வீரமணி எனும் வெற்றிமணி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 2, 2022

வீரமணி எனும் வெற்றிமணி!

கெ.நாராயணசாமி

எல்லாமும் எல்லாருக்குமாகி, இல்லாமை இல்லாததாகிட வேண்டும் எனும் இயல்பான மன எழுச்சியின் வினையாய் கம்யூனிசத் தத்துவத்தைத் தரணிக்களித்த ஜெர்மானியக் கிழவன் கார்ல்மார்க்சுக்கு ஓர் ஏங்கல்ஸ், ஏன்? எதற்கு? எப்படி? என்று எப்பொருளையும் கேள்விக் கணைகளால் துளைத்துத் தெளிவுகொள் எனப் போதித்த கிரேக்கத்தின் தத்துவஞானி சாக்ரடீசுக்கு ஒரு பிளாட்டோ, தன் பேனா முனையின் பேராற்றலால், பிரான்சையே புரட்டிப் போட்ட புரட்சிக்கு வித்தான எழுத்தாற்றலின் ஏந்தல் வால்டேருக்கு ஒரு ரூசோ எனப் பல கொள்கை வாரிசுகளை வரலாற்றுப் பக்கங்களில் வாசித்திருக்கிறேன். அப்படி வாசித்தபோதெல்லாம் இவர்களையெல்லாம் விஞ்சக்கூடிய ஒரு கொள்கை வாரிசினைத் தமிழ்நாட்டில் காண்பேனென நான் நினைத்தேனில்லை. ஆம். "நான் ஒரு அழிவு வேலைக்காரன்" என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டு சமூக - சமத்துவம் காண்பதற்கெதிராய் எத்தகைய தடைகள் வந்திடினும், அது கடவுளேயானாலும், அனைத்தையும் தகர்த்தெறிவேன் என முழக்கமிட்ட - "தன் வாழ்நாளிலேயே தன் கொள்கைகளின் வெற்றியைச் சுவைத்த தலைவன் உலகில் தாங்கள் ஒருவரே" எனப் பேரறிஞர் அண்ணாவால் போற்றப்பட்ட  - தந்தை பெரியாருக்கு ஒரு வீரமணி எனச் சொன்னால், இது வெறும் புகழ்ச்சிப் பேச்சல்ல! புரட்சியின் வீச்சு!

பெரியாரையே சுவாசித்து, பெரியாரையே உண்டு, பெரியாரையே உடுத்தி இன்றைய பெரியாரின் அச்சசலாக வலம் வரும், தொண்ணூறு அகவை தொடும், இத் தொண்டறச் செம்மலின் சிறப்புகளையும், வெற்றிகளையும் எழுத முனைந்தால் ஏடுகள் போதாது; சொல்ல முனைந்தால் வார்த்தைச் சுரங்கமே வற்றிப் போகும்.

பத்து வயதிலேயே பகுத்தறிவுப் பிரச்சாரம். தொண்ணூறு வயதெட்டும் இற்றை நாளிலும் இற்றுப் போகவில்லை அப்பிரச்சாரம். இன்னல்கள் பல ஏற்றாலும் ஏன் நமக்கு இத்தொல்லை எனச் சலிப்படையா, சமரசமில்லா, கருத்துப் போர். ஆரிய - அடிவருடிகளின் அடாவடித்தனத்தைத் தகர்த்தெறியும் செயல்பாடுகள்.

இத்தலைவனின் இளமைக்காலக் கொள்கை உறுதியை யாரே பாராட்டாமலிருக்க முடியும்? இவரினும் மூத்த பெரியார் தொண்டர்கள், அரசியல் களம் புக ஆசைப்பட்டு, அதன் மூலம் பதவிகளும், பவிசுகளும் பெற்றிடலாம் என்று இயக்கத்தினின்றும் விலகி, தனிக்கட்சி தொடங்கிய காலகட்டத்தில் பதினாறு வயது இளைஞனாக இருந்த இத்தலைவர், அப்படிப்பட்ட ஆசாபாசங்களுக்கு ஆட்படாமல், எனக்குத் தலைவர் பெரியாரே என்றும், அவர் கொள்கை வெற்றிக்குழைப்பதே என் பணி என்றும் நிமிர்ந்து நின்றதைப் பாராட்டாமல் இருக்க முடியுமா?

பெரியாரே என் உயிர் வளி என்று ஏற்றுக் கொண்டதால்தான் "எனக்குச் சொந்த புத்தி தேவையில்லை; பெரியார் தந்த புத்தியே போதும் என்றாரே! அப்போது பலர், "ஒரு பகுத்தறிவுவாதி இப்படிக் கூறலாமா?" என்று கேள்விக்கணையை வீசியபோது கூட, "ஆம்! எங்கள் சொந்த புத்தி சுயநலத்திற்கு வித்திடக் கூடும், பதவி, படாடோபத்துக்கு ஆசைப்படக் கூடும், அதனால் நான் பாதை மாறக்கூடும். ஆனால், பெரியார் புத்திக்கு அப்படிப்பட்ட சபலங்களுக்கு இடமேயில்லை. எனவே, எனக்குப் பெரியார் தந்த புத்தியே போதும் என்று சொன்னதில் எத்தவறும் இல்லை" என விளக்கம் தந்தபோது கண்டேன் - என் தலைவனின் கொள்கை உறுதியை, அறிவுத் தெளிவை, தன்னலம் துறந்த தொண்டறத் தூய்மையை!

அத்தொண்டறத்தின் தூய்மைதான், விடா முயற்சியின் வெற்றிதான் பெரியாரை இன்று உலகமெங்கும் எடுத்துச் சென்றது. அதன் பலன் பல நாடுகளில் இன்று பெரியார் அமைப்புகள். இத்தலைவனின் பணியால் தமிழ் மக்கள் பெற்றிட்ட பலன்களைப் பட்டியலிடவா வேண்டும்! ஓய்வின்றி ஒளிவீசும் பரிதிக்கு விளம்பரமா தேவை!

தம் அறிவுத் தெளிவால், பணியின் சிறப்பால், இத்தலைவனைத் தேடிவந்த பாராட்டுகளும், பட்டங்களும், சிறப்பு அடைமொழிகளும் ஆயிரம் இருந்தாலும் 'ஆசிரியர்' என்னும் அடைமொழியையே என் மனம் ஏற்றுப் போற்றுகிறது. எவரெவரும், எங்கெங்கும், எந்தெந்த நிலையிலும் எட்டி எட்டி உயரே நின்றாலும் அவ்வுயர்வுகளுக்கெல்லாம் வித்தாயிருப்பவன் ஒரு ஆசிரியர்தானே!

"இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற

துணர விரித்துரையா தார்"

"தான் கற்றதை மற்றவர் தெளிவாக உணரும்படி விரித்துரைக்க மாட்டாதார் கொத்துக் கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் வீசா மலரைப் போன்றவர்" என்றார் வள்ளுவர்.

பெரியாரிடம் கற்றதை இன்று உலகமே கேட்கும் வண்ணம் விரித்துரைத்து வெற்றிக் கனி பறித்து வரும் எம் தலைவன் ஒரு மணம் வீசும் மலராகவே நூற்றாண்டும் கடந்து தன் பணியைத் தொடர வேண்டும் என்று மக்கள் நலத்தின் விருப்பாக மனமார வாழ்த்துகிறேன் - வணங்குகிறேன்.  தொண்ணூறைத் தொடும் எம் தலைவர் வீரமணியெனும் வெற்றிமணி! வாழ்க! வாழ்க!! 

No comments:

Post a Comment