சனாதனத்தை எதிர்க்கும் தத்துவப் போராளி தலைவர் ஆசிரியர் வீரமணி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 8, 2022

சனாதனத்தை எதிர்க்கும் தத்துவப் போராளி தலைவர் ஆசிரியர் வீரமணி!

தமிழர் தலைவரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் 

சி.பி.எம்.  மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் புகழாரம்

சென்னை, டிச.8 ‘‘சனாதனத்தை எதிர்க்கும் தத்துவப் போராளி தலைவர் ஆசிரியர் வீரமணி'' என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள்.

தமிழர் தலைவர் ஆசிரியரின் 

90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

கடந்த 2.12.2022 அன்று  மாலை சென்னை கலை வாணர் அரங்கில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்துரையாற்றினார்.

அவரது கருத்துரை வருமாறு:

பெருமதிப்பிற்குரிய திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா ஆசிரியர் வீரமணி அவர்களின்  90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று இருக்கிற  திராவிடர் கழகத் துணைத் தலைவர் அன் பிற்கும், மரியாதைக்கும் உரிய கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, வரவேற்புரையாற்றி அமர்ந்திருக்கின்ற மரியாதைக் குரிய வீ. குமரேசன் அவர்களே,

இந்தப் பாராட்டுரை நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி அமர்ந்திருக்கின்ற வணக்கத்திற் குரிய சென்னை மேயர் ஆர்.பிரியா அவர்களே,

இங்கே இறுதியாக ஆசிரியர் அய்யா அவர்களை வாழ்த்தவிருக்கின்ற தமிழ்நாட்டின் முதலமைச்சரும், இன்றைக்கு நாடு தழுவிய அளவிலே பா.ஜ.க. ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்துகொண்டிருக்கிற மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணி தலைவராக இருக்கிற அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய மு.க.ஸ்டாலின் அவர்களே,

இங்கே வாழ்த்துரை வழங்க வந்திருக்கின்ற மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செய லாளர் அய்யா அன்பிற்கும், மரியாதைக்குரிய வைகோ எம்.பி. அவர்களே,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் அன்பிற்குரிய தோழர் தொல்.திருமாவளவன் எம்.பி. அவர்களே,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய தலைவர், அன்பிற்கும், மரியாதைக்கும் உரியகே.எம்.காதர்மொய்தீன் அவர்களே,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் அன்பிற்குரிய தோழர் இரா.முத்தரசன் அவர்களே,

மற்றும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருக்கின்ற, மேடையில் அமர்ந்திருக்கின்ற சான்றோர்களே, ஆன் றோர்களே, பெரியோர்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

90 வயதிற்கே சவால் விடுபவராக இன்றைக்கு ஆசிரியர் திகழ்ந்து கொண்டிருக்கிறார்!

ஆசிரியர் அவர்கள் 90 வயதை அடைந்துவிட்டார் என்பது  உலகத்தில் நம்புவதற்குப் பல சந்தேகமான விஷயங்களில், இதுவும் ஒரு விஷயமாக இருக்கிறது.

அவரைப் பார்க்கின்றவர்கள் யாரும் 90 வயதை அடைந்துவிட்டார் என்று சொல்லவே முடியாது.

90 வயதிற்கே சவால் விடுபவராக இன்றைக்கு ஆசிரியர் திகழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது மகிழ்ச் சிக்குரிய ஒன்றாகும்.

எத்தனையோ ஆண்டவனையும், தெய்வங்களையும் வழிபடுகின்றவர்கள் எல்லாம், ஆண்டவனால்தான் தங்களுக்கு ஆயுள் பெருகுகிறது என்று கருதுகிற இந்தக் காலத்தில், ஆண்டவனுக்கே சவால் விட்டு, இந்த 90 வயதில் மிகச் சுறுசுறுப்பாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்று சொன்னால், அந்த ஆண்டவனை நம்புகிற தத் துவத்திற்கே அவர் ஒரு சவாலாக விளங்குகிறார் என்று தான் நான் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

90 வயதில் வாழ்வதே சற்று சிரமமானது. ஆனால், அவரைப் பொறுத்தவரையில், அவர் எப்பொழுது அமர்ந்திருக்கிறார்? எப்பொழுது உறங்குகிறார்? எப் பொழுது உணவு எடுக்கிறார்? என்பதை நம்மால் நம்ப முடியவில்லை.

