வகுப்பறையில் மாணவனின் பெயரை மும்பை தாக்குதல் பயங்கரவாதியின் பெயரான 'கசாப்' என்று பேராசிரியர் கூறினார். மராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த 2008 நவம்பர் 26-ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல், துப்பாக்கிச்சூட்டில் 166 பேர் கொல்லப்பட்டனர். மும்பை தாக்குதலை நடத்திய 9 பயங்கர வாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் கைது செய்யப்பட்டான். கசாப் தூக்கிலிடப்பட்டான். கருநாடக மாநிலம் பெங்களூரு உடுப்பியில் மணிப்பால் தொழில் நுட்பக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை வகுப்பு நடந்தபோது இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவன் ஒருவரிடம் பேராசிரியர் பெயர் என்ன என்று கேட்டுள்ளார். தனது பெயரை அந்த மாணவன் கூற 'நீங்கள் கசாப் போன்றவன்' என்றார். மாணவனின் பெயரை பாகிஸ்தான் பயங்கரவாதியான கசாப்பின் பெயரை போன்றது என்று பேராசிரியர் கூறினார்.
தனது பெயரை பயங்கரவாதியின் பெயரான கசாப் என்று மாற்றி கூறியதால் ஆத்திரமடைந்த மாணவன் பேராசிரியரை வெளுத்து வாங்கினான். மாணவன் - பேராசிரியர் உரையாடல் பின்வருமாறு:-
மாணவன்: இல்லை. இதுபோன்ற நகைச்சுவை ஏற்றுக் கொள்ள முடியாதது. எனது மதம் குறித்து மிகவும் கீழ்த்தரமாக நீங்கள் பேசக்கூடாது.
பேராசிரியர்: இல்லை இல்லை நீ என் மகன் போன்றவன்.
மாணவன்: இல்லை. என் தந்தை இவ்வாறு கூறினால் அவர் எனக்கு தந்தையே இல்லை.
பேராசிரியர்: இது நகைச்சுவையான பேச்சு (கசாப் என்று கூறியது)
மாணவன்: இல்லை, இது நகைச்சுவை அல்ல. (மும்பை தாக்குதல்) நகைச்சுவை அல்ல. இந்நாட்டில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவனாக வாழ்வது, இது போன்ற நிகழ்வுகளை தினமும் சந்திப்பது நகைச்சுவையல்ல.
பேராசிரியர்: நீ என் மகன் போன்றவன்.
மாணவன்: இல்லை... இல்லை... உங்கள் மகனிடம் இவ்வாறு பேசுவீர்களா? பயங்கர வாதியின் பெயரைக் கூறி உங்கள் மகனை நீங்கள் அழைப்பீர்களா?
பேராசிரியர்: இல்லை.
மாணவன்: வகுப்பறையில் இத்தனைப் பேர் முன்னிலையில் நீங்கள் என்னை எப்படி அவ்வாறு அழைக்கலாம்?
பேராசிரியர்: மன்னித்துவிடு என்று கூறிவிட்டேன்.
மாணவன்: நீங்கள் பேராசிரியர்... நீங்கள் கற்பிக்க வேண்டும்.
பேராசிரியர்: மன்னித்துவிடு என்று கூறிவிட்டேன்.
மாணவன்: நீங்கள் என்னை அவ்வாறு அழைத்திருக்கக் கூடாது.
பேராசிரியர்: மன்னித்து விடு.
மாணவன்: மன்னித்துவிடு என்று நீங்கள் கூறுவதால் எவ்வாறு நீங்கள் சிந்திக்கிறீர்கள்... உங்களை இங்கு எவ்வாறு வெளிப்படுத்திக் கொள்கிறீர்கள் என்பது மாறாது என்றார்.
45 விநாடிகள் கொண்ட இந்தக் காட்சிப் பதிவு சமூகவலை தளங்களில் வைரலான நிலையில் மாணவனை பயங்கரவாதி கசாப்பின் பெயரைக் கூறி அழைத்த பேராசிரியர் ரபிந்திரநாத்தை இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பெயரை மாற்றி கசாப் என்று கூறிய பேராசிரியரிடம் மாணவன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நரேந்திர மோடி ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு - இத்தகைய மதவாதச் சிந்தனைகளும், போக்குகளும் அடி மட்டத்திலிருந்து, மேல் மட்டம் வரை நீக்கமறப் பரவி விட்டது. மக்களிடத்தில் சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் உறுதிப்படுத்த வேண்டிய ஓர் அரசே, ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று பேசியதன் தீய விளைவு கல்வி நிலையங்களிலேயேகூட பேராசிரியர் - மாணவர்கள் மத்தியிலே கூட மதவாத நச்சுப் பாம்பாக தலை தூக்கி ஆடுகிறது.
பிஜேபியால் கட்டவிழ்த்து விடப்பட்ட சங்பரி வார்களின் வெறித்தனமான பரப்புரைகளும், செயல் பாடுகளும் இன்னொரு பக்கம் மதவெறித் தீயை மூட்டி வருகின்றன.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள மதச் சார்பின்மை காலில் போட்டு மிதிக்கப்படுகிறது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் உச்சநீதிமன்றத்தின் கவனமும் மிகவும் தேவைப்படுகின்றன.
2024 மக்களவைத் தேர்தலில் இந்த நாசகார, மதவாத ஆட்சியை வீழ்த்திட வெகு மக்கள் தயாராகட்டும்!
No comments:
Post a Comment