சென்னை, டிச.23 பள்ளி, கல்லூரி மாணவர்களின் மனநலம் காக்கும் ‘மனம்' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மனநல நல் ஆதரவு மன்றங்கள் அமைத்து, பள்ளி மாணவர்களின் மன நலம் காக்கும் 'மனம்' திட்டம் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் தயக்கமின்றி, உடனடியாக மன நல மருத்துவரை தொடர்பு கொள்ளும் வகையில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் 'மனம்' அலைபேசி உதவி எண் 14416 பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 'மனம்' திட்டம் தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா, ரூ.22.84 கோடி ரூபாய் மதிப்பில் 75 புதிய மேம்படுத்தப்பட்ட நவீன மருத்துவ உபகரணங்கள் கொண்ட 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கி வைக்கும் விழா ஆகி யவை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மன நல காப்பகத்தில் நேற்று (22.12.2022) நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு மனம் திட்டத்தை தொடங்கி வைத்தார். மனம் திட்டம் அடுத்தகட்டமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளதாக விழாவின் போது அறிவிக்கப்பட்டது.
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு
75 புதிய ஆம்புலன்ஸ் வாகனம்
இதைத்தொடர்ந்து, 75 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை பொதுமக்கள் பயன்பட்டுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து இயக்கி வைத்தார். புதிய 108 ஆம்புலன்சை பார்வையிட்டு அதில் உள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், சென்னை அரசு மன நலக் காப் பகத்தில் 14 அறைகளுடன் 2.36 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மய்யத்தை அவர் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து மனநலம் மற்றும் நரம்புசார் மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான மாநில அளவிலான தமிழ்நாடு மனநல மற்றும் நரம்பியல் நிறுவனம் என்ற ஒப்புயர்வு மய்யத்தினை உருவாக்க முதற்கட்டமாக 40 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தி கட்டப்படவுள்ள கட்டடத்திற்கான முப்பரிமான வரைபடத்தை வெளியிட்டார். மனநலத்தை வலுப்படுத்தும் மனம் திட்டத்தை தொடங்கி வைத்ததற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து அரசு மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
கையேடு வெளியீடு
இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களின் மனநல மேம்பாட்டுக்கான ஆசிரியர் கையேடு மற்றும் தேசிய வளர் இளம் பருவத்தினர் நலத்திட்ட பயிற்றுநர் பயிற்சி கையேடு ஆகியவற்றை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மகப்பேறு சிக்கல்கள் உள்ள கர்ப்பிணி தாய்மார்களை கண்டறிந்து சிகிச்சை வழங்குவதில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றதற்காக வழங்கப்பட்ட ஒன்றிய அரசின் விருதை தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். மேலும், சுகமான மகப்பேறு நிலையங்களை தேர்ந்தெடுப்பதில் சிறப் பாக செயல்பட்டதற்காக தேசிய அளவில் தமிழ்நாடு 2 ஆம் இடம் பெற்றதற்காக வழங்கப்பட்ட ஒன்றிய அரசின் விருதை மருத்துவக்கல்வி இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு இயக்குநர் ஆகியோர் முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
மின்சார சைக்கிள்கள்
இதன்பின்பு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக பயன்பாட்டுக்காக 3 மின்சார சைக்கிள்களை தனியார் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ்.ரமேஷ் சுப்பிர மணியன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அரசு மனநல காப்பக இயக்குநரிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் அ.வெற்றியழகன், தாயகம் கவி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் டாக்டர் எஸ்.உமா, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் டாக்டர் டி.எஸ். செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் டாக்டர் வி.பி.ஹரி சுந்தரி, மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஆர். சாந்திமலர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண் டனர்.
No comments:
Post a Comment