'போக்சோ!' வழக்குகளில் கைது காவல்துறை அதிகாரிகள் அனுமதி கட்டாயம் காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு சுற்றறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 5, 2022

'போக்சோ!' வழக்குகளில் கைது காவல்துறை அதிகாரிகள் அனுமதி கட்டாயம் காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு சுற்றறிக்கை

சென்னை, டிச.5 போக்சோ’ வழக்குகளில் உயர் காவல்துறை அதிகாரிகள் அனுமதியை பெற்று தான் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம் சிறுவர் நீதிக்குழு மற்றும் 'போக்சோ' குழுவினர் 'போக்சோ' சட்டத்தை (குழந்தை களுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு சட்டம்) ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் அந்த குழுவினர் 'போக்சோ' வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரி களுக்கு அறிவுரைகள் வழங்கி உள்ளனர்.

* திருமண உறவு, காதல் உறவு போன்ற 'போக்சோ' வழக்குகளில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது. அதற்கு பதிலாக அழைப்பாணை அனுப்பி எதிரிகள், எதிர்மனுதாரரை விசாரணை செய்யலாம். 

* குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாத விவரம் வழக்கு கோப்பில் பதிவு செய்தும், அதற்கான காரணத் தையும் பதிவு செய்ய வேண்டும்.

*குற்றவாளியின்மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் மாவட்ட காவல்துறை ஆணையர்கள் நிலை அதிகாரிகளின் அனுமதி கட்டாயம் பெற வேண்டும். 

* முக்கிய வழக்குகளின் குற்றப்பத்திரிகையை அதி காரிகள் ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக, மேல் நட வடிக்கை கைவிடும் வழக்குகளில் கோப்பினை தீவிரமாக ஆய்வு செய்து உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும். 

மேற்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த அறிவுரைகளை காவல்துறை ஆணையர்கள், மாவட்ட காவல்துறை ஆய்வாளர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு கூறியுள்ளார்.


No comments:

Post a Comment