மனிதனின் அடிப்படைத் தேவைகள் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் உள்ளிட்ட வையாகும். இவற்றில் முதன்மையாகத் திகழ்கின்ற உண்ணும் உணவுத் தானியங்களைப் பயிரிடுகின்ற விவசாயிகள் நிலத்தை உழுது, நீர்பாய்ச்சி, நாற்றுநட்டு, களைபறித்து, பயிர்களைப் பேணிப் பாதுகாத்து அவற்றை நல்ல முறையில் அறுவடை செய்து அதனை தானும் உண்டு, விலைமதிப்பற்ற மனித உயிர்களின் பசிப்பிணியையும் போக்குபவன் உழவுத் தொழில் செய்கின்ற விவசாயி என்பதை ஏனோ மறந்துபோனது துயரம்.
கடும் மழை, பனி, நடுங்கும் குளிர், சுட்டெரிக்கும் வெய்யில் மற்றும் இரவு - பகல் என்று பாராமல் உழைத்து உழைத்து ஓடாய்ப் போனதோடு மட்டுமன்றி பல்வேறு இயற்கைச் சீற்றங்களையும், உடல் உபாதைகளையும் எதிர்கொண்டு மக்களின் பசிப்பிணி போக்கும் உன்னதமான உழவுத் தொழிலை செய்து வருபவர்கள் இந்தியாவின் முதுகெலும்பாகத் திகழ்கின்ற விவசாயிகள் ஆவர்.
உழவன் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்று அடுக்கு மொழியில் மேடைதோறும் முழங்கி வருகிறோம். ஆனால் நடைமுறையில் அவர்களின் நிலை என்ன? ' உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு மிஞ்சாது ' என்பதுதான் யதார்த்தமான உண்மை நிலையாகும்.
நெற்றி நீரை நிலத்தில் சிந்தி, சேற்றிலும் - சகதியிலும் ஓயாமல் உழைத்து, கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வழியின்றி, ஒட்டிய வயிறோடு வாழ வழிதேடி குடும்பத்தோடு நகரத்தை நோக்கி ஓடோடிச் செல்கின்ற அவலநிலைக்கு விவசாயிகள் தள்ளப்படு வதற்கு என்ன காரணம்? என்பதை சற்று நடுநிலை யோடு சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியமாகும்.
மேனாள் பிரதமரான சரண் சிங் ஆட்சிக் காலத்தில் உழவர்களின் விளைபொருள் விற்பனைக்காக 'வேளாண் விளைபொருள் சந்தை மசோதா ' அறி முகப்படுத்தப்பட்டது. மேலும் அவருடைய ஆட்சி யில் உழவர்களின் நலனுக்காக சில முக்கிய திட்டங் களையும் கொண்டுவந்தார். ஏழு மாத காலம் மட்டுமே பிரதமாக பதவி வகித்த சரண் சிங் ஜமீன்தாரி ஒழிப்பு முறைச் சட்டத்தைக் கொண்டு வந்து சரித்திர சாதனை படைத்தார். நிலச்சுவான்தார்கள், வட்டிக்குப் பணம் வழங்குவோர்மீது கடும் எதிர்ப்பையும், கண்டனங் களையும், விமர்சனங்களையும் முன்வைத்தார்.
இதன் காரணமாக ஜமீன்தார்கள், நிலச்சுவான் தார்கள், பணத் திமிங்கலங்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. அவற்றைப் புறந்தள்ளி நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்கின்ற விவசாயத் தொழிலின் வளர்ச்சி, கிராமப்புற ஏழை - எளிய மக்களின் நலன், கல்வி - சுகாதாரம் மற்றும் மகளிர் முன்னேற்றம் உள்ளிட்டவற்றை முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டு அரும்பாடுபட்டவர் மேனாள் பிரதமர் சரண் சிங் ஆவார்.
எனவே, சரண் சிங் பிறந்த தினமான டிசம்பர் 23 - ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ' தேசிய உழவர் தினம் ' என்று இந்தியா முழுவதும் நாட்டு மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவது பாராட்டுக் குரியதாகும்.