சனாதனத்தை எதிர்க்கும் தத்துவப் போராட்ட தளபதியாக, வீரராக இன்றைக்குத் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்!

ஒரு 16 வயது இளைஞனுக்கு இருக்கிற அந்த சுறுசுறுப்போடு, இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருப்பது மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் சனாதனத்தை எதிர்க் கும் தத்துவப் போராட்டத் தளபதியாக, வீரராக இன் றைக்குத் திகழ்ந்து கொண்டிருக்கின்றார். அப்படிப்பட்ட வரை வாழ்த்துவதில் நாங்கள் எல்லாம் உண்மையிலேயே பெருமை அடைகிறோம், மகிழ்ச்சியடைகிறோம்.

நான் அவரிடம் சொன்னேன், ‘‘இன்னும் பல பத் தாண்டுகளுக்கு உங்களுக்கு இப்படிப்பட்ட வாழ்த்துக் கூட்டங்கள் நடத்துகின்ற வாய்ப்புகள் எங்களுக்கு வேண்டும்'' என்று.

அவர் சொன்னார், ‘‘10 ஆண்டுகாலம் வாழ்த்துவது மட்டுமல்ல, அப்படிப்பட்ட கடமைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்,  அந்தப் பணிகளை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது'' என்று சொன்னார்கள்.

உண்மையிலேயே நான் பிரமிப்போடுதான் பேசுகி றேன்; ஒரு 10 வயதிலே மேடை ஏறிய மிகப்பெரிய சாதனையாளர் அய்யா வீரமணி அவர்கள்.

அவருடைய குடும்பத்தாரோடு மிக நெருங்கிய பழக்கம் எங்களுக்கு உண்டு

அவருடைய ஆசிரியர் ஆ.திராவிடமணி அவர்கள். அவர் கடலூர்க்காரர் என்கிற காரணத்தினால், நானும், அவருடைய சொந்த ஊர்க்காரன் என்கிற முறையில், அவருடைய குடும்பத்தாரோடு மிக நெருங்கிய பழக்கம் எங்களுக்கு உண்டு.

மரியாதைக்குரிய தோழர் ஜெயகாந்தன் அவர்களும், ஆசிரியர் வீரமணி அவர்களும், ஒரே ஊரில் பிறந்து தமிழ்நாட்டில் வாழுகிற இரண்டு ஆளுமைகளாகத் திகழ்ந்தார்கள். திகழுகிறார்கள்.

சாரங்கபாணி என்கிற அவருடைய பெயரை, அவர் பள்ளிக்கூடத்தில் சேருகிறபொழுது, அவருடைய ஆசிரியர் திராவிடமணி  அவர்கள், வீரமணி என்று எழுதி, வீரமணி என்கிற பெயரை சூட்டினார்.

80 ஆண்டுகளுக்கு முன்பு, இவருக்கு வீரமணி என்று என்ன நம்பிக்கையோடு சூட்டினார்!

80 ஆண்டுகளுக்கு முன்பு, இவருக்கு வீரமணி என்று என்ன நம்பிக்கையோடு சூட்டினாரோ நமக்குத் தெரியாது. ஆனால், உண்மையிலேயே இந்த 90 ஆண்டுகால வரலாற்றில், அவர் வீரராக, வீரமணியாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதை மகிழ்ச்சிக்குரிய செய்தி என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எவ்வளவு சாதனைகளைப் படைத்திருக்கிறார் என் பதை நாம் படித்துப் பார்த்தால், நமக்கே பிரமிப்பாக இருக்கிறது.

