இப்பொழுதெல்லாம் நம் பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தில் ஜாதி மறுப்புத் திருமணங்களுக்கு பஞ்சமேயில்லை. கூடுதல் நல்வாய்ப்பாக பார்ப்பனர்களும் அதிக அளவில் நம்மிடம் திருமணம் செய்ய வருகிறார்கள்.
இதில் துணையை இழந்தவர்கள், மணமுறிவு பெற்றவர்கள் என்று வருபவர்கள் அதிகம். வேற்று ஜாதியைச் சேர்ந்த ஆண்களையோ பெண்களையோ அழைத்து வந்து இணையேற்பை நிகழ்த்திக் கொள்கிறார்கள்.
குடுமி வைக்கும் அளவிற்கு இருந்தாலும் (அவரே புரோகித தொழில் நடத்துபவராக இருப்பார்) நாம் கூறும் உறுதிமொழியைச் சொல்லி மணம் முடித்துக் கொள்கின்றனர். மணமக்கள் இருவருமே பார்ப்பனர்களாக இருந்தாலும் பொருளாதார ஏற்றத் தாழ்வு காரணமாகவும் நடைபெறாமல் இருக்கின்ற திருமணங்களுக்காகவும் நம்மிடம் வருகிறார்கள்.
ஆனால், 7.12.2022 அன்று வந்த ஒரு பார்ப்பன இணை, காதல், பொருளாதார ஏற்றத்தாழ்வு இப்படி எந்த சிக்கலும் இல்லா மல் சிக்கனத் திருமணத்திற்காகவே நம்மைத் தேடி வந்தார்கள். விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் வரை எங்களுக்கு அவர்கள் யாரென்றே தெரியாது. விண்ணப்பத்தை படித்துவிட்டு கேட்டோம், என்ன ஜாதியென்று?
மணமக்கள் இருவருமே பார்ப்பனர் கள்தான். இரு தரப்பிலும் பெற்றோரும் வந்திருந்தனர். நாம் பார்க்கும்போதே தெரிந்தது, அவர்களுடைய செல்வத்தன்மை.
சரி, முதலில் திருமணத்தை முடித்துவிட்டு பிறகு பேசுவோம் என்று முடிவு செய்து மணமக்களுக்கு திருமண ஒப்பந்த உறுதிமொழி கூறி “வாழ்வில் ஏற்படும் இன்ப-துன்பங்களில் சம பங்கேற்கும், சம உரிமை படைத்த உற்ற நண்பர்களாக” என்று தொடர்ச்சியாக உறுதி மொழி கூறி முடித்தோம். உற்சாகத்துடன் மகிழ்ச்சி கூச்சலிட்டனர் பெற்றோர்கள் உள்பட.
“இவ்வளவு தாங்க திருமண நிகழ்வு. இதிலே உங்கள் திருமணம் என்றால், என்னென்ன செய்வீர்கள்” என்று சிரித்துக் கொண்டே கேட்டேன்.
உடனே மணமகளின் பெற்றோர், “எங்களுக்கு இந்த மாதிரியான நல்வாய்ப்பு கிட்டவில்லையே, எங்கள் காலங்களில் திருமணம் என்ற பெயரில் ஒரு வழி செய்து விட்டார்கள். என்ன அருமையான உறுதிமொழி” என்று கூறினார்கள்.
அதைக்கேட்ட நான் “தந்தை பெரியார் அவர்கள் ‘திருமணம் என்ற பெயரில் வீண் ஆடம்பரம் கூடாது. ஒருவர் தன்னுடைய மாத வருமானத்தில் 15 நாள் வருவாயை மட்டுமே செலவு செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார். இப்போது அதைவிட குறைவாகவே நீங்கள் செய்திருக்கிறீர்கள்” என்றேன்.
மணமகளின் தந்தை நடராஜன் அவர்கள், “நீங்கள் சொல்வது சரிதான். நாங்கள் சிக்கனத் திருமணம் செய்யத்தான் இங்க வந்தோம். நாங்கள் எங்கள் முறைப்படி திருமணம் நடத்தியிருந்தால் பத்து இலட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகியிருக்கும். நங்கள் அந்தப் பணத்தை மிச்சப்படுத்தி ‘அருணோதயம்' என்ற ஆதரவற்றோர் இல்லத்திற்கு தரப்போகிறோம்'' என்றார்.
மணமகளின் தாயார் சசிகலா அவர்கள், “நான் ‘குட் செப்பர்டு‘ பள்ளியில் பணி செய்கிறேன். அந்த நிறுவனத்தின் சார்பில் இயங்கும் ஆதரவற்றோர் இல்லத்திற்கும் நன்கொடை தரப் போகிறோம்'' என்றார்.
நடராஜன் அவர்கள் “நாங்களே தாய், தந்தையாக இருந்து எங்களால் முடிந்த அளவுக்கு ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளோம்'' என்றார்.
‘மெட்ரோனா’ என்ற அய்.டி. கன்சல்டன்ட் நிறுவன எம்.டி. ஆக இருக்கும் நடராஜன் “யாருக்காவது அய்.டி. வேலைவாய்ப்பு தேவையென்றாலும் என்னை அணுகவும்'' என்றார்.
மிக இனிமையாக உரையாடிய பண்போடு பழகிய அந்த மொத்த குடும்பத்துக்கும் வாழ்த்து சொல்லி அனுப்பினோம். எவரிடத்திலும் தந்தை பெரியார் அவர்களின் தாக்கம் இருக்கிறது. ஆம், எங்கும் இருக்கின்றார் பெரியார்! மனித நேயத்தின் மறுபெயர் தந்தை பெரியார் தானே!
- இசையின்பன்
No comments:
Post a Comment