உழவர்களின் நலனையும், உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தியும், உழவர்களைப் போற்றும் விதமாகவும் ' தேசிய உழவர் தினம் ' ( டிசம்பர் - 23) இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்ற இனிய சூழலில்; உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 60 சதவீத மக்கள் விவசாயத் தொழில் செய்து வருகின்றனர். அவர்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து, விவசாயத் தொழிலுக்குத் தேவையான இடு பொருட்களை ஒன்றிய அரசே இலவசமாக வழங்குவதின் வாயிலாக உலக அளவில் உணவு உற்பத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா தலை நிமிர்ந்து நிற்கும் என்பது சமூகநல ஆர்வலர்களின் கருத்தாகும்.
உழவர்களைப் போற்றுவோம்!
உணவுப் பொருள்களைப் பாதுகாப்போம்!
- சீ. இலட்சுமிபதி, தாம்பரம்.
ரோஷம், மோசம் போகக் கூடாது?
"தி.மு.க.வினரின் சிந்தனைக்கு!" என்று திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் விடுதலை யில் எழுதிய அறிக்கை படித்தேன். என் இதயம் இமயம் போல் உயர்ந்து பூரிப்பு கொண்டது. நன்றி! "தமிழன் என்றால் மொழி உணர்வு இருக்கும். திராவிடன் என்றால் ரோஷமும் கூடுதலாக இருக்கும்" என்று இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் கூறியதை சுட்டிக்காட்டினார்.
மேலும், "தினமலர்" இதழுக்கு விளம்பரம் அதுவும் முழுப்பக்க விளம்பரம் தரும் தி.மு.க.வினரின் சிந்தனைக்கு! நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்று அடையாளம் கூடத் தெரியாமல் தி.மு.க. பொறுப் பாளர்கள் நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது. இனி மேலாவது திருந்தினால் நல்லது" என்று உள் ளத்தை வெள்ளமாக்கிய அய்யா கலி.பூங்குன்றன் அவர்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! சொல்வதோடு இந்த அறிக்கை பொன் எழுத்துகளால் கல்வெட்டில் செதுக்கப்பட வேண்டியது என்பதும் அவசியமாகும்.
தி.க., தி.மு.க. இரட்டைக்குழல் துப்பாக்கி என்பது நாடறிந்த உண்மை. தமிழ், தமிழன், தமிழ்நாடு இவை களை கொச்சைப்படுத்தும் 'தினமலர்' மற்றும் பல பார்ப்பன ஏடுகள், தொலைக்காட்சிகள் செயலும் சரி - இவைகளில் விளம்பரம் என்ற பெயரில் நம் ரோஷத்தை காசு கொடுத்து மோசம் போகக் கூடாது பெரியார் மண்ணில் இதுபோன்ற எண்ணம் முளைவிடக் கூடாது இது போன்ற பார்ப்பன பத்திரிகைகளை ஒவ்வொரு தமிழனும் காசு கொடுத்து வாங்கக் கூடாது - காசு கொடுத்து விளம்பரமும் செய்யக் கூடாது. அறிவுக்கு மாசு, அதை கண்ணில் பார்க்கலாம்., கையில் தொடலாம். ஆனால், வாயால் படிக்கக் கூடாது. மனதிற்குள்ளேயே படிக்க வேண்டும். அவர்களின் உண்மைக்குப் புறம்பான புரட்டுகளை தெரிந்து கொள்வதற்காக.
நம் தமிழன் இன்றும் பக்தி என்ற பெயரில் தன் பணத்தைக் கொடுத்து தன்மானத்தை இழக்கிறான் என்றால், நம் 'திராவிட மாடல்' ஆட்சியில் நம் திராவிடன் விளம்பரம் என்ற பெயரில் அதே தப்பை செய்யலாமா? இப்படி நடந்துகொள்ளக் கூடாது என்று தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா கி.வீரமணி, பேராசிரியர் க.அன்பழகன் போன்றவர்கள் எல்லாமே சொல்லிய கருத்துகள்தான் பெரியாரின் விதையாக கலி.பூங்குன்றன் மனதிலே முளைத்திருக்கிறது.
- மு. சுந்தரராசன், திருமங்கலம், மதுரை
No comments:
Post a Comment