நோபல் அறிஞர்களின் வரிசையில் தமிழர் தலைவர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 2, 2022

நோபல் அறிஞர்களின் வரிசையில் தமிழர் தலைவர்!



விருதுகள் அதன் பெயர்களால் மரியாதை பெறுவதில்லை. எதற்காக, யாரால், யாருக்கு வழங்கப்படுகிறது? அந்த விருதினை இதற்கு முன்பு பெற்றிருப்போரின் சிறப்பு ஆகியவற்றைக் கொண்டுதான் விருதுகளின் சிறப்பு மதிப்பிடப்படுகிறது.

விருது பெறுவோரின் சிறப்பு ஒரு புறம் என்றால், விருது வழங்குவோரின் சிறப்புகள், தகுதிகள் போன்றவைதாம் விருதுக்குச் சிறப்புச் சேர்ப்பவை. விமர்சனங்களாலும், கண்டனங்களாலும், எதிர்ப்புகளாலும், அவதூறுகளாலும் அலங்கரிக்கப்படும் ஒருவருக்கு, எப்போதும் இவற்றையே எதிர்கொண்டும், எதிர்பார்த்தும் தன் கடமையில் கண்ணாயிருக்கும் ஒருவருக்கு வியப்புறும் விருதொன்று வழங்கப்பட்டுள்ளது. 2019 செப்டம்பர் 22ஆம் நாள் அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள சில்வர் ஸ்பிரிங் நகரத்தில் நடைபெற்ற பன்னாட்டு மனிதநேய – சுயமரியாதை மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு ‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர்’ என்னும் விருதை வழங்கிச் சிறப்பித்தது அமெரிக்க மனிதநேயர் சங்கம்.

அமெரிக்க மனிதநேயர் சங்கம் திரண்ட சிறப்புமிக்க வரலாற்றைக் கொண்டது. அமெரிக்க மனிதநேயர் சங்கம் 1941ஆம் ஆண்டு வாசிங்டன் நகரில் தொடங்கப்பட்ட அமைப்பு. மனித உரிமை, மனிதநேயம், நாத்திகம், பகுத்தறிவு, சுதந்திரச் சிந்தனை, மதமற்ற பார்வை போன்றவற்றைப் பரப்புவதையும், அதற்காகக் குரல்கொடுப்பதையும் முதன்மைப் பணியாக ஏற்றுச் செயல்பட்டு வரும் இவ்வமைப்பு, தனது 225 கிளைகள் மூலம் 34000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடனும் ஆதரவாளர்களுடனும் அமெரிக்கா முழுவதும் விரிந்து, பரவலாகச் செயல்பட்டுவருகிறது. இவ்வமைப்பு 1953ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் சிறந்த மனிதநேயரைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கிப் பாராட்டி வருகிறது. 1982 முதல் மனிதநேய நாயகி என்னும் விருதும் அத்துடன் வழங்கப்பட்டு வந்தது. 2007ஆம் ஆண்டு முதல் இதுவரை பத்து பேருக்கு "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கப்பட்டுள்ளது. "மனிதநேய வாழ்நாள் சாதனையாளர்" என்னும் பெயரில் வழங்கப்படும் முதல் விருதினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளது.

இதுவரை பெரிதும் மேற்குலக நாடுகளைச் சார்ந்த நாத்திகர்கள், மனிதநேயர்கள், அறிவியல் அறிஞர்கள், எழுத்தாளர்களுக்கே  அமெரிக்க மனிதநேயர் சங்கத்தின் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் ‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது’ பெறுவது இதுவே முதல் முறை. இவ்விருதினைப் பெறும் முதல் தமிழரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்தாம்!

அப்பப்பாஞ் அந்த விருதுப் பட்டியலைப் பார்க்கும்போது மலைப்புத்தான் ஏற்படுகிறது. எத்தனை சிறப்புக்குரியவர்கள். எவ்வளவு பெரிய சாதனையாளர்கள்ஞ் அவ்வளவு பேரும் அந்த விருதுக்குச் சிறப்புச் சேர்த்தவர்கள்!