நாம் எத்தனையோ நூலகங்களைப் பார்த்திருக் கிறோம். ஆனால், பொதுக்கூட்டங்களில்கூட ஒரு நட மாடும் நூலகத்தைப் போன்று, நூல்களை சான்றுகளாக வைத்துக்கொண்டு, மிக நுணுக்கமாக நீதிமன்றங்களில் விவாதிக்கவேண்டிய சட்ட நுணுக்கங்களைக் கூட பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு, ஒரு சாதாரண படிப்பறிவு இல்லாதவருக்குக் கூட அரசமைப்புச் சட்டத்தை விளக்கக்கூடிய ஒரு சட்ட நிபுணர் ஆசிரியர் அவர்கள் என்று சொன்னால், அது மிகையாகாது.

தந்தை பெரியார் அவர்கள் இன்றைக்கு இருந்திருந்தால் பிரமித்துப் போயிருப்பார்!

அந்த அளவிற்கு, அவருடைய எழுத்து, அவருடைய படிப்பு, அவருடைய ஓய்வில்லாத உழைப்பு, அவர் தலைமை தாங்கக்கூடிய நிறுவனங்கள் - தந்தை பெரியார் அவர்கள் இன்றைக்கு நம்மிடையே இல்லை.

ஆனால், தந்தை பெரியார் அவர்கள் இன்றைக்கு இருந்திருந்தால், அவரே பிரமித்துப் போயிருப்பார். நம்மால் உருவாக்கப்பட்ட வீரமணி, இன்றைக்கு நம்முடைய லட்சியத்தை தமிழ்நாட்டிலே, இந்தியாவிலே மட்டுமல்ல உலகம் முழுவதும் கொண்டு செல்கிற ஒரு தளநாயகராகத் திகழ்வதைக் கண்டு அவரே இன்றைக்கு மகிழ்ச்சி அடைந்திருப்பார், பெருமை அடைந்திருப்பார்.

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்கும், திராவிட இயக்கத்திற்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு

அப்படிப்பட்ட மகத்தான பணி. காங்கிரஸ் பேரியக் கத்தின் அருமைத் தோழர் கோபண்ணா அவர்கள் இங்கே சொன்னார்கள், தமிழ்நாட்டினுடைய தனித்த அரசியலைப்பற்றி. இடதுசாரி இயக்கங்கள், ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்கும், திராவிட இயக்கத்திற்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு.

1924 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசை விட்டு வெளியே வந்த பிறகு, அவரோடு இரண்டறக் கலந்து பணியாற்றியவர்கள் நம்முடைய சிங்காரவேலர் அவர்களும், நம்முடைய ஜீவா அவர்களும்.

தந்தை பெரியார், ஜீவா ஆகியோர் எல்லாம் சேர்ந்து தான் பகுத்தறிவுப் பிரச்சாரம் மட்டுமல்லாமல், சமதர்மப் பிரச்சாரத்தை தமிழ்நாட்டில் உருவாக்கி, ஒரு பொது வுடைமை இயக்கத்திற்கு அன்றைக்கு அடித்தளமிடு வதற்கு பெரியாருக்கும் ஒரு மிக முக்கியமான பங்கு உண்டு என்பதை நான் இங்கே நினைவூட்டக் கடமைப் பட்டு இருக்கிறேன்.

தந்தை பெரியாருக்கும், திராவிட  இயக்கத்திற்கும், ஆசிரியர் வீரமணிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு!

