று  வலியுறுத்து கிறோம்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

6.12.2022

No comments:

Post a Comment