1980களில் எம்ஜி.ஆரின் ஆட்சி நடந்துகொண்டிருந்த நேரம். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நான் பத்திரிகைகள் வாசிப்பதில் அலாதியான பிரியம் கொண்டிருந்தேன். எங்கள் வீட்டில் இரண்டு அல்லது மூன்று பத்திரிகைகள் வரும். கடுமையான திட்டுகளுடன் அவற்றைக் காலையில் பள்ளிக்குப் போகும் முன் படித்துவிட்டால் பெரிய சாதனை புரிந்ததுபோல் இருக்கும். மாலை வகுப்புகள் முடிந்தவுடன் படிப்பகங்களில் இருக்கும் எங்கள் வீட்டிற்கு வராத பத்திரிகைகளைப் படிப்பது, பின்பு வீட்டிற்கு காலதாமதமாகச் செல்வது வாடிக்கையாகிப் போன ஒன்றாய் மாறியது. அப்போது நெற்றி நிறைய பட்டையும் பொட்டும் துலங்கநான் விரும்பி வாசிக்கும் பத்திரிகைகள் விடுதலை, முரசொலி, எதிரொலி ஆகிய நாளிதழ்கள். அதிலே ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிக்கைகள் மற்றும் முரசொலியில் கலைஞரின் கடிதங்கள் என்னைக் கவர்ந்தவை. ஆசிரியரின் அறிக்கைகள் என்னுள் மெல்ல மெல்ல மாற்றத்தைக் கொண்டுவந்தது.
அதிலும் ஆசிரியர் எழுதும் அறிக்கைகளில் "ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்" என்பது எனக்கு மிகவும் பிடித்த அறிக்கை. அது மட்டுமின்றி எம்.ஜி.ஆர். அரசிற்கு கேள்விகள் பல கேட்டும் விளக்கம் அளித்தும், அய்யா தந்தை பெரியார் எப்பொழுதெல்லாம் என்னென்ன பேசினார் என்று ஆண்டுவாரியாக அவர் தொகுத்துச் சொல்வதும் மிகவும் பிடிக்கும். அப்போது பல்வேறு பேச்சாளர்களின் பேச்சுகள், இடையிடையே `மின்சாரம்' கட்டுரை ஆகியவை என்னை மிகவும் கவர்ந்தவை ஆகும்.
1980ஆம் ஆண்டின் முற்பகுதியில் தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு உடல்நலம் குன்றி சிகிச்சை பெற்றுவந்த நேரம். அப்போது சங்கரராமன் கொலை வழக்கு புகழ் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், "என்னைப் பற்றி எது வேண்டுமானாலும் பேசட்டும், என் பீடத்தைப் பற்றிப் பேசலாமா என்றும் கூறி, அதனால் கடவுளிடம் வேண்டினேன். கருணாநிதி படுத்துண்டார்'' என்று பேட்டி கொடுத்தார். தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞரைப் பற்றி இவ்வாறு ஜெயேந்திரன் கூறியதைக் கேட்ட ஆசிரியர், "சங்கராச்சாரி யார்? - சங்கரமட ரகசியங்கள்" என்ற தொடர் சொற்பொழிவினை நிகழ்த்தினார். மிகக் குறைந்த வயதில் வைசூரி வந்து இறந்துபோன சங்கராச்சாரி யார் என்பதில் தொடங்கி, காஞ்சி மடம் போலி மடம் என்பதையும், கும்பகோண மடமே பின்பு காஞ்சி மடமானது என்பது பற்றியும், சேரமான் காதலி என்ற கண்ணதாசன் புத்தகத்தின் முக்கிய பகுதிகளைச் "சுட்டிக்காட்டி" மூத்த சங்கராச்சாரியார் யோக்கியதை என்ன என்பதையும் புட்டுப்புட்டு வைத்தார். அந்தச் சொற்பொழிவின் விமர்சனத்தை நேரில் பார்த்த எழுத்தாளர் சின்னக்குத்தூசி,"எதிரொலி" பத்திரிகையில் எழுதினார். அதை வரிவரியாகப் படித்து மனதில் இருத்திக் கொண்டு பின்பு 1988இல் சட்டக் கல்லூரியில் சேர்ந்தவுடன் கழக மாணவரணி பயிற்சி முகாமில் அவ்விதழை வாங்கி மீண்டும் படித்தும், அதன் மூல நூலான ஆசிரியரின் சொற்பொழிவுகள் அடங்கிய புத்தகத்தையும் வாங்கி வைத்துக்கொண்டேன்.
ஆசிரியர் ஒரு தலைப்பு பற்றிப் பேசினால் அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அந்தக் கூட்டங்களில் அதிகளவில் கலந்து கொள்ளும் உளவுப் பிரிவு போலீசாரை வைத்தே தெரிந்து கொள்ளலாம். அரசமைப்புச் சட்ட நகல் எரிப்பில் கலந்து கொண்ட கலைஞர் உள்பட பத்து சட்டமன்ற உறுப்பினர்களை தனது "வானளாவிய அதிகாரத்தால்" பதவி நீக்கம் செய்தவுடன் ஆசிரியர் "நீதிதேவன் மயக்கம்" என்ற தலைப்பில் (3.2.1987-7.21987) இரண்டு நாள் சொற்பொழிவினை நிகழ்த்தி அறிவுலகோர் கண்கள் அகலத் திறக்க வழி செய்தார். காங்கிரஸ் நூற்றாண்டு விழா தொடங்கியபோது "காங்கிரஸ் வரலாறு - மறைக்கப்படும் உண்மைகளும் கறைபடிந்த அத்தியாங்களும்" என்ற தலைப்பில் பேசி அது 29.4.1986 அன்று சீரணி அரங்கில் வெளியிடப்பட்டது.