ஆகவே, அவர் ஈரோட்டிலே தொடங்கி வைத்த அந்த நெருப்பு, அந்த விளக்கு, இன்றைக்குத் தமிழ் நாட்டிலே பிரகாசமாக இந்தியாவிற்கே ஒரு மாற்று என்று சொல்லுகிற அளவிற்கு, சனாதன சக்திகள் என்றைக்கும் தமிழ்நாட்டினுள் நுழைவதற்கு முடியாமல் தடைகளை ஏற்படுத்தியிருக்கிற அப்படிப்பட்ட ஒரு தத்துவ மண்ணாக இந்த மண் மாறுவதற்குப் பலரும் பங்காற்றி இருந்தாலும், தந்தை பெரியாருக்கும், திராவிட  இயக் கத்திற்கும், ஆசிரியர் வீரமணிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு என்பதை இங்கு நான் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன்.

ஒட்டுமொத்தமான தமிழ்ச் சமூகமே 

நன்றிக் கடன்பட்டவர்கள்!

1951 ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீடு இல்லை என்று வருகிறபொழுது, அன்றைக்குத் தந்தை பெரியார் அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, தமிழ்நாட்டிலே ஒரு மகத்தான போராட்டத்தை நடத்தி, வரலாற்றிலே அரசமைப்புச் சட்டத்தில், முதல் சட்டத் திருத்தத்தை உருவாக்கி, இட ஒதுக்கீடு என்ற கொள்கை உரிமையைப் பெற்றுத் தந் திருக்கிற அந்த சாதனை இன்றைக்கு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்று சொன்னால், உண்மையிலேயே தந்தை பெரியார் அவர்களுக்கு, திராவிடர் கழகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்தமான தமிழ்ச் சமூகமே நன்றிக் கடன்பட்டவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

அப்படிப்பட்ட அந்தப் பணிகளோடு, அன்றைக்கு இணைந்து பணியாற்றியவர்கள்தான் கம்யூனிஸ்டுகள் என்பதை நான் பெருமையோடு நினைவுகூர விரும்புகின்றேன்.

1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், கம்யூ னிஸ்ட் கட்சிகள் மக்கள் கூட்டணி என்கிற முறையில், தனித்துப் போட்டியிடுகிறபொழுது, காங்கிரசை எதிர்த்து களங்கண்டு நேரிடையாகப் போட்டியிடுகிறபொழுது, அந்த வேட்பாளர்களுக்குத் தந்தை பெரியார் அவர்கள் மகத்தான ஆதரவு தந்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில், அதிகமான இடங்களில் வெற்றி பெறுவதற்கு - அன்றைக்குக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கும், மக்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கும் உறுதுணையாக இருந்தவர்கள் தந்தை பெரியார் அவர்கள்.

அவரோடு இணைந்து பணியாற்றிய அந்த மகத்தான சாதனையைப் படைத்தவர் நம்முடைய ஆசிரியர் அவர்கள்.

இட ஒதுக்கீடு உரிமையைப் பெற்றுத் தருவதில், தந்தை பெரியார் சாதனை படைத்தார்

1951 ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு உரிமையைப் பெற்றுத் தருவதில், தந்தை பெரியார் சாதனை படைத்தார் என்று சொன்னால்,

69 சதவிகித இட ஒதுக்கீடு அடிபட்டுவிடாமல், அதனை அரசமைப்புச் சட்டத்தில் நிலை நிறுத்திய பெருமை அய்யா ஆசிரியர் அவர்களை சாரும் என்பதை இந்த நேரத்தில் நான் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

இப்படி எத்தனையோ சாதனைகளைச் சொல்லிக் கொண்டே போக முடியும்.

