குஜராத் முடிவுகள்: பயப்பட ஏதுமில்லை!
'முரசொலி' தலையங்கம்
குஜராத் மாநிலத்தில் ஏழாவது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளது. அதில் அதிசயம் ஏதுமில்லை. தேர்தல் தேதியை அறிவிப்பதில் இழுத்தடித்தது முதல், ஊர் ஊராக, தெருத்தெருவாக பிரதமரும், உள்துறை அமைச்சரும் அலைந்தது வரை பார்த்தவர்களுக்கு இதில் அதிசயிக்க ஏதுமில்லை.
அங்கே மேயர் தேர்தலில் நிற்பதைப் போல 65 பொதுக்கூட்டம் பேசினார்கள், 15 ரோடு ஷோக்களை நடத்தினார்கள். பேரணியாகவே போனார் பிரதமர். சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் காரில் நின்றபடியே பயணித்து மக்களைச் சந்தித்தார். குஜராத்தி ஒருவர் பிரதமராக இருக்கிறார், அவருக்கு வாக்களிப்பது குஜராத்துக்கு பெருமை என்றெல்லாம் பேசப்பட்டது. 'ஒரே பாரதம்” ஆட்கள், "குஜராத் மண்ணின் மைந்தர்' முழக்கத்தை கையில் எடுத்தார்கள்.
காங்கிரஸா? பா.ஜ.க.வா? என்ற முழக்கத்தோடு மூன்றாவதாக ஆம் ஆத்மி நுழைந்தது. ஆம் ஆத்மி, காங்கிரஸ் வாக்குகளை பிரித்தது மட்டுமல்ல, பலவீனப்படுத்தியது. 41 லட்சம் வாக்குகளை ஆம் ஆத்மி பெற்றுள்ளது. மொத்த வாக்குகளில் 12.92 சதவிகித வாக்குகளை ஆம் ஆத்மி பெற்றுள்ளது.
இவை எல்லாவற்றையும் விட பா.ஜ.க. வென்றதற்கு மிக முக்கியமான காரணம் குஜராத்தில் அவர்கள் அறிவித்த இலவச திட்டங்களும், மதவாதக் கொள்கையும்தான். தேர்தல் வெற்றிக்குப் பிறகு கருத்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, "குஜராத் மக்கள் போலி இலவச வாக்குறுதிகளையும், வாக்குவங்கி அரசியலையும் புறம் தள்ளி விட்டார்கள்" என்று சொல்லி இருக்கிறார்.
குஜராத் மாநில பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிடும் போது அவர் இந்தியாவில்தான் இருந்தாரா, அந்த அறிக்கையை படித்துப் பார்த்தாரா என்பது சந்தேகமாக இருக்கிறது. "Agresar Gujarat Sankalp Patra 2022" எனப்படும் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் இருந்தது இலவச வாக்குறுதிகளும், வாக்கு வங்கி அரசியல் மட்டும்தான்.
இதோ அவர்களது இலவச வாக்குறுதிகள்..
* அனைத்து பெண் குழந்தைகளுக்கும் எல்.கே.ஜி. முதல் பி.ஜி. வரை இலவசக் கல்வி.
* ஏழை குடும்பங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர்.
9 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
* பெண்களுக்கு ஆண்டுதோறும் 2 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்
* பொது விநியோகத் திட்டத்தில் மாதத்துக்கு ஒரு கிலோ பருப்பு இலவசம்
* ஆண்டுக்கு 4 முறை ஒரு கிலோ சமையல் எண்ணெய் இலவசம்
* இலவச சானிட்டரி நாப்கின்கள்
* மகப்பேறுத் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பொருள்கள்.
* ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்ட வரம்பு 5 லட்சத்தில் இருந்து பத்து லட்சம்
* மாநிலம் முழுவதும் 100 இடங்களில் அன்னதான உணவகங்கள்
* அன்னதான உணவகங்களில் 5 ரூபாய்க்கு சாப்பாடு
* உயர் வகுப்பு ஏழைகளுக்கு ஏராளமான சலுகைகள்
* உயர்வகுப்பு ஏழைகளுக்கு இலவச நோயறிதல் சோதனைகள்
* குஜராத்தில் அடுத்த அய்ந்து ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு
* அரசு துறைகளில் ஒரு லட்சம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு
* வேளாண் உள்கட்டமைப்புக்கு 10 ஆயிரம் கோடி
* நீர்ப் பாசன திட்டங்களுக்கு 25 ஆயிரம் கோடி
* கோவில்களைப் புதுப்பிக்க 1000 கோடி
இவை தான் குஜராத் பா.ஜ.க. கொடுத்த வாக்குறுதிகள் ஆகும். இதில் பெரும்பாலானவை இலவசங்கள். இவற்றைத்தான் 'போலி இலவச வாக்குறுதிகள்' என்கிறாரா அமித்ஷா? இதுதான் இந்த போலியான வெற்றியைக் கொடுத்துள்ளது பா.ஜ.க.வுக்கு.
"வாக்கு வங்கி அரசியலை, குஜராத் மக்கள் புறக்கணித்துவிட்டார்களாம் அமைச்சர் அமித்ஷா சொல்கிறார்.
* பொது சிவில் சட்டம்
* பயங்கரவாத எதிர்ப்புக் குழு
* வஃக்ப் வாரியத்தின் சொத்துக்கள் மற்றும் நிதிகளை ஆய்வு செய்தல், மதரஸாக்களின் பாடத்திட்டம் குறித்து ஆய்வு நடத்தப்படும்..
* மத சுதந்திர திருத்தச் சட்டம்
* கட்டாய மதமாற்றத்துக்கு நிதி அபராதமும் சிறைத் தண்டனையும்.
* தேவ்பூமி துவாரகா நடைபாதையை உருவாக்கி அதை மேற்கு இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மிக மய்யமாக உருவாக்குவோம்.
* உலகில் மிக உயரமான சிறீகிருஷ்ணர் சிலை
* பகவத்கீதை மண்டலம்.
* இழந்த துவாரகாவை மீட்டெடுத்தல்
இவை எல்லாம் என்ன? வாக்கு வங்கிக்கு வெளியில் இருக்கும் அரசியலா? பா.ஜ.க.வுக்கு குஜராத்தில் வெற்றியை தேடித் தந்தது இலவச வாக்குறுதிகள், மதவாத வாக்குறுதிகள், குஜராத் மண்ணின் மைந்தர் என்பது மட்டுமே. அதனால்தான், 'தேர்தல் முடிவுகளைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டேன்' என்று பிரதமர் சொல்கிறார்.
கடிகாரம் செய்யும் கம்பெனிக்கு பாலம் கட்டும் உரிமையைக் கொடுத்தது பா.ஜ.க. அரசு. தொங்கும் பாலமானது உடையும் பாலமானது. 141 பேர் பரிதாபமாக இறந்து போனார்கள். இது இன்னொரு மாநிலத்தில் நடந்திருந்தால் அந்த மாநில அரசே ஆடிப் போயிருக்கும். ஆனால் இதே தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். அதற்காக, 141 பேர் செத்தது அவர்களது 'தலைவிதி' என்று அந்தத் தொகுதி மக்கள் நினைத்திருக்க மாட்டார்கள். அதையும் மீறி பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேறொன்று பயன்பட்டுள்ளது. அதுதான் இலவசங்கள், மதவாதம், மண்ணின் மைந்தர் முழக்கம்.
எனவே ஒன்றிய அரசின் 'சாதனை'களுக்கு கிடைத்த வாக்குகள் அல்ல இவை - உள்ளூர் முழக்கங்களுக்குக் கிடைத்த வெற்றியே இது.
பா.ஜ.க. வாங்கிய வாக்குகள் 1,67,07,957 மட்டுமே.
பா.ஜ.க.வுக்கு எதிராக நின்றவர்கள் வாங்கிய மொத்த வாக்குகள் 3,23,81,908 ஆகும்.
இதைவிடப் பெரிய தோல்வி இருக்க முடியுமா? எனவே, குஜராத் முடிவுகளைப் பார்த்து மற்றவர்கள் பயப்பட ஏதுமில்லை.
நன்றி: 'முரசொலி' 12.12.2022
No comments:
Post a Comment