டாக்டர் கலைஞர் 3ஆம் முறையாக முதலமைச்சராகி 25.3.1989 அன்று முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யத் தயாராகி வரும்போது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா திட்டமிட்டு சட்டசபையில் கலவரம் உருவாக்கினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பத்திரிகையில் வெளியிடக் கூடாது என்று சட்டப் பேரவைத் தலைவர் தமிழ்க்குடிமகன் கட்டளையிட்டார். அப்போது தன்னைத் தி.மு.க.வினர் தாக்கிவிட்டதாக ஜெயலலிதா பேசிய பேச்சு மக்களிடம் பெரும் அதிருப்தியை உண்டாக்கியது. மேற்படி நிகழ்வு நடந்த 3ஆம் நாள் 28.3.1989 அன்று ஆசிரியர் "சட்டசபையில் நடந்தது என்ன?" என்று பெரியார் திடலில் பேசினார். அவருக்கே உரிய பாணியில், சட்டவிளக்கத்துடன் தர்க்கரீதியாக ஒரு வாதத்தை வைத்தார். "இப்போது நான் சட்டசபையில் நடந்த கலவரத்தின் போதுள்ள போட்டோவைக் காட்டுகிறேன்" என்று புகைப்படத்தைக் கையில் வைத்துக் கொண்டு சொன்னார், "நான் செய்வது சட்டசபையில் சபாநாயகர் உத்தரவை மீறுவதாகாது. போட்டோவை பத்திரிகைகளில் பிரசுரிக்கக் கூடாது என்றுதான் சபாநாயகர் சொன்னாரே தவிர காட்டக் கூடாது என்று சொல்லவில்லை" என்று கூறி ஒவ்வொரு புகைப்படமாகக் காட்டி அன்று சட்டசபையில் நடந்தது என்ன என்பதை ஆதாரபூர்வமாகக் காட்டி விளக்கியதற்குப் பிறகுதான் தமிழ்நாடு முழுக்க சட்டசபையில் என்ன நடந்தது என்பதை மக்கள் விளங்கிக் கொண்டு மயக்கம் தெளிந்தனர். ஒவ்வொரு முறை பேசும்போதும் அது பெரிய மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், இரங்கல் கூட்டங்கள் எதுவானாலும் ஆதாரமாக புத்தகங்கள் இன்றிப் பேச மாட்டார். சோ ஒரு முறை திடலுக்கு வந்தபோது ஆசிரியரிடம் "நீங்க பெரிய பெரிய புத்தகங்களைக் காட்டி என்னைப் பயமுறுத்த வேண்டாம். என் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்" என்றார். புரட்சியாளர் அம்பேத்கரைப் பற்றி அருண்ஷோரி அவதூறுச் சேற்றினை அள்ளி வீசியபோது அதற்கு உடனடியாக நீண்ட பதிவினை சிறப்புக் கூட்டங்கள் மூலம் அளித்தார்.
"கீதை என்பது முட்டாளின் உளறல்" என்று அண்ணல் அம்பேத்கர் கூறியதை நிரூபிக்கும் வகையிலும் தந்தை பெரியார் தாம் மறைவதற்கு 38 நாட்களுக்கு முன் வெளிப்படுத்திய ஆசையை நிறைவேற்றும் வகையிலும் "கீதையின் மறுபக்கம்" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி அந்தப் புத்தகம் பல பதிப்புகள் வெளியிடப்பட்டு, இன்றும் விற்பனையாகி வருகிறது. ஆசிரியர் அடிக்கடி சொல்லுவார் - "எனக்கு என் சொந்த புத்தி தேவையில்லை, அய்யா தந்த புத்தி போதும்" என்று. இது ஏதோ அய்யாவை உயர்த்திக் காட்டுவதற்காகச் சொன்ன வார்த்தைகள் அல்ல. அய்யாவின் சொற்படி நடக்க முடிவு செய்துவிட்டால் - அவர் சொன்ன சொல்படி நடக்க அணியமாகிவிட்டால் - அய்யா சொன்ன சொல், அவர் போட்டுத்தந்த பாதையில் எந்தவித சபலங்களுக்கும் ஆளாகாமல் இருத்தல் என்பதே அதன் பொருள். அந்த அடிப்படையில் ஆசிரியர் அவர்கள் நம்மை எல்லாம் பெரியார் காண விரும்பிய சமத்துவ சமுதாயம் காண ஆற்றுப்படுத்துகிறார்.
வாழ்க ஆசிரியர்! வாழ்க பெரியார்!!
No comments:
Post a Comment