போராட்டங்களையெல்லாம் முன்னெடுக்கின்ற வீரராக, முன்னெடுக்கின்ற ஒரு தள நாயகராக திகழ்கிறவர்

இன்றைக்கும் நீங்கள் பார்த்தால், தந்தை பெரியாரு டைய தத்துவத்தைப் போதிக்கிற, பகுத்தறிவை மக் களுக்கு எடுத்துச் சொல்லுகிற, பெண்ணடிமைத்தனத்தை ஒழித்துக்கட்டுகிற, ஜாதீய ஏற்றத் தாழ்வுகளுக்குச் சவால் விடுகிற, இன்றைக்கும் தமிழ்ச் சமூகத்தில் நிலவிக் கொண்டிருக்கிற ஜாதீயக் கொடுமைகளைக் களைந் தெறிகிற அப்படிப்பட்ட மகத்தான போராட்டங்களை யெல்லாம் முன்னெடுக்கின்ற வீரராக, முன்னெடுக்கின்ற ஒரு தள நாயகராக திகழ்கிறவர் நம்முடைய ஆசிரியர் என்கிற பெருமை நிச்சயமாக உண்டு.

இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, அவர் இதுபோன்ற சாதனைகளைத் தொடரவேண்டும் என்பது மட்டுமல்ல; பொதுவுடைமை இயக்கங்கள், திராவிட இயக்கங்கள், தந்தை பெரியார் லட்சியங்கள் நிறை வேறுகிற மண்ணாக, தமிழ் மண்ணை மாற்றுகிற - அப்படிப்பட்ட கடமைகளில் நாமெல்லாம் ஈடுபட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

இன்னும் சொல்லப்போனால், இன்றைக்கு மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற ஒன்றிய பா.ஜ.க., ஒரு சனாதன ஆட்சியை இந்தியாவிலே நிலை நிறுத்துவதற்கு முயற்சிக்கிறபொழுது, அரசமைப்புச் சட்ட உரிமை களையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, மனுஸ்மிருதி யினுடைய ஆட்சியை இந்தியாவில் நிலை நிறுத்துவ தற்காக 24 மணிநேரமும் பணியாற்றிக் கொண்டிருக் கின்றபொழுது, 

இந்திய நாட்டைப் பாதுகாக்கவேண்டிய, ஒரு மதச் சார்பற்ற பெருமைப்படத்தக்க இந்திய பாரம்பரியத்தைத் தூக்கி நிறுத்தவேண்டிய - அரசமைப்புச் சட்ட விழுமி யங்களைப் பாதுகாத்து, மனுஸ்மிருதி என்கிற அந்த சமூக அநீதியை அழித்தொழிக்கின்ற அந்தப் போராட் டத்தினை இந்தியாவிலே, தமிழ்நாட்டிலே நாம் நடத்த வேண்டிய மிகப்பெரிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்திய நாட்டிற்கு இதற்கு முன்னால், இப்படிப்பட்ட அச்சுறுத்தல்கள் எப்பொழுதும் வந்தது கிடையாது. எப்பொழுதும் இப்படிப்பட்ட ஆபத்துகளை நாம் சந்தித்தது கிடையாது.

இந்தியாவினுடைய எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்று கேள்வி கேட்டால், 2024 ஆம் ஆண்டு நடைபெறப் போகிற தேர்தல் முடிவைப் பொறுத்துதான் இருக்கப் போகிறது என்றுதான் சொல்லவேண்டும்.

75 ஆண்டுகால இந்தியா 

காலாவதியாகிப் போகும்!

ஒருவேளை மீண்டும் அந்த சதிகாரர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால், 75 ஆண்டுகால இந்தியா காலாவதியாகிப் போகும். சனாதன, மனுஸ்மிருதி ஆட்சி என்கிற புதிய இந்தியாவை அவர்கள் உருவாக்குவார்கள்.

எனவே, கி.மு., கி.பி. என்பதைப்போல, 2024 ஆம் ஆண்டிற்கு முன், 2024 ஆம் ஆண்டிற்குப் பின் என்ற ஒரு நிலைமையை உருவாக்குகிற ஒரு மிகப்பெரிய ஆபத்தை இன்றைக்கு உருவாக்கிக் கொண்டிருக் கின்றார்கள்.

தமிழ் மக்களை  தமிழ்ச் சமூகத்தைப் பாதுகாப்பதற்கு ஆசிரியர் அவர்கள் வாழ்வாங்கு வாழவேண்டும்!