இதுவரை அமெரிக்க மனிதநேய சங்கத்தின் விருதுகளைப் பெற்றவர்களில் நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர்கள், புலிட்சர் பரிசு பெற்ற எழுத்தாளர்கள் என  உலகப்புகழ் பெற்றவர்கள் ஏராளம் உள்ளனர். அமெரிக்க மனிதநேயர் சங்கத்தின் அந்தந்த ஆண்டுக்கான மனிதநேயர் விருது பெற்றோர் பட்டியலில் 1961ஆம் ஆண்டுக்கான மனிதநேயர் விருது பெற்ற லினஸ் பாலிங், 1963ஆம் ஆண்டு விருது பெற்ற மரபணு அறிவியலாளர் ஹெர்மன் முல்லர், 1980ஆம் ஆண்டு விருது பெற்ற ரஷ்ய அணு ஆய்வாளர் ஆண்ட்ரூ ஷக்கரோவ், 2002ஆம் ஆண்டு விருதுபெற்ற ஸ்டீவன் வெய்ன்பெர்க், 2005ஆம் ஆண்டு விருதுபெற்ற முர்ரே கெல்மான் ஆகியோர் நோபல் பரிசு பெற்றவர்களாவர்.  2006ஆம் ஆண்டு அமெரிக்க மனிதநேயர் சங்கம் வழங்கும் அய்சக் அசிமோவ் அறிவியல் விருது பெற்ற ஹெர்பர்ட் ஹாப்ட்மேன் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவராவார்.

1985ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற நிறுவனமான அணு ஆயுதப் போர் தடுப்புக்கான பன்னாட்டு மருத்துவர்கள் அமைப்பை உருவாக்குவதில் முதன்மையானவரும் தனிப்பட்ட முறையிலும் நோபல் விருதுக்குப் பரிந்துரைக்கப் பட்டவருமான ஆஸ்திரேலிய மருத்துவர் ஹெலன் கால்டிகோட் அ.ம.ச-வின் 1982ஆம் ஆண்டு விருது பெற்றவராவார். புலிட்சர் பரிசு பெற்ற எழுத்தாளர் ஜாரெட் டைமண்ட், எட்வர்ட் ஓ.வில்சன், பார்பரா ஏரென்ரெய்ச் ஆகியோரும், புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, புலிட்சர் பரிசு இறுதிப் போட்டிக்குச் சென்ற ஜாய்ஸ் கரோல் ஆகியோரும் அமெரிக்க மனிதநேயர் சங்கத்தின் விருது பெற்றவர்களாவர்.

புகழ்பெற்ற அறிவியல் எழுத்தாளர் அய்சக் அசிமோவ், வானியல் ஆய்வாளர் எழுத்தாளர்- அறிவியல் பரப்புரையாளர் கார்ல் சாகன், உலகப் புகழ்பெற்ற அறிவியலாளர் ரிச்சர்ட் டாகின்ஸ், அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு எதிரான பிற்போக்குச் சட்டத்தை எதிர்த்து உறுதியாக நின்ற பார்னே பிரான்க், தன்னை ஒரு நாத்திகராக அறிவித்துக் கொண்ட முதல் நாடாளுமன்ற உறுப்பினர் பீட் ஸ்டார்க், மனித உரிமை செயல்பாட்டாளர் டான் சேவேஜ், உலக சுகாதார அமைப்பின் (கீபிளி) முதல் இயக்குநராகப் பொறுப்பேற்ற ப்ரோக் சிஸ்ஹோம், பிரிட்டிஷ் பரிணாம உயிரியலாளர் ஜூலியன் ஹக்ஸ்லி, மரணதண்டனையை எதிர்த்துத் தொடர்ந்து வாதாடிய செனட்டர் எர்னி சேம்பர்ஸ், மதச்சார்பற்ற கூட்டணியின் தலைவர் ஹெர்ப் சில்வர்மேன், அம்னெஸ்டி இண்டர்நேசனலின் செயல் இயக்குநர் பில் ஷூல்ஸ் என்று இதுவரை சிறப்பிக்கப்பட்டவர்களின் பட்டியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். படிக்கப் படிக்கஞ் மலைப்பால் மூச்சு முட்டுகிறதா? இன்னும் இருக்கும் பட்டியலையும், அவர்தம் சாதனைகளையும் அறிந்தால் நமக்குப் பெரும் வியப்பு ஏற்படும். இந்த சாதனை யாளர்களைப் பாராட்டிட, தகுதி வாய்ந்தவர்களைத் தேடிப்பிடித்துச் சிறப்பிக்கும் அமெரிக்க மனிதநேயர் சங்கம்தான், உலகின் மிகப்பெரிய நாத்திக மக்கள் இயக்கமான திராவிடர் கழகத்தின் தலைவருக்கு ‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர்’ விருதை வழங்கிச் சிறப்பித்துள்ளது. வாழ்நாள் சாதனையாளர் (Lifetime Achievement Award) என்னும் பெயரில் கடந்த 2007இல் பால் கர்ட்ஸ் அவர்களில் தொடங்கி 2019 வரை இதுவரை ஒன்பது பேருக்கு விருது வழங்கியிருக்கும் அமெரிக்க மனிதநேயர் சங்கம், தமிழர் தலைவருக்கு வழங்கியிருப்பது இன்னும் சிறப்புக்குரிய புதிய பெயரில் அமைந்துள்ள விருதாகும்.

