குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் வசித்துவரும் இளம் யோகா ஆசிரியை ஒருவர் அண்மையில் மாளவியா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் முகமூடி அணிந்து வந்த மர்மநபர் ஒருவர் தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்தப் புகார் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த முகமூடி அணிந்து வந்த நபரைக் கண்டுபிடிக்க 4 படைகளை அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதன் முதற்கட்டமாக அவர்கள் அந்தப் பகுதியில் பல இடங்களிலும் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர்.
இதில் முகமூடி அணிந்தவாறு சந்தேகப்படும் வகையில் நபர் ஒருவர் சென்றது கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் 24 வயது நிறைந்த பிரபல மல்யுத்த வீரர் என தெரியவந்தது. அவர் 2016, 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மாநில அளவில் நடைபெற்றுள்ள 74 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் பங்கேற்று தங்கப் பதக்கம் பெற்ற கவுஷல் பிபாலியா என்று தெரியவந்தது. அவரைக் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர், தான் முகமூடி அணிந்து 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளதாக உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் இது குறித்து எந்தப் பெண்ணும் புகார் அளிக்க முன்வரவில்லை என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
சமூகவலைதளங்களில் சைவ உணவே நல்லெண்ணத்தை வளர்க்கும் என்ற பிரச்சாரத்தை ஆச்சாரியா பவுண்டேசன் என்ற ஓர் அமைப்பு நடத்தி வருகிறது, ஹிந்தியில் நடக்கும் அதன் பரப்புரையில் "அரியானா, குஜராத், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், ஹிமாச்சல்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிகம் மல்யுத்த வீரர்கள் வருகிறார்கள். அவர்கள் அனைவருமே சைவ உணவு முறைப் பழக்கம் உள்ளவர்கள். அவர்கள் சைவ உணவு உண்பதால் தான் அவர்களின் உள்ளமும் உடலும் நல்வழியில் சென்று அவர்கள் நமது நாட்டிற்குப் பெருமை சேர்க்கின்றனர்" என்று கூறுகின்றனர் - பிரச்சாரமும் செய்கின்றனர். 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கவுஷல் பிபாலியாவும் சைவ உணவுக்காரர்தான். இவர் தனக்கு யோகா சொல்லிக்கொடுத்த ஆசிரியரையும் முகமூடி அணிந்து பாலியல் ரீதியில் சீண்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அது என்ன சைவ உணவு - அசைவ உணவு? மரக்கறி உணவு என்று சொல்வது தானே!
மரக்கறி உணவு - அவர்கள் பார்வையில் சைவ உணவு சாப்பிடுபவர்கள் எல்லாம் யோக்கிய சிகாமணிகளா?
அப்படிப் பார்க்கப் போனால் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் "ஒழுக்கத்தை" எந்தப் பட்டியலில் சேர்ப்பது?
காஞ்சி மச்சேந்திர நாதர் கோயில் கருவறைப் புகழ் தேவநாதனையும், சிறீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் பத்ரி நாத்தையும் எந்தப் பட்டியலில் சேர்ப்பது? இவர்கள் எல்லாம் மரக்கறி உண்ணும் பேர் வழிகள்தானே!
பார்ப்பனீயம் எந்தெந்த வகைகளில் எல்லாம் பித்தலாட்டப் பிரச்சாரம் செய்கிறது பார்த்தீர்களா?
No comments:
Post a Comment