அப்படிப்பட்ட ஆபத்துகளிலிருந்து இந்த நாட்டைப் பாதுகாக்கவேண்டும் என்று சொன்னால், இன்றைக்கு மதச்சார்பற்ற சக்திகள் எல்லாம் இந்தியா முழுவதும் அணிதிரளவேண்டிய ஒரு முக்கியமான காலகட்டமாக இருக்கிறது. அந்தக் கடமையை நிறைவேற்றுகிற போராட்டத்தில், அய்யா ஆசிரியர் அவர்கள், இன்னும் உடல் ஆரோக்கியத்தோடு பல்லாண்டு காலம் வாழ்ந்திட வேண்டும். இந்த சனாதனத்தை வீழ்த்தினோம்; மனுநீதி என்கிற மனுஸ்மிருதி என்கிற சமூக அநீதியை 60 அடிக்குக் கீழே மண்ணிலே போட்டு புதைக்கிற கடமைகளை ஆற்றுவதற்கு, நாமெல் லாம் இணைந்து பணியாற்றுகிற நேரத்தில், அந்த மகத்தான பணியை, மகத்தான கடமையை 80 ஆண்டுகளுக்கு முன்பு, எவ்வளவு வீரியத்தோடு தொடங்கினாரோ, அந்த வீரியத்தோடு இந்தப் பணியை நடத்தி முடிக்கின்ற வரை அவர் பல்லாண்டு காலம் வாழ்ந்து, இந்தத் தமிழ் மக்களை  தமிழ்ச் சமூகத்தை, இந்திய சமூகத்தை, ஒட்டு மொத்தமான இந்தியாவைப் பாதுகாக்கின்ற  அந்தப் பணியை செய்வதற்கு அவர் வாழ்வாங்கு வாழவேண்டும் என்று இந்த நேரத்தில் தெரிவித் துக் கொள்கிறேன்.

மேடையில் இருக்கின்ற எங்களுக்குள் பல வேறு பாடுகள்கூட இருக்கலாம். ஒவ்வொரு பிரச்சினைகளில் மாறுபாடுகள்கூட இருக்கலாம். ஆனால், நிச்சயமாக மாறுபடுவது தவறல்ல; அப்படி மாறுபடுவதை விவாதிப்பதும் தவறு அல்ல. ஆனால், மாறுபட்ட வேறுபட்டவர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டிய ஓர் இக்கட்டான சூழ்நிலை இந்தியாவில் இருக்கிறது. 

சனாதன சக்திகளை வீழ்த்துகிற போராட்டத்தில் என்றென்றும் தலைவராக ஆசிரியர் அவர்கள் திகழ்வார்கள்

அப்படிப்பட்ட சனாதன சக்திகளை, அப்படிப்பட்ட மதவெறி சக்திகளை -  இந்தியாவில் சனாதன ஆட்சி களை நிறுவுகிற அந்த சக்திகளை வீழ்த்துகிற அந்தப் போராட்டத்தில் நாமெல்லாம் இணைந்து பணியாற்று வோம்.

அந்த மகத்தான பணிக்குத் தமிழ்நாட்டில், என் றென்றும் தலைவராக ஆசிரியர் அவர்கள் திகழ்வார்கள். அவருடைய பயணம் கடந்த காலங்களில் எப்படி வெற்றி பெற்றதோ, அதேபோல, அவருடைய வாழ்க் கைப் பயணம் நிறைவாக வெற்றி பெறும் என்பதையும் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி,

ஆசிரியர் அவர்கள் இந்த அளவிற்கு ஆக்கமும், ஊக்கத்தோடும் பணியாற்றுவதற்கு, வாழ்நாள் முழுவதும் அவருக்குத் துணையாக இருக்கின்ற அவருடைய துணைவியார் உள்ளிட்ட அவருடைய குடும்பத் தாருக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து என்னுரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றினார்.


No comments:

Post a Comment