"சென்னை வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் கட்டண முறைகேடு குறித்து செயல் அலுவலரிடம் புகார் அளிக்கச் சென்ற உயர்நீதிமன்ற நீதிபதியிடம் கடுமையாக நடந்துகொண்ட ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், கடந்த17ஆம் தேதி மாலை தனது மனைவி, மகளுடன் வடபழனி முருகன் கோயிலுக்கு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் சாமி தரிசனத்துக்கு சென்றுள்ளார்.
அங்கு தலா ரூ.50 வீதம் ரூ.150 செலுத்தி 3 பேருக்கும் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வழங்கும்படி கூறியுள்ளார். அப்போது அங்கு டிக்கெட் கொடுக்கும் பணியில் இருந்த ரேவதி என்ற பெண் பணியாளர் இரண்டு ரூ.50 டிக்கெட், ஒரு ரூ.5 டிக்கெட் வழங்கியுள்ளார். இதைப் பார்த்த நீதிபதி இது தொடர்பாக அந்தப் பெண்ணிடம் முறையிட்டுள்ளார்.
உடனே அந்தப் பெண் மறுத்துப் பேசாமல் ரூ.5 டிக்கெட்டை திரும்பப் பெற்றுக் கொண்டு, ரூ.50க்கான டிக்கெட்டை கொடுத்துள்ளார். உடனே நீதிபதி மற்ற சில பக்தர்களுக்கு சிறப்பு தரிசன டிக்கெட் வழங்குவதை அருகில் நின்று கண்காணித்துள்ளார். அவர்களுக்கும் ரூ.50 டிக்கெட்டுக்கு பதிலாக ரூ.5 டிக்கெட் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. அந்த டிக்கெட்டுகளை சரிபார்த்து வரிசையில் சாமி தரிசனத்துக்காக உள்ளே அனுப்பும் ஊழியர் ரவிச்சந்திரன் என்பவரும் அதைக் கண்டும் காணாமலும் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சாமி தரிசனம் முடித்துக் கொண்டு இந்த முறைகேடு தொடர்பாக கோயில் செயல் அலுவலர் முல்லையிடம் புகார் அளிக்க மனைவி மற்றும் மகளுடன் செயல் அலுவலகத்துக்குச் சென்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியத்திடம் ஊழியர்கள் கடுமையாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் உடனடியாக உயர்நீதிமன்ற பதிவாளரைப் போனில் அழைத்து தனது பாதுகாப்புக்கு வடபழனி காவல்துறையினரை அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளார். உடனடியாக காவல்துறையினர் அங்கு வந்த பிறகே குடும்பத்துடன் வந்திருப்பது உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் என்பது கோயில் ஊழியர்களுக்கு தெரிய வந்துள்ளது.
அந்த பெண் ஊழியர் தரிசன கட்டணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பணம் குறைந்து - தனது பணத்தை அதற்காக வழங்க நேரிட்டதால் அதை ஈடுகட்டும் விதமாக இவ்வாறு டிக்கெட் வழங்கியதாகக் கூறியுள்ளார். அதையடுத்து கோயில் செயல் அலுவலர் டிச.19ஆம் தேதி தன் முன்பாக நேரில் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தி, இந்த சம்பவத்தை விவரித்து அறநிலையத் துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
அதன்படி வடபழனி கோயில் செயல் அலுவலரான முல்லை, உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பாக நேரில் ஆஜரானார். அவரிடம் தனக்கே இந்த நிலைமை என்றால், மற்ற பக்தர்களின் நிலை என்னாவது என கேள்வி எழுப்பினார்.
பின்னர் வடபழனி கோயிலில் நடந்த இந்த கட்டண முறைகேடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும், செயல் அலுவலரின் மொபைல் எண்ணைக்கூட தர மறுத்து, புகார் அளிக்க வாய்ப்பளிக்க மறுத்த கோயில் கண்காணிப்பாளர் உள்ளிட்ட ஊழியர்கள்மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்திய நீதிபதி, இது தொடர்பான விசாரணையை வரும் ஜன.9க்கு தள்ளி வைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கோயில் ஊழியர்கள் 5 பேரை பணியிடை நீக்கம் செய்து கோயில் செயல் அலுவலர் முல்லை நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே சிறப்பு தரிசனம் மற்றும் அபிஷேகத்துக்கு தனித்தனி கலர்களில் டிக்கெட் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அனைத்து நிகழ்வுகளுக்கும் வெள்ளை நிறத்தில் கம்ப்யூட்டரில் பிரிண்ட் செய்து டிக்கெட் வழங்கப்படுகிறது. இதுவும் முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாகக் கூறப்படுகிறது."
பக்தி ஒழுக்கத்தை வளர்க்கும் என்கின்றனர். கோயிலுக்குச் சென்றால் மன அனுமதி கிடைக்கும் என்று நம்புகின்றனர். ஆனால் உண்மை என்ன? கோயில் என்பது கொள்ளையர்களின் கூடாரமாகி விட்டது.
ஒரு நீதிபதிக்கே இந்த அனுபவம் என்றால் மற்றவர்களின் நிலை என்ன?
திருப்பதியில் வெங்கடாசலபதி டாலர் என்ற பெயராலேயே மோசடி நடந்ததுண்டு. மோசடி பேர் வழிக்கு டாலர் சாஸ்திரி என்ற அடைமொழியே ஏற்பட்டு விட்டது. ஏழுமலையானுக்கே நாமம் போட்ட ஆசாமிமீது ஒரு தூசு தும்புகூட நடவடிக்கை என்ற பெயரால் விழவில்லை.
தொடர்ந்து பணியில்தான் இருந்தார். தனது ஊழியர்களையே ஒழுங்காக நடக்கச் செய்ய சக்தியில்லாத கருவறைக்குள் உள்ள பொம்மைக்குப் பெயர் கடவுளாம் - வெங்காயமாம்! வெட்கக்கேடு!
No comments:
Post a Comment