செயற்கைகோள் அனுப்பிய முதல் ஒளிப்படம் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 4, 2022

செயற்கைகோள் அனுப்பிய முதல் ஒளிப்படம் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

 சென்னை டிச.4  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் சிறீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தில் உள்ள 1-ஆவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட்டை கடந்த 26-ஆம் தேதி பகல் 11.56 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்த ராக்கெட்டில், இந்தியாவின் கடல் பகுதிகளை ஆய்வு செய்வதற்காக 1,117 கிலோ எடைகொண்ட 'ஓசோன் சாட்-03' (இ.ஓ.எஸ்-06) என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் முதன்மை செயற்கைகோளாக அனுப்பப்பட்டது. அத்துடன், இந்தியாவை சேர்ந்த அய்.என்.எஸ். 2-பி, பிக்சல் இந்தியா நிறுவனத்தின் ஆனந்த் செயற்கைகோள் உடன் தைபோல்ட் 1, தைபோல்ட் 2 மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 4 ஆஸ்ட்ரோகாஸ்ட்-2 செயற்கைகோள்கள், பூட்டான் நாட்டுக்கான செயற்கைகோள்கள் உள்பட 9 செயற்கைகோள்களும் 2 வெவ்வேறு சுற்றுப்பாதையில் திட்டமிட்ட இலக்கில் நிலை நிறுத்தப்பட்டன.

இதில் இந்தியாவுக்கான 'ஓசோன்சாட்-03' செயற்கை கோள் மூலம் கடலின் நிறம், கடல் மேல்பரப்பின் வெப்ப நிலை, காற்று வீசும் திசை, மீன்வளம் தொடர்பான தகவல்கள், கடல் அலை குறித்த கூடுதல் தரவுத் தொகுப் புகளை பெற முடியும். இதுதவிர, வெப்பநிலை மற்றும் வளிமண்டலம் குறித்த தகவல்களும் பெறலாம். இந்த நிலையில், செயற்கைகோள் தரவுகளைப் பெறுவதற்காக தெலங்கானா மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தரை நிலையமான தேசிய தொலை நிலை உணர்தல் மய்யத்துக்கு (என்.ஆர்.எஸ்.சி.) ஓசோன் சாட்-03 செயற்கைகோள் எடுத்த முதல் ஒளிப்படத்தை அனுப்பி உள்ளது. இந்த ஒளிப்படத்தில், இமயமலை பகுதி, குஜராத் கட்ச் பகுதி மற்றும் அரபிக்கடல் பகுதிகள் இடம் பெற்று உள்ளன. செயற்கைகோள்கள் கடல் வண்ண மானிட்டர் மற்றும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மானிட்டர் சென்சார்களால் படம் பிடிக்கப்படுகின்றன. இது விஞ்ஞானிகளுக்கு பெருமிதமாக உள்ளது. தொடர்ந்து இதுகுறித்து விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுகளை தொடங்கி உள்ளனர். இந்த செயற்கைகோள் மூலம் ஒளிப்படங்களை பெறும் முயற்சியிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.


No comments:

Post a Comment