தன்மானச் சிங்கமெனத்
தலைசிறந்தார் பெரியார்
ஜாதிச் செருக்குகளைத்
தட்டழித்தார் பெரியார்!
அன்பான பொது நெறியில்
ஆசை வைத்தார் பெரியார்!
ஆருயிரின் பகுத்தறிவைப்
பேசவைத்தார் பெரியார்!
ஏழையெளியவர்பால்
இரக்கமுள்ள பெரியார்
எல்லாரும் இணைந்திருக்கும்
இயற்கை மனப்பெரியார்
கோழைகளை வீறுபெற
வாழச்செய்த பெரியார்
குடியரசுக் கொடிபிடித்தே
கோதறுத்த பெரியார்!
ஜாதிமத வேற்றமையைச்
சாடியவர் பெரியார்
சமரசமாம் விடுதலையை
நாடியவர் பெரியார்
ஓதரிய மேதைகளில்
ஒள்ளியவர் பெரியார்
ஒற்றுமைக்கு வழிதிறந்த
தெள்ளியவர் பெரியார்
மூடப்பழம் புரட்டை
முட்டியெறி பெரியார்
முன்னேற்றத் தடைகளை
வெட்டியெறி பெரியார்!
வேடப்புரட்டுகளை
வெளியாக்கும் பெரியார்
விஞ்ஞானப் புதுயுகத்தின்
ஒளிகாட்டும் பெரியார்
தானென்றும் செருக்கில்லாத்
தயவுடைய பெரியார்
தமிழருக்குத் தனியாட்சி
தந்த தந்தை பெரியார்
மானிடப் பண்புகளை
வகுத்துரைத்த பெரியார்
மனச்சாட்சியுள்ள மட்டும்
வாழ்வாரெம் பெரியார்
- சுத்தானந்த பாரதி
‘விடுதலை’ இதழ்,
27.12.1973, பக்கம் 2
No comments:
Post a Comment