இந்த விருதினைப் பெற்ற தமிழர் தலைவரோ, இது எனக்கான விருது அல்ல; என் தத்துவத் தலைவர் தந்தை பெரியாருக்கும், இப்போராட்டத்தில் என்னோடு இணைந்து பணியாற்றும் அத்தனை கருஞ்சட்டைத் தோழர்களுக்கும் உரியது என்று அறிவிக்கிறார்; அவர்களோடு சேர்ந்து விருதை மேடையில் பெறுகிறார். எத்தனை வியப்பு! எத்தனை சிறப்பு!! விளம்பரத்திற்கான எந்த விருதுகளையும், அதைப் பெறுவோரையும் ஒப்பிட்டு, நம் தலைவரின் தரத்தை நாம் தாழ்த்திவிடக் கூடாது. சில ஜாதி வெறியர்களும், இந்துத்துவ சில்லறைகளும் ஆசிரியருக்கு வழங்கப்பட்ட விருது குறித்து சலம்பிக் கொண்டிருந்தன. ஆனால், விருது வழங்கப்படும் காட்சியை நேரில் கண்டவர்களும், காணொலி வாயிலாக அதைக் காண்பவர்களும் ஒன்றைத் தெளிவாக உணர முடியும். திராவிடர் கழகத் தலைவருக்கு விருது வழங்கும் முன் அவருக்கு வாசித்தளிக்கப்பட்ட வாழ்த்துரையும், அவரது வாழ்க்கைக் குறிப்பும், எதற்காக விருது வழங்கப்படுகிறது என்கிற குறிப்பும் அதனை உச்சரிக்கும்போது அமெரிக்க மனிதநேயர் சங்கத்தின் செயல் இயக்குநர் ராய் ஸ்பெக்கார்ட் அவர்களின் உளப் பூரிப்பும், பெருமிதமும் நமக்குச் சொல்லும் செய்திகள் ஏராளம். அதனால்தான், ஆசிரியர் பெற்ற விருதை அருமைத் தோழர்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த விருது - உலகம் தந்தை பெரியாரையும், அவர் தம் வழித்தோன்றலையும் நாங்கள் எங்களுக்குரியோர் என்று கண்டுகொண்டோம் என்று சொல்வதற்கான அடையாளம்.

“மனிதநேயம் சார்ந்த பல அரிய தொண்டு களுக்காகவும், மானுடப் பண்புகளை எழுத்திலும், எண்ணத்திலும், செயலிலும் வெளிப்படுத்தி வரும் வியக்கத்தகு சாதனைகளுக்காகவும் 2019ஆம் ஆண்டுக்கான ‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது’ கி.வீரமணி அவர்களுக்கு வழங்கப்படுகிறது.’’

– அமெரிக்க மனிதநேயர் அமைப்பு (American Humanist Association)

 அமெரிக்க மனிதநேயர் சங்கத்தால் வழங்கப்பட்டிருக்கும் விருதால் தமிழர் தலைவர் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார் என்பதைவிட, அமெரிக்க மனிதநேயர் சங்க விருதினைச் சிறப்பித்தோர் பட்டியலில் தமிழர் தலைவர் இடம்பெற்று அவ்விரு துக்கே சிறப்பளித்திருக்கிறார் என்பதுதான் உண்மை!

No comments:

Post a Comment